நிர்வாண ஊரிலே ஆடை அணிந்தவன் கோமாளி! - கந்தரதன்

இன்று புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் உள்ளிருப்புக்காலத்தில் பலரும் பல்வேறுபட்ட பெறுமதி மிக்க விடயங்களைச் செய்துள்ளனர். இந்த உள்ளிருப்புக்காலம் என்பது இதுவரை கிடைத்திருக்காத அற்புதமான பொழுதாகவே பார்க்கப்பட்டது.

இயந்திரமயமான இந்த உலகத்திலே, குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டில் ஒரே நேரத்தில் சந்திப்பது என்பது ஓர் அரிதான விடயமாகவே பார்க்கப்பட்டது. வீட்டில் நல்லது கெட்டது என்றால் கூட எல்லோரும் ஒரே நேரத்தில் நிற்பது என்பது அபூர்வமாக இருந்துள்ள நிலையில், இந்த கோவிட் 19 என்னும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி  மனிதனால் முடியாத காரியத்தை முடித்துக்காட்டிவிட்டது.

இந்த உள்ளிருப்புக்காலத்தில் நாம் தாயகத்தில் பழக்கமாகக் கொண்டிருந்த உயிருக்கு நிகராக நேசித்த பல விடயங்களையும் எம் கண்முன்னே கொண்டுவந்திருப்பதுடன், புலம்பெயர் தேசங்களிலும் அவற்றை பின்பற்றலாம் என்ற பல விடயங்களை நிரூபித்தும் காட்டியுள்ளது.
இவற்றில் சில விடயங்களை இப்போது குறிப்பிடலாம். முதலில் ஊடகங்களின் பக்கம் செல்வது நன்றாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

1

தாயகத்தில் காலை என்றவுடன் நாங்கள் பத்திரிகையினை எதிர் பார்த்திருப்பது வழமை, அந்தக்காலத்தில் வானொலி, தொலைக்காட்சி இருந்தாலும் கூட பத்திரிகைகளுக்கு என்று ஒரு தனி இடம் இருந்தது. காலையில் எழுந்தவுடன் தேநீருடன் பத்திரிகையை போட்டி போட்டுக்கொண்டு படிப்பதில் கிடைக்கும் இன்பம் எங்கே உள்ளது.  ஆனால், இன்றும் அந்தப் பத்திரிகைகள் எல்லாம் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை நாடுபவர்களின் எண்ணிக்கைதான் குறைவடைந்து கொண்டு சென்றுள்ளது.

நமக்கு நாமே ஒரு நேர அட்டவணை போட்டுக்கொண்டு வாழ்ந்த காலங்களில் எவ்வளவு விடயங்களைச் செய்திருப்போம். சாதனைகளை நிலை நாட்டியிருப்போம். ஆனால், அப்போது நிறையப் பொழுது இருந்தது. இன்று உலகமே எம் கைகளில் வந்த பின்னரும் அனைவரின்  வார்த்தைகளிலும் நேரமில்லை என்பதே மேலோங்கி இருக்கும்.

2

தற்போது, இந்த வார்த்தைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல், 'இதோ நீங்கள் கேட்ட நேரம் பொழுது தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். எங்கே சாதித்துக்காட்டுங்கள் பார்க்கலாம்...!" எனக் கோவிட் 19 நிமிடங்களை அல்ல, மணித்தியாலங்களை அல்ல மாதங்களையே தந்தது. உலகப்பத்திரிகைகளையெல்லாம் மீண்டும் மின்னிதழ்களாக உங்கள் கைகளில் தந்து உலகத்தையே படியுங்கள், நீங்கள் தவறவிட்ட அற்புதப் படைப்புக்களையெல்லாம் மீண்டும் படியுங்கள், பார்த்து அனுபவியுங்கள் என்று.

