தொடரும் தமிழின அழிப்பில் ஐ.பி.சி தமிழ்!! விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்! - சோழ.கரிகாலன்

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.பி.சி தமிழானது, கடந்த சில வருடங்களாகவே, தமிழினத் தேசிய விரோதப் போக்கையும், சிறீலங்கா அரசின் ஆதரவுப் போக்கையும், பல சமயங்களில் சிறீலங்கா இனவெறி அரசின் பிரச்சார ஊதுகுழலாகவுமே இயங்கி வந்துள்ளது.

இவர்கள் தொடர்ச்சியாக நடாத்திவந்த வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சி மூலமாக, தமிழீழத் தேசியப் போராட்டத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உயிர்நாதமான விடுதலைப் புலிகளிற்கு எதிராகவும் மெது மெதுவாக நஞ்சை உமிழ ஆரம்பித்தது. மெதுமெதுவாக உச்சமாகி, இனப்டுகொலை சிங்கள இனவெறி இராணுவத்தை, தமிழ் மக்களைக் காக்கும் தேவதூதர்களாகவும் இந்த ஐபிசி தமிழின் நிகழ்ச்சி நிரல் தொடர்ந்தது.

சிங்கள இனவெறி இராணுவத்தின் அடக்குமுறைக் கட்டுப்பாட்டிற்குள் மக்கள் மகிழ்சியாக இருப்பது போல், இளம் தமிழ்ப் பெண்களை இராணுவத்தினரைச் செவ்வி காண வைத்து, துரோகப் பிரச்சாரங்களை நடத்தி முடித்தது.

இதே மாதிரியான நச்சுக் கருத்துக்களைத் தொலைக்காட்சியில் கொண்டுவருவதுபோல் புலம்பெயர் தேசங்களில், இவர்கள் வெளியிட்ட அச்சுப் பத்திரிகையும் பொய்ப்பிரச்சார ஊடகமாகவே இருந்தது. தமிழின வெறுப்பை உமிழ்ந்தது.

இதற்கான எதிர்வினைகள் புலத்தில் எழுந்தன. முக்கியமாக எமது ஊடகம் இவர்களின் துரோகங்களையும் தமிழீழத் தேசியத்தின் எதிர் நிலையையும்  வெளிக்கொண்டு வந்தோம். அனைத்துப் பகுதிகளிலும், இவற்றின் செயற்பாடுகள் இனங்காணப்பட்டன. பல தளங்களில் இவர்களின் பொய்ப்பிரச்சாரங்கள், செயற்பாடுகள் முடக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து எமது ஊடகம் மீதான தாக்குதலும் நடந்தேறியது.

3

புலம்பெயர் நாடுகளில், முக்கியமாகப் பிரான்சில், தேசிய நிகழ்வுகளில் இவர்களின் ஊடகங்கள் பங்கேற்பது தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. எங்களது ஊடகங்கள் தொடர்ந்து போராடி வந்தாலும், சில காலத்தில், பிரான்சின் தேசியச் செயற்பாட்டு அமைப்புக்கள் மீண்டும் ஐபிசி தமிழிற்கு இடம் வழங்கத் தொடங்கினார்கள். தமிழின, தமிழீழ எதிர் நிலைப்பாடுகளை எடுத்தும் இந்த ஊடகங்களைப் புறக்கணிக்க, ஒருங்கிணைப்புக் குழு முதற்கொண்டு அதன் உப கட்டமைப்புக்கள் பல மறுத்தே நின்றன.

தாய்மண்ணில் துரோகங்கள் நடந்தேற, புலம்பெயர் கட்டமைப்பக்களை உடைக்கும் நோக்கில், தமிழ்ச்சோலை நடாத்தும் பொதுப்பரீட்சையில், ஆசிரியர்களைச் செவ்விகண்ட ஐபிசி தமிழ், அவர்களிடையே முரண்பாடுகளையும் முறிவுகளையும் உடைக்கும் நோக்கில், தமிழ்ச்சோலைக்குப் பெரும் வருமானம் வருகின்றது, ஆனால் உங்களிற்குச் சரியான கொடுப்பனவுகள் கொடுக்கப்படவில்லையாமே என்ற கேள்விகள் தொடுக்கப்பட்டன. ஆனாலும் ஆசிரியர்களின் திடமான அர்ப்பணிப்பு மனநிலையை இவர்களால் உடைக்கமுடியவில்லை.

இவ்வளவு செய்தும் இங்குள்ள அமைப்புகளிற்கு ஐபிசியைப் புறக்கணிக்கும் துணிவு ஏனோ பிறந்திருக்கவில்லை. மாவீரர் நாட்கள் போன்ற நிகழ்வுகளில் எல்லாம் இவர்கள் அனுமதிக்கப்பட்டு, தேசிய விடுதலை உணர்வுடன் கூடியவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டனர். இது பெரும் ஆபத்தானதாகவே இருந்தது.

இவற்றிற்கு எல்லாம் மேலாக, விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டு, தனியார் கையில் வீழ்ந்த இந்த ஐபிசி தமிழ் என்ற தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகம், தொடர்ந்தும் தமிழ்த்தேசிய ஊடகம் என்ற போர்வையிலேயே இயங்கி வருகின்றது.

