ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 5 - கலாநிதி சேரமான்

விடுதலைப் புலிகள் - முஸ்லிம் நல்லுறவை சீர்குலைத்த இந்தியா

பாகிஸ்தானின் உதவியுடன் தென்தமிழீழத்தில் ஜுனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தனா உருவாக்கிய ஜிகாத் குழுவிற்கு வழங்கப்பட்ட முக்கிய பணி, தென்தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏலவே நிலவி வந்த முரண்பாடுகளை ஊதிப் பெருப்பித்து தமிழ் - முஸ்லிம் மோதல்களுக்குத் தூபமிடுவது தான். இவ்வாறு செய்து விட்டால், தமிழீழத் தாயகக் கோட்பாட்டிற்கான நியாயப்பாட்டைச் சிதைக்கலாம் என்று ஜே.ஆர் ஜெயவர்த்தனா கணித்தார்.

பாகிஸ்தானின் பின்னணியுடன், குள்ளநரி ஜெயவர்த்தனாவின் ஆசீர்வாதத்துடன் தென்தமிழீழத்தில் களமிறங்கிய ஜிகாத் குழுவினர், இஸ்லாமிய அடிப்படைவாத மதவெறியில் திழைத்திருந்த முஸ்லிம் சமூக அமைப்புகளின் ஊடாகத் தமிழர் விரோதப் பரப்புரைகளைத் தொடங்கினர்.

இவ்வாறான பரப்புரைகளில் முக்கியமானது தமிழீழத் தனிநாடு அமைவது வடக்குக் கிழக்கில் முஸ்லிம்களில் இருப்பிற்கு உலை வைப்பதாக அமையும் என்பதாகும். அக்காலப் பகுதியில் இந்தியாவிடம் ஆயுதப் பயிற்சிகளையும், ஆயுத உதவிகளையும் தமிழ்ப் போராளி இயக்கங்கள் பெற்றிருந்ததையும், எல்லா இயக்கங்களுமே இந்தியாவில் தமது தளங்களைக் கொண்டிருந்தையும் சாக்காக வைத்துத் தமிழீழம் என்பது இந்திய நலன்களைப் பேணும் ஒரு நாடாகவே அமையும் என்றும், அதனால் ‘இந்து’ இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் படி தமிழீழத்தை விட்டு முஸ்லிம்களைத் தமிழர்கள் அடித்து விரட்டி விடுவார்கள் என்றும் திட்டமிட்ட பரப்புரைகளை ஜிகாத் குழுவினரும், அவர்களால் தூண்டி விடப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களும் மேற்கொண்டன.

4

இவ்வாறான பரப்புரைகளெல்லாம் இந்தியாவிற்கோ, அன்றி அக்கால கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக விளங்கிய இந்திரா காந்தி அம்மையாருக்கோ பெரும் பிரச்சினைகளாகத் தென்படவில்லை. ஏனென்றால் தமிழீழம் என்றொரு தனிநாட்டை அமைக்கும் எண்ணம் இந்திரா காந்திக்கோ, இந்தியாவிற்கோ ஒரு பொழுதுமே இருந்ததில்லை. இது பற்றி இப் பத்தியின் முன்னைய தொடரில் பதிவு செய்திருந்தோம்.

ஆனால் பாகிஸ்தானின் பின்னணியுடன் ஈழத்தீவின் ஒரு பகுதியில் இஸ்லாமிய ஆயுதக் குழு உருவாக்கப்பட்டமையானது இந்திரா காந்தி அம்மையாருக்கும், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ நிறுவனத்திற்கும் பெரும் தலையிடியாக அமைந்தது. தமிழீழத் தாயகக் கோட்பாட்டை சிதைப்பதற்காக ஜிகாத் கும்பலை ஜே.ஆர் உருவாக்கினார் என்பதை விட, தமிழ்ப் போராளி இயக்கங்களுக்குத் தாம் ஆயுதப் பயிற்சிகளையும், ஆயுதங்களையும் வழங்கியதற்கான பதிலடியாகவே பாகிஸ்தானின் பின்னணியைக் கொண்ட ஜிகாத் கும்பலைத் தென்தமிழீழத்தில் ஜே.ஆர் களமிறக்கினார் என்றே இந்தியா கருதியது.

