அரிச்சந்திரன் பதில்கள்

கேள்வி:- இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடிய சுபாஸ் சந்திரபோசைப் பார்த்துத்தான் தலைவர் பிரபாகரன் போராட வந்ததாகக் கூறியிருக்கின்றார். சுபாஸ்சந்திரபோஸ் அத்தனை தூரம் உறுதியும் பலமும் வாய்ந்தவரா..?
சந்திரமோகன், இவ்றி - பிரான்ஸ்

bபதில்:- அடொல்ப் ஹிட்லருடன் இணைந்து உலகத்தையே ஆட்டிப் படைத்தவர் சர்வாதிகாரி முசொலினி. ஒருமுறை அவரிடம் "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டிருக்கின்றார்கள். "இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காலந்தவறிப் பிறந்துவிட்டார். சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது" என்று பதிலளித்தாரம் முசொலினி. சுபாஸ் சந்திரபோசிடம் அடிவாங்கிப் பின்வாங்கினோம் என்று சொல்வதைவிட மாத்மா காந்தியின் அகிம்சைக்கு மதிப்பளித்து நாட்டைவிட்டு வெளியேறுகின்றோம் என்று சொல்வதுதான் பிரித்தானியாவிற்கு பெருமையாக இருந்தது. அவ்வாறே அவர்கள் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்கள். ஆனால், வரலாற்றை ஒருபோதும் மறைக்க முடியாது.

 

 

கேள்வி:- பொதுவாக, நம் சமூகத்தில் ஆபத்து நிறைந்த பணிகளில் பெண்களை அனுமதிப்பதுமில்லை என்பது உண்மைதானே..?
கலாதரன் பொபினி பிரான்ஸ்

3
பதில்:-
குடும்ப வாழ்க்கையில் அனுமதிக்கப்படுகின்றார்களே அது ஆபத்தில்லையா..? ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதென்பதே ஒரு பெண் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் பயணம் தம்பி.

கேள்வி:- தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் படுகொலை, விடுதலைப் புலிகளின் முட்டாள்தனமான செயல்தானே..? (இந்தக் கேள்விக்கு அரிச்சந்திரன் ஒருபோதும் பதிலளிக்கப்போவதில்லை. இருந்தாலும் கேட்கின்றேன்.)
க.சந்திரவதனன் இலண்டன் பிரித்தானியா

6
பதில்:-

1. பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு கீழே வந்த விடுதலைப் புலிகளைச் சுட்டக்கொன்றுவிட்டு, மேலே சென்று ஏன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரனை வேறு யாரும் சுட்டுக்கொன்றிருக்கக்கூடாது?
2. இலங்கையில் இந்திய அமைதிப்படை நடத்த திட்டமிட்டிருந்த மாகாண சபைத் தேர்தலுக்கு விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று மக்கள் வாக்களிக்காமல் இருந்துவிட்டக்கூடாது. அதனைத் தடுக்க மாற்றுவழி விடுதலைப் புலிகள் மீது மக்களை வெறுப்படைய வைக்கவேண்டும். விடுதலைப் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவைச் சிதைப்பதற்கு ஏன் இந்தக் கொலையை திட்டமிட்டிருக்கக் கூடாது?

