ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 3 - கலாநிதி சேரமான்

புலனாய்வு உலகின் மர்ம முடிச்சுக்கள்

இந்தியாவின் மகாபாரதக் (அகன்ற பாரதம்) கனவு பற்றிக் கடந்த தொடரில் வெளியிடப்பட்டிருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. முதலாவது கேள்வி, சீக்கிமைத் தனது இருபத்திரண்டாவது மாநிலமாக சுவீகரித்துக் கொண்டமை போன்று எதிர்காலத்தில் ஈழத்தீவையும் இந்தியா சுவீகரித்தால், அதைச் சீனா பார்த்துக் கொண்டிருக்குமா என்பது.

இரண்டாவது கேள்வி, அகன்ற பாரதக் கனவில் மிதக்கும் இந்தியாவின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து ஒப்ரேசன் சாணக்கியா 2.0 நடவடிக்கையில் தமது புலனாய்வாளர்கள் செயற்படுவது ஈற்றில் தமது தேசிய நலன்களுக்கு விரோதமாக அமையும் என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்பதாகும்.

2

இவற்றில் முதலாவது கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முதல் ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் அகன்ற பாரதக் கனவு பற்றிக் கடந்த தொடரில் விலாவாரியாக எழுதப்பட்டதன் நோக்கம் ஈழத்தீவை இந்தியா ஆக்கிரமிக்கும் என்று அறுதியிட்டுக் கூறுவதற்காக அல்ல. மாறாக ஈழத்தீவில் சீனா அல்லது இந்தியாவின் தேசிய நலன்களுக்கு விரோதமாக செயற்படக்கூடிய சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்காக நாட்டை இருகூறாக்கித் தமிழீழத் தனியரசை அமைப்பதை விட முழு ஈழத்தீவையும் தனது இன்னொரு மாநிலமாக சுவீகரிப்பதையே தனது தேசிய நலன்களுக்கு உகந்ததாக இந்தியா கருதும் என்பதை நிறுவுவதே கடந்த தொடரின் நோக்கமாகும்.

இப்பொழுது முதலாவது கேள்விக்கு வருவோம். முழு ஈழத்தீவையும் தனது இன்னொரு மாநிலமாக இந்தியா சுவீகரிக்கும் காலச் சூழல் எழும் பொழுது அதை சீனா பார்த்துக் கொண்டு வாளாவிருக்குமா, அல்லது இந்திய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு சிறீலங்காவிற்கு அது தோள்கொடுக்குமா என்பது அக் காலகட்டத்தில் உலக அரங்கில் எவ்வாறான பாத்திரத்தை இரு நாடுகளும் வகிக்கப் போகின்றன என்பதிலேயே தங்கியுள்ளன.

5

ஒரு கதைக்கு அவ்வாறான சுவீகரிப்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கும் காலப்பகுதியில் அமெரிக்காவை இரண்டாவது நிலைக்குத் தள்ளி விட்டு உலகின் வல்லாதிக்க நாடு என்ற நிலைக்கு சீனா வளர்ந்திருக்குமானால், அது நிச்சயம் சிறீலங்காவிற்கு தோள் கொடுக்கும்.

ஆனால் இப்பொழுது இருப்பது போன்று வெறுமனவே ஒரு வல்லரசாக அப்பொழுதும் சீனா இருக்குமானால், இந்தியாவின் சுவீகரிப்பு நடவடிக்கையை அதனால் தடுத்து நிறுத்த முடியாது. அதிலும், இந்தியாவின் சுவீகரிப்பிற்கு அமெரிக்கா பச்சைக் கொடி காட்டினால் வெறும் கண்டனக் குரல்களை எழுப்புவதைத் தவிர சீனாவால் பெரிதாக எதையும் செய்ய முடியாது. அவ்வாறு சீனா எழுப்பக்கூடிய கண்டனக் குரல்களுக்கு அனைத்துலக அரங்கில் ஆதரவு கிடைக்கப் போவதில்லை.

5

இதற்கு நான்கு காரணங்களைக் கூறலாம். முதலாவது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அக்சாய் சின் பிரதேசத்தை 1962ஆம் ஆண்டு முன்னெடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மூலம் கபளீகரம் செய்து இன்று வரை அதனைத் தனது நில ஆளுகைக்கு உட்பட்ட சிங்ஜியாங்க் மாநிலத்தின் ஒரு பகுதியாக சீனா நிர்வகித்து வருகின்றது.
இரண்டாவது சுதந்திரத்தின் பின்னர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆனால் இந்தியா உரிமை கோரி வரும் வட கா~;மீரின் ஒரு பகுதியை இந்தியாவின் எதிர்ப்பையும் மீறிப் பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் மூலம் 1963ஆம் ஆண்டு சீனா சுவீகரித்துக் கொண்டது. இவை போதாதென்று (மூன்றாவதாக) இந்தியாவின் நில ஆளுகைக்கு உட்பட்ட அருணாச்சல் பிரதேசத்தை தனது இறையாட்சிக்கு உட்பட்ட பகுதியாக நீண்டகாலமாக சீனா உரிமை கோரி வருகின்றது.
நான்காவதாக புறூனெய், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்வான், வியட்னாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் நீண்ட காலமாக இறையாண்மை செலுத்தி வந்த தென்சீனக் கடலின் சில பகுதிகளில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி, அங்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுகின்றது.

