வரும்முன் காப்போம் - ஆசிரிய தலையங்கம்

பயங்கரவாதம்தான் இந்த உலகத்தின் பேராபத்து, அணு ஆயுதங்கள்தான் மனித குலத்தின் முதற்பெரும் எதிரி என்று அச்சுறுத்தப்பட்டுவரும் நிலையில், கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிர்க் கொலைக் கிருமி ஒன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து மனிதர்களைப் பலிவாங்கி வருகின்றது. விண்வெளியில் இருந்து வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள விண்வெளிப்படையையும் அமைத்துவிட்டதாக பெருமையடிக்கும் மனிதனால், இந்தப் பூமியில் இருந்துகொண்டே மனிதனை அழித்துவரும் கொவிட்-19 என்ற கொரோனா வகை நுண்ணுயிர்க் கொலைக் கிருமியை எதிர்கொள்ள வலுவற்றுத் திணறுகின்றது.

சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய ஸ்பானிஷ் காய்ச்சலில் (spanish flu) ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இப்போது மருத்துவம், தொழில்நுட்பம் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் இந்த நோய்த் தடுப்பின் வேகத்தையும், உயிரிழப்புக்களையும் தடுக்கமுடியவில்லை என்பது பெரும் ஆச்சரியத்திற்குரியதுதான்.

சீனா, வூஹான் மாநிலத்தில் உருவான கொரானா என்ற நோய்த்தொற்று நுண்ணுயிர், இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தி
யிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளாக இத்தாலியும், ஈரானும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஏனைய நாடுகள் பலவும் இந்தத் தொற்றுக்குள் சிக்கி மூச்சுத்திணறுகின்றன.

அடுத்து யார், யாரை இந்த நுண்ணுயிர் பலியயடுக்கப்போகின்றதோ என்ற பேரச்சம் இனம், மதம், தேசம் என அத்தனைçயும் கடந்து இந்த உலகத்தை முழுமையாகச் சூழ்ந்துள்ளது. கொரோனா சாதி, மொழி, ஏழைகள், பணக்காரர்கள், பிரபல்யமானவர்கள், பிரபல்யமற்றவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையுத் தன் கொலைக் கரத்திற்குள் அணைத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. மேலும் பல குடும்பங்கள் தங்களுக்குப் பிரியமானவர்களை இழக்க நேரிடலாம் என பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மிக உருக்கமாகக் குறிப்பிடுகின்ற அளவிற்கு நிலைமை விபரீதமாகச் சென்றிருக்கின்றது என்பதுதான் உண்மை.

நாளுக்கு நாள் கொரோனா தன் உயிரெடுப்பைத் தொடர்ந்துகொண்டிருக்க, மறுபுறம் உலகின் பொருளாதாரமும் ஆட்டக்காணத் தொடங்கியுள்ளது. நாடுகள் அனைத்தையும் முடக்கிப்போட்டுள்ளது இந்தக் கொரோனா. பொருளாதாரம் அதளபாதாளத்திற்குள் சென்றுள்ளது. இலட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகளவில் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

கொரோனா உலகளாவிய ஒரு நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.

ஜி-7 என்று அழைக்கப்படும் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா அடங்கிய ஏழு நாடுகளும் அந்த அமைப்பின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, கொரோனா பாதிப்பு குறித்தும் அதில் இருந்து விடுபடுவது குறித்தும் விவாதித்திருக்கின்றன. ஆனாலும், கொரோனாவின் வேகத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ள அளவிற்கு இன்னமும் ஏனைய நாடுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா உயிர்ப்பலியை மட்டுமல்ல நாடுகளுக்கு இடையிலான உறவுகளையும் கூடப் பாதித்துவருகின்றது. அமெரிக்க அதிபரின் அதிரடியான தடை அறிவிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைவிட ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் கொரோனா கொல்லுயிரி பரவக் காரணம் இந்த நாடுதான் என, மற்றொரு நாட்டை குற்றம்சாட்டி வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா பரவிய முதல் நாடான சீனா, தங்கள் நாட்டுக்குள் கொரோனாவைக் கொண்டுவந்ததே அமெரிக்க இராணுவம்தான் என நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா உயிர்ப்பலியை மட்டுமல்ல உறவையும் கெடுத்துவருகின்றது. கொரோனாவை எதிர்கொள்ளமுடியாமல் பலம்பொருந்திய, பொருளாதார வளம்கொண்ட நாடுகள் கூட தங்கள் நாட்டை முடக்கிப்போட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் கடன்களில் வாழும் சிங்களப் பேரினவாதம் திமிர்த்தனமாகக் கதைக்கின்றது. புலிகளை அழித்த எங்களுக்கு கொரோனா ஒரு கொசு என்பதுபோல் கதையளக்கின்றது. சிங்களத்தின் இந்த முட்டாள்தனமான திமிர்த்தனக் கதைகள், மாதனமுத்தாக்கள் இன்னும் அங்கு அழியவில்லை என்பதை மெய்ப்பிப்பதாகவே அமைந்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணைநின்ற உலக வல்லரசு நாடுகளே கொரோனாவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று புரியாது விழி பிதுங்கிநிற்க, இவர்கள் வீரப்பிரதாபம் பேசுகின்றனர். இவற்றைவிட கொரோனா நோயாளிகளை தமிழர் தாயகத்தில் கொண்டுசென்றுவிட்டால், தமிழர்கள்தான் பாதிக்கப்படுவார்கள், சிங்கள தேசத்திற்குள் கொரேனா நுழைந்துவிடாது என்றும் முட்டாள்தனமாகச் சிந்திக்கின்றது. இந்த மாதனமுத்தாக்களை என்னவென்று சொல்வது?

கொரோனா தொற்றுப்பரவலில் இருந்து ஒவ்வொரு நாடும் எப்படித் தமது நாடுகளைப் பாதுகாப்பது என்று சிந்திப்பதுபோன்று, ஒவ்வொரு மனிதர்களும் இந்தத் தொற்றுக்களில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக சிறியவர்களையும் வயோதிபர்களையுமே அதிகளவில் இந்தக் கொலைக் கிருமி ஆட்கொள்ளத் துடிப்பதால் அவர்களை இதில் இருந்து பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கையையும் எடுப்போம். அரசுகளும், மருத்துவத்துறைகளும் எச்சரிப்பதுபோல் கை, கால், உடல்களைக் கழுவுவதுடன், தேவையற்ற வெளிப் பயணங்களையும் தவிர்த்துக்கொள்வோம்.

நோய் வந்தபின் தடுப்பதல்ல, நோய் வராமல் தடுப்பதே முதல் மருந்து. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.நோய் அறிந்து, நோய்க்கான மூலக்காரணம் அறிந்து, அதை தணிக்கும் வழியை அறிந்து, சரியாக செயல்பட வேண்டும் என்றார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர். அதை தணிக்கும் வழியை அறிந்து அதன்படி செயற்பட்டு எங்கள் ஒவ்வொருவரையும் பாதுகாத்து, எம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதுகாப்போம்.