துட்டகாமினி கொன்ற ஒன்றரை மனிதர்களும், 999,998 மிருகங்களும் - பிலாவடிமூலைப் பெருமான்

வணக்கம் பிள்ளையள்.

எல்லோரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறியள் தானே?

எல்லா நாடுகளிலையும் கொஞ்சம் கொஞ்சமாக லொக் டவுணை எடுத்துக் கொண்டிருக்கிறாங்கள் எண்டதுக்காக கொரோனா பிரச்சினை தீர்ந்திட்டுது என்று நினைச்சுப் போடாதேயுங்கோ.

அண்டைக்கு எனக்கு ரெலிபோன் எடுத்து என்ரை மருமகன் சொன்னான், ‘அங்கிள் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வருகுது. இனி நீங்கள் பயமில்லாமல் வெளியிலை வரலாம்.’

எனக்கு வந்த கோபத்துக்கு. சும்மா படிச்சு கைநிறையக் காசு உழைக்கிற உத்தியோகத்தில் இருந்தால் மட்டும் காணாது பிள்ளையள். நாட்டு நடப்புக்களையும் பகுத்து ஆராயத் தெரிஞ்சிருக்க வேணும்.

உவங்கள் உந்த லொக் டவுணை எடுக்கிறது தங்கடை நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கிறதுக்காகவே தவிர, உந்த கொரோனா துலைஞ்சு போய்ட்டுது எண்டதுக்காக இல்லை பாருங்கோ.

1

வெளியிலை நடமாடேக்குள்ளையும், வேலையிடங்களிலையும், பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தேக்குள்ளையும் பௌதீக இடைவெளிகளைப் பேணியவாறு, முகக் கவசம் அணிஞ்சு, அடிக்கடி கைகளை சவர்க்காரம் போட்டுக் கழுவி, சுத்தம், சுகாதாரமாக இருந்தால் பெரிய அளவுக்கு ஆபத்து இல்லை. ஆனால் அதை விட்டுப் போட்டு கொரோனா பிரச்சினை இனி வராது என்று நினைச்சுக் கொண்டு பழைய மாதிரி நடக்க வெளிக்கிட்டால் திரும்பவும் பொத்துப் பொத்தெண்டு ஆட்கள் செத்து விழுகிற நிலை தான் வரும் பிள்ளையள்.

உந்தக் கொரோனா இப்போதைக்கு எங்களை விட்டு போகிற மாதிரி இல்லை. எயிட்ஸ் மாதிரி இனி இதுவும் மனித குலத்தோடை நிரந்தரமாகக் குடியிருக்கப் போகுது. உதை விளங்கிக் கொண்டால் சரி.

அதுக்குள்ளை நான் சொல்ல வந்த விசயத்தை மறந்து போனேன்.

நான்காம் கட்ட ஈழப் போரிலை தாங்கள் வெற்றி பெற்றதை வழமைபோல பெரிய கொண்டாட்டமாக கோத்தபாய மாத்தையா கொண்டாடினதைக் கண்டிச்சுப் போன கிழமை எங்கடை விக்கினேசுவரன் மாத்தையா அறிக்கை விட்டிருந்தவர். அப்பிடி அவர் அறிக்கை விட்டது நல்லது தான்.

தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலையை சர்வதேச சமூகம் இனியும் காலம் தாழ்த்தாமல் விசாரணை செய்ய வேணும் எண்டு தன்ரை அறிக்கையிலை விக்கினேசுவரன் மாத்தையா வலியுறுத்தியிருந்தவர்.

அதுவும் நல்ல விசயம் தான். ஆனால் அதோடை நிற்காமல் அப்பிடி ஒரு சர்வதேச விசாரணை நடந்து, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை பற்றின உண்மைகள் வெளியில் வந்தால், பௌத்த தர்மத்தின் வழியில் நிற்கிற சிங்களச் சகோதரர்கள் உடனேயே தங்கடை பக்கத்தில் இருக்கிற தவறை உணர்ந்து தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையின்ரை அடிப்படையில் ஒரு தீர்வை வழங்குவீனம் என்று மனுசன் போட்டாரே ஒரு போடு. அது தான் எனக்கு விசரை ஏத்திப் போட்டுது.

