கொலைக்கரங்களை அகலவிரிக்கும் கொரோனா தாக்குப் பிடிக்குமா சர்வதேசம்? - சோழகரிகாலன்

உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் ‘Covid-19’ எனப்படும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுள்ளது. சீனாவை மையம் கொண்டு உருவாகிய இந்த உயிர்கொல்லி வைரஸ், தற்பொழுது தனது தாக்குதல் மையத்தை ஐரோப்பா நோக்கித் திருப்பி உள்ளது. சீனாவில் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஐரோப்பாவில் இது பெரும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. ஐரோப்பா மட்டுமல்ல உலகில் 157 நாடுகளை கொரோனா தாக்கி உள்ளது.

இந்த வைரஸ் தாக்கம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியயடுத்ததுடன், சர்வதேசப் பொருளாதாரத்தைப் பெரும் சவாலிற்கு உள்ளாக்கி உள்ளது. சர்வதேசப் பங்குச் சந்தையில் இருந்து, உல்லாசத்துறை, விமானப்போக்குவரத்துக்கள் என அனைத்தையும் முடக்கி உள்ளது.

பிரான்ஸ்

பிரான்சில் இதுவரை ‘Covid-19’  கொரோனா வைரசினால் 5423 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 127 பேர் சாவடைந்துள்ளனர். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா செல்லும் அனைத்து விமானப் போக்குவரத்துக்களையும், ட்ரம்ப் அரசாங்கம் தடைசெய்துள்ளது. அமெரிக்காவிற்கான போக்குவரத்துக்களின் முக்கியதளமாகப் பிரான்சின் சார்ள் து கோல் விமான நிலையமும், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையமுமே முக்கிய தளங்களாக உள்ளன. முக்கியமாக பிரான்சில் இருந்து அமெரிக்கா நோக்கிச் செல்லும் அமெரிக்கன் எயார்லைன்ஸ், டெல்டா, யுனைட்டட் எயார்லைன்ஸ், எயார்பிரான்ஸ், மற்றும் Tahiti Nui ஆகிய சேவைகள் அனைத்தும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் பிரான்சில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைவது ஒரு மாதத்திற்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவுடன் இந்தச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுடன், பிரான்சில் இருந்து வியாழக்கிழமை அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானத்தில் பயணித்த பிரெஞ்சுப் பயணிகளும், ஏனைய ஐரோப்பியக் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்களும், அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் 19ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானங்களில், பிரான்சில் தங்கியிருக்கும் அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

1

இந்தப் பயணத்தடையானது ஒரு மாத காலத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமையால், விமான நிலையத்தில் அமெரிக்க விமானங்களுடன் பணியாற்றியவர்களின் வேலைகள் கேள்விக்குறியாகியதுடன், விமான நிலையம் பெரும் இழப்பையும் சந்திக்கும் அபாயத்தைக் கொரோனா வைரஸ் தொற்றானது ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்ற பயணத்டையை ரஸ்யாவும் எதிர்வரும் 16ம் திகதி திங்கட்கிழமையில் இருந்து நடைமுறைப்படுத்தி உள்ளது. ரஸ்யாவைத் தொடர்ந்து உக்ரைன், சைப்ரஸ் ஆகியவையும் ஐரோப்பாவில் இருந்து  பயணிக்கும் அனைத்து விமானங்களையும் தடைசெய்துள்ளது. சீனாவின் வுஹான் மாகாணம் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது போல், ஐரோப்பாவையும் ஏனைய நாடுகள் தனிமைப்படுத்த ஆரம்பித்துள்ளன.

16ம் திகதி திங்கட்கிழமை முதல், பிரான்சில் அனைத்துப் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் எனப் பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்துடன் செங்கன் எல்லைகைள மூடி, கடுமையான கண்காணிப்பிற்குள் கொண்டு வரவேண்டும் எனவும் சிபாரிசு செய்துள்ளார்.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளைப் பராமரிப்பதற்காகப் பெற்றொர்களில் ஒருவர் பணியிலிருந்து நிற்க முடியும் என்றும், 16 வயதிற்குட்பட்ட பிள்கைளைகப் பராமரிப்பதற்கு, அல்லது 18 வயதிற்குட்பட்ட ஊனமுற்ற பிள்ளையைப் பராமரிப்பதற்கும் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக நிற்பவர்களிற்கு மருத்துவக் காப்பீட்டகமான Sécurité sociale இனால் மருத்துவ விடுப்புப் போன்ற (arrêts de travail) நட்டஈடு வழங்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