ஆனால், சிறீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் பெரும் கலையகம் ஒன்றை ஆடம்பரமாகக் கட்டி முடித்து இயங்கி வருகின்றது. தமிழீழத் தேசிய விடுதலைப் பேராட்டத்தை, திரித்தும் கொச்சைப்படுத்தியும், சிங்கள இனவெறி இராணுவத்தைத் தேவதூதர்களாகவும் காட்டிவரும் துரோகத்திற்குப் பரிசாகவே, தமிழ்த் தேசிய ஊடகம் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களை அங்கு இயங்க அனுமதித்திருக்கின்றது.

6

புலம்பெயர் தேசிய ஊடகங்களிற்கு செய்தி வழங்கும் செய்தியாளர்களே சிங்களப் புலனாய்வுத் துறையினரால் கடும் உயிரச்சுறுத்தலிற்கு உள்ளாகி வரும் நிலையில், இவர்களிற்கான சலுகைகளிற்கு மட்டும் என்ன விலை கொடுக்கப்பட்டிருக்கும் என்பது வெட்ட வெளிச்சம்.

தமிழ்த் தேசியம், அல்லது தமிழீழம் என்று கதைப்பவர்கள் வேட்டையாடப்படும், சிங்கள இனவெறி இராணுவத்தின் பாதுகாப்பில் இந்த ஐபிசி தமிழ் யாழ்ப்பாணம், அமோகமாக இயங்கி வருகின்றது. புலம்பெயர் தேசங்களில் பதிவு செய்யப்பட்ட மக்களின் காணொளிப் பதிவுகளும், இந்தச் சலுகைக்காகக் காட்டிக்கொடுக்கப்பட்டும் இருக்கலாம். சிங்கள இராணுவத்தின் பாதுகாப்பில் இயங்கும் ஒரு தளம், சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைக்கான எங்களது பேராட்டங்களின் காணொளிகள் அனைத்தையும் ஒளிபரப்புகின்றது என்றால், இது காட்டிக்கொடுப்பிற்கான நோக்கத்தினைத் தவிர, வேறொன்றாக இருக்கவே முடியாது.

இதனையெல்லாம் விட மேலாக, சிங்களத்திலும் இவர்களின் ககன எனும் ஊடகம் இயங்க ஆரம்பித்தது. இது சிங்களப் புலனாய்வுத் தளம் போலவே இயங்கிவந்துள்ளது. கடந்த மே 18 இன் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறைக்குள், இனப்படுகொலை நாளை நினைவேந்தல் கொள்வதற்கான ஒழுங்கமைப்புக்களை சமூகவலைத்தளங்களின் ஊடாகப் பிரச்சாரம் செய்த மூவரை, அவர்களின் சமூகவலைத்தளச் செய்தியினைப் பிரதி செய்து, ஐபிசி தமிழ் தங்களின் சிங்களத் தளத்தினூடாக, சிங்களப் புலனாய்வாளர்களிற்குக் காட்டிக்கொடுத்துள்ளது. இவர்களின் உயிர் தற்போது ஆபத்தில் உள்ளது. இது ஐபிசி தமிழ், தழினினத்திற்குச் செய்யும் அப்பட்டமான துரோகமாகவே அமைகின்றது.

இதனைத் தொடர்ந்து பல்பகலைக்கழக மாணவர்களின் மாணவர் சங்கம், காவற்துறையின் அனுமதி மறுப்பைப் பொருட்படுத்தாமல், அதனை மறுதலித்து, மே 18 நினைவேந்தலைச் செய்துள்ளனர் என்றும், பல்கழைக்கழக மாணவர்கள் வீட்டில் விளக்கேற்றினார்கள் என்றும் சிங்களத்தில் செய்தி வெளியிட்டு, அவர்களைக் காட்டிக் கொடுத்துள்ளது. அதுவும் விடுதலைப் புலிகளிற்கு, LTTE இற்கு அதரவாகச் செய்ததாகவே செய்தியை வெளியிட்டு, மாணவர்களின் உயிரிற்கு வேட்டு வைத்துள்ளது ஐபிசி தமிழ்.

மிகவும் ஆடம்பரமாகவே சிங்கள இராணுவத்தின் பாதுகாப்பில் தங்கள் கலையகத்தினை யாழ்ப்பாணத்தில் நடாத்திவரும் ஐபிசி தமிழ், தமிழினப் படுகொலையில் சிங்களத்திற்கு உதவும் ஊடகமாகவே இயங்கி வருகின்றது. இது மக்களால் தூக்கியெறிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இருப்பினும் இன்னமும் தாங்கள் நடாத்தும் நிகழ்வுகளில் இங்குள்ள தேசியக் கட்டமைப்புகளோ, அவர்களை ஒருங்கிணைப்பவர்களோ ஐபிசி தமிழை அனுமதித்து வந்தால், அது மேலும் தமிழினத்தின் அழிவிற்கே வழிகோலும் என்பது, மறுக்க முடியாத உண்மை. இது விழித்துக் கொள்வதற்கான நேரம்!