3
3. வடக்கு, கிழக்கிற்கு வெளியே எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், ஏன் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும் விடுதலைப் புலிகள் எப்போதும் உடனடியாக உரிமை கோருவதில்லை. ஆனால், இந்தச் சம்பவம் நடந்தவுடன் (அதுவும் இந்திய இராணுவ முற்றுகைக்குள் தலைவர் பிரபாகரனுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில்) ஏன் மூன்று போராளிகளும் உயிரிழந்ததை அவசர அவசரமாக உரிமைகோரி அந்த இராணுவ முற்றுகைக்குள்ளும் பல்வேறு இடங்களில் விடுதலைப் புலிகள் சுவரொட்டிகள் ஒட்டினர்?
4. பாதுகாப்பாக இருக்கும் ஒருவரை கொல்வதற்காகச் செல்லும் விடுதலைப் புலிகள், அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிக்கும் வழிமுறைகளை ஆராயமால் உள்ளே சென்று கொலையைச் செய்துவிட்டு அசாதாரணமாக வெளியே திரும்பி வந்திருப்பார்களா?
5. மேஜர் விசு விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். இவரை ஒரு கொலையை மேற்கொள்வதற்காக விடுதலைப் புலிகள் அங்கு அனுப்பிவைத்திருப்பார்களா..?
6. மாத்தையா அப்போது யாருடைய கட்டளைக்கு கீழே செயற்பட்டுக்கொண்டிருந்தார்..? அவ்வாறு மாத்தையா றோவின் கட்டளையின் கீழ் செயற்பட்டுக்கொண்டிருந்தால், மாத்தயாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அங்கு சென்ற விடுதலைப் புலிகள் ஏன் அவர்களைச் சுட்டுக்கொன்றிருக்கக்கூடாது?
7. விடுதலைப் புலிகளின் சந்திப்பு நடந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடுவதற்காகவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைகளை அகற்றுவதற்காகவும் மூன்றாவது கரமொன்று இந்தக் கொலைகளை ஏன் முன்னின்று நடத்தியிருக்கக்கூடாது?
8. .....
இப்படி ஏராளமான கேள்விகள். ‘ராஜீவ் கொலை : விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ - என்ற இந்திய ஹிந்தி எழுந்தாளர் (பெயர் நினைவிற்கு வரவில்லை) எழுதி, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூலினை ஆழமாகப் படித்துக்கொண்டு சென்றால், அமிர்தலிங்கம், கோயேஸ்வரன் கொலைகளின் பின்னால் உள்ள பல மர்மமான கேள்விகளும் எழுந்துநிற்கின்றன. இதற்கான பதில்களைக் கண்டுபிடித்தால் அமிர்தலிங்கம் கொலையின் பின்னால் பல சூத்திரங்களுக்கும் விடை கிடைக்கும். ஆனால், நாம் அவ்வாறான நிலையில் இல்லை. நிலவைச் சுட்டிக் காட்டினாலும் சுட்டுவிரலைப் பார்க்கும் குழந்தைகளாகத்தான் இன்றும் நாம் இருக்கின்றோம்.

‘ராஜீவ் கொலை : விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’, ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’, ‘இந்திரா காந்தி : கொன்றது யார்?’, ‘லுமூம்பா’, ‘நிழல் வீரர்கள்’.... போன்ற ஏராளமான இன்றைய உலகத்தின் புலனாய்வுகளையும், தங்கள் தங்கள் சுயநலன்களுக்காக ஒவ்வொரு நாடுகளும் மேற்கொள்ளும் நாசகார நகர்வுகளையும் தங்கள் அனுபவங்களில் இருந்து எடுத்துவைத்திருப்பவர்களின் ஆவணங்களைப் படித்தால் மண்டை கிறுகிறுக்கும். எப்படியான உலகத்தில் நாம் இருக்கின்றோம் என்ற பேரச்சமே ஏற்படும். ஏன், அண்மையில் வந்த எட்வேட் சினோடனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமான Snowden படத்தைப் பார்த்தால் அப்படியே ஆடிப்போய்விடுவீர்கள். இப்படியான மர்மமும் சூழ்ச்சிகளும் நிறைந்த ஆபத்தான உலகில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இதற்குள் சதிகளையும், நாசகாரத் திட்டங்களையும் கண்டறிவது அத்தனை இலகுவல்ல.    

- ஈழமுரசு வாழ இதழில் ஏற்கனவே பதிவான கேள்விபதில்களை உலகெங்கும் வாழும் இணைய வாசகர்களுக்காக இங்கு மீள் பதிவு செய்கின்றோம்.