முக்கியமாக விமானநிலையங்கள், உணவகங்கள் போன்றவற்றிலும் மேலும் அனைத்து நிறுவனங்களிலும் செயற்பாடுகள் பெருமளவு குறைந்த நிலையில், பகுதிநேர வேலை மட்டுமே வழங்கப்பட்டு, மிகுதி பகுதிநேர வேலையில்லா நட்டஈடாக (Chômage partiel) வழங்கப்படும் எனப் பிரெஞ்சு அராங்கம் தெரிவித்துள்ளது. முற்றாக நிறுவனம் மூடப்படும் நிலையில் chômage technique எனப்படும் வேலையில்லா நட்டஈடு வழங்கப்படும் எனவும், இதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நாடுகள் கடந்த பெரும் தொற்றில் (Pandemic) மக்கள் அனைவரும் இணந்து தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து நடக்கவேண்டும் எனவும், அடிக்கடி கைகளைக் கழுவுவதுடன், ஓய்வூதிய இல்லங்களில் இருக்கும் முதியவர்களை (பெற்றொர் அல்லது பேரன் பேத்திகள்) சென்று பார்ப்பதைத் தவிர்த்து, அவர்களுடன் தொலைபேசியில் உரையாடும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயோதிபர்கள் பலவீனமானவர்கள் என்றும், அவர்கள் மிகவும் இலகுவாக நோய்த்தொற்றிற்கு ஆளாவார்கள் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

1

இந்த நிலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, மிகவும் திறமையாக மாநகரசபை முதல்வர்கள் செய்துள்ளார்கள் என்றும், ஒவ்வொரு வாக்காளர்களிற்கு இடையிலும், ஆகக்குறைந்தது ஒரு மீற்றர் தூரம் நிச்சயமாகப் பேணப்படும் என்று தெரிவித்துள்ள எமானுவல் மக்ரோன் அனைவைரையும் மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்துத் தேவாலயங்களின் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து நிகழ்வுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. 100 பேரிற்கு மேல் திரளும் அனைத்து நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. இது முக்கியமாக இல்-து-பிரான்சில் மிகவும் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் திரையரங்குகள், அருந்தகங்கள், உணவகங்கள் என்று எதிலுமே நூறு பேரிற்கு அதிகமாக யாரும் இருக்கக் கூடாது என்றும், இவை அடிக்கடி சோதனைக்கு உள்ளக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பிரபல உதைபந்தாட்டப் போட்டிகூட, மூடப்பட்ட விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்கள் மட்டும் விளையாடி உள்ளனர். இரசிகர்கள் அனைவரும் தொக்காட்சி நேரலை மூலமாக வீடடிலிருந்து மட்டுமே பார்வையிட்டுள்ளனர். ஆனால் தற்போது அனைத்துப் போட்டிகளும் இரத்துச் செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரபிதாக்கள் எனப் பலரும் கொரோனாத் தொற்றிற்கு ஆளாகி உள்ளனர். பிரான்சினுடனான எல்லைகளை மற்றைய நாடுகள், மூடுவதுடன் கடுமையான சோதனைகளையும் ஆரம்பித்துள்ளன. முக்கியமாக ஜேர்மனி பிரான்ஸ் எல்லைகள் பலத்த பாதகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சிற்கான பொதுப் போக்குவரத்துக்களும் பெருமளவில் திங்கட்கிழமை முதல் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது. SNCF, RATP இன் சேவைகள் மட்டுப்படுத்ப்பட்டுள்ளன. RER, மெட்ரோ ஆகியவற்றின் சேவைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டள்ளன. போக்குவரத்துத் துறையில் பணிபுரிபவர்கள் தங்களது பிள்ளைகளை வீடுகளில் வைத்துப் பராமரிக்கும் நிலையிலேயே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த உள்ளன.

