ஈழத்தீவில் இரு தேசங்கள் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது சிறீலங்கா - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

தமிழர்களுக்கு தனியாக தாயகம் உள்ளமை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சிங்கள ஏகாதிபத்தியத்தின் போர் வெற்றிக் கொக்கரிப்பு தமிழர்களுக்கு பிரந்து செல்லும் அதிகாரம் உண்டு என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. தமிழீழம் தமிழர்களுக்கு உரித்தான நாடு என சிங்கள தேசம் மீண்டும் ஒரு தடவை முன்மொழிந்திருக்கின்றது. இதை தமிழினம் எப்படி வழிமொழியப்போகின்றது என்பதே இப்போதைய கேள்வி.

ஆம், சிங்கள அரசின் அறிவித்தலின்படி தமிழர்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகின்றன. தமிழர்களின் அறிவித்தலின்படி தமிழர்களின் ஆயுதங்கள் மௌனித்து 11 ஆண்டுகள் ஆகின்றன. அந்த இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் வீரகாவியமான மாவீரர்களுக்கு தமிழர் தேசத்தில் தீபம் ஏற்ற தடை விதித்த சிங்களப் பேரினவாத அரசு, தமது தேசத்தில் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை விமரிசையாக நடத்தி முடித்திருக்கின்றது. இது ஈழத்தீவில், தமிழர் தேசம் - சிங்கள தேசம் என இரு தேசங்கள் இருக்கின்றன என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

2

இதற்கு மேலாக, அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் சிங்கள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆற்றிய உரையும், ஈழத்தீவில் இரு தேசங்கள் இருக்கின்றன என்பதை புலப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கு அப்போது கட்டளை இட்ட, இப்போதைய ஜனாதிபதி கோட்டபாயவின் பேச்சில் பச்சை இனவாதம் கொப்பளிக்கின்றது. தமிழர் விடயத்தில் சர்வதேசத்தை அவர் வம்புக்கு வலிந்து இழுப்பது தெளிவாக தெரிகின்றது. இது சிங்களவர்களுக்கு அன்றி தமிழர்களுக்கு மிகவும் சாதகமானது.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் வருகின்ற ஒவ்வோர் ஆண்டும் மே 18 ஆம் திகதி தமிழர் தேசம் துயரக்கடலில் மூழ்கும் என்பதை அனைத்துலகும் அறியும். தமிழ் மக்களுக்கு இது வேதனையான நாள் என்பதை, அந்த வேதனையைத் தந்த சிங்கள தேசம் அறியாமல் இல்லை. முப்பது வருடமாக தமிழர்களை அடக்கி, முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று அழித்தவர்கள் அதற்கான நினைவுநாளைக்கூட அனுஷ்டிக்க விடாமல் தடுப்பதை எவரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்?

3

தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க முடியாது எனில், சிங்களவர்கள் எப்படி தமிழர்களை அழித்த நாளை போர் வெற்றியாக கொண்டாட முடியும்? கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி பேணப்படவேண்டும், அதற்காகவே நினைவேந்தலை நடத்த முடியாது என சிங்கள காவல்துறை கூறியது.

மே 11 ஆம் திகதி, நினைவேந்தல் வாரம் ஆரம்பித்த முதல் நாளில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாண நுழைவாயிலில், சிங்கள படையினர் நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று புதைத்த செம்மணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தனர். அதற்கு சிங்கள காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

4

காவல்துறை அதிகாரிகள் அங்கு நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கடுமையாக நடந்துகொண்டனர். அதையும் மீறி நினைவுச்சுடர் ஏற்றியவர்களின் விபரங்களை குறிப்பெடுத்தது காவல்துறை.

இதேபோன்றே, நவாலி சென். பீற்றர் தேவாலயம், கொழும்புத்துறை, யாழ். தமிழராய்ச்சி படுகொலை நினைவிடம், வடமராட்சி உள்ளிட்ட பல இடங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடர்களை ஏற்றியபோது காவல்துறையினர் கடும் எதிர்ப்புகளை பிரயோகித்தனர். எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நினைவேந்தலை செய்து முடித்தனர்.

இறுதியாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18 ஆம் திகதிக்கு முதல்நாள் இரவு யாழ்ப்பாண சிங்கள காவல்துறை யாழ். நீதிவானின் இல்லத்திற்கு சென்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 11 பேருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து, அவர்களை தனிமைப்படுத்தும் உத்தரவை நீதிவானிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

5

இந்த உத்தரவின் மூலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பணியவைப்பது, முள்ளிவாய்க்காலில் (மறுநாள்) மே 18 ஆம் திகதி இடம்பெற ஏற்பாடாகியுள்ள நினைவேந்தலை தடுத்து நிறுத்துவது, வீடுகளிலோ பொது இடங்களிலோ மக்கள் நினைவுச்சுடர் ஏற்றுவதை நிறுத்துவது, மக்களை அச்சமான சூழலுக்குள் வைத்திருப்பது போன்ற செயல்களை அடைய முடியும் என சிங்கள தேசம் எதிர்பார்த்தது.
ஆனால், மே 18 ஆம் திகதி அன்றே மேன்முறையீடு செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அதன் மூலம் 11 பேரையும் தனிமைப்படுத்தல் உத்தரவில் இருந்து விடுதலை செய்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தீபமேற்றிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் கொரோனா தடுப்பு முகத்திரைகளை அணிந்து, சமூக இடைவெளியை பேணியவாறு தமது செயற்பாடுளை முன்னெடுத்திருந்தும் அவர்கள் மீது காவல்துறை கைவைத்தது.

மதுபானம் அருந்துவது கொரோனா பரவுவதற்கான ஏதுநிலையை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் மதுபானசாலைகளை திறந்து மதுப்பிரியர்கள் நசிபட்டவாறு மதுபானம் கொள்வனவு செய்வதை பக்கத்தில் இருந்தவாறு பார்த்துக்கொண்டிருந்த சிறிலங்கா காவல்துறை, உரிய சுகாதார விதிகளை பயன்படுத்தி நினைவேந்தல் செய்தவர்களை நீதிமன்றில் நிறுத்தியது. இதில் இருந்து அவர்கள் ஏன் இவற்றை செய்தார்கள் என்பது தெரியவரும்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, தாயகத்தில் மே 18 இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அனுமதி மறுத்திருந்த சிங்கள அரசும் படைகளும் தென்னிலங்கையில், நாடாளுமன்றுக்கு அருகில் உள்ள சிங்களப் படையினருக்கான தூபிக்கு முன்பாக போர் வெற்றிக் கொண்டாட்டத்தை விமரிசையாக நடத்தினர்.

2
அதில் எந்தவிதமான சமூக இடைவெளிகளும் பேணப்படவில்லை. மேடையில் போடப்பட்டிருந்த கதிரைகள் கூட சமூக இடைவெளிக்கு ஏற்றாற்போல இல்லை. அதிலும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அந்த நிகழ்வில் முகத்திரை அணிந்திருக்கவில்லை. ஜனாதிபதி செயலகம் என்ற பெயரில் அடிக்கடி வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் மக்களுக்கு மட்டும்தானா? ஜனாதிபதிக்கு அது பொருந்தாதா என மக்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு கோட்டபாயவின் செயற்பாடு அமைந்திருந்தது.

மேலும், அந்த நிகழ்வில், கோட்டபாய ஆற்றிய உரையானது தமிழ்த் தேசிய இருப்பு அழிக்கப்படுவதற்கு திட்டங்கள் தீட்டப்படுவதை வெளிப்படுத்தியது. ஈழம் என அழைக்கப்பட்ட இலங்கையில் இரு தேசங்கள் இருக்கின்றன என்பதை சிங்களப் பேரினவாத அரசுத் தலைவர் அங்கே தமது செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்தினார்.

