மிக விழிப்போடு இருக்க வேண்டிய காலமிது! - கந்தரதன்

பிரான்சு நாட்டில் அனைவரும் எதிர்பார்த்த அதிபரின் கொரோனா 4ஆவது உரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. அந்த உரையில் பிரான்சில் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் இயல்பு நிலை திரும்புவதாகவும் வரும் 22 ஆம் நாள் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான பயணத் தடைகளும் நீக்கப்படுகின்றன. இவ்வாறு பல விடயங்கள் வழமைக்குத் திரும்பவுள்ளன. இது பிரான்சுக்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளுக்கும்  இவ்வாறான நடைமுறைகள் வழமைக்கு வருகின்றன.

s

ஆனால், இனிமேல்தான் நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டிய தேவை உள்ளது. காரணம் கிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்கள். இவ்வாறான மீண்டும்  நெருக்கடியான காலகட்டத்தில் சமூக இடைவெளிகளைப் பேணுவதும் முகக் கவசம் அணிவதும் கட்டாயமாகும். அனைவரும் முகக் கவசம் அணிவது சிரமமான விடயமே.  அவ்வாறு அதனை அணிந்தாலும் தொடர்ச்சியாக முகக் கவசத்தை அணிந்திருப்பது என்பது பலருக்கும் கடினமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது. ஆனாலும் இது கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறையாகும்.

4

ஒரு முகக் கவசத்தையே அணிவதற்கு பலரும் சிரமப்படும் நிலையில், பிரான்சில் பிரதான வர்த்தக நிலையம் ஒன்றில் காசாளராகப் பணிபுரியும்  பெண்மணி ஒருவர், ஒன்றுக்கு இரண்டு முகக் கவசங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அணிந்தபடி நீண்டநேரமாக பணியாற்றிக்கொண்டிருந்தார். இதனை அவதானித்த சமூக ஆர்வலர் ஒருவர், அப்பெண்ணிடம் இரண்டு முகக் கவசத்தைத் தொடர்ந்து அணிந்திருந்தால், ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படும் என்பதை விளக்கி, நீங்கள் இரண்டு முகக் கவசத்தை இறுக்கமாக அணிந்துள்ளீர்கள். இது  ஆபத்தை ஏற்படுத்தும் என்று சமூக அக்கறையோடு எடுத்துரைத்தார். ஆனால், அந்தப் பெண் சிரித்துக்கொண்டே, அதைவிட கொரோனாத் தொற்று ஏற்பட்டுவிட்டால் முற்றாகவே சுவாசப் பிரச்சினை மற்றும் பாரிய கொடுமைகளை அனுபவிக்க நேரிடும். அதனோடு ஒப்பிடும் போது இது எனக்கு சாதாரண விடயமே என்று கூறுகின்றார்.

gf

இந்நிலையில், சமூக சிந்தனையில்லாமல் பாவித்த முகக் கவசங்கள், கையுறைகளை எல்லாம் தரையில் போட்டுவிட்டுச் செல்கின்றார்கள். இது எவ்வளவு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரத் தவறியுள்ளனர்.   அல்லது மற்றவர்கள் தானே பாதிக்கப்படுவார்கள் நமக்கென்ன என்று இருப்பவர்களும் இந்தத் தவறைச் செய்கின்றார்கள்.

தெரிந்து செய்தால் தப்பு. தெரியாமல் செய்தால் அது தவறு. ஆனால், இரண்டினாலும் ஏற்படும் ஆபத்து ஒன்றுதான். அதற்குரிய தண்டனையும் ஒன்று தான்.

பிரான்சில் பாரிசின் புற நகர்ப் பகுதியில் உள்ள மாநகர சபை ஒன்று, இது குறித்து தனது மாநகர மக்களுக்கு எச்சரிக்கைப் பிரசுரம் ஒன்றை தனது விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்தியுள்ளது. அதில் மாநகரப் பூங்கா ஒன்றின் புல்தரையில் வீசப்பட்டுள்ள முகக் கவசம், கையுறை என்பவற்றை நிழல்படம் எடுத்து இந்தத் தவறைச் செய்யவேண்டாம் என்றும் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும் குறித்த நிழல்படத்தோடு போடப்பட்டிருந்தது.

j

இவ்வாறு பல மாநகர சபைகளும் மாறுபட்ட வடிவங்களில் குறித்த முகக் கவச விடயங்களை தெரியப்படுத்தி வருகின்றன.

வர்த்தக நிலையங்களினுள்ளும் பல எச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் மீறி  தரையிலும் பொருள்காவும் வண்டில்களிலும் கூடைகளிலும் முகக் கவசங்கள், கையுறைகள் கண்டபடி வீசப்படுகின்றன.  இது பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தொடருந்து நிலையம் ஒன்றில் பாவித்த முகக்கவசம் ஒன்று தரையில் வீசப்பட்டுக் கிடந்தது. அதில் ஒரு சிறிய துண்டு ஒட்டப்பட்டிருந்தது. அந்தத் துண்டில் ஒருவருடைய பெயரும் தொலைபேசி இலக்கம் மற்றும் இருக்கும் இடத்தின் பெயரும் எழுதப்பட்டிருந்தன.

இது இரண்டு விதமான சிந்தனையை ஏற்படுத்தியது. ஒன்று நான்தான் கீழே வீசினேன், முடிந்தால் என்னைப் பிடித்துப்பார், அல்லது குற்றப்பணம் அறவிட்டுப்பார் என்று காவல்துறைக்கு சவால்விட்டது போன்று இருக்கலாம்.

மற்றையது, அடுத்தவரோடு கோபம் என்றால், அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு, அவர்களின் பெயர் விபரங்களை, தொலைபேசி இலக்கத்தை எழுதிப்போடுதல் போன்றும் இருக்கலாம்.

குறித்த இரண்டு விடயங்களுமே ஆபத்தானவை தான் என்பதை உணரவேண்டும்.  

இவ்வாறான ஆபத்து மிகுந்தவர்களோடுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இருப்பினும் நாம் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து மற்றவர்கள் செய்யும் தவறை நாமும் செய்யாமல் இருப்பதே கொரோனாவை நெருங்காமல் தடுப்பதற்கு ஒரே வழி!