ஈபிள் கோபுரம் வெள்ளிக்கிழமையில் இருந்து அடுத்த ஆணைவரை முற்றாக மூடப்பட்டுள்ளது. பெருமளவான வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் லூவ்ர் அருங்காட்சியகமும் வெள்ளிக்கிழமை இரவு முதல் மூடப்பட்டுள்ளது. ஏயார்பிரான்ஸ் நிறுவனம் பெருமளவான பணியாளர்களை பகுதிநேர வேலை மட்டுமே வழங்கிப் பகுதிநேர வேலையின்மை நட்ட ஈட்டை (Chômage partiel) பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. எயார்பிரான்சின் மற்றொரு நிறுவனமான KLM 2500 பேரை உடனடியாக வேலையிலிருந்து நீக்கி உள்ளது.

உலகத்தின் அதிகளவில் வைரஸ் தாக்கிய நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது அதிகரிக்கும் அபாயம் பிரான்சில் உள்ளது.

உச்சக்கட்டத் தொற்றினை பிரன்ஸ் நெருங்குவதாக உலக சுகார மையம் (WHO) எச்சரித்துள்ளது. இதனால் தேவையற்ற நிலையில் வெளியே செல்லாது பாதுகாப்பாக இருப்பதுடன், ஒற்றுமையாக இந்த நோய்ப்பரவலைத் தடுக்க வேண்டும் என்றும், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், அரசாங்கத்தால் எதையும் சாதிக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரும் தங்களது தங்களது பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் பேணி வந்தால், அதுவே மற்றவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இருக்கும்.

ஐரோப்பா

பிரான்சிற்கு அடுத்தபடியாக ஜேர்மனியிலும் தொற்று மிகவும் அதிகமாகப் பரவி வருகின்றது. ஆனால் அங்கு இறப்ப வீதம் தற்போதைக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போலந்து, மற்றும் டென்மார்க் ஆகியவை தங்களது எல்லைகளை மூடியுள்ளன. இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினும் அனைத்தும் மூடப்பட்டு, உணவுப் பொருட்கள் விற்கும் வரத்தக நிலயங்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு அடுத்தபடியான பேரழிவை இத்தாலி சந்தித்துள்ளது. 13ம் திகதி மார்ச் மாதக் கணக்கெடுப்பின் படி இத்தாலியில் 17.660 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகி உள்ளதுடன் 1266 பேர் சாவடைந்துள்ளனர். அடுத்தபடியாக ஸ்பெயின் பெரும் தொற்றிற்கு உள்ளாகி உள்ளது. பிரித்தானியாவிலும் கொரோனா வைரசின் தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

4

சுவிற்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே என எங்கும் வைரசின் கோர தாண்டவம் உருக்கொள்ள ஆரம்பித்துள்ளது. உலகின் பெருளாதார அரசியந்திரங்களிற்கு இடையில் நடக்கும்  G7  மாநாடு, தொலை ஒளித்தோற்ற முறையான visioconference முறையில் நடாத்ப்பட உள்ளது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் அவசியம் உள்ள நிலையில் Covid-19 வைரசின் கடும் தாக்குதலினால், இந்த மாநாடு ஒளித்தோற்ற மாநாடகவே நடைபெறுகின்றது. இதனால் மேற்குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்கள் அவரவர் நாட்டிலிருந்தபடியே மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் பிரதமர் மற்றும் அவரது பாரியார் ஆகியோரும் கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி உள்ள நிலையில், பெருமளவான தமிழ் மக்கள் அவர்களிற்காப் பிரார்த்தித்து வருகின்றனர். உலகத்தில், இந்தக் கணத்தில், 169,000 பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிகத் தகவலின்படி 6494 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 76,615 சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் மட்டுமே நிறுத்தப்பட்ட, ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் ஜப்பானில் நடாத்தப்பட நிர்ணயித்துள்ள நிலையில், வைரஸ் தாக்கத்தால் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் பல போர்களையும், பல அழிவுகளையும் சந்தித்து இருந்தாலும், தற்போது கொரோனா வைரசிடம் மண்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேசம் இணைந்து கண்டுபிடிக்கும் தடுப்பு மருந்தில் கொரோனா அழித்தொழிக்கப்படும் என்ற நம்பிக்கையில் அவதானமாக வாழ்க்கையைத் தொடருவோம்.