வாழிட சட்டத்தை மதித்து இயல்பை விரைந்து எட்டுவோம்! - கந்தரதன்

புலம் பெயர் தேசங்களில் கொரோனாத் தாக்கத்திற்குள்ளாகி ஈழத்தமிழர்கள் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  இன்னும் பல ஈழத்தமிழர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், இதுவரை கொரோனாத் தொற்றினால் உயிரிழந்த ஈழத்தமிழர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் விபரம் கேட்டால். உறுதியாகச் சொல்வதற்கு எவராலும் முடியாது என்றே சொல்லவேண்டும். காரணம் கொரோனாத் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மூடி மறைத்துவிட்டமையே ஆகும்.

g

இவ்வாறான நிலைமையில் பல ஊடகங்கள் தம்மால் முடிந்தளவிற்கு கொரோனாவினால் உயிரிழந்த ஈழுத்தமிழர்களின் விபரங்களை வெளிக்கொண்டுவந்துள்ளனர். ஆரம்பத்திலேயே எமது ஊடகமையம் கொரோனா தொற்றிற்கு இலக்கான ஈழத்தமிழர்களின் மரணங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் முன்வராமையினால், குறித்த முயற்சி பலனில்லாமல் போனது. ஆயினும் முடிந்தளவிற்கு இறந்த ஈழத்தமிழர்களின் விபரங்களை ஊடகமையம் சேகரித்துவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கொரோனா உள்ளிருப்புக் காலத்தில் பல நாடுகளிலும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்தனர். ஆனாலும், அவர்களில் அண்ணளவாக அரைவாசிப்பேரே கொரோனா மரணத்தை உறுதிப்படுத்தியிருந்தனர். ஏனையவர்கள் மாரடைப்பு, சளி அடைப்பு, இயற்கை மரணம் என இதர காரணங்களைக் கூறி இருட்டடிப்புச் செய்துள்ளனர்.

y

சமூக ஊடகங்களில் கொரோனா மரணம் என்று வந்தபின்னரும், குறித்த ஊடகங்களைத் தொடர்புகொள்ளும் உறவினர்கள்  யாரைக் கேட்டு கொரோனா மரணம் என்று போட்டீர்கள்? உடனடியாக நீக்க வேண்டும், அல்லது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றெல்லாம் வஞ்சித்து குறித்த செய்தியை சாதாரண மரணச்செய்தியாக மாற்றிவிடுவார்கள்.

கொரோனா மரணம் என்றால் அதனை பாரிய அவமானமாக நினைக்கின்றார்கள். கொரோனா மரணம் என்றால் யாரும் தம்முடன் சேரமாட்டார்கள் உறவினர்கள் ஒதுக்கிவைத்துவிடுவார்கள் என்று நினைக்கின்றார்கள். 

புலம்பெயர் தேசம் ஒன்றில் தனது மனைவி இறந்த நிலையில் ஊடகங்களில் கொரோனாவினால் இறந்ததாக செய்தி வர, கொதித்தெழுந்த கணவர் ஊடகவியலார்களைத் திட்டித் தீர்த்துள்ளார். எனது மனைவி கொரோனாவில் இறக்கவில்லை. அவர் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்தார் என்றும் - இனி நான் எவ்வாறு எனது பிள்ளைகளைக் கரை சேர்ப்பேன்? இப்படியெல்லாம் சிந்திக்கின்றார்கள். அதாவது கொரோனா தொற்று ஏற்பட்டால் திருமணம் செய்யவே முன்வரமாட்டார்கள் என்பதே இவர்களின் சிந்தனை.

g

கொரோனா என்பது ஒரு தொற்று நோயே தவிர ஒருவரின் தவறினால் வருவதில்லை என்பதை முதலில்  உணரவேண்டும். எதிர்பாராத விதமாக குறித்த நோய்த்தொற்று ஏற்படுவதால், அதை அவமானமாகப் பார்ப்பது தவறு. இதனை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.

இருப்பினும் அந்தந்த நாடுகளின் அரசு பின்பற்றச் சொல்லும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நாம் நடப்பதன் மூலம் குறித்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். பேருந்துகளிலும் தொடருந்துகளிலும் பயணிக்கும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தோடு, வர்த்தக நிலையங்களுக்குள்ளும் முகக்கவசம் கட்டாயம் அணியப்படல்வேண்டும்.
இதனைப் பலரும் உதாசீனம் செய்வதைக் கண்ணூடாகக் காண்கின்றோம். எமது தமிழ் மக்கள் பலரும் முகக்கவசம் இல்லாமல் இவ்வாறு பயணம் செய்வதையும் வர்த்தக நிலையங்களுக்குள் நிற்பதையும் காணமுடிகின்றது. இது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுவதுடன், அரசையும் சட்டதிட்டங்களையும் அவமதிக்கும் செயலாகவும் கருதப்படுகின்றது. இதற்கு குற்றப்பணமும் அறவிடப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சிலருக்கு பட்டபின்னரே புத்திவரும். பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை இது. 

