சாத்தான் ஓதும் வேதம் - பிலாவடிமூலைப் பெருமான்

வணக்கம் குஞ்சுகள்.

எல்லோரும் நலம் தானே?

இப்ப பிள்ளையள் நான் வெளியிலை உலாத்துகிறதை நல்லாக் குறைச்சுப் போட்டேன். இதிலை வெட்கப்படுகிறதுக்கு என்ன இருக்குது? ஆனால் ஒரே ஒரு குறை தான். இந்தக் கிழட்டு வயசிலையும் கம்பீரமாக நடந்து போய் ஒரு பத்திரிகையை வாங்கிக் கொண்டு வந்து சுருட்டுப் பத்திக் கொண்டு வாசிக்கிற சுகம் இப்ப எனக்குக் கிடைக்கிறதில்லை பாருங்கோ.

உதைப் பற்றி நான் கதைச்சதும் என்ரை மகனுக்குக் கோபம் சுள்ளென்று வந்திட்டுது. ‘எதுக்கு வீணாக கடையளுக்கு எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு, கொரோனா வந்து சாக வேணும் எண்டு ஆசைப்படுகிறியள்?’ எண்டு என்னோடை பெடியன் மல்லுக்கட்டத் தொடங்கி விட்டான். பிறகு ஏதோ ஈ பேப்பர் இருக்குது எண்டு என்னெட்டை தன்ரை ஐ-போனைக் கொண்டு வந்து தந்தான். நானும் இலையான் வந்திட்டுதாக்கும், அதைக் கலைப்பம் எண்டு சுத்திச் சுத்திப் பார்க்க அவனுக்கு இன்னும் கோபம் வந்திட்டுது.

பிறகு தான் எனக்கு விளங்கிச்சுது அவன் ஈ பேப்பர் எண்டு சொன்னது தன்ரை ஐ-போனிலை கிடந்த பத்திரிகை ஒண்டின்ரை பதிப்பு எண்டு.

இந்தக் கிழட்டு வயசிலை ஐ-போனைப் பிடிச்சுக் கொண்டு பத்திரிகை வாசிக்கிறது என்றால் நான் பூதக்கண்ணாடி தான் பாவிக்க வேணும்.

ஏதோ தட்டுத் தடுமாறி பத்திரிகையை வாசிச்சால், அதிலை ஒருத்தர் சொல்லியிருக்கிறார், ‘களச்சூழலைப் புரிஞ்சு கொண்டு தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்’ என்று. இதைப் பார்த்ததும் என்ரை வயிற்றுக்குள்ளை ஒரு கணத்துக்குப் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கிச்சுது.

எனக்கு விளங்குது நீங்கள் எல்லோரும் கொடுப்புக்குள்ளை சிரிக்கிறது. ‘இந்தக் கிழட்டு வயசிலை இவருக்கு வயிற்றுக்குள்ளை பட்டாம்பூச்சி பறக்குதோ?’ எண்டு உங்களுக்குக் கேள்விகள் எழுகிறது நியாயம் தான்.

z

ஆனாலும் பிள்ளையள், களச்சூழல் எண்டதும் நான் ஏதோ போராட்டம் திரும்பவும் தொடங்கி விட்டுது என்று நினைச்சு உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். அது தான் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கிச்சுது. ஹி ஹி ஹி.

சரி, ஆர் உதைச் சொல்லியிருக்கிறார் எண்டு பார்ப்பம் எண்டு என்ரை கண்ணை சுருக்கிக் கொண்டு பெரும் சிரமப்பட்டு ஈ பேப்பரை நோண்டினால், அதை புளொட் ஒட்டுக்குழுவின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சொல்லியிருக்கிறார் எண்டு கிடந்துது. எனக்கு வந்த கோபத்துக்கு, ஈ பேப்பரை சுழட்டி எறிவம் எண்டு தான் நினைச்சனான்.

பிறகு எதுக்கு என்ரை பெடியனோடை தேவையில்லாமல் வம்பு வளர்த்து வில்லங்கப்படுவான் என்று விட்டிட்டன். பின்னை என்ன பிள்ளையள்?

களச்சூழல் பற்றிக் கதைக்கிறதுக்கு உந்தப் புளொட் சித்தார்த்தனுக்கு என்ன தகுதி இருக்குது பிள்ளையள்? எங்கடை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கு நிலையில் இருந்த காலத்திலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைய மறுத்தவர் உவர். தம்பி பிரபாகரனின்ரை தலைமைத்துவத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளேக்குள்ளை உவரும், உந்த அத்தியடிக் குத்தியன் டக்ளசும் தானே தாங்கள் ஏதோ பெரிய பருப்புகள் எண்டு சந்திரிகாவுக்கு வால்பிடிச்சுக் கொண்டிருந்தவையள்.

அவன் அத்தியடிக்குத்தியனை விடுவம். அவன் எப்பவுமே தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக அடையாளம் காட்டுகிறது கிடையாது. அவன் எப்பவும் தன்னை ஒரு பச்சைத் துரோகியாகத் தான் இனம்காட்டுகிறவன்.

ஆனால் இவர் சித்தார்த்தன் இருக்கிறார் எல்லோ? புளொட் என்கிற சதிக்குழுவில் உமா மகேஸ்வரனோடு சேர்ந்து இவர் செய்த கொலைகள் கொஞ்ச நெஞ்சமே? சரி, உதுகளை எல்லாம் எங்கடை தம்பி பிரபாகரன் மன்னிச்சு விடத் தயாராக இருக்கேக்குள்ளையும், சித்தார்த்தனுக்குக் கொலை வெறி அடங்கினதே? வவுனியாவிலை சிங்கள இராணுவத்தோடை சேர்ந்திருந்து கொட்டமடிச்சுக் கொண்டு எங்கடை பிள்ளையள் எத்தனை பேரைத் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்தவர் உந்த சித்தார்த்தன்.