இதன் விளைவாக அன்றைய தமிழ்ப் போராளி இயக்கங்களில் தனது செல்லப்பிள்ளைகளில் ஒன்றாக விளங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தென்தமிழீழத்தில் றோ களமிறக்கியது.

4

எவ்வாறு தென்தமிழீழத்தில் தமிழர்களுக்கு எதிரான உணர்வலைகளைத் தூண்டிவிடும் பரப்புரைகளை தமிழ் பேசும் முஸ்லிம்களின் மத்தியில் பாகிஸ்தானின் பின்னணியைக் கொண்ட ஜிகாத் குழு முன்னெடுத்ததோ, அதே போன்று தென்தமிழீழத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலைகளைத் தமிழ் மக்களிடையே தூண்டிவிடும் பரப்புரைகளை இந்தியாவின் பின்னணியைக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் முன்னெடுத்தது.

அன்றைய காலப்பகுதியில் இந்திய, பாகிஸ்தானிய பின்னணியைக் கொண்ட கூலிப்படைகள் மேற்கொண்ட பரப்புரைகள், ஈற்றில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே மோதல்கள் வெடிப்பதற்கு வழிகோலின.

இதில் ஒன்று 07.04.1985 அன்று மன்னார் முருங்கனில் ஈரோஸ் இயக்கத்தினரால் மூன்று முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். இச்சம்பவத்தை அடுத்து மறுநாள் ஜிகாத் குழுவின் தூண்டுதலின் பேரில் அம்பாறை அக்கரைப்பற்றுப் பகுதியில் முஸ்லிம்களால் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்த இக்கடையடைப்பின் முடிவில் 14.04.1985 அன்று அக்கரைப்பற்று நகரில் ஜிகாதியர்களால் சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. சமநேரத்தில் அக்கரைப்பற்று காரைதீவுக் கிராமம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் பின்புலத்துடன் உருவாக்கப்பட்ட சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு முஸ்லிம்கள் போன்று தொப்பி அணிந்த நபர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப் படுகொலைகளை முஸ்லிம்களே புரிந்ததாக முதலில் தமிழர்கள் கருதத் தலைப்பட்டனர்.

அடுத்து வந்த நாட்களில் இப் படுகொலைகளை மெசாட் அமைப்பின் திட்டமிடலுக்கு அமைய சிறீலங்கா அதிரடிப் படையினரும், சிறீலங்கா ஊர்காவல்படையின் ஓர் அங்கமாக இயங்கி வந்த பாகிஸ்தானிய பின்னணியைக் கொண்ட ஜிகாத் குழுவினரும் மேற்கொண்டது உறுதியாகியது. ஆனால் அதற்குள் நிலைமையை ஊதிப் பெருப்பித்த இந்திய உளவுத்துறை, தென்தமிழீழத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தைக் களமிறக்கி விட்டது.

ஒருபுறம் தென்தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான கொலை வெறியாட்டங்களை ஜிகாத் குழுவினரும், முஸ்லிம்கள் போன்று வேடமிட்ட சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரும் முன்னெடுக்க, மறுபுறத்தில் முஸ்லிம்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பல் கொன்று குவிக்கத் தொடங்கியது.

சிங்கள, இந்திய, பாகிஸ்தானிய, இஸ்ரேலிய உளவு அமைப்புக்கள் வகுத்த வியூகத்தில் சிக்கிக் கொண்ட தமிழ் - முஸ்லிம் உறவு சின்னாபின்னமாகத் தொடங்கியது. காரைதீவில் மூட்டப்பட்ட இனக்கலவரத் தீ, கல்முனைக்குப் பரவி, அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பகுதிகளுக்கும், திருமலையின் மூதூர், கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கும் பரவியது.

4

இதன் உச்ச கட்டமாக மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனைப் பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலால் முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர். ஏட்டிக்குப் போட்டியாக தென்தமிழீழத்தில் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தும் வெறியாட்டங்களில் ஜிகாத் குழுவினரும், முஸ்லிம் காடையர் கும்பல்களும் ஈடுபட்டன.

சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் அச்சாணியாக விளங்கும் இன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அப்பொழுது அக்கும்பலின் மத்திய குழு உறுப்பினராக விளங்கினார். பின்நாட்களில் இந்தியப் படைகளின் புலனாய்வு அமைப்பாக செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் மண்டையன் குழுவின் தளபதியாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களே பதவி வகித்தார்.

நான்கு உளவு நிறுவனங்களுக்கு இடையிலான பலப்பரீட்சையில் ரணகளமாக மாறிக் கொண்டிருந்த தென்தமிழீழத்திலும், சின்னாபின்னமாகிப் போயிருந்த முஸ்லிம் - தமிழ் உறவிலும் இயல்புநிலையைக் கொண்டு வரும் முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே ஈடுபட்டனர்.

தமிழீழ தேசியத் தலைவரின் பணிப்புரைக்கு அமைய அப்பொழுது கள நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் கிட்டு அவர்களின் மேற்பார்வையில் தென்தமிழீழத்தில் இயல்புநிலையைக் கொண்டு வரும் முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் ஈடுபட்டார்கள்.

இங்கு இன்னொரு விடயத்தை நாம் குறிப்பிட்டாக வேண்டும். அப்பொழுது தென்தமிழீழத்தில் கருணா ஒரு சாதாரண போராளியாகத் தான் விளங்கினார். ஆனையிறவில் ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 சிறீலங்கா படையினரை சுட்டுக் கொன்றதாக இன்று பீற்றிக் கொள்ளும் கருணா, அன்றைய காலகட்டத்தில் ஒரு பொடிப்பயலாகவே இருந்தார்.

அக்காலப்பகுதியில் தென்தமிழீழத்தில் தமிழ் - முஸ்லிம் உறவை சீர்செய்ததில், லெப்.கேணல் குமரப்பா, மேஜர் கணேஸ் போன்ற மாவீரர்களின் பங்கு காத்திரமானது. ஒருபுறம் காரைதீவில் தமிழ் மக்களுக்கு எதிரான வெறியாட்டங்களை இஸ்ரேலிய மொசாட் அமைப்பின் பின்னணியைக் கொண்ட சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ நிறுவனத்தின் பின்னணியைக் கொண்ட ஜிகாத் குழுவினருமே மேற்கொண்டார்கள் என்பதைத் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறியாட்டங்களில் ஈடுபட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலின் பின்னணியைக் கொண்ட தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தவறவில்லை.

இதனை 1997ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் வெளிவந்த ஜேர்னல் ஒவ் முஸ்லிம் மைனோரிட்டி அபெயார்ஸ் என்ற ஆங்கில அரசறிவியல் சஞ்சிகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய அமீர் அலி அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார். அது மட்டுமல்ல.

இவ் விடயம் பற்றி 15.11.1992 அன்று தென்னிலங்கை வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் மாமனிதர் சிவராம் அவர்கள் பதிவு செய்துள்ளார். தமிழ் - முஸ்லிம் உறவில் சீர்செய்ய முடியாத அளவிற்கு விரிசல் விழுந்திருந்த காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரை அது. அக் கட்டுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்த மாமனிதர் சிவராம், முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளையும், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்த பொழுதும், இரண்டு உண்மைகளை அக்கட்டுரை மூலம் பிட்டு வைப்பதற்கு மாமனிதர் சிவராம் அவர்கள் தவறவில்லை. அவரது ஆய்வுத் திறனுக்கு மகுடம் வைத்தாற் போன்று அவர் வெளிக்கொணர்ந்த உண்மைகள் பலவற்றில் அவையும் உள்ளடங்குகின்றன எனக்கூறின் மிகையில்லை.

முதலாவதாக 10.06.1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப் போர் வெடித்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான உறவு சீர்குலைந்தமைக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தென்தமிழீழத் தலைமையும், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் தலைமையுமே காரணம் என்று தனது கட்டுரையில் மாமனிதர் சிவராம் அவர்கள் கோடிட்டுக் காட்டினார். அதாவது மாமனிதர் சிவராம் அவர்கள் குற்றம் சுமத்தியது பின்நாட்களில் துரோகிகளாக அடையாளம் காட்டப்பட்ட மாத்தையாவையும், கருணாவையும் தான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இவர்கள் இருவரும் செலுத்தி வந்த செல்வாக்குக் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான உறவில் சீர்செய்ய முடியாத அளவிற்கு விரிசல் வீழ்ந்திருப்பதாக மாமனிதர் சிவராம் சுட்டிக் காட்டினார்.