இப்படிப்பட்ட சீனா, ஈழத்தீவை இந்தியா சுவீகரிக்கும் பொழுது எழுப்பக் கூடிய கண்டனக் குரல்களை யாரும் கணக்கில் எடுக்கப் போவதில்லை.

5அப்படியென்றால் அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு போர்ட் சிற்றி உட்பட இலங்கையின் பல பகுதிகளில் சீனா மேற்கொண்ட முதலீடுகள் மற்றும் சிறீலங்காவிற்கு அது வழங்கிய பல ஆயிரம் கோடி டொலர் பெறுமதியான கடன் உதவிகளுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதில் வெகு இலகுவானது. ஒன்றில் இக்கடன்களை இந்தியா பொறுப்பெடுக்கும். இல்லையென்றால் 2003ஆம் ஆண்டு ஈராக்கை ஆக்கிரமித்ததும் ஈராக்கில் பொருண்மிய நலன்களைக் கொண்டிருந்த பிரான்சுடன் எவ்வாறு அமெரிக்கா சமரசம் செய்து கொண்டதோ, அவ்வாறு சீனாவுடன் இந்தியா சமரசம் செய்து கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

அது மட்டுமல்ல: என்ன தான் சீனாவிற்கும், இந்தியாவிற்கு இடையில் எல்லைப் பிரச்சினைகள், பூகோள அரசியல் முரண்பாடுகள், இராணுவப் போட்டிகள் இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருண்மிய உறவுகள் சீராகவே இருக்கின்றன. அதிலும் இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத் மாநிலத்தை அபிவிருத்தி செய்வதற்கு சீனா தான் உதவி செய்தது. அது மட்டுமல்ல: கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பதினேழு பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை சீனா இறக்குமதி செய்திருந்தது. அதாவது இந்திய ரூபாய் பெறுமதியில் ஏறத்தாள ஆயிரத்து முந்நூறு பில்லியன் ரூபா அல்லது ஒரு இலட்சத்து முப்பதுனாயிரம் கோடி இந்திய ரூபாய் பெறுமதியான இந்திய உற்பத்திப் பொருட்களைக் கடந்த ஆண்டில் சீனா இறக்குமதி செய்திருந்தது.

இனி அடுத்த கேள்விக்கு வருவோம்.

தென்னாசியப் பிராந்தியத்தில் உள்ள தனது அயல்நாடுகள் அனைத்தையும் தனது மாநிலங்களாக மாற்றியமைக்கும் மகாபாரதக் கனவுடன் இந்தியா செயற்படுவது பரம இரகசியமல்ல. இதனை 1954ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் 1989ஆம் ஆண்டில் ரணசிங்க பிரேமதாசா வரையான சிங்கள ஆட்சியாளர்கள் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றார்கள். இது பற்றிக் கடந்த தொடர் பதிவுசெய்திருந்தது.

அதற்காக இரு நாடுகளின் நலன் சார்ந்த விடயங்களில் இரு நாடுகளின் புலனாய்வு நிறுவனங்களும் இணைந்து செயற்பட மாட்டாது என்றாகாது.

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை, நலன்கள் மட்டும் தான் நிரந்தரமானவை என்பார்கள். புலனாய்வு உலகம் அப்படியல்ல: அரசியல் உலகை விட அது மோசமானது. புலனாய்வு உலகில் நண்பர்களாக இருந்து கொண்டே எதிரிகளாக நடப்பார்கள்: எதிரிகளாக இருந்து கொண்டே நண்பர்களாகவும் செயற்படுவார்கள்.

இதற்கு நிறைய உதாரணங்களைக் கூறலாம்.

மத்திய கிழக்கில் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கும், இன்று அதன் இருப்பிற்கும் பெரும் காப்பரணாகத் திகழ்வது அமெரிக்கா. பனிப்போர் காலத்தில் மத்திய கிழக்கில் அரபு நாடுகளின் இஸ்ரேலிய எதிர்ப்பு நடவடிக்கைகளை உளவுபார்த்து, அவை பற்றிய தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டு, அக்காலத்தில் அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் சிம்ம சொப்பனமாகத் திகழ்வதற்கு வழிசமைத்தது அமெரிக்கா.

