செய்திகளும், எழும் கேள்விகளும் - மாயவள்

செய்தி: கொரோனா கொல்லுயிரித் தடுப்புச் சுயதனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறித் தனது மகளை தேர்தல்கள் ஆணையத்திற்கு அதன் ஆணையாளர்களில் ஒருவரான ரட்ணஜீவன் கூழ் அழைத்துச் சென்றுள்ளார்.

எழும்கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றார்கள், காட்டாட்சி செய்கின்றார்கள் என்று ஒரு காலத்தில் கூறிய இவரது செய்கையை எந்த வரையறைக்குள் உள்ளடக்கலாம்?

..........

செய்தி: இலங்கை முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வருகின்ற வஞ்சகத்தனமான ஒரு நடைமுறையை கோத்தபாய ராஜபக்ச அமுல்படுத்தி வருவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

எழும்கேள்வி: ரணிலின் ஆட்சியில் இவையெல்லாம் நடந்தேறிய பொழுது தமிழரசுக் கட்சியின் விசிலடிச்சான் குஞ்சுகள் எங்கே போனார்கள்?

..........

செய்தி: சிங்களப் படைகளால் நிகழ்த்தப்பட்ட ஆட்கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல்கள் போன்றவற்றிற்கு எதிரான வழக்குகள் சிலவற்றை முன்னின்று நடத்திய சிங்களப் பெண் சட்டத்தரணி அச்சல குணரட்ணவின் படங்கள் சிங்களப் படையினரால் ஆபசமாக உருமாற்றப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

எழும்கேள்வி: தன்னைப் போன்ற ஒரு சிங்களப் பெண் சட்டத்தரணிக்கே இந்த நிலை என்றால், முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளால் உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களில் பலருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை இனியாவது அச்சல குணரட்ண போன்றவர்கள் புரிந்து கொள்வார்களா?

..........

செய்தி: வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கோத்தபாய ராஜபக்ச பெற்றால் ஒருவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர் தடை செய்யலாம் என்று அக் கட்சியின் பிரமுகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

5

எழும்கேள்வி: தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?

..........

செய்தி: தமது படைகளுக்குக் களங்கம் விளைவிக்கும் அனைத்துலக அமைப்புக்களில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டும் கோத்தபாய ராஜபக்ச முடிந்தால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறிப் பார்க்கட்டும் என்று சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.

எழும்கேள்வி: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை ஒரு வினைத்திறனற்ற அமைப்பு என்று கூறி அதிலிருந்து ஏலவே அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில் சிறீலங்கா வெளியேறினால் என்ன பூகம்பமா வெடிக்கும்?

..........

செய்தி: இறுதி யுத்தத்தில் தமிழர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது சுயாதீன விசாரணை ஒன்றின் மூலம் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு உணர்த்தப்பட்டால் பௌத்த தர்மம் காட்டும் வழியில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான தீர்வை அவர்கள் வழங்குவார்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 

எழும்கேள்வி: பௌத்தர்கள் அல்லாதவர்களைக் கொல்வது மிருகங்களைக் கொல்வதற்கு நிகரானது என்று சிங்கள பௌத்தத்தின் சித்தாந்த நூலான மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றிச் சமய சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்துக் கம்பன் கழகத்தின் பிரசங்கங்களை நிகழ்த்திய விக்னேஸ்வர மகாமுனிவருக்கு இன்னமும் தெரியவில்லையோ?