கொரோனா ஒரு கோடி பேரைப் பாதித்தது 5 இலட்சத்திற்கும் அதிகமாகியது மரணம்

உலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் ஒரு கோடியை கடந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி நாளுக்கு நாள் மனித பாதிப்பையும், பலியையும் ஏற்படுத்தி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய ரீதியில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை (29.06.2020 மதியம் வரை) 504,500 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 2 இலட்சத்து 43 ஆயிரமாக (10 மில்லியன் 2 இலட்சத்து 43 ஆயிரம்) ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.2 மில்லியன் ஆகவும் உயர்வடைந்துள்ளது.

4

இதுவரை பதிவான உயிரிழப்புகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. அங்கு 26 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் பிரேசிலில் அதிகமான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 13 இலட்சத்துக்கும் அதிகமாகவர்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதுடன் 58 ஆயிரம் பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் பிரித்தானியா இருக்கின்றது. அங்கு 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. அதாவது இதுவரை அங்கு 43 ஆயிரத்து 500 பேருக்கும் அதிகமாக மரணமடைந்துள்ளனர். 

உலக அளவில் கரோனா பாதிப்பில் 4வது இடத்தில் ரஷ்யா உள்ளது. இங்கு 6.4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளபோதும், உயிரிழப்புகள் குறைவாகவே பதிவாகியுள்ளன. இங்கு 9 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு உலகளவிலான பாதிப்பில் நான்கில் ஒரு பங்காக இருக்கிறது. ஏறத்தாழ 24 இலட்சம் பேருக்கு தொற்று இருக்கிறது. அதேவேளை, இரண்டு இலட்சம் பேர் வரை ஐரோப்பிய நாடுகளில் மட்டும் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் பொது முடக்கம் முடிவிற்கு வந்துள்ளது. சுற்றுலா துறையையே முக்கிய வருமானமாக கொண்டிருந்த பல ஐரோப்பிய நாடுகளும் வெளிநாட்டு பயண சேவையை தொடங்கலாம் என்றிருந்த நேரத்தில், தனது அடுத்த கட்டத் தாக்குதலை கொரோனா ஐரோப்பாவில் மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

4

இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் குளூக் வெளிப்படையாக பேசியுள்ளார். ஐரோப்பா முழுவதும் பொது முடக்கத்தை தளர்த்தியதின் விளைவாக கொரோனா தொற்று புதிதாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கொரோனா மீண்டும் வேகம் எடுக்கும் ஆபத்து பற்றி நான் ஏற்கனவே பேசினேன். கடந்த 2 வாரங்களாக 30 நாடுகளில் ஒட்டுமொத்தமாக பாதிப்பு அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டார். ஐரோப்பிய நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால், மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் என்பது கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

குறிப்பாக ஜேர்மனியில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் 1,500 தொழிலாளர்களுக்கு தொற்று பாதித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் 2 நகரங்களில் பொதுமுடக்கம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அரசுகள் வலியுறுத்தி வருவதுடன், அனைத்து சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. 

இதற்கிடையே, யூலை 1ம் திகதி முதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லையில் மீண்டும் அனுமதிக்கப்படும் 15 நாடுகளின் பெயர்ப் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் யூன் 27ம் திகதி உறுதிசெய்துள்ளது.

கொரோனா கொல்லுயிரியின் கடும் பாதிப்பு காரணமாக, அமெரிக்கா இப்பெயர்ப் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, கனடா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 15 நாடுகள் இப்பட்டியலில் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, கடந்த மார்ச் 17ம் திகதி முதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5