ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 4 - கலாநிதி சேரமான்

பாகிஸ்தானின் உதவியுடன் ஜே.ஆர் உருவாக்கிய ஜிகாத் குழு!

தமிழீழத் தனியரசுக் கோரிக்கைக்கு அடிப்படையாகத் திகழ்வது தமிழீழ தாயகத்தின் நில ஒருமைப்பாடாகும். இது சிதைக்கப்பட்டு விட்டால் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தன்னாட்சி உரிமைக்கு உரித்தான தேசிய இனம் என்ற தகமையைத் தமிழீழ மக்கள் இழந்துவிடுவார்கள். இதனால் தான் 1949ஆம் ஆண்டில் (ஈழத்தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி அகன்று ஓராண்டுக்குள்) தென்தமிழீழம் பட்டிப்பளைப் பிரதேசத்தில் கல்லோயா என்ற சிங்களக் குடியேற்றத்தை சிங்கள அரசு உருவாக்கியது.

இதே நோக்கத்துடன் தான் பட்டிப்பளையைத் தொடர்ந்து தென்தமிழீழத்தின் ஏனைய பகுதிகளிலும், தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றிலும் சிங்களக் குடியேற்றங்களை சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள்.

கால நீட்சியில் அம்பாறை, திருமலை ஆகிய தென்தமிழீழ மாவட்டங்களில் தமது வாக்குப் பெரும்பான்மையைத் தமிழர்கள் இழந்தமைக்கு அம் மாவட்டங்களில் சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கிய சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் முக்கிய காரணியாக அமைந்தன எனலாம். ஆனால் தமிழீழ தாயகத்தின் நில ஒருமைப்பாடும், தென்தமிழீழ மக்களின் வாக்குப் பலமும் அவ்வாறான திட்டங்களால் மட்டும் சிதைக்கப்படவில்லை.

41

தமிழீழ தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கத்துடன் இன்னுமொரு மூலோபாயத்தையும் சிங்கள அரசு கையாண்டது. தமிழீழ தாயகத்தில் வாழும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாட்டைத் தோற்றுவித்து, இரண்டு இனங்களையும் நிரந்தர எதிரிகளாக்குவது தான் அம் மூலோபாயம். இதற்காக 1984ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் ஜிகாத் குழு என்ற முஸ்லிம் ஆயுதக் குழுவை சிங்கள அரசு உருவாக்கியது.

பனிப்போர் உச்சத்தில் இருந்த காலப்பகுதி அது. சோவியத் ஒன்றியத்தோடு இந்தியா ஒட்டியுறவாடிக் கொண்டிருந்த அக் காலப் பகுதியில், தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வைரியான பாகிஸ்தானை அமெரிக்கா தத்தெடுத்திருந்தது. அத்தோடு 25.12.1979 இல் ஆப்கானிஸ்தானை சோவியத் படைகள் ஆக்கிரமித்ததை அடுத்து, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஆப்கானிஸ்தானின் முஜாகதீன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும், ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கும் நடவடிக்கைகளைப் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஊடாகவே அமெரிக்கா மேற்கொண்டிருந்தது. ஒப்ரேசன் சைக்ளோன் (சுழற்புயல்) என்ற குறியீட்டுப் பெயருடன் அமெரிக்கா முன்னெடுத்த இந் நடவடிக்கையின் ஓர் அங்கமாகப் பின் நாட்களில் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் ஆப்கானிஸ்தானில் வளர்க்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளில் ஒருவர் ஒசாமா பின்லாடன்.

s

சரி, இப்பொழுது ஈழத்தீவின் பக்கம் எமது கவனத்தைத் திருப்புவோம். அங்கு இந்தியாவின் ஆதிக்கத்திற்கு ஆப்பு வைப்பதற்கு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளில் முக்கியமானது, தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக அன்றைய சிங்கள அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்னெடுத்த எதிர்ப்புரட்சி நடவடிக்கைக்கு உதவி புரிந்தது தான்.

ஆப்கானிஸ்தானைப் போன்று ஈழத்தீவிலும் பாகிஸ்தானையே அதிக அளவில் அமெரிக்கா பயன்படுத்தியது. இவ் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பும், பிரித்தானியாவின் கூலிப்படை அமைப்பான கினி மினி சேவைகள் (கே.எம்.எஸ்) நிறுவனமும் பங்கு வகித்தாலும், தமிழீழ தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பே முன்னின்று முன்னெடுத்தது. இதற்காகவே 1984ஆம் ஆண்டில் ஜிகாத் குழு என்ற முஸ்லிம் ஆயுதக் குழுவை அம்பாறையில் பாகிஸ்தான் உருவாக்கியது.