2

எங்கடை கிழட்டுச் சம்பந்தருக்கு மாறாட்டம் வந்த மாதிரி இவருக்கும் ஏதாவது மாறாட்டம் தொடங்கீட்டுதோ எண்டு தான் நான் முதலிலை நினைச்சனான். பிறகு தான் எனக்கு ஞாபகம் வந்திச்சுது, அம்மானின்ரை இரண்டு பிள்ளையளும் சிங்களப் பொம்பிளையளை எல்லே கலியாணம் முடிச்சு இருக்கீனம். அது தான் மனுசன் பௌத்த தர்மம், அது இது என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார். என்னத்தைச் சொல்கிறது பிள்ளையள்?

புத்த பெருமான் தர்மத்தைத் தான் போதிச்சவர். உலக மக்கள் எதிர்நோக்கியிருக்கிற மூப்பு, பிணி, மன உழைச்சல், துன்பம், துயரங்கள் எல்லாத்திலையும் இருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கிறதுக்கு வழியொன்றை கண்டுபிடிக்க வேணும் எண்டதுக்காக தனது இராசகுடும்ப வாழ்க்கையும், முடியுரிமையையும் துறந்து, காடு, மேடு என்று அலைஞ்ச தவம் கிடந்து கடைசியில் ஞானம் பெற்று, மக்களுக்கு அந்த ஞானத்தைப் பகிர்ந்து கொண்ட ஒரு மாமனிதப் பிறவி புத்த பெருமான்.

ஆனாலும் கொல்லாமையைப் போதிச்ச அந்த மகானின்ரை வழியிலை அவருக்குப் பிறகு வந்த எவருமே நடக்கவில்லை பிள்ளையள்.

அவர் தன்னைக் கடவுள் என்றும் சொல்லவில்லை. கடவுளைக் கும்பிடுங்கோ என்றும் சொல்லவில்லை. கடவுளே மனிதனின் உருவாக்கம் என்று சொன்ன ஒரு நாத்தீகர் தான் புத்த பெருமான். ஆனால் கடைசியில் அவரைக் கடவுளாக்கி, அவரின்ரை பெயரிலை மதம் ஒன்றையும் உருவாக்கி மனிசன் செய்யிற அட்டூழியங்கள் சும்மா இல்லை.

அதிலையும் சிங்கள பௌத்தம் செய்கிற அட்டூழியங்கள் சாதாரணமானவை இல்லை பிள்ளையள். அன்றைய பாரதத்தின் வட நாட்டிலை கபிலவஸ்து என்ற தேசத்திலை போதிச்ச புத்த பெருமான், ஈழத்தீவுக்குப் பறந்து வந்து, அதுதான் தன்ரை மதம் தளைக்கிறதுக்கான நாடு என்று அங்கையிருந்த இயக்கர்களை வெருட்டிப் போட்டுப் போனவர் என்று ஒரு புதுக் கதையை மகாவம்சத்திலை உருவாக்கினானுகள் உந்த சிங்கள பௌத்த பிக்குமார்.

அது போதாது என்று புத்தர் பரிநிர்வாண நிலை அடைகிற கட்டத்தில் இந்து சமயக் கடவுளான விஸ்ணுவைக் கூப்பிட்டுச் சொன்னவராம், ‘நான் பூலோக வாழ்க்கையை முடிவு செய்கிற தருணம் வந்திட்டுது. இந்த நேரத்திலை லங்கா என்ற தீவிலை என்ரை மதத்தைத் தளைத்தோங்க வைக்கிறதுக்காக விஜயன் என்ற இளவரசன் போய் இறங்கியிருக்கிறான். அவன்ரை பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யும்’ என்று. உடனேயே விஸ்ணும் லங்காதீபத்திற்குப் போய் விஜயனின் பாதுகாப்பை உறுதி செய்து போட்டு வந்தவராம். இப்பிடி மகாம்வசம்வத்திலை இன்னுமொரு கதையை அந்தக் காலத்துப் பிக்குமார் கட்டி விட்டிருக்கிறாங்கள்.