5

இன்னொரு விதத்தில் கூறுவதானால் இஸ்ரேலின் உற்ற நண்பன் அமெரிக்கா. இப்படிப்பட்ட அமெரிக்காவையே இஸ்ரேல் உளவு பார்த்தது என்று கூறினால் யாராவது நம்புவார்களா? ஆனால் இவ்வாறு இஸ்ரேலுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இரட்டை முகவர் ஒருவரை 21.11.1985 அன்று அமெரிக்காவின் உள்ளக புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ கைது செய்தது. இவரது பெயர் ஜொனத்தன் பொலார்ட்.

அமெரிக்க கடற்படைப் புலனாய்வுத்துறையில் பகுப்பாய்வாளராகப் பணிபுரிந்த இவர், இஸ்ரேலின் முகவராகவும் செயற்பட்டார். இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் விழுந்த கரும்புள்ளியாகவே இவர் மாட்டிக் கொண்ட சம்பவத்தைப் பார்க்கலாம். இஸ்ரேலின் உளவாளியாக அமெரிக்காவை வேவு பார்த்த குற்றத்திற்காக ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இவர் 20.11.2015 அன்று விடுதலை செய்யப்பட்டார். இவர் சிறையில் இருந்த காலத்தில் இவருக்கு இஸ்ரேலிய குடியுரிமையை இஸ்ரேலிய அரசாங்கம் வழங்கினாலும், இன்று வரை அமெரிக்காவை விட்டு வெளியேற இவர் அனுமதிக்கப்படவில்லை.

இது நண்பர்கள் எதிரிகளாக செயற்படுவதற்கான ஒரு உதாரணம்.

இதற்கு நேர்மாறாக புலனாய்வு உலகில் எதிரிகள் நண்பர்களாக இயங்கும் சம்பவங்களும் நிறைய உண்டு. உதாரணமாக அமெரிக்காவிற்கும், ரசியாவிற்கும் இடையிலான உறவு. இரு நாடுகளின் புலனாய்வு நிறுவனங்களும், ஒன்றையொன்று வேவு பார்ப்பதையும், மற்றைய நாட்டில் குழப்பங்களை விளைவிப்பதையுமே குறிக்கோளாக கொண்டு செயற்படுகின்றன. அப்படியிருக்கும் பொழுதும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயரங்கவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று வரும் பொழுது இரண்டு நாடுகளின் புலனாய்வு நிறுவனங்களும் ஒத்திசைவாக செயற்படும்.

இதில் முக்கியமாக 2017, 2019 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் சென் பீற்றேர்ஸ்பேர்கில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் நடவடிக்கைகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை ரசியப் புலனாய்வுத்துறையினருக்கு அமெரிக்க புலனாய்வுத்துறையினர் வழங்கியதையும், அதன் விளைவாக இவ்விரு தாக்குதல் நடவடிக்கைகளும் நிகழ்வதற்கு முன்னரே அவற்றை ரசிய பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதையும் இங்கு குறிப்பிடலாம். இதற்காக அமெரிக்க அதிபர் டொனல்ட் ரிறம்ப் அவர்களுக்கு இரண்டு தடவைகளும் ரசிய அதிபர் விலாடிமியர் புட்டின் அவர்கள் நன்றி தெரிவித்திருந்தார்.

இது தான் இந்திய – சிங்களப் புலனாய்வு நிறுவனங்களின் விடயங்களிலும் நடக்கின்றது. இரண்டு நாட்டுப் புலனாய்வு நிறுவனங்களும் தத்தமது நாடுகளின் தேசிய நலன்களின் அடிப்படையில் மற்றைய நாட்டிற்கு எதிரான பகைமை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேநேரத்தில், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் ஒத்திசைவாகவே செயற்பட்டு வருகின்றன.

முரண்பாடான இப் புலனாய்வு நடவடிக்கைகளுக்கான உதாரணமாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறீசேனா அணி, சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களைப் பயன்படுத்தி 2014ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ முன்னெடுத்த நடவடிக்கைகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வானோடியாக விளங்கிய தெய்வீகனின் தலைமையிலான புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அணியொன்றை அழிப்பதற்கு 2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய – சிங்களப் புலனாய்வு நிறுவனங்கள் கூட்டாக முன்னெடுத்த எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளையும் நாம் கொள்ள முடியும்.

இனி, பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் சிங்கள மற்றும் பாகிஸ்தானிய புலனாய்வுத்துறையினருடன் இணைந்து தமிழீழ தாயகத்தில் இந்தியப் புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்த நடவடிக்கை ஒன்றைப் பார்ப்போம்.

(தொடரும்)