சுமந்திரனைப் பாராட்டலாம் - ஆசிரிய தலையங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவு நாட்கள் நெருங்கும்போதெல்லாம், தமிழ் மக்களிடம் எழும் இனஅழிப்புச் சிந்தனையை திசை திருப்பும் செயற்பாடுகள் ஆண்டாண்டு தோறும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல மாவீரர் நாள் போன்ற தமிழ் மக்களின் உணர்வுமிக்க காலங்களிலும் அதனைத் திசைதிருப்பி, சிந்தனையோட்டத்தை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாகவே தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

4

அந்த வகையில்தான் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களும், சிங்கள விசுவாசக் கருத்துக்களும் பூதாகரமாகக் கிளம்பியிருந்தன. சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டமும், அதன் வழிமுறையும் பிழையென்று சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அவரது இந்தக் கருத்துக்கள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் மிகப் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

3

2009ற்கு முன்னர் வரை சிங்கள மக்களுடனேயே வாழ்ந்து, தமிழ் மக்களின் உணர்ச்சிமிக்க விடுதலைப் போராட்டம் குறித்து எவற்றையுமே அறிந்தும், உணர்ந்தும் கொள்ளமுடியாத சுமந்திரன், சிங்களக் கட்சியொன்றிலோ அல்லது சோரம்போன தமிழ்க் கட்சி ஒன்றிலோ இருந்துகொண்டு இவ்வாறான ஒரு கருத்தை அவர் கூறியிருந்தால் தமிழ் மக்கள் அது குறித்து அதிகமாக அலட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு, தமிழ் மக்கள் நேசித்து அங்கீகரித்த ஒரு கட்சியில் அதன் பேச்சாளராக இருந்துகொண்டு, தமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மிக்க ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டதுதான் தமிழ் மக்களுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தக் கருத்திற்காக சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அதன் தலைவர் சம்பந்தன் அவர்கள் உடனடியாக வெளியேற்றி இருக்கவேண்டும். அல்லது குறைந்தபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை என்றாலும் அவர் மீது எடுத்திருக்கவேண்டும். மாறாக, இது அவரின் தனிப்பட்ட கருத்து. அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளித்து தப்பிக்கமுயன்றதுடன், சுமந்திரனையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் கூட்டமைப்பிற்கு உள்ளேயே இக்கருத்தால் எழுந்த சர்ச்சையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களை கடந்த வாரம் கொழும்பிற்கு அழைத்து கூட்டம் ஒன்றை சம்பந்தன் நடத்தியுள்ளார்.

3

அக்கூட்டத்தில் கூட சுமந்திரன் இவ்வாறான கருத்தை வெளியிட்டதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் வருத்தம் தெரிவிக்கவில்லை. தமிழ் மக்களிடம் அதற்காக மன்னிப்பும் கேட்கவில்லை. மாறாக தங்கள் வாக்கு வங்கியில் சுமந்திரனின் பேச்சு தாக்கத்தை செலுத்திவிடும் என்ற அச்சத்தையே சம்பந்தன் அங்கு வெளியிட்டதுடன், வருங்காலங்களில் இவ்வாறான கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டிருக்கின்றார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும் என அங்கு சுமந்திரன் சவால் விடுத்தபோது, சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென தாம் விரும்பவில்லை என்று மாவை சேனாதிராசா சுமந்திரனுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கின்றார்.

கிளியை வளர்த்து பருந்தின் கையில் கொடுத்ததைப்போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சம்பந்தன் கையில் கொடுத்துவிட்டதாக தமிழ் மக்கள் நினைக்கின்றார்கள். விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டவர் அல்ல சுமந்திரன். 2009ற்குப் பின்னர் உள்நுழைக்கப்பட்டவர். விடுதலைப் புலிகள் காலத்தில் கூட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டவர்களையே சின்னச் சின்னக் காரணங்களுக்காக வெளியேற்ற முடிந்த சம்பந்தன் தலைமையினால், அதன்பின்னர் கொண்டுவரப்பட்ட சுமந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப்படுத்திய பின்னரும் ஏன் வெளியேற்ற முடியவில்லை?

இதனைவிட, சுமந்திரனை தமிழ் மக்கள் ஒருபோதும் அங்கீகரித்து ஏற்றது கூடக் கிடையாது. அவர் அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அவரைச் சுற்றிவளைத்து காறி உமிழ்ந்து தமிழினத்தின் துரோகி என்று வசைபாடினார்கள். சுவிச்சர்லாந்து வந்திருந்தபோது பாதணியைக் கழற்றி எறிந்து அவமானப்படுத்தினார்கள். தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் அவரது உருவப் பொம்மைக்கு செருப்புமாலை அணிவித்து அவமதிக்கின்றார்கள். தாயகத்தில் உருவம் பொம்மைகளை கொடும்பாவி கட்டி எரித்து, இறுதிக்கடன் கூட செய்துவிட்டார்கள். புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு வந்துசெல்லும்போது தலைமறைவாகவே வந்து செல்லவேண்டிய அவலத்தில் சுமந்திரன் இருக்கின்றார். தமிழர்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் சுமந்திரனுக்கு சிங்கள இராணுவமும் காவல்துறையும்தான் பாதுகாப்பு வழங்கவேண்டியுள்ளது.

3

எத்தனை அவமதிப்புக்கள், எத்தனை அவமானங்கள், எத்தனை அச்சுறுத்தல்கள், எத்தனை ஆபத்துக்கள்? தமிழர்களால்தான் சுமந்திரனுக்கு இத்தனை நெருக்கடியும். இருந்தும் சுமந்திரன் என்ன ஒதுங்கியா போய்விட்டார்? இத்தனைக்குப் பின்னரும் தமிழினத்தை அழிக்கின்ற, இனவிடுதலைப் போராட்டத்தைச் சிதைக்கின்ற நாசகார செயற்திட்டங்களுக்காக தன்னிடம் கொடுக்கப்பட்ட பணியை எந்தவித தயக்கமும் அச்சமுமின்றி சுமந்திரன் இன்றும் உறுதியோடு செய்துகொண்டுதானே இருக்கின்றார். இதற்காக அவரைப் பாராட்டலாம்தானே.

ஆனால், நாம் என்ன செய்தோம்? இனத்தை நாசப்படுத்துவதற்கு இத்தனை தடைகளையும் கடந்து சுமந்திரன் பயணிக்கும்போது, அவமதிப்புக்கள், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள் இத்தனையும் கடந்து பயணிப்பதில் தமிழ் மக்களுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

6

தமிழீழத் தேசியத் தலைவர் காட்டிய விடியலுக்கான வழிகள் நிறைந்துகிடக்கின்றன. மாவீரர்கள் செய்த அற்புதமான தியாகங்களும் மக்களின் அர்ப்பணிப்புக்களும் இன்றும் கண்முன் நிற்கின்றன.
முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து பதினொரு வருடங்களைக் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் தமிழினத்தினது மட்டுமல்ல உலகில் மிகக்குறுகிய நிலப்பரப்பிற்குள் நிகழ்ந்த மாபெரும் மனிதப் பேரவலத்தின் சாட்சியாகவும் இருக்கின்றது. இந்தப் பேரவலத்தை முன்னிறுத்தி அடுத்த கட்ட நகர்வுகளை எந்தவித அச்சமுமின்றி துணிவுடன் வேகமாக முன்னெடுக்கவேண்டிய இனம், தங்களுக்குள் தாங்களே தடைகளைப்போட்டுச் சுணங்கிக்கிடப்பது வரலாற்றுத் தவறல்லவா.