செய்திகளும், எழும் கேள்விகளும் - மாயவள்

செய்தி: பௌத்த தேரர்களுக்கு வரலாற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிறீதரன் கூறியுள்ளார்.

கேள்வி: கொடிய நோய் வாட்டிய பொழுதும் ஏறத்தாள மூன்று தசாப்தங்களாகத் தமிழீழ தேச விடுதலைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றிய தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களைத் தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கும் சுமந்திரனுடன் ஒப்பிட்ட இவருக்கு யார் வரலாற்றைக் கற்றுக் கொடுப்பார்கள்?

............


செய்தி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் முதலாவது இடத்தில் அம்பிகா சற்குணம் உள்ளார்.

கேள்வி: தேர்தல் எனும் முன் கதவால் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு கட்சியின் ஏனைய தலைவர்களால் அனுமதி மறுக்கப்பட்ட தனது அருமைத் தோழிக்குப் பின்கதவால் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக் கொடுப்பது சுமந்திரனுக்கு என்ன இயலாத காரியமா?

............


செய்தி: தமிழரோ, சிங்களவரோ அனைவருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணே தாயாக இருந்தாள் என்று வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கேள்வி: அப்படி என்றால் புளியம்பொக்கணையில் ஆனந்தசங்கரியாருக்கு உடும்பு இறைச்சிக் கறி கொடுத்த இரண்டு கிழவிமாருக்கு என்ன ஆயிற்று?

.................


செய்தி: மகிந்த ராஜபக்ச நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஈ.சரவணபவனுக்குச் சொந்தமான உதயன் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் பிரபா ஒரு கூடை மாம்பழத்தை வழங்கி புளகாங்கிதப்படுத்தியுள்ளார்.

கேள்வி: தனது பிறந்த நாளுக்கு மகிந்தரை அழைத்துத் தனது மைத்துனர் நடேசபிள்ளை வித்தியாதரன் கௌரவப்படுத்தியதற்கு ஏட்டிக்குப் போட்டியாக இவ்வாறு ஈ.சரவணபவன் செய்திருப்பாரோ?

...............


செய்தி: கண்டல்காடு கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா தொற்றுநோய் பரம்பல் அதிகரித்ததை அடுத்து அதனை மருத்துவமனையாக சிறீலங்கா படையினர் மாற்றியமைத்துள்ளனர்.

கேள்வி: இதைப் போன்று கொரோனா தனிமைப்படுத்தல் விடுதிகளாகக் கொழும்பில் பயன்படுத்தப்பட்டு வரும் எத்தனை ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிகள் மருத்துவமனைகளாக மாற்றப்படப் போகின்றனவோ?

.............

செய்தி: ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுப் பிரிந்து செல்லாமல் 2025ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் வரை சஜித் பிரேமதாசா காத்திருந்திருக்க வேண்டும் என்று கட்சியின் வேட்பாளரும், ரணிலின் விசுவாசியுமான ருவான் விஜேவர்தன ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

கேள்வி: இலவு காத்த கிளி போல் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் ஆட்சிக் கட்டிலேறும் கனவில் சஜித் இலயித்திருக்க வேண்டும்?