அதேநேரத்தில், இரண்டாவதாக, முஸ்லிம் விரோதப் போக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் (அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்) இருக்கவில்லை என்பதையும் தனது கட்டுரையில் பூடகமான முறையில் மாமனிதர் சிவராம் குறிப்பிட்டார்.

மாமனிதர் சிவராம் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்தமைக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்தியத் தலைமையே காரணம் என்று பகிரங்கமாகவே அவர் விமர்சித்தார். இதே கருத்தை வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் முன்வைத்தால், அதனை இப்பத்தியில் மேற்கோள் காட்டினால், இப்பத்தி எழுத்தாளர் ஒரு பிரதேசவாதி என்ற விமர்சனம் உடனடியாகவே முன்வைக்கப்படும். எனவே மட்டக்களப்பு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாமனிதர் சிவராம் அவர்கள் எழுதிய வரிகளை அப்படியே கீழே பதிவு செய்கின்றேன்:

‘நாம் முதலில் சுட்டிக் காட்டியது போன்று, புலிகளின் மட்டக்களப்புத் தலைமைத்துவம் யாழ்ப்பாணத்தவர்களின் கைகளில் இருந்த பொழுது பொதுவான தமிழ்த் தேசிய அணுகுமுறையையே புலிகள் பின்பற்றினார்கள். பசீர் காக்காவினதும், பின்னர் குமரப்பாவினதும் தலைமையின் கீழ் இருந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்புப் பிரிவினர், கிழக்கில் முஸ்லிம்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தனர்.’

இவ்வாறு தனது கட்டுரையில் சுட்டிக் காட்டிய மாமனிதர் சிவராம், கருணாவின் பொறுப்பின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் வந்த பின்னரே, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் வெடித்ததைப் பின்வருமாறு பதிவு செய்திருக்கின்றார்:

‘தமது கிழக்கு மாகாணப் போராளிகளின் அணுகுமுறையையே தமது தேசியக் கொள்கையாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் வகுத்துள்ளார்கள் போன்று தெரிகின்றது. குமரப்பாவிடம் இருந்து 1988ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்ட தலைமையின் நடவடிக்கைகளே இந்த முஸ்லிம் எதிர்ப்புப் போக்கிற்குக் காரணமாகும்.’

தனது பத்தியில் தமிழ் - முஸ்லிம் விவாகரத்தை எவ்வாறு கருணாவிற்கு முன்னர் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமையும், பின்னர் கருணாவும் கையாண்டார்கள் என்பதைத் தனது கட்டுரையில் பதிவு செய்த மாமனிதர் சிவராம், இவ்விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்டத் தலைமை எவ்வாறு நடந்து கொண்டது என்பது பற்றித் துர்ப்பாக்கியவசமாகக் குறிப்படவில்லை.

தமிழ் - முஸ்லிம் விவாகரத்தில் சீர்செய்ய முடியாத அளவிற்கு முரண்பாடுகளைத் தோற்றுவித்த கருணா, மாத்தையா போன்றவர்கள் பற்றி மாமனிதர் சிவராம் அவர்கள் எழுதிய பதிவு பற்றி மேலும் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், 1985ஆம் ஆண்டு சித்திரை மாதம் வெடித்த தமிழ் - முஸ்லிம் கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வந்து, இரு சமூகங்களுக்கும் மத்தியில் நல்லுறவை தோற்றுவிப்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த நல்லெண்ண நடவடிக்கைகளால் தமிழீழ போராட்டத்திற்கு ஏற்பட்ட நன்மைகள் சிலவற்றையும் இங்கு பார்ப்போம்.