கடைசிக் கட்டத்திலை எங்கடை ஆயுதப் போராட்டம் தோற்றுப் போனதுக்கு வெறுமனவே கருணாவும், பிள்ளையானும் மட்டும் காரணமில்லை பிள்ளையள். உதிலை டக்ளஸ் தேவானந்தாவும், சித்தார்த்தனும் வகிச்ச பங்கு கொஞ்ச நெஞ்சமில்லை பிள்ளையள்.

இப்படிப்பட்ட ஒரு துரோகியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளை இணைச்சது கிழட்டுச் சம்பந்தர் செய்த மிகப் பெரும் துரோகம். அது சரி, துரோகமே வாழ்க்கையாகிப் போன சம்பந்தருக்கு, 1961ஆம் ஆண்டு தந்தை செல்வாவுக்குத் துரோகம் இழைத்து சிறீமாவிட்டை மண்டியிட்ட சம்பந்தருக்கு, உதெல்லாம் சின்ன விசயம் பிள்ளையள். அப்பவே சம்பந்தரைக் காட்டித் தன்ரை ஆட்களிட்டை தந்தை செல்வா சொன்னவராம், ‘ஹீஸ் எ டேஞ்சறஸ் மான் (அவர் ஒரு ஆபத்தான ஆள்)’.

சரி, இப்ப நாங்கள் விசயத்துக்கு வருவம். இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கத் தவறினால், தமிழரின்ரை எதிர்காலம் இருண்ட காலமாகி விடும் எண்டு சித்தார்த்தன் மாத்தையா சொல்கிறார். எனக்கு வருகிற ஆத்திரத்துக்குப் பிள்ளையள்...

எங்களுக்கு எண்டு இருந்த தமிழீழ நடைமுறை அரசை அழிச்சு, எங்கடை ஒளிமயமான காலத்தை நாசம் செய்து, எங்கடை இனத்தை இருண்ட காலத்திற்குள்ளை தள்ளின சித்தார்த்தன் இப்ப இருண்ட காலம் பற்றிப் பேசுகிறார். இதைத் தான் ‘சாத்தான் வேதம் ஓதுது’ எண்டு அந்தக் காலத்திலை என்ரை ஆச்சி அடிக்கடி சொல்லுகிறவா. பதினொரு வருசத்துக்கு முதல் எங்கடை வாழ்க்கையை இருண்ட காலத்திற்குள் தள்ளினது காணாது எண்டு, கடந்த ஐஞ்சு வருசமாக ரணிலின்ரை வாலைப் பிடிச்சுக் கொண்டு எங்களுக்கு சர்வதேச அரங்கில் இருந்த அனுதாப அலையையும் அழிச்ச கட்சி தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

‘அடுப்பேறிய சட்டி காய்ஞ்சு தான் ஆக வேணும்’ பிள்ளையள்? உதே மாதிரி உந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அந்திம காலம் தொடங்கி விட்டுது. எங்கடை சனம் யதார்த்தத்தைப் புரிஞ்சு கொள்ளத் தொடங்கீட்டுது. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்’ என்கிற மகாபாரதத் தத்துவம் என்ன சும்மாவே?

கடந்த பத்து வருசமாக எங்கடை தேசியத் தலைவர் காட்டிய அரசியல் பாதையில், தர்மத்தின் வழியில் எங்கடை தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பயணிக்கீனம்.

அவையளுக்குப் பக்க பலமாக நின்று அவையளை வெற்றிபெற வைக்கிறது ஒவ்வொரு தமிழரின்ரையும் தார்மீகக் கடமை பிள்ளையள்.

ஒன்றை மட்டும் சொல்லுவன் பிள்ளையள். சிறீலங்கா பாராளுமன்றத்திற்குள்ளை தமிழரின்ரை உரிமைகளை வெல்ல முடியாது.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற பதவியை கையிலெடுத்து எங்கடை மக்களின்ரை உரிமைகளை வென்றெடுக்கிறதுக்கான நடவடிக்கைகளை சர்வதேச அரங்கில் காத்திரமாக முன்னெடுக்கலாம்.

இதைக் கடந்த பதினொரு வருசமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யேல்லை. போராட்டம் நடக்கேக்குள்ளையும் செய்யேல்லை. ஆனால் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்தே தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த கடந்த பத்து ஆண்டுகளிலும் செய்கிறார். இனியும் செய்வார். அப்படிப்பட்டவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கி சர்வதேச அரங்கில் எங்கடை உரிமைக் குரலை இன்னும் வீச்சாக ஒலிக்க வைக்க வேண்டியது எங்கடை ஒவ்வொருத்தரின்ரையும் கடமை பிள்ளையள்.

அது மட்டுமில்லை. தம்பி கஜேந்திரகுமாரோடு தோளுக்கு தோளாக நிற்கிற எங்கடை தம்பி செல்வராஜா கஜேந்திரனையோ, அல்லது ஏனைய தம்பி, தங்கச்சிமாரிலையோ நாங்கள் எந்தக் குறையும் காண முடியாது பிள்ளையள். பத்தரை மாற்றுத் தங்கங்களாக எங்கடை தேசியத் தலைவரின்ரை பாதையிலை அந்தப் பிள்ளையளும் நிற்கீனம். இதைப் புரிஞ்சு கொண்டு எங்கடை மக்கள் நடக்க வேணும் எண்டது தான் இந்தக் கிழவனின்டை கோரிக்கை. எல்லோரும் புரிஞ்சு கொண்டியள் என்றால் சரி.

வேறை என்ன? அடுத்த முறை சந்திக்கிறன்.