பேராசானின் மறைவு தமிழ் மொழிக்கு பேரிழப்பு!

தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் கடந்த 4ம் திகதி சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். தமிழ் தேசிய அறிவுலகத்தின் மூத்த ஆளுமையும், தமிழ் அறிஞருமான பேராசிரியர் அறிவரசன் அவர்கள், தமிழ் மொழியின் மீது தீவிர பற்றுக்கொண்டவர். தமிழ் மொழியில் வேற்றுமொழியின் கலப்புகளைக் களைந்து, தமிழ் மொழியை மேலும் வளப்படுத்துவதற்காக அயராது உழைத்தவர்.

இந்தத் தமிழ்ப் பற்றே தமிழீழத்தின் மீதும், தமிழீழத்தை விடுவிக்கப் போராடிய விடுதலைப் புலிகள் மீதும் தேசியத் தலைவர் மீதும் அவரை பேராதரவாளராக மாற்றியது. தமிழ்ப் பற்றும், தமிழின உணர்வும் பேராசியர் தமிழரசன் அவர்களை, தமிழீழத் தேசியத் தலைவரின் பெரும் மதிப்பிற்கும் உரியவராகவும் உயர்த்தியது. தேசியத் தலைவரின் அழைப்பை ஏற்று, தமிழீழத்திற்கு பயணம் மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் அங்கு தமிழ் வளர்ச்சியப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர். போராளிகளுக்கு தமிழ் கற்பித்தது மட்டுமன்றி, போராளிகள் பலருக்கும் தமிழ்ப் பெயர் 6சூட்டிய பெருமைக்கும் உரியவர்.

தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கும் சென்று அங்கும் தமிழ் வளர்ப்பதில் அரும்பணி ஆற்றியவர். புலம்பெயர்ந்த தேசங்களில் எங்கள் இளந்தலைமுறையினரின் கைகளில் தவழும் வளர்தமிழ்ப் பாடநூல்களின் ஆக்கத்தில் இணைந்து, அவற்றைச் செழுமைப்படுத்தியவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த மு.செ.குமாரசாமி என்கின்ற இயற்பெயரைக் கொண்ட பேராசிரியர் அறிவரசன் அவர்கள், பேராசிரியராகப் பணிபுரிந்தது மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழ் அறிஞராக, பல புகழ்பெற்ற நூல்களுக்கு நூலாசிரியராக, பேராசிரியர்களுக்கே பயிற்சி கொடுக்கின்ற தலைமை பேராசிரியராக, பத்திரிக்கையாளராக, தமிழின உரிமைச் சார்ந்து நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் போராட்ட வீரராக தன்னை தமிழ் மொழியினதும் இனத்தினதும் ஆளுமையாகத் திகழ்ந்தவர்.

பேராசிரியர் அறிவரசன் அவர்கள் ‘புத்தன் பேசுகிறான்’, ‘மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை’, ‘தமிழ் அறிவோம்’, ‘தமிழ்ப்பெயர் கையேடு’, ‘சோதிடப் புரட்டு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல், தன் வாழ்நாளின் இறுதிவரை தமிழர் தாயகம் என்கின்ற மாத இதழை தொடர்ச்சியாக நடத்தி அவ்விதழ் மூலம் தமிழ்ச் சமூகத்தின் இனமொழி உணர்விற்காக அரும்பாடுபட்டவர்.

தமிழீழத்தில் தங்கியிருந்த அனுபவங்கள் குறித்து ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் என்கின்ற நூலையும், தமிழ் தேசிய இனத்தின் விடுதலை உணர்ச்சியைப் போற்றும் வகையில் விடுதலைபுரம் என்கின்ற காப்பியத்தையும் பேராசிரியர் அறிவரசனார் எழுதியிருக்கிறார்.

பிரான்சிற்கு வருகைதரும் போதெல்லாம் ஈழமுரசு நண்பர்களை அழைத்து தன் எண்ணங்களையும் சிந்தனைகளையும் அவர் பகிர்ந்து கொள்ளாமல் சென்றதில்லை. ஒருமுறை எனது பெயர் தமிழில் இல்லை என்று அவரிடம் குறைபட்டுக்கொண்டபோது, எனது பெயரை மாற்றாமல் அப்படியே அதனைத் தமிழ்ப்படுத்தித் தருகின்றேன் என்று சொல்லி, வெற்றிநிலவன் என்ற தமிழ்ப் பெயரைத் தந்தவரும் அவரே. ஈழமுரசுக்காக பல ஆக்கங்களையும் செவ்விகளையும் வழங்கியிருக்கின்றார். தொடர்ச்சியாக எழுதுவதாகவும் உறுதியளித்திருந்தார். இதனைவிட, ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் என்கின்ற நூலை புலம்பெயர்ந்த நாடுகளில் வெளிக்கொண்டுவரும் வாய்ப்பை ஈழமுரசிற்கு வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே அவரது இழப்பு நிகழ்ந்தேறிவிட்டது. அவரது தீடீர் இழப்பு தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் ஏற்பட்ட ஓர் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். 

- வெற்றிநிலவன்