முதலாவதாக, மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் இணைந்து கொண்டார்கள். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப்டினன்ட் ஜுனைதீன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக 1985 வைகாசி, ஆடி ஆகிய மாதங்களில் திருமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளை சிங்களப் படையினர் தொடங்கிய பொழுது அதனை முறியடிப்பதற்கான உதவிகளை முஸ்லிம் சமூகத்தினர் வழங்கினார்கள். அதிலும் ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழ் - முஸ்லிம் கலவரங்கள் வெடித்து ஓய்ந்திருந்த மூதூர், கிண்ணியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிந்தார்கள்.

அது மட்டுமல்ல. 02.08.1986 அன்று திருமலை மாவட்டத்தில் உள்ள மேன்காமம் எனும் கிராமத்திலிருந்து 40 தமிழ்ப் பெண்களை சிறீலங்கா படையினர் பிடித்துச் சென்ற பொழுது, அவர்களைப் பின்தொடர்ந்து போய், தெகிவத்தை என்ற சிங்களக் குடியேற்றக் கிராமத்தில் அவர்களை சிங்களப் படையினர் சிறைவைத்திருப்பதையும், அவர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திக் கொல்வதற்கு தயாராகுவதையும் அவதானித்து, அவற்றை உடனடியாக மேஜர் கணேஸ் அவர்களிடம் வந்து தெரிவித்தவர் ஒரு முஸ்லிம் இளைஞர் தான். அதனை அடுத்து தெகிவத்தையை முற்றுகையிட்ட மேஜர் கணேஸ் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், நாற்பது தமிழ்ப் பெண்களையும் மீட்டதோடு, சிங்களக் குடியேற்றத்தையும் தகர்த்தெறிந்தார்கள்.

இதற்கெல்லாம் ஒரு மாதத்திற்கு முன்னர் திருமலை மாவட்டத்தில் தமிழ் - முஸ்லிம் இனக்கலவரங்கள் வெடித்த பொழுது அவற்றை மேஜர் கணேஸ் அவர்கள் கையாண்ட விதமே முக்கிய காரணமாகும். இது பற்றி மேஜர் கணேஸ் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய பின்னர் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது:

‘இசுலாமியர் - இசுலாமியர் அல்லாதார் இடையே மதக்கலவரத்தை ஏற்படுத்தித் தமிழினத்தைப் பிரிக்கச் சிங்கள ஆட்சியாளர் முனைந்த ஒரு சந்தர்ப்பத்தில் கலவரத்தை நிறுத்த மூதூர் நகருக்கு பிரசைகள் குழுவை அனுப்பினான் கணேஸ். அக்குழுவைக் கூலிப்படையினர் கைது செய்த பொழுது போராடி, அவர்களை அவன் மீட்ட களப்போர் இன்னொரு மெய்சிலிர்க்கும் வரலாற்று நிகழ்வே. புலிகளுக்குப் பக்கத்தில் மட்டுமல்ல, மக்களுக்குப் பக்கத்திலும் அவன் நெருக்கமாகவே நின்றான்.’

இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவரின் மீதான முழு விசுவாசத்துடன், கேணல் கிட்டு அவர்களின் மேற்பார்வையில், லெப்.கேணல் குமரப்பா, மேஜர் கணேஸ் ஆகிய மாவீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கைளின் பிரதிபலிப்புக்கள் அமைதிப் படையின் பெயரில் தமிழீழத்தில் களமிறங்கிய இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 10.10.1987 அன்று போர் வெடித்த பின்னரும் வெளிப்பட்டன.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பில் தென்தமிழீழம் இருந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள். பகலில் முஸ்லிம் போராளிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளில் முஸ்லிம் போன்று வேடமிட்டுத் தங்கியிருந்து விட்டு, இரவானதும் இந்தியப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் புலிவீரர்கள் புறப்பட்டு விடுவார்கள்.

2002ஆம் ஆண்டு வன்னியில் முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்த பொழுது முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியைத் ‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காத்த குடிகளின் ஊர்’ என்று பொட்டு அம்மான் குறிப்பிடும் அளவிற்கு இந்தியப் படைகளின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவு நிலவியிருந்தது.

