மனிதாபிமானம் என்ன விலை? சொன்னால் வாங்கலாம்! - கந்தரதன்!

இன்று மனிதாபிமானம் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அளவிற்கு எங்கும் மனிதாபிமானம் இல்லாமலே போய்விட்டது. எரிகிற வீட்டுக்குள்ளே பிடுங்கியது இலாபம் என்ற நிலைமையே தற்போது மேலோங்கி நிற்கின்றது. ஒருவன் வீழ்ந்து கிடக்கிறான் என்றால் அவனைத் தூக்கிவிடாமல் அவனை மிதித்துக்கொண்டு செல்பவர்களே எம் சமூகத்தில் உருவாகிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்நிலையில் இந்தக் கொரோனாவின் கொடுமை எமக்கு பல விடயங்களை உணர்த்தியிருக்கின்றது. உணவின் பெறுமதி, தொழிலின் அருமை, உறவுகளின் தேவை, அன்றாட கடமைகளின் நன்மை எனப் பல விடயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவற்றை உணர்ந்தவர்கள் பலர் தம்மை மாற்றிக்கொண்டவர்களும் உளர். ஆனால், பலரும் கொரோனாவின் மூன்றாம் அலைவந்தாலும் எம்மை மாற்ற முடியாது என்ற ஆணவத்துடனேயே இன்றும் வலம் வருகின்றார்கள்.

பிரான்சில், தமிழ் மக்கள் செறிந்து வாழும் குட்டி யாழ்ப்பாணம் பகுதியில் சட்டத்திற்கு மாறாக ஓர் மகிழுந்து நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கதவு பாதசாரிகள் செல்லும் பாதையை மறைத்தபடி திறந்திருந்தது. நான்கைந்து தமிழ் இளைஞர்கள் வெண்சுருட்டைப் புகைத்தபடி அந்தவாகனத்தின் அருகில் நின்று கதை பேசுகின்றார்கள்.

ஆனால், வீதியில் வந்த எவரையும் அவர்கள் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை. நால்வரினதும் வெண்சுருட்டின் புகை வீதியில் நடைபாதையில் வந்தவர்களை முகம் சுழிக்கவைத்தது.  வீதியில் வந்த ஒருவர், தனக்குள்ளே பொறுக்கமுடியாமல், புலம்புகின்றார். கொரோனா வந்தும் இவர்கள் இன்னும் திருந்தவில்லை. இவர்களைத் திருத்துவதற்கு கொரோனாவின் இரண்டாவது அலைவந்தாலும் இவர்களைத் திருத்த முடியாது. காவல்துறையினர்தான் இவர்களைத் திருத்தவேண்டும் என்று தனக்குள்ளே முணுமுணுத்தவாறே செல்கின்றார்.

இவ்வாறே பலரும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். ஆனால், குறித்த இளைஞர்கள் இவற்றைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எருமை மாட்டின்மேல் மழைபெய்த கதைதான்...!

இதேவேளை, குட்டி யாழ்ப்பாணம் பகுதியில், உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருள் வாங்க வந்த பெண் ஒருவர் மற்றொரு நபரோடு மிக உரத்த குரலில் உரையாடுகிறார். ஆனால், அது பலருக்கும் இடையூறாக இருந்தது. அதை அப்பெண்மணி சிந்திக்காமல் மேலும் மேலும் மற்றவரோடு குசலம் விசாரிப்பதிலேயே குறியாக இருந்தார். இதனை அவதானித்த வர்த்தக நிலையத்தின் காசாளர் பொறுமையை இழந்து, வகுப்பில் கூச்சலிடும் மாணவர்களை ஆசிரியர் அமைதியாக இருக்கும்படி கூறுவதுபோன்று குறித்த பெண்ணிடம் சத்தத்தைக் குறைக்கும்படி  தாழ்மையோடு வேண்டி நின்றார். இதன் பின்னரே அந்தப் பெண்மணி தன் தவறை உணர்கின்றார்.

இது இவ்வாறிருக்க குறித்த வர்த்தக நிலையத்தினுள் மதுபானம் அருந்தியவாறு தமிழர் ஒருவர் நுழைந்து தன்னை அறியாமலே புலம்புகின்றார். இது வாடிக்கையாளர்களுக்கு சங்கடமாக இருந்தது. பின்னர் ஒருவாறு அவரை வர்த்தக நிலையத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள் வெளியேற்றுகின்றார்கள். இவ்வாறு பல வழமைக்கு மாறான சம்பவங்கள் எம் கண்முன்னே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்று கடந்த காலங்கள் போலல்லாமல், ஒரு வேறுபட்ட உலகத்திலேயே பல சவால்களுக்கும் முகம் கொடுத்து வாழ்கின்றோம் - வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. இன்று பொது இடத்திற்கு ஓர் அலுவலாகச் செல்கின்றோம் என்றால், தேவையற்ற விடயங்களை விடுத்து, விரைவாக மற்றவர்களுக்கு இடையூறில்லாமல் எமது அலுவல்களை செய்து முடிக்கப் பழகவேண்டும். வீண் விவாதங்களையும் விதண்டாவாதங்களையும் முடிந்தளவிற்குத் தவிர்ப்பது நல்லது.

உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு அவசியமில்லாமல் செல்வதை நாம் தவிர்த்துக்கொள்ளவேண்டியதும் சிறந்தது.
அத்தோடு, 'செய்யும் தொழிலே தெய்வம்" என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  எழுதியுள்ளார். அது இன்று அனைவருக்கும் சாலப்பொருந்தி நிற்கின்றது.

அனைவரும் எத்தொழிலாக இருந்தாலும் தாம் செய்யும் தொழிலை  தெய்வமாக நினைத்துச் செய்யவேண்டும். கொரோனாவின் பிடியில் பலர் தமது தொழிலை இழந்து நிற்கின்றார்கள். பலர் போதிய ஊதியம் கிடைக்காமல் அலைகின்றார்கள். புலம் பெயர் நாடுகளில் தொழில் இல்லாவிட்டால் அதோகதிதான். எந்த ஒரு விடயமும் கைகளில் இருக்கும் போது அதன் அருமை பெருமை தெரிவதில்லை. அது எம் கையை விட்டுச் செல்லும் போதுதான் அதன் அருமை எமக்கு உணர்த்தப்படுகின்றது. எனவே, நாம் செய்யும் தொழிலை அதன் பெறுமதி உணர்ந்து செய்யவேண்டும்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற திருக்குறள் பற்றியும் சற்றுப் பார்ப்பது இங்கே பொருத்தமாக இருக்கும்.

எந்த ஒரு விடயத்தையும் யார் சொன்னாலும் அதனை அப்படியே நம்பிவிடாமல் அதன் உண்மைத்தன்மையை உணர்ந்த பின்னர் வெளிவிடுவதே சிறப்பானது.

இன்று பலரும் சமூக இணையப்பரப்பில் தமது கருத்துக்களையெல்லாம் காணொளிகளாக தமது வாய்க்கு வந்தபடி வெளிவிடுகின்றனர். இதனால், வரும் ஆபத்து, விளைவுகள் பற்றி சிறிதளவேனும் சிந்திப்பதாக இல்லை. இவைபோதாதென்று அவர்களின் ஆதரவாளர்கள் குறித்த விடயங்களை சமூக ஊடகப்பரப்பில் பகிர்ந்துகொள்வது அதைவிடக்கொடுமை.

புலம்பெயர் தேசம் ஒன்றில், போராட்டங்களை நடாத்தும் ஒருவர் அண்மையில் புலம்பெயர் கட்டமைப்புக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை காணொளியாக வெளியிட்டிருந்தார். ஆனால், அவரின் ஆதரவாளர்கள் அதன் உண்மைத்தன்மை தெரியாமல் அதனை மெருகூட்டி சமூக இணையப்பரப்பில் பகிர்ந்துள்ளனர். இவ்வாறு பலரும் பல விடயங்களையும் காணொளியாகவும், செய்திகளாகவும் பதிவிடுகின்றனர். இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றார்கள்.

எனவே, இடுகைகள் விடயத்தில் ஒவ்வொருவருக்கும் அவதானம் அவசியமாகின்றது. இந்நிலையில் தங்கத்தின் விலை வழமைக்கு மாறாக மிக வேகமாக உயர்ந்து நிற்கின்றது. இதனால், தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாண நகரில் நகைக் கொள்ளையர்களின் கைவரிசையும் அதிகரிதுள்ளது என்பதை யாழில் இருந்து வரும் செய்திகள் உணர்த்தி நிற்கின்றன.

யாழ்ப்பாணம் வயோதிபப் பெண்கள் இருவர் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தியும் தாக்கியும் அவர்களிடமிருந்து 25 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச்; சென்றுள்ள கொடுமை கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலைவேளை இடம்பெற்றுள்ளது.

கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த வயோதிப பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன், ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர். அதன்பின்னர் மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயை துணியால் கட்டிவிட்டு வீட்டை சல்லடை போட்டு தேடுதலை நடத்தியுள்ளனர்.
அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுவிட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கிக் கொள்ளையர்கள் கேட்டுள்ளனர். அப்போது கொள்ளையர்களுக்குப் பயந்து போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் மூதாட்டி எடுத்துக்கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வட்டுக்கோட்டை காவல்துறைக்கு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதையடுத்து , தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியதையடுத்து பலரும் மகிழ்ச்சியடைந்திருந்தனர். ஆனால், திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்கமுடியாது என்பதற்கிணங்க யாழ். ஏழாலையில் ஒரு வீட்டில் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்  ஏழாலைப் பகுதியில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு 14 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணைகளை நடாத்துவதாகவும் கொள்ளை, வாள்வெட்டுக் கும்பல் கைது என்றெல்லாம் தெரிவிக்கப்படுகின்ற போதும், மனிதாபிமானம் மரத்துப்போன கொள்ளை, வாள்வெட்டு, படுகொலை என அனைத்தும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இவைதான் இன்றைய நிலை. மனிதாபிமானம் கிலோ என்ன விலை...?