கையுறை அணிந்த பூனை எலியைப் பிடிக்காது - பிலாவடி மூலைப் பெருமான்

வணக்கம் பிள்ளையள்.

ஒருத்தரும் கிட்ட வரக்கூடாது - சொல்லிப் போட்டன்.

ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது உங்களுக்கு. கல்லைத் தின்றாலும் அது உங்கட உடம்பில் சீரணமாகும். ஆனால் என்ரை நிலைமை அப்பிடி இல்லைப் பிள்ளையள். என்னை மாதிரியான நைன்ரியளைத் தான் உந்தக் கொரனா கொல்லுது. அது தான் ஒருத்தரும் கிட்ட வரக்கூடாது என்கிறேன்.

முதலில் கொரனா கொல்லுயிரி சீனாவிலை வந்ததும் எல்லோரும் அதைச் சீனக்காரனின்டை பிரச்சினை என்று தான் நினைச்சனாங்கள். நாய், நரி, பாம்பு, பல்லி, எலி என்று கண்ட நிண்டதெல்லாத்தையும் சீனாக்காரங்கள் தின்கிறதால் தான் இந்தக் கொரனா வியாதி வந்தது என்று உந்த உலகத்திலை இருக்கிற எல்லோரும் சீனாக்காரனைத் திட்டினவையள்.

ஆனால் இப்ப மெல்ல மெல்லக் கசியிற கதைகளையும், கிசு கிசுவென்று உலகம் முழுவதும் கொரனா பரவுகிறதையும் பார்க்கேக்குள்ளை இந்தப் பிரச்சினைக்கு சீனாக்காரனை மட்டும் நாங்கள் பழிசொல்கிறது சரியயன்று எனக்குப் படவில்லை பிள்ளையள். ‘பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்‘’ என்கிற மாதிரி சும்மா விசர்த்தனமாக மனம் போன போக்கில் இந்தப் பிரச்சினையைப் பற்றி சிந்திக்காமல் கொஞ்சம் நிதானமாகவும் சிந்திக்க வேணும் பிள்ளையள்.

இந்தக் கொல்லுயிரியை கொரனா எண்டு நாங்கள் பொதுப்படையாக அழைச்சாலும் இதின்ரை உண்மையான பெயர் கோவிட்-19 பிள்ளையள். இதுக்கு முதல் வந்த மேர்ஸ், சார்ஸ் எல்லாமே கொரனா வகையைச் சேர்ந்த கொல்லுயிரிகள் தான். இப்படியான கொல்லுயிரி ஒன்றை ஈராக்கில் பரப்பி தன்னுடைய ஆயுதப் படைகளை சிதைக்கிறதுக்கு அமெரிக்கா திட்டமிடுகிது என்று இரண்டாம் வளைகுடா யுத்தத்துக்கு முதல் தன்ரை தளபதிகளிட்டை சதாம் உசேன் சொன்னவர் என்றால் பாருங்கோவன்.

அது இந்தக் கொரனா கொல்லுயிரியா? அல்லது கொரனா ரகத்தைச் சேர்ந்த வேறு கொல்லுயிரியா? என்பது ஒருத்தருக்கும் தெரியாது பிள்ளையள். அதை நாங்கள் அறியிறது என்றால் சதாம் உசேன் தான் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்து வந்து விளக்கம் தர வேணும்.

ஆனால் இந்தக் கொல்லுயிரியைத் தங்கடை நாட்டுக்குள் அமெரிக்கா இறக்கி விட்டிருக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குது என்று ஈரானின்ரை இசுலாமிய புரட்சிக் காவல்படைகளின் தளபதி கொசேன் சலாமி சொல்லியிருக்கிறது சனத்தைக் கொஞ்சம் யோசிக்க வைச்சிருக்குது. போன வருசக் கடைசியில் சீனாவில் கொரனா நோய் அடையாளம் காணப்பட்ட உடனேயே இது அமெரிக்கனின்டை வேலை என்று தான் அந்த நேரத்தில் சீனாவிலை இருக்கிற சனமும் கதைச்சது. அப்பிடி அந்த நேரத்தில் சீனாவில் உள்ள சனம் கதைச்சதுக்கு ஒரு காரணம் இருந்தது.

உந்தக் கொரனா கொல்லுயிரியின்ரை பரவல் தொடங்கின வூகான் மாநகரில் தான் நோய் பரவுகிறதுக்கு ஒன்றரை மாதத்துக்கு முதல் உலக இராணுவ வீரர்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. அந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அமெரிக்கா சிப்பாய்கள் சில பேர் வூகானில் கொரனா நோய் பரவ ஆரம்பிச்ச குனான் கடலுணவுச் சந்தையில் சுற்றித் திரிஞ்சவையளாம். அவையள் தான் உந்த நோய்க்கான கொல்லுயிரியைப் பரப்பினதாக சீனாக்காரர் கதைச்சவையள்.

இது போதாது என்று இதைப் பற்றி சீனாவுக்கு வந்து ஆராயிறதுக்கு தாங்கள் விரும்புகிறதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சொன்ன உடனேயே அவையளுக்கான அனுமதியை சீன அரசாங்கம் மறுத்துப் போட்டுது.

பிறகென்ன? உது சீனாவையும், ஏனைய உலக நாடுகளையும் விழுத்திறதுக்கு என்று அமெரிக்கா தொடங்கின விளையாட்டு என்று தான் சனம் கதைக்கத் தொடங்கி விட்டுது. பின்னை என்ன? நெருப்பு இல்லாமல் புகை வருமே, பிள்ளையள்? ஆனால் சிலவேளைகளில் தூரத்தில் இருந்து பார்க்கேக்குள்ளை தூசி கிளம்பினாலும் புகை மாதிரித் தான் தெரியும்!

