ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - பிலாவடிமூலைப் பெருமான்

வணக்கம் பிள்ளையள்.

வணக்கத்தோடை நிண்டு கொள்ளுறன். அதுக்கு மேலே குசலம் விசாரிக்கிற மன நிலையில் நான் இல்லைப் பிள்ளையள்.

பின்னை என்ன? உந்த பாழ்பட்ட அமெரிக்க ஆட்சியாளர்கள் செய்கிற கூத்துகளைப் பார்க்கேக்குள்ளை எனக்கு வருகிற கோபத்துக்கு...

உந்த அமெரிக்கா என்கிற தேசமே கறுப்பின மக்களின்ரை வியர்வையிலையும், குருதியிலையும் கட்டியெழுப்பப்பட்டது பாருங்கோ.

ஒரு பக்கத்திலை மில்லியன் கணக்கில் செவ்விந்தியர்களைக் கொன்று குவிச்சுக் கொண்டு, இன்னொரு பக்கத்திலை ஆபிரிக்காவிலை இருந்து கறுப்பின மக்களை அடிமைகளாகக் கொண்டு வந்து வெள்ளைக்காரன் கட்டியெழுப்பினது தான் அமெரிக்கா. இண்டைக்கு அமெரிக்கா உலக அளவிலை ஒரு வல்லாதிக்க நாடாக இருக்குது என்றால் அதுக்குப் பின்னாலை கறுப்பின மக்களின்ரை உயிரும், உதிரமும் இருக்குது.

1

அந்தக் காலத்திலை ஆபிரிக்காவிலை இருந்து கறுப்பின மக்களை அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டு போய் வெள்ளைக்காரன் செய்த கொடுமைகள் சொல்லி மாளாது பிள்ளையள். தாயையும், பிள்ளையும் அடிமையாகக் கொண்டு வந்து விற்கிறது. இளம் பெண்களைக் கர்ப்பிணியாக்கி அவையளின்ரை பிள்ளையள் வளர்ந்து வர அதுகளைத் தாய்மாரிட்டை இருந்து பிரிச்சு வேறை ஆட்களுக்கு விற்கிறது என்று கொஞ்ச நெஞ்ச அநியாயங்களையே வெள்ளைக்காரனுகள் செய்தவங்கள்?

சரி, உதெல்லாம் காலனித்துவக் காலத்துத் தவறுகள் என்று கடந்து போகலாம் என்று கறுப்பின மக்கள் நினைச்சாலும் விடுகிறதாக இல்லை உந்த நிறவெறி பிடிச்ச வெள்ளைக்கார ஆட்சியாளர்மார். உதிலையும் உந்த ரிறம்ப் இருக்கிறார் எல்லோ, இன்னும் ஐஞ்சு வருசத்துக்குத் தான் ஆட்சியில் இருக்க வேணும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக நிறவெறியைத் தூண்டி விடுகிற வேலைகளில் அவர் ஈடுபடுகிறார்.

2

உது போதாதென்று, அன்னாசி சொல்லிச்சுதாம் பலாப் பழத்தைப் பார்த்து, இருந்தாலும் நீ ரொம்ப சொரசொரப்பு என்கிற மாதிரி, தன்ரை நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கிறதுக்கு ஆளுக்கு வக்கில்லை, அதுக்குள்ளை உலகிலை எங்கேயோ மூலையில் இருக்கிற இலங்கைக்குத் தன்ரை தூதுவரை அனுப்பி, அங்க கொரோனா கொல்லுயிரியின்ரைப் பரம்பலைத் தடுக்கிறதுக்கு பாதுகாப்பு அங்கிகளைத் தானமாகக் கொடுத்திருக்கிறாராம்.

அதுவும் ஆரிட்டை உந்தப் பாதுகாப்பு அங்கிகளைத் தன்ரை தூதுவர் ஊடாக ரிறம்ப் கொடுத்தவர் என்று கேட்டியள் என்றால் கொதிச்சுப் போய்விடுவியள். அவர் தான் பிள்ளையள் இறுதி யுத்தத்திலை எங்கடை இசைப்பிரியா உட்பட நிராயுதபாணிகளாக இருந்த பெண் பிள்ளைகளைக் கதறக் கதறக் கொடூரமாக் கொன்ற 53ஆவது படையணியின்ரை தளபதிகளில் ஒருத்தராக இருந்த மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்கவிட்டை தான் உந்தப் பாதுகாப்பு அங்கிகளை ரிறம்பின்ரை தூதுவர் குடுத்தவர்.

3

இப்ப சிங்கள பாதுகாப்புத்துறைச் செயலராக இருக்கிற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்குக் கீழே பணிபுரிஞ்சவர் தான் உந்த சுடந்த ரணசிங்க. நந்திக்கடலுக்கான பாதை என்கிற பெயரில் கமால் குணரட்ண எழுதின புத்தகத்திலை சுடந்த ரணசிங்கவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

அது மட்டுமில்லை பிள்ளையள்: 18.05.2009 அன்று 53ஆவது படையணியால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் இசைப்பிரியாவின்ரை பெயரையும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு வெளியிட்டிருந்தது. அதுவும் ஊடகப் போராளியான இசைப்பிரியாவுக்கு லெப்.கேணல் பட்டம் கொடுத்து, அவரை ஒரு தளபதியாக 53ஆவது படையணி சித்தரிச்சுது.