இந்தியப் படைகளின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம்கள் வழங்கிய ஆதரவு பற்றி மாமனிதர் சிவராம் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல. அன்றைய காலப்பகுதியில் தென்தமிழீழத்தில் தெருக்களில் காணும் முஸ்லிம்களைப் பாகிஸ்தானியர்கள் என்று கூறித் தாக்குவது, முஸ்லிம்களைப் படுகொலை செய்வது போன்ற நடவடிக்கைகளை இந்தியப் படையினர் மேற்கொண்டார்கள். இவர்களுக்கு ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் கொலைவெறியாட்டங்களிலும், முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தும் கொடுஞ்செயல்களிலும் இந்தியாவின் பிரதான கூலிப்படையாக விளங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் போன்ற கும்பல்களும் ஈடுபட்டன.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரங்களில் ஈடுபட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எப் போன்ற இந்திய ஒட்டுப்படைகளின் பிரமுகர்களுக்கும், அடிவருடிகளுக்கும் பகிரங்கமாக மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மரண தண்டனை நிறைவேற்றிய சம்பவங்கள் நிறைய உண்டு. அந்த அளவிற்கு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களைத் தமிழினத்தின் ஓரங்கமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் கருதினார்கள்.

அது மட்டுமல்ல. இந்தியப் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது, 1988ஆம் ஆண்டு சித்திரை மாதம் 15ஆம், 16ஆம், 19ஆம் நாட்களில் சென்னையில் கேணல் கிட்டுவின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவிற்கும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னிணியின் பிரமுகர் எம்.ஐ.எம்.மொகைதீன் அவர்களின் தலைமையிலான முஸ்லிம் தூதுக் குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக, முஸ்லிம்களைத் தமிழீழத்தின் தனித்துவமான இனக் குழுமமாக அங்கீகரிப்பதற்கும், வடக்குக் கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டால் அதில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், முஸ்லிம்களுக்குப் பிரதி முதலமைச்சர் பதவி வழங்குவதற்குமான ஒப்பந்தம் 21.04.1988 அன்று கைச்சாத்தியது.

அந்த அளவிற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவு நிலவியது. ஏன் பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவின் உதவியாளர்கள் அணியில் முஸ்லிம் போராளிகளும் இருந்தார்கள்.

இவ்வாறான நல்லுறவைச் சிதைத்துத் தமிழ் - முஸ்லிம் நல்லுறவில் (தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவில் மட்டுமல்ல) சீர்செய்ய முடியாத அளவிற்கு விரிசலை ஏற்படுத்தும் வகையில் கருணாவும், மாத்தையாவும் நடந்து கொண்;டது, மாமனிதர் சிவராம் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டமை போன்று வெறுமனவே அவர்கள் இருவரினதும் ஆளுமைக் குறைபாடாகக் கருதிவிட முடியாது.

இவர்கள் இருவரின் நாசகார நடவடிக்கைகளின் பின்புலத்திலும் இந்திய உளவுத்துறை இருந்தது. ஆம். இந்தியாவின் உளவாளியாக அடையாளம் காணப்பட்ட மாத்தையாவிற்கு 28.12.1994 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அது போல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நெறிமுறைகளுக்குத் தான் கட்டுப்படப் போவதில்லை என்று 03.03.2004 அன்று தமிழ்நெற் இணையத்தளத்திற்கு கருணா அறிவித்து, மூன்று நாட்கள் கழித்து 06.03.2004 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட பொழுது, அவருக்கு உடனடியாக அடைக்கலம் கொடுத்ததும் இந்தியா தான். அதாவது தமிழ் - முஸ்லிம் உறவில் நிரந்தரமாக விரிசலை வீழ்த்திய மாத்தையா, கருணா ஆகிய இருவருமே இந்தியக் கைக்கூலிகளாக மாறியவர்கள் தான்.

10.06.1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப் போர் வெடித்ததும் தமிழீழ தாயகக் கோட்பாட்டை நிரந்தரமாக சிதைப்பதற்காக தமிழ் - முஸ்லிம் உறவில் நிரந்தர விரிசலை விழுத்தும் நாசகார நடவடிக்கைகளில் மாத்தையா, கருணா ஆகிய இருவரையும் எவ்வாறு இந்திய உளவுத்துறை கையாண்டது என்பதை அடுத்த தொடரில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

(தொடரும்)

1

2

3