இதில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பது பற்றிய தகவல்களில் தெளிவு இல்லை. ஆனாலும் மறைந்த பாகிஸ்தானியப் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் (அப்பொழுது அவர் எதிர்க்கட்சியில் இருந்தார்) ஆப்கானிஸ்தானில் முஜாகதீன் என்ற பெயரிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளை பாகிஸ்தானிய புலனாய்வுத்துறையினர் ஊடாக வளர்த்தெடுத்த அமெரிக்கா, ஈழத்தீவிலும் ஜிகாத் குழுவின் உருவாக்கத்தில் பங்கு வகித்திருந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ஈழத்தீவில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நிலவி வந்த முரண்பாடுகளின் அளவுக்குத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆரம்பத்தில் முரண்பாடுகள் இருக்கவில்லை. இன்னும் சரியாகக் கூறுவதானால், தமிழ் - சிங்கள இன மோதல்கள் கூர்மையடைவதற்கு முன்னர் ஈழத்தீவில் முஸ்லிம்களுக்கு சிங்களவர்களோடு தான் முரண்பாடுகள் வலுவடைந்திருந்தன. இதற்கான உதாரணமாக 1915ஆம் ஆண்டில் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியில் நிகழ்ந்த சிங்கள – முஸ்லிம் இனக் கலவரங்களைக் குறிப்பிடலாம்.

l

இவ்வாறு இருந்தும், அன்றைய காலகட்டங்களில் தமிழ் - முஸ்லிம் தலைமைகள் எடுத்த பொறுப்பற்ற நடவடிக்கைகள் இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் முரண்பாடுகள் தலைதூக்குவதற்கு வழிகோலின எனலாம்.

1915ஆம் ஆண்டு நிகழ்ந்த சிங்கள – முஸ்லிம் கலவரத்தின் பொழுது சிங்களக் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகத் தமிழர்களின் தலைவர்களில் ஒருவர் எனக் கருதப்பட்ட சேர் பொன்னம்பலம் இராமநாதன் நடந்தது கொண்ட விதம் முஸ்லிம்களுக்கு அதிருப்தியை கொடுத்தது எனலாம். அதிலும், முஸ்லிம்களை ‘சிங்களவர்களின் இரத்தத்தைக்; குடிக்கும் கூட்டம்’ என்றும் நிந்தித்த அநகாரிக்க தர்மபால என்ற சிங்கள – பௌத்த இனவெறியரை சேர் பொன்னம்பலம் இராமநாதன் வழக்காடிச் சிறை மீட்டது முஸ்லிம்களின் அதிருப்தியைத் தமிழர்கள் சம்பாதிக்க வழிகோழியது.

இதே அநாகாரிக்க தர்மபால தான் தமிழர்களைப் ‘பேய் பிசாசுகளை வழிபடும் இழிகுலத்தவர்கள்’ என்று முன்பொரு தடவை தான் எழுதிய நூல் ஒன்றில் நிந்தனை செய்திருந்தார். அப்படிப்பட்ட அநாகரிக்க தர்மபால சிறையில் இருந்து வெளியில் வந்ததும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்குக் கொடுத்த பட்டம் ‘சிங்களவர்களின் காவலன்’ என்பதாகும்.  

மறுபுறத்தில் 1947ஆம் ஆண்டு இந்தியா என்ற நாடு பிறப்பெடுத்த பொழுது அதற்கு சவாலாகத் தோன்றிய பாகிஸ்தானுக்கு விசுவாசமாகவே ஈழத்தின் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை அன்றைய முஸ்லிம் தலைவர்கள் முன்வைத்தார்கள். தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதால் இந்து நாடான இந்தியாவிற்கு விசுவாசமாகவே அவர்கள் இருப்பார்கள் என்றும், எனவே இஸ்லாமியர்களான ஈழத்து சோனகர்கள், தமிழ் பேசினாலும், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானையே ஆதரிக்க வேண்டும் என்றும் முஸ்லிம் தலைவர்கள் வாதிட்டார்கள்.

