குரங்கின் கையில் கொள்ளியைக் கொடுத்தாயிற்று! - ஆசிரிய தலையங்கம்

இலங்கைத் தீவில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என்பதை தமிழர் தரப்பு பல்லாண்டுகளாக கூறிவருகின்றது. தமிழினத்தை அழித்தொழிக்கும் நோக்கத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை சிங்களப் பேரினவாத அரசு கொண்டுவந்தபோதே இலங்கைத் தீவில் இராணுவ ஆட்சிமுறைமை நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த இராணுவ ஆட்சி முறைமையே தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாதிகளுக்கு பேருதவியை வழங்கியது.

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதுபோல், தங்களுக்கு பாதிப்பு ஏற்படத்தொடங்கிய நிலையில், இப்போதுதான் சிங்களப் பேரினவாதிகள் முன்னொரு போதும் இல்லாததுபோன்று, இலங்கைத் தீவில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக கூக்குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக இனப்படுகொலையில் ஈடுபட்டவரும் சிறீலங்காவின் ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்சவினால் அண்மையில் இரண்டு செயலணிகள் உருவாக்கப்பட்டதன் பின்னரேயே சிங்கள எதிர்க்கட்சிகளால் இந்தக் கூக்குரல் எழுப்பப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி மற்றும் பாதுகாப்பான நாடொன்றை, ஒழுக்கநெறியுள்ள, குணநலன்கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஆகியன சிறீலங்காப் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல்குணரட்ண தலைமையில் பதில் காவல்மா அதிபர், இராணுவ தளபதிகளை உள்ளடக்கிய நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஜனாதிபதி செயலனியின் ஆணைக்கமையவே அரசதுறை இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டு கோத்தபாய ராஜபக்சவினால் வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி குறித்த கவலை சிங்கள எதிரணிக்கு இல்லை. ஏனெனில் தமிழர் தாயகத்தை குறிப்பாக தமிழீழத்தின் முகாந்தரமாக விளங்கும் கிழக்கு மாகாணத்தை முழுமையான சிங்கள தேசமாக மாற்றும் தன்மை இந்த தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் திட்டத்திற்குள் அடங்கியிருப்பதால் அது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை.

மாறாக, மேஜர் ஜெனரல் கமல்குணரட்ண தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணிக்கே சிங்கள தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது. சுயாதீனமாக இயங்கிவரும் அரச துறையை இராணுவத்தின் தலைமைத்துவத்திற்கு கீழ் அரசாங்கம் கொண்டுவந்துள்ளமை அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு என்று எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இது எதிர்காலத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் நாட்டினை அரசாங்கம் படிப்படியாக இராணுவ ஆட்சிக்குள் கொண்டு வருவதாகவும் எச்சரித்துள்ளது.
அதாவது, அரசதுறையின் கீழேயே இராணுவத்தின் செயற்பாடு இருக்கவேண்டும். ஆனால், இராணுவத்தின் கட்டளைக்கு கீழேயே அரசதுறையினர் செயற்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதே எதிர்க்கட்சியினரின் இந்தக் கொந்தளிப்பிற்கு காரணமாக உள்ளது.

அதேபோன்றே, சிவில் நடவடிக்கைகள் பலவற்றிலும் இராணுவத்தின் தலையீடும், இராணுவத்தின் தலைமைத்துவமும் அதிகரித்துள்ளமை மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் பணிகளுக்காக காத்திருக்கும்போது முன்னாள், இந்நாள் இராணுவ அதிகாரிகளை அப்பதவிகளில் அமர்த்தி தங்கள் வேலை வாய்ப்புக்களை பறித்தெடுப்பது சிங்கள மக்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்திவருவதாக சிங்கள ஊடகங்களே சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளன.

கோத்தபாயவின் ஆட்சி தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் ஆபத்தான மாறத்தொடங்கியுள்ளதை சிங்கள மக்களும் உணரத்தொடங்கியுள்ளார். ஆனாலும் என்ன செய்வது? குடும்ப ஆட்சிப்பலம் என்ற கோலோடு நின்ற கோத்தபாயவிடம், ஜனாதிபதி பதவி என்ற கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொடுத்துவிட்டு, இப்போது நாடே தீப்பற்றி எரிகின்றது என்று கதறினால் எப்படி..? கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டபோதே, அவர் வென்று பதவிக்கு வந்தால் நாடு இராணுவ ஆட்சிக்குள் சென்றுவிடும் என்று பல்வேறு தரப்பும் எச்சரித்தது. ஆனாலும், கோத்தபாயவிற்கு பெரும் வாக்குகளை வழங்கி இந்த இராணுவ ஆட்சிக்கான வழியைத் திறந்துகொடுத்தவர்கள் சிங்கள மக்கள்தான். இப்போது அதற்கான பலனை அவர்கள் அறுவடை செய்யத்தொடங்கியுள்ளார்கள். பதவிக்கு வந்து ஒருசில மாதங்களுக்கு உள்ளாக இத்தனை வேகமாக இந்த அறுவடை நிகழும் என்பது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம். அத்துடன், இப்போதுகூட தங்களுக்கு நிகழ்ந்துவிட்ட ஆபத்தை சிங்கள மக்கள் முழுமையாக உணரத்தொடங்கிவிட்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை. அதனை, அடுத்த தேர்தலின் முடிவுகளின் பின்பே தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், இலங்கைத் தீவு முழுமையான இராணுவ ஆட்சிக்குள் சென்றுகொண்டிருப்பதை உலக நாடுகள் உணராமல் இல்லை. கோத்தபாய வெற்றிபெற்றவுடனேயே இந்த உண்மையை உலகம் உணர்ந்துகொண்டிருக்கும். ஆனால், அவற்றை மறைத்து சிறீலங்காவுடன் தமது உறவையும், நட்பையும் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்.

லிபியா ஜனாதிபதி முவம்மர் கடாஃபி, எகிப்திய ஜனாதிபதி கோஸ்னி முபாரக், ஈராக் ஜனாதிபதி சதாம் உசைன், பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப், உகண்டா ஜனாதிபதி இடிஅமின் டாடா உட்பட இராணுவத்தின் உயர்பதவிகளில் இருந்து, பின்னர் அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர்களை உலகின் பலம்மிக்க நாடுகளால்கூட சர்வாதிகாரிகளாக வர்ணித்தன. காரணம் அவர்கள் நாட்டை இராணுவ ஆட்சிபோன்றே வழிநடத்துவார்கள் என்பதால். இவ்வாறு ஆட்சிக்கு வந்தவர்களை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கும் உலக நாடுகள் பலவும் முன்னின்று உதவியும் புரிந்துள்ளன.

ஆனால் அதே இராணுவ உயர்பதவியில் இருந்து ஒரு இனத்தை அழித்து இனஅழிப்பு குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள சிறீலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இனப்படுகொலையாளியாகக்கூட இல்லை, இதுவரை எந்தவொரு நாடும் சர்வாதிகாரியாகக்கூட வர்ணிக்கவில்லை. மாறாக சிறீலங்கா ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிவருவதுடன், இன அழிப்பில் ஈடுபட்ட அவரது படையினருக்கும் கூட அமெரிக்கா, சீனா உட்பட வல்லரசு நாடுகள் பலவும் மேலும் மேலும் உதவிகளையே வழங்கிவருகின்றமை எத்தனை பெரிய முரண்.