ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 2 அவிழ்க்கப்படும் இன்னொரு முடிச்சு - கலாநிதி சேரமான்

இத் தொடர் வெளியிடப்படுவதையிட்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் சில தரப்புக்களால் கண்டனங்களும், விமர்சனங்களும், அதிருப்திகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான கட்டுரைகளை வெளியிடுவது இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் செய்கை என்று ஒரு தரப்பினரும், இந்தியாவின் ஆதரவு இன்றி தமிழீழத்தை அமைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடாகவே இவ்வாறான கட்டுரைகள் வெளிவருகின்றன என்று இன்னொரு தரப்பினரும், தனது கடைசி மாவீரர் நாள் உரையில் இந்தியாவிற்குத் தமிழீழத் தேசியத் தலைவர் நேசக்கரம் நீட்டியிருந்த நிலையில், தேசியத் தலைவரின் வெளியுறவுக் கொள்கைக்கு விரோதமான முறையில் இக்கட்டுரை வெளிவருவதாக மற்றுமொரு மேதாவிகளைக் கொண்ட அணியும் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தன.

ஒப்ரேசன் சாணக்கியா – 2.0 நடவடிக்கையின் முழுப் பரிமாணங்களையும் நாம் பார்ப்பதற்கு முன்னர், மேற்குறிப்பிட்ட எதிர்வினைகளுக்கான பிரதிபலிப்பை இவ்வாரத் தொடரில் பதிவு செய்வது அவசியமாகின்றது.

முதலாவதாக, இப்பத்தியின் நோக்கம் இந்தியாவைப் பகைத்துக் கொள்வதல்ல. மாறாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்திற்கு சாவுமணி அடிக்கும் நோக்கத்துடன் தமிழீழ தேசத்திற்கு எதிராக இந்தியா முன்னெடுத்து வரும் பகைமை நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதே இப்பத்தியின் நோக்கமாகும். அதாவது, தமிழீழ தேசத்திற்கு எதிரான பகைமை நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுகின்றதே தவிர, இந்தியாவிற்கு எதிரான பகைமை நடவடிக்கைகள் எவற்றையும் இப்பத்தி மேற்கொள்ளவில்லை.

2

அடுத்ததாக இந்தியாவின் உதவியின்றித் தமிழீழத்தை அமைக்க முடியாது என்ற வாதத்திற்கு வருவோம். இது ஒரு அபத்தமான வாதமாகும்.

முதலாவதாக தமிழீழத் தனியரசை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருக்காலுமே இந்தியாவிற்கு இருந்தது கிடையாது. இந்திய சுதந்திரப் போராட்டம் நிகழ்ந்த காலத்தில் இருந்தே மகாபாரதக் கனவுடனேயே இந்தியத் தலைவர்களும், அவர்களின் கொள்கை வகுப்பாளர்களும் இருந்துள்ளார்கள். மகாபாரதக் கனவு என்று இப்பத்தியில் குறிப்பிடப்படுவது இந்தியாவின் அகன்ற பாரதக் கனவையே ஆகும். மகாபாரதத்தின் பல பகுதிகளில் இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், பூட்டான், நேப்பாளம், திபெத், ஈழத்தீவு ஆகியவற்றில் உள்ள பல நகரங்கள் பற்றிய பதிவுகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய மகாபாரதத்தை அல்லது அகன்ற பாரதத்தை உருவாக்குவது தான் இந்தியாவின் நீண்ட கால குறிக்கோளாகும்.

2

இதற்கான உதாரணங்களை எல்லாம் நாம் தேடி அலையத் தேவையில்லை. ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சி அகன்ற சில நாட்களிலேயே காஸ்மீரை இந்தியா ஆக்கிரமித்தமை மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சி அகன்ற பின்னர் ஏறத்தாள மூன்று தசாப்தங்களாகத் தனிநாடாக விளங்கிய சீக்கிம் என்ற நாட்டை 1975ஆம் ஆண்டில் தனது இருபத்திரண்டாவது மாநிலமாக இந்தியா சுவீகரித்தமை போன்றவற்றை இந்தியாவின் மகாபாரதக் கனவின் வெளிப்பாடுகளாக நாம் கொள்ளலாம்.