வார இறுதி நாட்கள் என்றால், ஊரின் நடுவே இருக்கும் வாசிகசாலையில் வார இதழ்களையும் சஞ்சிகைகளையும், சிறுவர் மலர்களையும் தேடித் தேடிப் படித்த பொற்காலங்களை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்தது. அதாவது கைபேசிகளில் உள்ள சமூக இணையக் குழுக்களில் அவை அனைத்தும் தாராளமாகக் கிடைத்தன. இவற்றில் அம்புலிமாமா, பாலமித்ரா, நங்கூரம், சிரித்திரன், அறிவுக்களஞ்சியம்.... எனப் பட்டியல் நீள்கின்றது.

2

ஒரு தென்னிந்திய சினிமாத் திரைப்படத்தில், 18 வருடங்கள் கோமா நிலையில் இருந்த இளைஞன் எழுந்து வந்து, இழந்துவிட்ட மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேடுகின்றான். அதனால் அவன் புதிய சமுதாயத்திற்கு கோமாளியாகவே பார்க்கப்படுகின்றான்.
அவனுடைய மகிழ்ச்சியான வாழ்க்கை எவை என்பதை இன்று நம் கண்முன்னே காணக்கிடைக்கின்றது. நாமும் அந்தக் கோமாளியாகவே  வாழ்ந்திருக்கின்றோம். வாழ்கின்றோம்.

'நிர்வாண ஊரிலே கச்சை அணிந்தவன் கோமாளி" என்று ஒரு பழமொழி உள்ளது. அவ்வாறுதான் தற்போதைய வாழ்க்கை முறையில் உள்ளவர்களிடம் எமது கடந்தகால் வாழ்க்கைமுறைகள் பற்றிக் கூறினால், அது அவர்களுக்கு கோமாளித்தனமாகவே தோன்றும்.
இதேவேளை, புலம்பெயர் நாடுகளில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் ஏன் ஊடக ஜாம்பவான்கள் என்றே சொல்லலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு முற்றும் துறந்த துறவிகள் போன்று (ஊடகப் பணியை மட்டும்) இருப்பவர்கள் ஏராளம் பேர். இவ்வாறானவர்கள் பலரும் இன்று உள்ளிருப்பை சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் உள்ளிருப்புக்காலத்தில் தனது  ஊடகப்பணியில் பெற்ற அனுபவங்களை முகநூலில் வடித்ததைப் பார்த்து பல ஊடுகவியலாளர்களும் எழுத ஆரம்பித்துள்ளனர் என்பது ஒரு புறமிருக்க, புலம்பெயர் தேசங்களில் ஒலிவாங்கியைப் பிடித்தவர்களும் தமக்குத்தாமே ஊடகவியலாளர்கள் என்று பட்டங்களைச் சூடிக்கொண்டு இருப்பவர்கள் பலர், குறித்த கட்டுரையைப் பார்த்துவிட்டு ஊடகப்பணியில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றதா என்று மூக்கில் விரலைவைத்த கதைகளும் நிறையவே உண்டு. அவைபற்றிப் பின்னர் பார்ப்போம்.

இன்று ஒன்றுக்கு இரண்டு முகநூல்களை வைத்துக்கொண்டு, நிகழ்வுகளைப் படம்பிடித்து புகைப்படங்களை முகநூலிலும் ஏனைய சமூக இணையக் குழுக்களிலும் இடுகையிட்டு, ஒருமை பன்மையின்றி தமிழைக்கொன்று நான்குவரிகளில் செய்திகளை எழுதி முதலில் இடுகையிட்டுவிட்டால், அவர்கள் ஊடகவியலாளர்களாம்.

3

தாயகத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நள்ளிரவு கடந்தும் மிதிவண்டியில் தனியாகச்சென்று இராணுவச் சோதனைச்சாவடிகளையும் இராணுவத்தினர் சாவடிகளில் போடும் எச்சச் சோற்றிற்காக காத்திருக்கும்  தெருநாய்களினது மிரட்டல்களையும் தாண்டி யாழ்;.போதனாவைத்தியசாலையில் அவசர செய்திகைளைச் சேகரித்துவிட்டு, அதேவழியாக மீண்டும் சென்று செய்தியை எழுதி வழங்கியவர்களை எவ்வாறு அழைப்புது.*

ஆயினும், புலம்பெயர் தேசங்களில் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் வதிவிட அனுமதிகளைப் பெற்று வாழ்பவர்கள் இந்தக் கொரோனா காலத்தில்கூட பேனாவை தூசுதட்டாத நிலைமை வேதனையே.

