யாரைத் தேர்ந்தெடுப்பது? - ஆசிரிய தலையங்கம்

இலங்கைத் தீவில் கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் பாதிப்புக்களுக்கும் மத்தியில் சிறீலங்காவின் 16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஓகஷ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள சிறீலங்காவின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தமிழர் தாயகம் எங்கும் தொடங்கிவிட்டன.

இலங்கைத் தீவிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், தமிழர் தாயகத்தின் ஐந்து தேர்தல் மாவட்டங்களும் அடங்கியுள்ளன. 22 மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்து கொள்வதற்காக 7,452 பேர் போட்டியிடுகின்றனர். இதில் அரசியல் கட்சிகளில் இருந்து 3,652 வேட்பாளர்களும் - சுயேட்சை குழுக்களில் இருந்து 3,800 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

4

இதில் 29 ஆசனங்களுக்காக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் மட்டும் 1768 பேர் போட்டியிடுகின்றனர். அதாவது இலங்கைத் தீவு முழுவதிலும் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 25 வீதமானவர்கள் 29 ஆசனங்களுக்காக வடக்கு, கிழக்கில் போட்டியிடுகின்றனர் என்பது இங்கு கவனிக்கவேண்டியது.

7 ஆசனங்களுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்கள் என 330 வேட்பாளர்களும்,
6 ஆசனங்களுக்காக வன்னி மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள், 28 சுயேட்சைக் குழுக்கள் என 405 வேட்பாளர்களும்,
5 ஆசனங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகள், 22 சுயேட்சைக் குழுக்கள் என 304 வேட்பாளர்களும்,
7 ஆசனங்களுக்காக அம்பாறை (திகாமடுல்ல எனும் சிங்களப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சைக் குழுக்கள் என 540 வேட்பாளர்களும்,
4 ஆசனங்களுக்காக திருகோணமலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்கள் என 189 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

இவர்களில் யாரால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படப்போகின்றது?

2009ற்குப் பின்னர் வடக்கு, கிழக்கு அரசியல் களம் என்பது கோமாளிகளின் கூடாரம் போல் ஆகிவிட்டது. பணம் படைத்தவர்களின் கைகளில் அரசியல் சிக்குண்டு, இன்னும் இன்னும் அவர்களைப் பெருத்த பணமுதலைகளாக்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்கென ஒரு ஆலவட்டம் தூக்கும் குழுவை உருவாக்கிக்கொண்டு, பதவிக்காக அலைகின்றனரே தவிர, தமிழ் மக்கள் குறித்துச் சிந்திப்பதற்கு தயாராக இல்லை.

4

1200 நாட்களைக் கடந்து காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவுகள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அரசியல் கைதிகள் தங்கள் விடுதலைக்காக தொடர்ந்து குரலெழுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழர் தாயகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரிலும், மகாவலித் திட்டம் என்ற பெயரிலும் நிலங்கள் பறிபோய் சிங்கள மயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு முழுமையாக இராணுவ வலயமாக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட போராளிகள் தொடர்ச்சியான இராணுவ, புலனாய்வுத்துறைகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட வண்ணம் உள்ளார்கள்.

இவற்றில் எந்தவொன்றுக்கும் தீர்வுகாண தமிழ் அரசியல் தலைமைகளால் இதுவரை முடியவில்லை. 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்குள் அமர்ந்திரும் எதனையும் சாதிக்க முடியாத சம்பந்தன், இப்போது 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்று நாடாளுமன்றம் செல்லப்போவதாக சூளுரைத்திருக்கின்றார். 87 வயதினைக் கடந்து நடைப்பிணமாகியுள்ள சம்பந்தன், இனி நாடாளுமன்றம் சென்று எந்த ஆணியைப் புடுங்கப்போகின்றார் என்பது தெரியவில்லை. ஆனாலும் பதவி மோகம் அவரை விடவில்லை.

சாக்கடை நீரை புனித நீருடன் ஒப்பிடுவதுபோல் தமிழ் மக்களால் செருப்பு மாலை அணிவித்தும் கொடும்பாவி கட்டியெரித்தும் தூற்றப்படும் சுமந்திரனை, தமிழீழ தேசத்தின் குரலாக விளங்கிய அன்ரன் பாலசிங்கத்துடன் ஒப்பிடுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன். வாக்குகளைப் பெறுவதற்காக கடைந்தெடுத்த அயோக்கியர்களையும் இவர்கள் மன்னர்கள் ஆக்கிவிடத் துடிக்கின்றார்கள்.   
தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய சம்பந்தனால், விடுதலைப் புலிகளையும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திய சுமந்திரனை கட்சியை விட்டு வெளியேற்றமுடியவில்லை.

4

இவர்களைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை  தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்து வெளியேறி, தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் தொடங்கிய வி.ஆனந்தசங்கரி, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடங்கியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற புதிய கட்சி, இனஅழிப்பை முன்னின்று தொடங்கிவைத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குகளை அள்ள விஜயகலா, மகிந்த - கோத்தபாய இனப்படுகொலையாளிகளுக்கு வாக்குகளை அள்ளுவதற்காக ஈ.பி.டி.பி, கருணா, அங்கஜன் போன்ற தமிழ் அடிவருடிக் குழுக்கள் என தமிழ் மக்களை அழித்தவர்களும், அதற்குத் துணைபோனவர்களும் தோள் கொடுத்து நிற்பவர்களும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி நாடாளுமன்றப் பலத்தைச் சிதறடிப்பதற்காக களமிறங்கியுள்ளார்கள். இவர்களுடன் சுயேற்சைக் குழுக்களாகவும் பலர் கங்கணங் கட்டிக்கொண்டு வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

விரும்பியோ, விரும்பாமலோ இந்தத் தேர்தலில் தமிழ் மக்களும் வாக்களிக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்தத் தேர்தல் வெற்றிகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவும் சாத்தியப்படாதபோதும், தங்கள் குரலாக ஒலிக்கக்கூடியவர்களை சிறீலங்கா நாடாளுமன்றத்திற்குள் அனுப்பிவைக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது.

தமிழ் மக்களின் ஒரே குரலாக ஒலிக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கி, பெரும் வெற்றியோடு அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால், இன்று தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகளை மறந்துவிட்டு சிங்களத்தின் அடிவருடிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறிப்போய்விட்டது.

இந்தவேளையில், தங்களுக்காக எழும்பக்கூடிய உண்மையான குரல் யாருடையது? இன்றுவரை தமிழ் மக்களின் உரிமைக்காக உறுதியோடு பயணிப்பவர்கள் யார்? கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற இலட்சியத்தில் உறுதியாக நிற்பவர்கள் யார்? தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்படக்கூயெ வல்லமை பொருந்தியவர் யார்?
இவற்றை தமிழ் மக்கள் சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கே வாக்களிக்கவேண்டும். குறுகிய சிந்தனைகளை விடுத்து, நீண்ட தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ் மக்கள் இதுகுறித்துச் சிந்திக்கவேண்டும்.

இல்லையேல், இன்னும் ஐந்து வருடங்களில், பலஸ்தீனத்தின் மேற்குக் கரையும், காசாவும் போல், தமிழர் தாயகமும் வடக்கில் ஒரு சிறு பகுதியும் கிழக்கில் ஒரு சிறுபகுதியும் என இரு துண்டங்களாக மாறிப்போய்விடும் சூழமைவை தடுக்கவே முடியாது போய்விடும்.