அது மட்டுமல்ல. ஈழத்தீவை தனது இன்னுமொரு மாநிலமாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கனவு ஜவகர்லால் நேருவின் காலத்தில் இருந்தே இந்தியாவிற்கு உண்டு. இது பற்றிய தமது அச்சங்களைக் கடந்த காலங்களில் ஈழத்தீவை ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவும், பூடகமான முறையிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

உதாரணமாக 15.12.1954 அன்று அனைத்துலக சட்ட ஒன்றியத்தின் மாநாட்டில் உரையாற்றிய அப்போதைய சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, இந்தியா பற்றிக் குறிப்பிடுகையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்: ‘உலகிலேயே மிகவும் உயர்வான நாடாக இந்தியாவை நாம் கருதும் அதேவேளை, தனக்கு உரிமைகள் ஏதும் இல்லாத இடங்களில் தனது உரிமைகளை அது நிலைநாட்ட முற்படுவதை அல்லது தனக்கு சலுகைகள் இல்லாத இடங்களில் தனக்கான சலுகைகளை நிலைநாட்ட முற்படுவதை அல்லது ஏனைய நாடுகளின் உரிமைகளை மறுதலிப்பதற்கு முற்படுவதை நாம் ஏற்கப் போவதில்லை.’

3

ஏன் இந்தியப் படைகளின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கும், அதன் தொடர்ச்சியாக இந்தியப் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்துவதற்கு என்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கும் அப்போதைய சிங்கள அதிபர் ரணசிங்க பிரேமதாசா முடிவு செய்ததே, ஈழத்தீவில் நிரந்தரமாக இந்தியப் படைகள் காலூன்றி விடும் என்ற அச்சத்தின் காரணமாக ஆகும். அப்போதைய பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவின் செயலாளராகக் கடமையாற்றிய கலாநிதி அடேல் பாலசிங்கம் இது பற்றி சுதந்திர வேட்கை என்ற நூலில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

5

‘இந்தியப் படைகளைக் களைப்புறச் செய்து, வலுவிழக்கச் செய்யும் நோக்குடனேயே விடுதலைப் புலிகளின் கெரில்லாப் போர் வடிவெடுத்தது. இப்போர் தீவிரம் குறைந்து இழுபட்டுச் செல்லும் போராட்டமாக மாறிவிட்டிருந்ததால், இந்தியப் படைகள் கால வரையறையின்றி இலங்கை மண்ணிலே தரித்து விடக்கூடும் என்றும் பிரேமதாசா அஞ்சினார்.’

இவை சில உதாரணங்கள் தான். எது எப்படியோ, ஈழத்தீவைத் தனது இன்னொரு மாநிலமாக மாற்றியமைக்கும் மகாபாரதக் கனவுடன் மிதக்கும் இந்தியாவிற்கு தமிழீழத்தை அமைக்கும் எண்ணம் அறவே கிடையாது.

இது பற்றிய தௌவு 1983ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இந்தியாவிடம் ஆயுதப் பயிற்சிகளைப் பெறுவதற்கு என்று டெக்ரா டன்னுக்குப் போராளிகளை அனுப்பி வைக்கத் தீர்மானித்த பொழுதே தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு இருந்தது. இது பற்றிப் போரும் சமாதானமும் என்ற நூலில் தலைவர் பிரபாகரனின் மதியுரைஞரான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் இவ்வாறு எழுதியுள்ளார்:

23

‘திரு.சந்திரசேகரனுடன் நிகழ்ந்த சந்திப்பு பிரபாகரனுக்குத் திருப்தியைக் கொடுத்தது. எத்தகைய குறிக்கோளுடன் இராணுவப் பயிற்சித் திட்டத்தை இந்தியா வழங்குகிறது என்ற சர்ச்சைக்குரிய கேள்வியை நாம் சந்திரசேகரனிடம் எழுப்பவில்லை. றோ புலனாய்வு அதிகார பீடத்துடன் நல்லுறவு பேணுவதையே நாம் விரும்பினோம். தமிழீழத் தாயகக் களத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமே ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட சந்திரசேகரன், பிரபாகரன் ஊடாக கள யதார்த்த நிலைமையை கேட்டறிந்து கொண்டார். சீக்கிரமே தமது போராளிகள் பயிற்சிக்குத் தயாராகி விடுவார்கள் என உறுதியளித்த பிரபாகரன், டெக்ரா டன் பயிற்சிப் பாசறைக்கு தானும் வர விரும்புவதாகவும் கூறினார். நவம்பர் தொடக்கத்தில் முதலாவது பயிற்சி அணிப் போராளிகள் டெக்ரா டன்னுக்குப் பயணமாயினர். 1984ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவர்களின் பயிற்சி முடியும்போது பிரபாகரன் டெக்ரா டன்னுக்குச் சென்றார்.