மே மாதம் 19ஆம் திகதி இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நாளாகும். இற்றைக்கு 11 வருடங்களுக்கு முன்னர் 2009 மே மாதம் 19ஆம் திகதி, நாம் சுமார் 30 வருடங்களாக இந்த நாட்டிற்கு சாபமாக இருந்து வந்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்தோம்… என உரையாற்றத் தொடங்கிய கோட்டபாய வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களை தமது அரசுக்கு பின்னால் அணி திரட்டுவதற்காக அவர் ஆற்றிய யுத்த வெற்றிவிழா உரையானது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமித்தது. அச்சமூட்டியது. தமது எதிர்காலம் தொடர்பாக அதிகம் சிந்திக்கவைத்தது. தாயகத்தில் உள்ள சில்லறைத்தனமான அரசியல்வாதிகளுக்குக்கூட கோட்டபாயவின் பேச்சு ஆத்திரத்தை வரவைத்துள்ளது. மாவை. சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கோட்டபாவின் உரையை வெளிப்படையாவே விமர்சித்து அறிக்கைகள் விடுத்திருந்தனர்.

“யுத்தம் என்பது மலர்தூவிய பஞ்சணையன்று. குறிப்பாக சட்டத்தை மதிக்காத உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்துடன் போராடும் போது படைவீரர்களுக்கு பல்வேறு துன்பகரமான அனுபவங்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்” எனக் கூறியதன் மூலம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தினார் கோட்டபாய.

பெரும் தியாகங்களை செய்து அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தித்தந்த எமது படைவீரர்களின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். எனது அரசாங்கத்தின் கீழ் எமது படைவீரர்களின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்” எனக் கூறியதன் மூலம் போர்க்குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அடித்துக்கூறியிருக்கின்றார்.

மேலும், “எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை” என்றார் கோத்தபாய.

இதன்மூலம், ஐக்கியா நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புக்களில் இருந்தும் தாம் வெளியேறிவிடுவார் என எச்சரித்திருக்கின்றார். சிங்கள தேசியவாதத்தை உசுப்பேற்றியிருக்கின்றார்.

கோட்டபாயவின் இந்த உரையை தமிழ் மக்கள் சாதாரணமாக கடந்துபோக முடியாது. அந்த உரையில் உள்ள கருத்துக்கள் ஆராயப்படவேண்டியவை. இது தமிழ் மக்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம். சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எப்பேர்தும் உரிமைகளை வழங்கப்போவதில்லை என்பதை மீண்டும் ஒரு தடவை கூறியிருக்கின்றது.

தமிழர் விடயத்தில் சிறிலங்காவின் போக்கு மாறப்போவதில்லை என்பதை சிங்கள தேசம் அடித்துக்கூறிய பின்னரும் அவர்களோடு உறவாடுவதற்கு தமிழர்கள் தயாராக இல்லை என்பதை சிங்களவர்களுக்கும் பன்னாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் இந்த விடயத்தை பேசுபொருளாக்க வேண்டும். கோட்டபாயவின் உரைக்கு எதிரான கருத்துக்கள் தாயகத்தில் தொடர்ந்தும் விதைக்கப்பட்டு தமிழ் மக்கள் விழிப்பூட்டப்படவேண்டும். அத்துடன், புலம்பெயர் தேசத்தில் சிறு கவனயீர்ப்புகள் மேற்கொள்ளப்படலாம். கொரோனா அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும்  அந்தந்த நாடுகளில் உள்ள சட்ட விதிகளுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த்தேசிய அமைப்புக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கிளைகள் கோட்டபாயவின் உரைக்கு எதிராக அறிக்கைகள் மூலம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அந்த அறிக்கைகளின் பிரதிகள் பன்னாடுகளின் அரச தலைமைக்கு அனுப்பப்பட வேண்டும். தாயகத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என பன்னாட்டு அரசுகளுக்கு கோரிக்கை விடவேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் கோட்டபாயவின் உரை தொடர்பாக எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ள தற்போதைய சூழலில் அவர்களுக்கும் இந்த அறிக்கையின் பிரதிகளை அனுப்பிவைக்க வேண்டும்.

காலம் எமக்காக காத்திருக்காது. சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு எப்படி கையாளப்போகின்றது என்பதிலேயே தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு தங்கியுள்ளது. இதை அனைவரும் புரிந்துகொள்வது நன்று.