அரிச்சந்திரன் பதில்கள்

கேள்வி:- விடுதலைப் புலிகள் இருந்தபோது சரி. இனியும் தமிழீழம் குறித்து தமிழர்கள் கனவு காணலாமா..?
தம்பு கிரிதரன் பொபினி பிரான்ஸ்

wபதில்:- கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். அந்தக் கனவு தூக்கத்தில் வருவதல்ல. எது உங்களைத் தூங்கவிடாமல் வைத்திருக்கின்றதோ அதுதான் கனவு என்றார் அப்தல் கலாம். யூதர்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாகக் கண்ட கனவுதான் அவர்களுக்கான நாட்டை அமைத்துக்கொடுத்தது. உலகெங்கும் புலம்பெயர்ந்திருந்தபோதும் தங்கள் கனவை அடைய அவர்கள் ஒன்றிணைந்து போராடினார்கள். ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் தங்கள் மண்ணை மீட்டெடுக்கலாம் என்ற அவர்களின் வரலாறே தமிழர்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. சரி கனவு காண்பதை விடுவோம்...

இந்தக் கடிதத்தை ஒருமுறை படியுங்கள்...

-மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது - தமிழினன அழிப்பு நாள் மே 18 இவ்வாறே தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் மலர் ஒன்று இருக்கிறதே, அதுதான் ஈழ இராச்சியத்தின் தேசிய மலர், அந்த சிகப்பு, மஞ்சள் நிறமே அவர்களின் கொடியின் வர்ணம்.

இதைப் பார்க்கும் போது கோபமும் வெறுப்பும் வருகிறதா? மீண்டும் யுத்தம் புரிய தோன்றுகிறதா? ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுக்கு அவ்வாறு தோன்றவில்லை. பெரிய ஏமாற்றமே ஏற்படுகிறது. இவர்களை நினைத்து அல்ல, எம்மவர்களை (சிங்களவர்களை) நினைத்து.

நாங்கள் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்கிறோம். ஒரு சிங்களவராக நான் இதை கூறுவதில் வெட்கமடைகிறேன். எங்களுக்குள் எந்த வித ஒற்றுமையும் இல்லை. இந்த யாழ் பல்கலையினுள்ளே நாம் அடித்துக் கொள்கிறோம். ஒருவரை ஒருவர் குறைக்கூறிக் கொள்கிறோம். இப்படி எமக்குள்ளே ஆயிரம் பிரச்சனைகள்.

ஆனால் இங்குள்ளவர்கள் அவ்வாறில்லை. அவர்களுக்கு அன்றும் இன்றும் (நாளையும்) ஒரே பிரச்சனை. அது அவர்களின் இன உரிமையை பாதுகாக்கும் பிரச்சனை. இதுவே இங்கு நாம் தெரிந்து கொண்டோம். இவர்கள் எப்போதும் இவர்களுக்காக இறந்தவர்களை மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் அவர்களை நினைவு கூருகின்றனர். இங்குள்ள அரசியல்வாதிகள் பணமோகம் பிடித்தவர்களில்லை. அவர்கள் எங்கும் எப்போதும் கதைப்பது அவர்களின் உரிமையை பற்றி மட்டும் தான்.
எமது நாட்டில் மூன்றோ நான்கோ தமிழ் பத்திரிகைகள் மட்டுமே உள்ளது. ஆனால் அவையும் அவர்களின் உரிமைப் பிரச்சனையை பற்றிக் கதைப்பதில் பின்னிற்பதில்லை.

தென்னிலங்கையில் இதுவரை எத்தனையோ பாலியல் துஷ்பிரயோகம் நிகழ்ந்துள்ளது. அவை எல்லாம் எமக்கு இன்று நினைவில் இல்லை. ஆனால் வித்தியா படுகொலையை இவர்கள் இன்றும் மறக்கவில்லை. வித்தியா படுகொலைக்காக பெரிய போராட்டம் நடந்தது. ஓர் இனம் என்ற ரீதியில் அனைவரும் முன்னின்றனர்.