உதைத் தான் மகாவம்ச மனோபவம் என்று எங்கடை தேசியத் தலைவர் சொன்னவர். இப்பிடி மகாவம்ச மனோபாவத்திலை இருக்கிற சிங்கள பௌத்த சனம், சர்வதேச விசாரணை ஒன்று நடந்ததும் உடனே ஞானம் பெற்று தமிழ் மக்களின்ரை சுயநிர்ணய உரிமையை ஆதரிக்குமே?

ஒன்றில் சிங்களச் சனத்துக்கு விசர் பிடிக்க வேணும். இல்லாட்டி எங்கடை விக்கினேசுவரன் மாத்தையாவுக்கு இப்ப விசர் முத்தியிருக்க வேணும்.

மகாவம்சத்திலை இருக்கிற இன்னொரு கதையையும் சொல்கிறேன்.

எங்கடை தமிழ் மன்னன் எல்லாளனைச் சதி செய்து யுத்தத்தில் கொன்று, அவனோடை இலட்சக்கணக்கில் தமிழ் மக்களையும் கொன்று தமிழ் குருதியால் நுவரவாவியை நிரப்பின துட்டகாமினி, அது பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தவராம். அந்த நேரத்திலை அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த பிக்குமார் அவரிட்டை சொன்னவையளாம், ‘துட்டகாமினி, நீங்கள் சொர்க்கத்துக்கு போறதுக்கு எந்தத் தடையும் வராது. நீங்கள் எந்தப் பாவமும் செய்யவில்லை’ என்று.

முதலிலை துட்டகாமினுக்கு ஒண்டுமே விளங்கவில்லையாம். ‘நான் கிட்டத்தட்ட பத்து இலட்சம் தமிழர்களை கொலை செய்திருக்கிறேன். அப்பிடி ஒரு பெரும் பாவத்தை செய்த நான் எப்பிடி சொர்க்கத்துக்குப் போக முடியும்?’ என்று உடனே துட்டகாமினி ஆச்சரியமாகக் கேட்டவராம்.

அதுக்குப் பிக்குமார் சொன்னவையளாம்: ‘துட்டகாமினி, நீங்கள் கொலை செய்த பத்து இலட்சம் தமிழர்களில் எல்லாளனின்ரை தளபதி ஒருத்தர் தான் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். எல்லாளன் பௌத்த தர்மத்தின்ரை சில கோட்பாடுகளை மட்டும் தான் பின்பற்றினவர். அதனால் நீங்கள் முழுசாக ஒரு மனிசனையும், பாதியாக இன்னொரு மனிசனையும் தான் கொலை செய்திருக்கிறியள். பௌத்த மதத்தைப் பின்பற்றாத மற்றவையள் எல்லாம் காட்டு மிருகங்களுக்குச் சமமானவையள். அதனால் நீங்கள் கொலை செய்த ஒன்றரை மனிதர்களுக்கான பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். பயமில்லாமல் சொர்க்கத்துக் போகலாம்.’

இப்பிடி மகாவம்சத்திலை எழுதியிருக்குது பிள்ளையள். நான் சொல்கிறதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மகாவம்சத்தின்ரை ஆங்கில மொழிபெயர்ப்பை எடுத்து வாசிச்சுப் பாருங்கோ: உண்மை தெரியும்.

இப்ப விளங்குதே பிள்ளையள், சர்வதேச விசாரணை ஒன்று நடந்து, அதில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை சிங்களப் படைகள் கொன்றவையள் என்றது உறுதியானால் அதுக்கு எப்பிடியான வியாக்கியானத்தைச் சிங்கள பௌத்த பிக்குமாரும், மக்களும் முன்வைப்பீனம் என்று.

ஏதோ நான் சொல்கிறதைச் சொல்லிப் போட்டேன். விக்கினேசுவரன் மாத்தையாவுக்கு விளங்குதோ இல்லையோ, உங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல வந்தது சங்கதி தெளிவாக விளங்கியிருக்கும்.

வேறை என்ன பிள்ளையள்? வரட்டே?