அடுத்ததாக, தமிழர்களின் கொடைப் பண்பு பற்றியும் சொல்லத்தான் வேண்டும். இக்கட்டான உள்ளிருப்புக் காலத்தில் பலரும் தொண்டு அமைப்புக்களின் ஊடாகவும், தனிநபர்கள் ஊடாகவும் தொழில் வாய்ப்புக்களை இழந்து வருவாயின்றித் தவித்தவர்களுக்கு உதவிகள் பரவலாக்கப்பட்டிருந்தன.  அந்த உதவிகள் பெரும் எண்ணிக்கையான மக்களைச் சென்றடைந்தபோதும், சிலர் தமக்கு உதவிகள் சீராகக் கிடைக்கத் தவறியதாகவும், தாம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிலர் புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்று நேரடியாகத் தாமே அயலில் உள்ளவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். இதனால் சிலருக்குள் முரண்பாடுகளும் ஏற்படத்தான் செய்தது. குறித்த முரண்பாடுகளுக்கு ஒரு காரணம் உண்டு, கீழே உள்ள பாடலைப் பார்ப்போம்.

மானம் பெரிதென உயிர் விடுவான், மற்றவர்க்காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான், தருவது மேல் எனப் பேசிடுவான்..!

என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்களின் பாடல்களில் இருந்து இதனை விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுவதுபோல் உதவிகளை இருப்பவர்களுக்குச் செய்துவிட்டு, ஊருக்குள் நாங்களும் செய்தோம்.... என்ற தொலைபேசி உரையாடல்கள் அயல்நாடுகளின் வீட்டுத் தொலைபேசிகளை நீண்ட நேரப் பாவனையில் வைத்திருக்கத் தவறவில்லை.   

அடுத்ததாக சுத்தம் பற்றிக் குறிப்பிடவேண்டும்.  இன்று கோவிட் 19 அனேகமானோரை சுத்தத்தைப் பேணவைத்துள்ளது. எப்போதும் கைகளைக் கழுவிக்கொண்டிருக்கவேண்டும். உடலையும் ஆடைகளையும் தூய்மையாக  வைத்திருக்கவேண்டும்.

'கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக்குடி " என்ற பழமொழி இதற்கு இன்று பொருத்தமாக இருக்கின்றது என்று நம்புகின்றோம்.

இதற்கு ஊரில் நடைபெற்ற நகைச்சுவை சம்பவம் ஒன்று உள்ளது.  ஒருவர் குளிப்பதற்கு சோம்பல் உடையவர், இவரைக் குளிக்க வைக்க மனைவி படாத பாடுபட்டார். மனைவியின் போதனை வேதனையாகி, அவர் குளிக்கச் செல்கின்றார். சிறிது நேரத்தில், கிணற்றடிக்குச் சென்ற மனைவி, கணவரிடம் சொல்கின்றார். நன்கு அழுக்குப் போக தேய்த்துக் குளிக்கும்படி கூறுகிறார். அதற்குக் கணவர் கூறுகிறார். நீ குளிக்கச் சொல்லி வற்புறுத்தியதால்தான் குளிக்கவே வந்தேன். குளிப்பதும் போதாமல், நன்கு தேய்த்துக் குளிக்கச் சொல்கிறாயே இது உனக்கே நன்றாக இருக்கிறதா என்றாராம்.

சுத்தம் என்பது அவர் அவர் தமக்குள்ளே பேணிக்கொள்ளவேண்டிய ஒன்று. அடுத்தவர்கள் சொல்லிச் செய்வதில்லை. இன்று கோவிட் 19 பிரச்சினையும் அவ்வாறே. எமது சுத்தம் பற்றி அடுத்தவர்களே கூறுகின்றார்கள். கைகளைக் கழுவுவோம் - சுத்தமாக இருப்போம் - ஆரோக்கியமாய் வாழ்வோம்!