இப்ப விளங்குதே பிள்ளையள், நான் கொதிச்சுப் போய் நிற்கிறதுக்கு என்ன காரணம் எண்டு? பின்னை என்ன பிள்ளையள், ஒரு பக்கத்திலை போர்க்குற்றம் செய்தவர் என்று சொல்லி சவேந்திர சில்வாவுக்குப் பயணத் தடையை விதிச்சுப் போட்டு, நான்கு மாதங்களுக்குள்ளை இன்னொரு போர்க்குற்றவாளியோடை தேத்தண்ணி குடிச்சு, பிஸ்கட்டும் திண்டு கொரோனா பாதுகாப்பு அங்கிகளை அமெரிக்கத் தூதுவர் கையளிக்கிறார் என்றால் உதை விட இன்னொரு இரட்டை வேடத்தனம் இருக்குமே?

இதிலை இன்னொரு குசும்பும் இருக்குது பிள்ளையள்.

உந்த சுடந்த ரணசிங்க 2013ஆம் ஆண்டிலை 53ஆவது படைப் பிரிவின்ரை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட உடனேயே படைத்துறைப் பயிற்சி ஒன்றுக்காக அமெரிக்காவுக்கு போறதுக்கு விசாவுக்கு விண்ணப்பிச்சவர். ஆனால் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட படையணியின்ரை தளபதி என்ற உடனேயே அவருக்கான விசாவை அப்ப ஒபாமா நிராகரிச்சவராம்.

ù

அதுக்குப் பிறகு நியூசீலண்ட்டிலை அமெரிக்கப் படையினர் ஏற்பாடு செய்திருந்த இன்னொரு பயிற்சிப் பாசறைக்கும் அவரின்ரை பெயரை கோத்தபாய மாத்தையா பரிந்துரைச்சவர். ஆனால் அந்த நேரத்திலை அதுக்கும் ஒபாமா அனுமதி கொடுக்க மறுத்துப் போட்டாராம்.

அப்பிடி இரண்டு தடவை ஓரங்கட்டப்பட்ட ஒருத்தரை இப்ப அமெரிக்கத் தூதுவர் சந்திச்சு, அவரிட்டை ரிறம்பின்ரை சார்பிலை கொரோனா பாதுகாப்பு அங்கிகளைக் கொடுத்ததோடு நிற்காமல், கொரோனா பரம்பலை தடுக்கிறதிலை காத்திரமான நடவடிக்கைகளை சிறீலங்கா இராணுவம் எடுத்திருக்குது என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார் என்றால் பாருங்கோ.

உதைத் தான் ஆற்றிலை ஒரு கால், சேற்றிலை ஒரு கால் என்று அந்த நாட்களிலை என்ரை ஆச்சி நக்கலாகச் சொல்கிறவா. ஒருவேளை சுடந்த ரணசிங்கவிற்கு கறுப்பினத்தவரான ஒபாமா விசா மறுத்ததால் ஒபாமாவை மட்டம் தட்டுகிறதுக்காக சுடந்த ரணசிங்கவிற்கு செங்கம்பளம் விரிக்க வேணும் என்று ரிறம்ப் நினைக்கிறாரோ தெரியவில்லை. ஏற்கனவே ஒபாமாவின்ரை ஆட்சியிலை நடந்த கன நல்ல விசயங்களை ரிறம்ப் நாசமாக்கிப் போட்டார். போகிற போக்கைப் பார்த்தால், இலங்கையின்ரை விசயத்திலையும் உதே விளையாட்டைத் தான் இனி ரிறம்ப் காட்டப் போறார் போலக் கிடக்குது. எனக்கென்றால் தலை கிறுகிறுக்குது.

ஆனால் ஒன்று சொல்கிறேன் பிள்ளையள். ஒபாமாவின்ரை காலத்திலை விசா மறுக்கப்பட்ட சிங்கள இராணுவத் தளபதிமாரோடை ஒட்டி உறவாடிக் கொண்டு, சவேந்திர சில்வாவுக்கு பயணத் தடை விதிக்கிற மாதிரியான கூத்துக்களை ரிறம்ப் செய்து கொண்டிருந்தார் என்றால், அறத் தோய்ந்தவனுக்குக் குளிரேது, கூதலேது என்கிற கதையாகத் தான் இனி சிங்கள இனப்படுகொலையாளிகள் குளிர் விட்டுப் போய் கூத்தடிப்பானுகள்.

இதுக்குள்ளை எனக்கு இன்னொரு சந்தேகம் பிள்ளையள். உந்த கமால் குணரட்ண நந்திக்கடலுக்கான பாதை என்று கதை எழுதினவர். எங்கடை சில வெங்காயங்கள் நந்திக்கடல் பேசுது, நந்திக் கடல் கோட்பாடு, அது இது என்று நோர்வேயிலையும், பிரான்சிலையும் இருந்து கொண்டு, எங்கடை தேசத்தின் குரலை நிந்திச்சு அதன் மூலம் தேசியத் தலைவரை நிந்திக்கிற வேலையில் கனக்கச்சிதமாக ஈடுபடுகீனம். போகிற போக்கில் உதுகளைப் பார்த்தால் எனக்கு உந்த கமால் குணரட்ணவின்ரை நந்திக்கடலுக்கான பாதையும், நோர்வேயிலையும், பிரான்சிலையும் இருக்கிற வழிப்போக்கர்மார் பேசுகிற நந்திக்கடல் தத்துவமும் ஒன்று மாதிரித் தான் இருக்குது.

ஏதோ, நான் சொல்கிறதைச் சொல்லிப் போட்டேன். வரட்டே?