இப்படியாக இந்தியாவின் ராஜதந்திர சதுரங்க ஆட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒரு பங்காளியாக மாறியது. இது நாமாகவே சிந்தித்து எடுத்த முடிவு. எவராலுமே தவிர்த்துவிட முடியாத வரலாற்று நீரோட்டத்தில் நாமும் இறங்கி நீந்துவதைத் தவிர எமக்கு வேறு வழி இருக்கவில்லை. இலங்கையில் இந்தியத் தலையீடானது தவிர்க்க முடியாததொன்று. ஈவிரக்கமற்ற சிங்கள இனவாத அரசு நாசகார நோக்குடைய அந்நிய சக்திகளுடன் கைகோர்த்து நின்று சிறுபான்மைத் தேசிய இனமான தமிழ் மக்களை பூண்டோடு அழிக்க முனைந்த வேளையில் அதைத் தடுத்து நிறுத்துவது இந்தியாவின் தார்மீக அறநெறிக் கடப்பாடாகியது. இந்தியத் தலையீட்டின் உள்நோக்கம் என்னவென்பது எமக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்த விடயம். ராஜதந்திர-இராணுவ பரிமாணங்களைக் கொண்ட இந்திய தலையீட்டுத் திட்டத்தில் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் பங்கு மிகவும் குறுகியது, மட்டுப்படுத்தப்பட்டது, போரியல் ரீதியானது. ஜெயவர்த்தனா அரசுக்கு இராணுவ அழுத்தம் கொடுத்து, அதனை ஆட்டம் காணச் செய்து, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாக தமிழர் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காண வைப்பதே இந்தியத் தலையீட்டின் உள்நோக்கமாகும். வங்காள தேசத்தில் தலையிட்டது போன்று இலங்கையிலும் தலையிட்டு, தமிழர்களுக்கு ஒரு தனியரசை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கம் இந்திரா காந்தி அம்மையாருக்கு இருக்கவில்லை என்பதை இந்தியத் தலையீடு தொடங்கிய காலத்திலிருந்தே விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அறிந்திருந்தது.

5

இந்தியப் படையெடுப்புக்கான புறநிலையை உருவாக்கிக் கொடுத்த கிழக்கு வங்காளப் புரட்சிவாதிகளான ஷமுக்தி பகானிகள்| வகித்த பங்கு தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனது இராணுவ அணுகுமுறைக் கடும்போக்கைக் கைவிட்டு சமரச வழியை நாடும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு சிங்கள ஆயுதப் படைகளுக்கு அழுத்தம் கொடுப்பதே தமிழ்க் கெரில்லா வீரர்களுக்கு வகுக்கப்பட்ட பணியாகும். தீவின் இறையாட்சிக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் பங்கம் ஏற்படாதவாறு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே திருமதி. இந்திரா காந்தியின் தந்திரோபாயமாக இருந்தது. இந்தியப் பிரதமரின் இந்தத் தந்திரோபாயத்தைப் புரிந்து கொள்ளத் தவறிய தமிழ்நாட்டு, தமிழீழ அரசியல் தலைவர்கள் சிலர் இந்திய அரசு இலங்கை மீது படையெடுப்பை நடத்த ஆயத்தமாகிறது எனக் கருதினார்கள். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இத்தகைய கற்பனாவாதத்தைக் கொண்டிருக்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் குறிக்கோளை அடைவதற்கு தமிழ்ப் போராளிகளைக் கூலிப் படைகளாகப் பாவிப்பதே இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் என்பதைப் பிரபாகரன் நன்கு அறிவார். ஆயினும் எதற்கும் விட்டுக்கொடுக்காத கடும் போக்கை ஜெயவர்த்தனா ஆட்சிபீடம் கடைப்பிடிக்கும் என்பதால், இந்தியாவின் தந்திரோபாயம் இறுதியில் தோல்வி காணும் என்பதையும் பிரபாகரன் உணர்ந்திருந்தார். இந்தியத் தலையீட்டு முயற்சி ஈற்றில் தோல்வியைத் தழுவும் என்பதையும் அதில் எமது பங்கு மட்டுப்படுத்தப்பட்டது என்பதையும், நாம் உணர்ந்து கொண்ட போதும், எமது படை வலுவைக் கட்டி எழுப்பும் நோக்குடன் நாம் அந்த முயற்சியில் தீவிர பங்காளி ஆனோம். இந்தியாவின் திட்டத்தில் நாம் பங்குபற்றாது போனால் அரசியல், இராணுவ ரீதியாக எமது இயக்கம் ஓரம் கட்டப்படுவதுடன் ஏனைய அமைப்புகளின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் நாம் வழி சமைத்துக் கொடுப்பதாக முடியும்.’