ஹி ஹி ஹி...என்னடா கிழவன் குழப்புகிறான் என்று நீங்கள் தலையைப் பிய்க்கிறது எனக்கு விளங்குது. ஆனால் அடுத்ததாக நான் சொல்கிறதைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் தலையைப் பிய்ச்சுக் கொண்டு ஓடப் போகிறியள்.

விசயம் இது தான் பிள்ளையள்.

உந்தக் கொரனா கொல்லுயிரி நோய் தொடங்கின வூகான் மாநகரில் தான் சீனாவின்ரை பிரதான கொல்லுயிரி ஆய்வு கூடம் இருக்குது. இந்த ஆய்வு கூடத்தில் தான் கொல்லுயிரிகளை உருவாக்கிறது, ஏற்கனவே உள்ள கொல்லுயிரிகளை முறியடிக்கிறது பற்றிய ஆய்வுகளை சீன விஞ்ஞானிகள் மேற்கொள்கிறவையள். இப்படி உந்த ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட கொல்லுயிரிகளில் ஒன்றுதான் எப்படியோ வெளியில் கசிவடைஞ்சு சீனா முழுவதையும் ஆட்டிப் படைக்குது என்று அமெரிக்கனுகள் சொன்னவங்கள்.

இதிலை இன்னுமொரு திருப்பம் என்னவென்றால் பிள்ளையள், உந்த கொரனா கொல்லுயிரி நோய் ஆரம்பிச்சதாக சொல்லப்படுகின்ற குனான் கடலுணவுச் சந்தையில் இருந்து கால் மைல் தூரத்தில் தான் சீன அரசாங்கத்தின் நோய் தடுப்பு ஆய்வு மையமும் இருக்குது. அங்கையிருந்தும் கொரனா பரவியிருக்கலாம் என்றும் கதையள் அடிபட்டது.

உது போதாது என்று இன்னுமொரு கதையும் அடிபட்டது பிள்ளையள். வூகானில் இருக்கிற சீன அரசாங்கத்தின்ரை கொல்லுயிரி ஆய்வு கூடத்தின்ரை பணிப்பாளர் நாயகமாக இருக்கிற வாங்க் யான்யீ என்கிற விஞ்ஞானி, அங்கை ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட மிருகங்களை குனான் கடலுணவுச் சந்தையில் இருக்கிற வியாபாரிகளுக்கு விற்றுக் காசு உழைக்கிறதாகவும், அப்படி அவரால் விற்பனை செய்யப்பட்ட மிருகம் ஒன்றில் இருந்து கொல்லுயிரி பரவியிருக்கலாம் என்றும் கதைச்சவையள்.

இப்ப நான் சொன்னதைக் கேட்டு நீங்கள் எல்லோரும் தெளிவாகக் குழம்பிப் போயிருக்கிறியள் என்கிறது எனக்கு விளங்குது. அது தான் மனம் போன போக்கில், வாய் போன போக்கில் கதைக்கக் கூடாது என்று சொல்கிறது. நாங்கள் எதையும் ஆழமாக ஆராய வேணும் பிள்ளையள்.

எது எப்படியோ, அணுவைத் துளைச்சு, அண்டத்தைப் புரட்டின உந்த வல்லரசு நாடுகளின்ரை விஞ்ஞானிகளால் உந்தக் கொல்லுயிரியை முறியடிக்கிற மருந்தைக் கண்டுபிடிக்கிறது கயிட்டமான காரியம் இல்லை.

‘கையுறை அணிந்த பூனை எலியைப் பிடிக்காது’ என்று அந்தக் காலத்தில் இத்தாலியில் உள்ள கிழடு கட்டைகள் சும்மாவோ சொல்கிறதுகள்? நீங்கள் இன்னொன்றையும் கவனிக்க வேணும் பிள்ளையள். உந்தக் கொல்லுயிரியால் சாகிற ஆட்களில் பெரும்பாலான ஆட்கள் என்னைப் போன்ற கிழடு கட்டையள் தான். அதிலையும் இத்தாலியின்ரை சனத்தொகையில் என்னை மாதிரி நைன்ரியள் நிறையப் பேர் இருக்கீனம்.

அப்பிடியான ஆட்கள்தான் இப்ப தொப்புத் தொப்பென்று அங்கு விழுகீனம். ‘மூக்கில் பட்ட காயத்துக்கு முழங்காலில் கட்டுப்போட்டானாம்’ என்கிற கதையாகத் தான் உந்த நோய்க்கு உலக நாடுகளின்ரை தலைவர்கள் எடுக்கிற தடுப்பு நடவடிக்கைகள் இருக்குது. உந்தக் கொல்லுயிரி கிசு கிசுவென்று பரவுகிறதுக்கான முக்கிய காரணம் அதைத் தடுக்கிறதுக்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபடாமல் இருக்கிறதும் என்று உலக சுதாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரெட்றோஸ் அட்கனொம் குற்றம் சுமத்துகிற அளவுக்கு நிலைமை முற்றிப் போச்சுது.

வெயில் எறிச்சால் கொரனா செத்துப் போயிடும் என்று டொனால்ட் ரிறம் கதை விடுகிற அளவுக்குத் தான் உலகத் தலைவர்களின் நடவடிக்கைகள் இருக்குது என்றால் நாங்கள் பிறகு என்ன செய்கிறது பிள்ளையள்?

எது எப்படியோ, ?குரங்கிற்கு முடிவு காலம் வந்துவிட்டால் அது பாயும் கொப்பு எல்லாம் வழுக்கும்? என்று அந்த நாட்களில் என்ரை ஆச்சி சொல்லுறது தான் இப்ப எனக்கு நித்திரையில் கனவாக வந்து போகுது.

வேறை என்ன? வரட்டே?