அரிச்சந்திரன் பதில்கள்

கேள்வி:- தமிழர்களின் அறிவியலில் உங்களை அதிகம் வியக்க வைத்தது எது அரிச்சந்திரனே..?

பதில்:- உலகத்தில் மிகவும் உச்ச பாதுகாப்பு கொண்ட இரகசியமான இடங்கள் 10 உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த இடங்களில் யாரும் இலகுவில் நுழைந்துவிட முடியாது. அந்த பத்தில் ஒன்று நோர்வே நாட்டில் அமைந்துள்ளது.

பூமியில் மிகப் பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட்டால் உணவு, தானியங்கள் அழிந்துவிடும். இதனால் மனித இனமும் அழிந்துவிடும் என்ற ஆபத்தை உணர்ந்துகொண்டு 2006ம் ஆண்டளவில் 45 மில்லியன் குரோன் செலவில் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் நோர்வேயில் உருவாக்கப்பட்டது. Svalbard Global Seed Vault திட்டம்.

4

நோர்வேயின் எல்லைக்குட்பட்ட ஸ்பிட்பெர்கன் தீவில் மிகவும் உச்ச பாதுகாப்புடன் அமைந்துள்ள இந்த இடத்தில், உலக நாடுகள் எங்கும் இருந்து கொண்டுவரப்பட்ட 20 மில்லியன் அளவில், சுமார் 500ற்கும் மேற்பட்ட வகையான முக்கிய தானியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இயற்கை சீற்றங்களாலோ அல்லது வேறு அழிவுகளாலோ தானியங்கள் அழிந்து போனால் இங்கிருந்து விதைகளை பயன்படுத்தி கொள்ளலாம். எத்தகைய சூழல்களிலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது. 

ஆனால், தமிழர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊருக்கு ஊர் இவ்வாறான உயர்ந்த பாதுகாப்பு பிரதேசங்களை அமைத்து வைத்திருக்கின்றார்கள் என்பது எத்தனை பேருக்கும் தெரியும். அது கோபுரக் கலசம். தமிழர்களின் அறிவியலின் உச்சம் அதென்றே நினைக்கின்றேன். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பதன் அர்த்தம் ஆன்மீகம் அல்ல, அது அறிவியல்!
கோயில்களில் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

12

கோபுரங்களை உயரமாகக் கட்டியதற்கும், அதன் உச்சியில் கலசங்களை அமைத்ததற்கும் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என்று தெரியுமா? கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இந்தக் கலசங்களின் உள்ளே இருப்பவை தானியங்கள். நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், சாமை, எள்... போன்ற பல தானியங்களை நிரப்பி வைத்திருந்தார்கள். இயற்கைப் பேரழிவு ஏற்பட்டு ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? உயரமான கோபுரம் நீரில் மூழ்க வாய்ப்பே இல்லை. எவ்வளவு பேரழிவு வந்தாலும் தானியங்கள் பாதுகாக்கப்படும் என்று நம்பினார்கள்.

அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடும் என்பதை அறிந்துகொண்டு, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பாவிசேகம், குடமுழுக்கு என்ற பெயரில் விழாக்களை நடத்தி, கலசங்களில் இருக்கும் பழைய தானியகளை எடுத்துவிட்டு புதிய தானியங்களை நிரப்பினார்கள்.

இதுமட்டுமல்ல, ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. யாரும் அவ்வாறு கட்டுவதுமில்லை. இதற்கு மதக் காரணம் சூட்டப்பட்டப்பட்டபோதும் உண்மையான காரணம் அறிவியல் ரீதியானது. இப்போது கட்டடங்களுக்கு இடிதாங்கிகள் பூட்டப்படுகின்றன. ஆனால், உலோகங்களால் ஆன கோபுரக் கலசம் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கொண்டிருக்கின்றன. இதனால் உயர்ந்த கோபுரத்தில் இருக்கும் கலசங்கள் இடிதாங்கிளாகவும் செயற்படுகின்றன. அத்துடன், கலசத்தில் நிரப்பப்படும் தானியத்தில் வரகு அதிகமாக இருக்கும். "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என்பதை இப்போதைய அறிவியல் உறுதிப்படுத்தியிருக்கின்றது. ஆனால் அப்போது அதனை எவ்வாறு தமிழர்கள் கற்றறிந்தார்கள். தமிழர்களின் அறிவியலில் என்னை அதிகம் வியக்கவைத்தது இந்தக் கோபுரக் கலசங்கள்தான்.

கேள்வி:- இந்த உலகில் எதுதான் நிலையானது..?

பதில்:- இந்த உலகில் எதனை இழந்தாலும் உன்னிடம் ஒன்றே ஒன்று மட்டும் எஞ்சியிருக்கும். அந்த ஒன்றையும் நீ இழந்தால்தான் உன் நிலை நிலையில்லாமல் போகும். அந்த ஒன்றை இழக்காதவரைக்கும் உனக்கு எந்தவொரு இழப்பும் இழப்பே இல்லை. அது -நம்பிக்கை-. இந்த உலகில் நிலையானது ஒன்றே ஒன்றுதான். அது நம்பிக்கை. இதனை நான் சொல்லவில்லை. கிரேக்க நாட்டுத் தத்துவஞானி தேல்ஸ் மரிக் என்பவர் சொன்னது.

கேள்வி:- என் அழகைப் பலரும் கிண்டல் செய்கின்றார்கள். அவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது..? ஒரு அருமையான வழி சொல்லுங்களேன்...

4

பதில்:- மனித உயிர்களின் பரிமாண வளர்ச்சியைக் கண்டறிந்து கூறியவர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர் சார்ள்ஸ் டார்வின். குரங்கில் இருந்து மனிதன் வந்ததாக இவர் கூறியதுதான் பலரையும் குறிப்பாக அப்போதைய மதவாதிகளை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் மதக் கோட்பாடுகளையே முழுப்பொய்யாக்கிவிடும் என்று பயந்த மதத் தலைவர்கள் அவரைப் பைத்தியம் என்று கூறிக் கல்லால் அடிக்கும் அளவிற்கும் போனார்கள். இதில் ஒருவர், குரங்கிலிருந்துதான் மனிதன் உருவாகி இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு உங்கள் தோற்றத்தை வைத்துத்தான் நீங்கள் வந்திருக்கின்றீர்களா என்று நக்கலாக அவரிடமே நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அப்போது சற்றும்கூடக் கோபப்படாத டார்வின், நான் கண்டுபிடித்த ஆராய்ச்சிக்கு, நானே ஆதாரமாக இருக்கிறேன் என்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றார். நக்கலாகக் கேள்வி கேட்டவர் வெட்கமடைந்து வாயடைத்துப் போனாராம்.

நீங்களும் பதிலுக்கு அவர்களை கோபமடையும் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், அவர்கள் வெட்கமடையும் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். அவர்களாகவே கேலி செய்வதை நிறுத்திவிடுவார்கள்.