அது மட்டுமல்ல, தமிழீழத் தனியரசை உருவாக்கும் எண்ணம் இந்தியாவிற்கு அறவே கிடையாது என்பதை பின் நாட்களில், 1985ஆம் ஆண்டு பங்குனி மாதம், தமிழீழ தேசியத் தலைவரையும், பாலா அண்ணையையும் சந்தித்த பொழுது றோ அமைப்பின் அன்றைய தலைவர் கிரிஸ் சக்சேனா பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். இது பற்றி போரும் சமாதானமும் நூலில் பாலா அண்ணை விரிவாகப் பதிவு செய்துள்ளார்:

5

‘றோ புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.கிரிஸ் சக்சேனா தலைவர் பிரபாகரனையும் என்னையும் சென்னையில் ஒரு இரகசியமான இடத்தில் சந்தித்தார். றோ அதிகாரிகள் இந்த இரகசிய சந்திப்பை ஒழுங்கு செய்தனர். உயர்ந்த கம்பீரமான தோற்றம்É கனத்த குரல்É ஒளிர்விடும் கண்கள். ஆங்கிலத்தில் ஆணித்தரமாக பேசினார் சக்சேனா. கலந்துரையாடல் நிகழவில்லை. அன்றும் இன்றுமான இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றி எமக்கு ஒரு விரிவுரை நிகழ்த்தினார் அவர். அவரது சொற்பொழிவின் சுருக்கம் இதுதான்:

அன்று, திருமதி. இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் இந்தியா ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம்கொடுக்க வேண்டி இருந்தது. தமிழரின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிவிடும் நோக்கத்துடன் இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நிய சக்திகளை இலங்கையில் ஊடுருவ அனுமதித்தார் ஜெயவர்த்தனா. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்ததென இந்திரா காந்தி கருதினார். இவ் வேளை 1983 ஜுலை இனக் கலவரம் தமிழினப் படுகொலையாகக் கோரம் எடுத்தது. இதன் விளைவாக பல ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். தமிழர்களுக்கு எதிராக இனக்கொலைப் பரிமாணத்தில் தலைவிரித்தாடிய கலவரம் தமிழ்நாட்டில் தேசியவாத உணர்வுத் தீயைப் பற்றியெரியச் செய்தது. இத்தகைய சூழ்நிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எதிர்மறையான இந்தப் போக்குகள் காரணமாகவே இலங்கையில் இந்தியாவைத் தலையிட நிர்ப்பந்தித்தன. இலங்கையில் தமிழ்க் குடிமக்களுக்கு எதிரான அரச வன்முறைக்கு முற்றுப் புள்ளிவைத்து, இனநெருக்கடிக்கு சமாதான வழியில் தீர்வுகண்டு, இலங்கையிலும் தென்னாசியப் பிராந்தியத்திலும் அமைதியையும் உறுதி நிலையையும் ஏற்படுத்துவதே இந்தியத் தலையீட்டின் பிரதான நோக்கமாக இருந்தது. சிங்கள இராணுவ அட்டூழியங்களுக்கு முடிவுகட்டி தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய போராளி அமைப்புகளுக்கும் ஆயுத உதவி வழங்கப்பட்டது.

இவ்விதமாக ஒரு விளக்கத்தை அளித்த திரு.சக்சேனா, இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் திருமதி.காந்திக்கு இருக்கவில்லை என்றார். இராணுவ அணுகுமுறையை ஜெயவர்த்தனா கைவிட வேண்டும் என்பதும், ஒன்றுபட்ட இலங்கையின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்பதுமே திருமதி.காந்தியின் குறிக்கோளாக இருந்தது என்றார். தமிழீழத் தனியரசு என்ற தமிழர்களின் அபிலாசைக்கு இந்தியா ஒருபொழுதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று உறுதிபடக் கூறிய அவர், பிரிவினைவாதக் கோரிக்கையை முன்வைத்து போராடும் இயக்கங்களை உள்நாட்டில் சமாளிக்க வேண்டியிருப்பதால் பிரிவினைக்கு இந்தியா ஆதரவு அளிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என விளக்கினார். இந்தியாவின் நிலைப்பாட்டை நீங்கள் சரிவரப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்| என்று கனத்த தொனியில் கூறிக் கொண்டே பிரபாகரனை உறுத்துப் பார்த்தார் சக்சேனா.’