இவை தான் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகள் தளிர் விடுவதற்கு வழிகோலின எனலாம். இவை போதாதென்று 1950களில் ஈழத்தீவில் மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. ஜமாத் ஈ இஸ்லாமி, தப்லெக் ஜமாத், ஜாம் ஐயத்து அன்சாரிஸ் சுன்னத்துல் முகமதியா ஆகிய பெயர்களைக் கொண்ட இவ் அமைப்புக்கள் மேற்கொண்ட இஸ்லாமிய மயப்படுத்தல் நடவடிக்கைகளில் முக்கியமானது முஸ்லிம் மக்களிடையே இருந்த தமிழ் - அரபுக் கலப்புப் பெயர்களை நீக்கி, அவர்களுக்குத் தூய அரபுப் பெயர்களைச் சூட்டுவது தான்.

தமிழ் என்பது சாத்தானை வழிபடுவோரின் மொழியாகவும், அரபு என்பது அல்லாவை வழிபடுவோரின் மொழியாகவும் குறித்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களால் முன்னிறுத்தப்பட்டது. உதாரணமாக காசீம் தம்பி என்ற பெயர் ஒரு முஸ்லிம் நபருக்கு இருந்தால், தம்பி என்ற அவரது தமிழ்ப் பெயரை நீக்குவதற்குக் குறித்த அமைப்புக்கள் நிர்ப்பந்திக்கும். அவை மட்டுமன்றி இஸ்லாமியர்கள் அதிக அளவில் கல்வி கற்ற பாடசாலைகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் காணப்பட்ட தமிழ்ப் பெயர்களை நீக்கி அவற்றுக்குப் பதிலாக அரபுப் பெயர்களைச் சூட்டும் நடவடிக்கைகளையும் இவ் அமைப்புக்கள் மேற்கொண்டன. அத்தோடு  தமிழர்களோடு நல்லுறவைப் பேணி அவர்களின் பாரம்பரியப் பண்டிகைகளான தைப்பொங்கல் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றிய சுபி மார்க்கத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களை மிரட்டி, வகாபிய இஸ்லாமியர்களாக அவர்களை மாற்றும் நடவடிக்கைகளையும் இவ் அடிப்படைவாத அமைப்புக்கள் முன்னெடுத்தன.

ஏறத்தாழ தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள – பௌத்த பிக்குகளும், அரசியல்வாதிகளும் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு ஒப்பான கைங்கரியங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஈடுபட்டனர்.

அது மட்டுமன்றி சிங்கள ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம், தரப்படுத்தல் சட்டம் ஆகியவற்றால் தமிழர்களைப் போன்று முஸ்லிம்கள் அதிக அளவிற்கு பாதிக்கப்படவில்லை. இதற்குப் காரணம் அக்காலப்பகுதிகளில் அரச சேவைகளில் முஸ்லிம்கள் பணிபுரியாததும், பல்கலைக் கழக மேற்படிப்புக்களில் ஆர்வம் காட்டாது வணிக நடவடிக்கைகளில் அவர்களில் பெரும்பாலானோர் ஈடுபட்டதுமாகும். இதனால் தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டு நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் முன்னெடுத்த பொழுது, அதனையிட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பரிவட்டம் கட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

இவை போதாதென்று 1960களின் இறுதியில் தமிழ் மக்களின் மத்தியில் தமிழீழத் தனியரசுக் கோரிக்கை தளிர்விடத் தொடங்கிய பொழுது, அதனை எதிர்த்தவர்களும் முஸ்லிம் தலைவர்கள் தான். ஈழத்தீவு இரு நாடுகளாகப் பிளவடைவது வணிகத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமையும் என்பதால், பிரிவினையை ஆதரிக்கக் கூடாது என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைத்தார்கள்.

இவற்றையெல்லாம் நுணுகி ஆராய்ந்திருந்த குள்ளநரி ஜெயவர்த்தனா, தமிழீழ தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைப்பதற்கான அடுத்த ஆயுதமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கையிலெடுத்தார். அதற்காக ஈழத்தீவிற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வாளர்களை வரவழைத்து, அவர்களின் உதவியுடன் தென்தமிழீழத்தில் ஜிகாத் குழு என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை ஜே.ஆர் உருவாக்கினார். இது அன்றைய காலப்பகுதியில் இந்திரா காந்தி அம்மையாருக்கு சினத்தைக் கொடுத்தது.

(தொடரும்)