முகக் கவசம் அணிவது அரசாங்கத்திற்காகவல்ல உங்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றவர்களின் நம்பிக்கைக்காகவும் என்பதே நிதர்சனமானது. தொடருந்து நிலையங்களிலும், தொடருந்துகள் மற்றும் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்கான விடயங்கள் குறியீடுகளாக அடையாளப்படுத்தப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன. சிலர் அதனைக் கேலிக்கூத்தாகப் பார்ப்பதுடன், அவற்றை கிழித்தெறிந்து சேதப்படுத்தி தமது வீரத்தினைக் காட்டுவதையும் நாம் அவதானிக்க முடிகின்றது. இது பெருமையல்ல இது தமது கைகளைக்கொண்டே தம் கண்களைக் குற்றிக்கொள்வதற்குச் சமமாகும். 

சிலர் அரசின் சட்டதிட்டங்களை மதிக்காமல் மீறுவதைப் பெருமையாகக் கொள்கின்றார்கள். இது பெருமை அல்ல. இது தம்மைத் தாமே சிறுமைப்படுத்துவது ஆகும். இதற்கு ஒரு நல்ல உதாராரணத்தைக் கூறவேண்டும். வர்த்தக நிலையம் ஒன்றில் கொரோனா பாதுகாப்புக் கருதி உள்ளேசெல்வதற்கு ஒரு பாதையையும் வெளியே செல்வதற்கு மற்றொரு பாதையையும் பயன்படுத்தியுள்ளார்கள். அங்கு வந்த இளம் பெண் ஒருவர் வர்த்தக நிலையத்தினுள் சென்று பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் அதே வளியே திரும்பியுள்ளார். அங்கு காவல் கடமையில் நின்ற காவலர் அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியே செல்லும் பாதையூடாகப் போகும்படி கூறுகின்றார்.

ஆனால், அப்பெண்ணோ, இல்லை முடியாது. நான் இந்தப்பாதையூடாகத்தான் செல்வேன் முடிந்தால் தடுத்துப்பார் என மல்லுக்கட்டி நின்றார். காவலரும் செல்ல அனுமதிக்கவில்லை. அப்போது அங்கே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தனி ஒரு காவலரால் அப்பெண்ணை சமாளிக்க முடியவில்லை. மேலும் இரண்டு காவலர்கள் மற்றும் ஊழியர்கள் வந்தும் அப்பெண்ணைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் சத்தமிட்டவாறு அருகில் இருந்த பூட்டப்பட்ட கதவுகளை உதைத்துத் திறக்க முயல்கின்றார். இதனால் அரை மணிநேரத்திற்கு மேலாக கடும் வெய்யிலுக்கு மத்தியில் உள்ளே செல்லவேண்டிய வாடிக்கையாளர்கள் காத்திருக்கவேண்டிய நிலையேற்பட்டது.
ஆனால், குறித்த பெண்ணின் பிடிவாதம் நிற்கவில்லை. இறுதியில், காவலர்களால் காவல்துறையினருக்கு அழைப்புவிடுக்கப்படுகின்றது. உடனடியாகக் காவல்துறையினர் வருகின்றார்கள். பெண்ணிடம் விசாரிக்கின்றார்கள்.

அந்தப்பெண்ணோ, காவல்துறையினரிடமும் அப்படியே நடந்துகொள்கின்றார். இதனால் காவல்துறையினர், குறித்த பெண்ணை விலங்கிட்டுக் கொண்டுசெல்கின்றார்கள். இத்தனைக்கும் அப்பெண்ணின் முகத்தில் முகக்கவசம் கூட அணியவில்லை என்பது வேறு. அப்பெண்ணை விலங்கிட்டு காவல்துறையினர் அதேவழியாக அழைத்துச்செல்கின்றார்கள். அப்போது அப்பெண்ணின் முகத்தில் ஒரு பதற்றமும் இல்லாத சிரிப்பை அவதானிக்க முடிந்தது. காரணம் தான் நினைத்ததைச் சாதித்து விட்ட பெருமை. எத்தனை காவலர்கள், காவல்துறை, ஊழியர்கள் என அத்தனை பேருடனும் ஒருத்தியாக நின்று ஒரு மணிநேரப் போராட்டம். கையில் விலங்கிடப்பட்டாலும். அதே வழியினால்தான் வெளியேறுகின்றேன் என்ற இறுமாப்பே சிரிப்பாய் வந்ததென்பது நன்கு சிந்தித்தபோதே புரிந்தது. அவ்வாறு வெளியேறும்போது அந்தப்பெண்ணைப் பார்த்துக்கொண்டு நின்றவர்களுக்கு அவர்சொன்ன வார்த்தை 'நான் திருடவில்லை" என பிரெஞ்சு மொழியில் குறிப்பிட்டார்.

காரணம் வர்த்தக நிலையம் ஒன்றில் கைவிலங்கிடப்பட்டு யாராவது கொண்டுசெல்லப்படுகின்றார்கள் என்றால் அது நிச்சயமாக திருட்டுக்குற்றத்திற்காகத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சட்டதிட்டங்களை மதிக்காத ஒரு பெண்ணாக அப்பெண் கைதுசெய்யப்பட்டமை அனைவருக்கும் புதுமையே. இது கொரோனாவின் உக்கிரத்தை அனைவருக்கும் புரியவைத்திருக்கும். எனவே நாட்டின் சட்டதிட்டங்களைப் பேணிநடப்போம். விரைவில் இயல்புநிலைக்குத் திரும்புவோம்.