இவ்வாறு 1983ஆம் ஆண்டிலேயே தமிழீழத்தை அமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்காத இந்தியா, அதுவும் தனது தேசிய நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈழத்தீவில் அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகியவற்றின் ஊடுருவல்கள் இடம்பெற்றிருந்திருந்த சூழலில், ஈழத்தீவை இருகூறாகப் பிளவுபடுத்தித் தமிழீழத் தனியரசை அமைத்து, ஈழத்தமிழர்களின் உறுதுணையுடன் ஈழத்தீவில் தனது நலன்களைப் பேணுவதில் அக்கறை காட்டாத இந்தியா, ஈழத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் ஒரேயொரு காரணத்திற்காகத் தமிழீழத் தனியரசை உருவாக்கும் என்று நம்புவது இலவு காத்த கிளியின் கதையிலேயே தமிழீழ தேசத்தை இட்டுச் செல்லும் எனக் கூறின் அது மிகையில்லை.

ஈழத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதையிட்டு இந்தியா அஞ்சினால், அல்லது சீனாவின் கைப்பொம்மை நாடாக சிறீலங்கா மாறும் பேரபாயம் நெருங்கி விட்டது என்று இந்தியா கருதும் சூழல் எழுந்தால், சீக்கிம் என்ற தனிநாட்டைத் தனது இருபத்திரண்டாவது மாநிலமாக 1975ஆம் ஆண்டில் மாற்றியது போன்று முழு ஈழத்தீவையும் தனது மாநிலமாக இந்தியா சுவீகரிக்குமே தவிர, ஈழத்தீவை இருகூறாக்கித் தமிழீழத்தின் எல்லைகளில் சீனாவிற்கு எதிரான அரண்களை இந்தியா ஒரு போதும் அமைக்காது.

ஆக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், அதுவும் இந்தியாவின் தென்கோடியில் பாரத தேசத்தின் அரணாக ஈழத்தமிழர்கள் இருப்பார்கள் என்று சி.வி.விக்னேஸ்வரனோ அன்றி அவரது அரசியல் ஆலோசகராகத் திகழும் மு.திருநாவுக்கரசு அவர்களோ கூறுவதால் தனது வெளியுறவுக் கொள்கையை ஒருக்காலும் இந்தியா மாற்றியமைக்கப் போவதில்லை.

இன்றைய உலக சூழலில் அப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், அப்படி நடந்தால் அதை ஏனைய நாடுகள் பார்த்துக் கொண்டிருக்காது என்றும் சிலர் வாதிடலாம். ஆனால், உக்ரெய்னிடமிருந்து கிரைமியாவைப் பிரித்தெடுத்து அதனைத் தனது இன்னொரு மாநிலமாக ரஸ்யா மாற்றிய பொழுது வெறும் கண்டன அறிக்கைகளோடும், பொருளாதாரத் தடைகளோடும் நின்று கொண்ட உலக நாடுகள், இதே போன்று தான் இந்தியாவின் விடயத்திலும் எதிர்காலத்தில் நடக்கும்.

சுருங்கக் கூறினால் தனது மகாபாரதக் கனவின் ஓரங்கமாக முழு ஈழத்தீவையுமே இந்தியா குறிவைத்துள்ளதே தவிர தமிழீழத்தை அல்ல.

சரி, தமிழீழத்தை அமைப்பதற்கு ஒருக்காலும் இந்தியா ஆதரவு வழங்காது என்றால், இந்தியாவின் உதவி இன்றி தமிழீழத்தை அமைப்பது சாத்தியமா என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம். இதற்குப் பதிலளிப்பதற்கு முன்னர் இங்கு ஒரு அரசறிவியல் யதார்த்தத்தை பதிவு செய்வது அவசியமாகிறது.

உலக அரங்கில் வல்லாதிக்க நாடுகள், வல்லரசு நாடுகள், வல்லரசாகி வரும் நாடுகள் அல்லது பிராந்திய வல்லரசுகள், அரசுகள் என்று நான்கு வகையான நாடுகள் உள்ளன. இதில் இந்தியா வல்லாதிக்க நாடும் அல்ல: வல்லரசு நாடும் அல்ல. அது பேரரசாக இருந்தாலும், மத்திய கிழக்கில் இஸ்ரேல், தென்கிழக்காசியாவில் இந்தோனேசியா, ஆபிரிக்காவில் தென்னாபிரிக்கா, தென்னமரிக்காவில் பிரேசில் போன்று தென்னாசியப் பிராந்தியத்தில் ஒரு பிராந்திய வல்லரசாக அல்லது உலக அரங்கில் வல்லரசாகி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கின்றதே தவிர, உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் வல்லாதிக்க சக்தியும் அதற்கு இல்லை, உலக ஒழுங்கில் காத்திரமான தாக்கத்தைச் செலுத்தும் வல்லரசு நாடுகளுக்கான ஆற்றலும் அதற்கு இல்லை என்பது தான் யதார்த்தம்.