ஆனால் நீங்கள் இதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு நான் தமிழர்களுக்கு சார்பானவன் என்று திட்ட ஆரம்பிப்பீர்கள். இதோ அவர்களுக்கும் பதிலளிக்கிறேன். நான் இதை சிங்கள மொழியில் பதிவிட்டுள்ளேன். தமிழர்களுக்கு புரியப்போவதில்லை. நான் தமிழர்களுக்கு எதிரான கருத்தை பதிவிட்டுள்ளேன் என்றே அவர்கள் எண்ணுவார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு இவ்வாறு பதிவிடும் ஒரே சிங்களவர் நான் மட்டுமே. நான் உங்களுக்கு (சிங்களவர்களுக்கு) புரிய வைக்கவே இவ்வாறு பதிவிடுகிறேன்.

ஓர் இனத்தவர்களாக நம்மால் முடியாத பல விடயங்களை அவர்கள் ஓர் இனமாக ஒற்றுமையுடன் சாதித்துள்ளனர். தமிழர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அவர்கள் இன்று முடியாவிட்டாலும் நாளை முடியாவிட்டாலும் நூறு வருடங்களானாலும் அவர்களின் உரிமையை வென்றெடுப்பர். நாம் இதேபோல் என்றும் குறை கூறிக்கொண்டிரிப்போமேயானால் நாம் முன்னேறுவது கடினம்.’

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த விஞ்ஞானபீட மாணவர் இந்திரஜித் குமார என்பவர், தன் இன மக்களுக்கு சிங்களத்தில் எழுதித் தனது முகநூலில் வெளியிட்டிருந்த கடிதம்தான் இது. தமிழ் மக்கள் முன்னெடுத்தும் வரும் முள்ளிவாய்க்கால் நிகழ்வைப் பார்த்த பின்னர் அவர் எழுதிய கடிதம் அது.

நூறுவருடங்கள் கடந்தாலும் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பர் என்று அவருக்கு இருக்கும் நம்பிக்கையில் ஒருதுளி நம்பிக்கை, தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு இல்லையா..?  

1

கேள்வி:- எதிர்காலத்தில் நான் ஓர் ஊடகவியலாளராக வருவதற்கு விரும்புகின்றேன். அதற்கு என்னிடம் இருக்கவேண்டிய தகுதி என்ன..?
கந்தசாமி மயூரதன் இலண்டன் பிரித்தானியா

பதில்:- உண்மை, நேர்மை, பயமின்மை. (உண்மையைச் சொல்லுங்கள். அதனை நேர்மையாகச் சொல்லுங்கள். அதனைத் துணிச்சலோடு சொல்லுங்கள்)

கேள்வி:- பெண் எப்போது ஆணுக்கு அடிமையானாள்..?
கோமளவதனி திருநாமம் பிரான்ஸ்

பதில்:- இதற்கு சரியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், கிடைத்த வரலாற்றுத் தேடல்களில் இருந்து ஒரு முடிவிற்கு வந்திருக்கின்றார்கள். அது பெண்களின் ‘அந்த மூன்று நாட்களே’ ஆணுக்கு பெண் அடிமையாகிப் போவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று நம்புகின்றார்கள்.

dமனித வரலாற்றின் ஆரம்பங்களில் பெண்ணே குடும்பத்திற்கு தலைமை தாங்குபவளாக இருந்திருக்கின்றாள். பெண்ணின் தலைமையிலேயே தமது உணவிற்கான மிருக வேட்டைகளுக்கு மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றிருக்கின்றார்கள். வேட்டைக்குச் செல்லும்போது அவர்களை ஓநாய் போன்ற மிருகங்கள் பின்தொடர்ந்து வருவதற்கு இரத்த வாடையே காரணம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் அந்த (மூன்று) நாட்களில் பெண்களால் வேட்டையில் தீவிரமாக ஈடுபடமுடியவில்லை. இதனால், வேட்டையில் மிருகங்களின் தாக்குதல்களில் பெண்களை இழக்கின்ற நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதனால், வேட்டைக்குச் செல்லும்போது பெண்களை அழைத்துச் செல்வதைத் தவிர்த்து, அவர்களை வீட்டிலேயே (குகைகளில்) விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். நாளடைவில் ஆண்கள் மட்டுமே வேட்டைக்குச் செல்லும் நிலைமை உருவாகி, பெண்கள் வீட்டிலேயே இருக்கின்ற நிலைமை தோன்றியிருக்கின்றது. இதுவே, பெண்கள் ஆண்களுக்கு அடிமையாகிப்போகும் முதல் நிலைமை ஏற்படக் காரணமாக அமைந்தது என்று வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இதுதானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.