ஏதாவது ஒரு சக்தி வாய்ந்த நாட்டைச் சார்ந்திருந்து தான் தமிழீழத்தை தமிழர்கள் உருவாக்க வேண்டும் என்றால், இலவு காத்த கிளி போல் இந்தியாவிற்குப் பரிவட்டம் கட்டிக் கொண்டிருந்து, கடைசியில் இலவம் பஞ்சு வெடித்துப் பறப்பது போல் தனியரசுக் கனவு கலையும் பொழுது குய்யோ, முறையோ என்று அழுவதை விட, ஏனைய வல்லரசுகளை நாடிபிடித்துப் பார்க்கும் முயற்சிகளைத் தமிழர்கள் எடுக்கலாம். இதற்காகத் தமிழீழத்தை அமைப்பதற்கு வல்லரசுகள் உதவும் என்று கூறவில்லை. ஆனால் கானல்நீரில் காகிதக் கப்பல் ஓட்டுவதை விட இது மேலானது.

அடுத்தது தனது கடைசி மாவீரர் நாள் உரையில் இந்தியாவிற்குத் தமிழீழத் தேசியத் தலைவர் நேசக்கரம் நீட்டியிருந்தார் என்பதால் இந்தியாவை நாம் விமர்சிக்கக் கூடாது என்று முன்வைக்கப்படும் வாதம்.

இவ்வாதத்தை முன்வைப்பவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றார்கள். இந்தியாவிற்குத் தனது நேசக்கரத்தை தமிழீழ தேசியத் தலைவர் நீட்டியது 2008ஆம் ஆண்டில் மட்டுமல்ல. இந்;தியாவிற்கான நேசக்கரத்தை இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் இருந்தே தமிழீழ தேசியத் தலைவர் நீட்டி வந்துள்ளார். 31.10.1984 அன்று இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ராஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்த இரங்கல் கடிதத்தில் இந்திரா காந்தி அம்மையாரை ‘அன்னை இந்திரா’ என்றும், ‘தமிழ் மக்களின் பெருங்காவலர்’ என்றும் தான் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் விளித்திருந்தார். அந்த அளவிற்கு இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவதையே தலைவர் விரும்பினார். ஆனால் அதற்குக் கைமாறாக இந்தியா என்ன செய்தது?

இந்தியாவிற்குத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நேசக்கரம் நீட்டிய பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிங்கள தேசத்திற்கே பாரதம் தோள்கொடுத்து நின்றது. 2008ஆம் ஆண்டிலும் இது தான் நடந்தது. ஒருபுறம் இந்தியாவிற்குத் தமிழீழத் தேசியத் தலைவர் நேசக்கரம் நீட்ட, மகிந்த ராஜபக்சவிற்கு ஆயுதங்களையும், செய்கோள் தொழில்நுட்பப் புலனாய்வுத் தகவல்களை இந்தியா வழங்கித் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத எதிர்ப்பியக்க வடிவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, தமிழீழ தேசியத் தலைவரின் வழியில், வரலாற்றை வழிகாட்டிகளாகக் கொண்டு அரசியல் - இராசரீகக் களங்களில் இறங்க வேண்டிய நாங்கள், தமிழீழத் தனியரசை இந்தியா உருவாக்கிக் கொடுக்கும் என்று தொடர்ந்தும் கனவு காண்பதாயின் ஒன்றில் நாம் எல்லோரும் ஏமாந்த சோணகிரிகளாக இருக்க வேண்டும், அல்லது இந்தியாவின் அடிவருடிகளாக, தமிழீழ தேசத்திற்கு எதிராக அது முன்னெடுக்கும் ஒப்ரேசன் சாணக்கியா – 2.0 எதிர்ப்புரட்சி நடவடிக்கையில் தெரிந்தோ, தெரியாமலோ பங்கு வகிப்பவர்களாக இருக்க வேண்டும்.

(தொடரும்)