ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 6- கலாநிதி சேரமான்

காத்தான்குடிப் படுகொலைகளின் உண்மையான சூத்திரதாரிகள் யார்?

தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி, இரு சமூகங்களும் தமிழ் பேசும் தேசிய இனம் என்ற குடையின் கீழ் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் பொழுதெல்லாம் முஸ்லிம் தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை, ‘காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தார்கள், வடக்கில் இருந்து முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள்’ போன்றவை தான். இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள், முஸ்லிம் ஆயுதபாணிகளால் தென்தமிழீழத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்து சம்பவங்களை மீண்டும் தோண்டியெடுத்து, தமிழ் - முஸ்லிம் இனக் கசப்புணர்விற்குத் தூபமிடுவது இப்பத்தியின் நோக்கமல்ல. ஆயினும் முஸ்லிம்கள் விவகாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் தவறுகள் இழைக்கப்பட்டதாகப் பேசுபவர்கள், முஸ்லிம் அடிப்படைவாதிகளாலும், அவர்களுக்குப் பக்கபலமாக நின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் பற்றியெல்லாம் பேசுவதில்லை என்பதே யதார்த்தமாகும்.

d

அது மட்டுமன்றி, இவ்வாறான எல்லாத் தவறுகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்புபட்டிருந்ததா? என்பதைப் பற்றியோ, அன்றி இவ்வாறான தவறுகள் காரணமாக தமிழ் - முஸ்லிம் உறவில் விழுந்த விரிசலை சீர்செய்வதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எடுத்த முயற்சிகள் பற்றியோ முஸ்லிம் தரப்பில் பெரும்பாலானவர்கள் ஆராய்வது கிடையாது. அவ்வாறு ஆராய்ந்து உண்மையை அறிந்து கொண்டவர்கள் கூட அது பற்றிப் பகிரங்கமாகப் பேசுவது கிடையாது.

இப்பத்தியின் ஆரம்பத் தொடர்களில் குறிப்பிடப்பட்டது போன்று 1990ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் விரிசல் வீழ்ந்ததற்கு மூன்று தரப்புக்கள் காரணமாகும். ஒன்று சிங்களப் புலனாய்வுத்துறை. மற்றையது பாகிஸ்தானிய புலனாய்வுத்துறை. மூன்றாவது இந்தியப் புலனாய்வுத்துறை. எவ்வாறு 1985ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் இனக் கலவரம் வெடிப்பதற்கு இஸ்ரேலிய, பாகிஸ்தானிய, சிங்கள மற்றும் இந்தியப் புலனாய்வுத்துறைகள் காரணமாக இருந்தனவோ, அவ்வாறு தான் 1990ஆம் ஆண்டில் தமிழ் - முஸ்லிம் உறவில் நிரந்தர விரிசல் வீழ்வதற்கு இம் மூன்று புலனாய்வு நிறுவனங்களும் காரணமாக இருந்தன எனலாம்.

q

1985ஆம் ஆண்டு தமிழ் - முஸ்லிம் கலவரங்கள் வெடித்த பொழுது, அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்து இரு சமூகங்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்குத் தமிழீழ தேசியத் தலைவரின் சொல்லுக்குக் கட்டுப்படக் கூடிய தளபதிகளான கேணல் கிட்டு, லெப்.கேணல் குமரப்பா, மேஜர் கணேஸ் போன்ற மாவீரர்கள் இருந்தார்கள். ஆனால் 1990ஆம் ஆண்டு இதே நிலை இருக்கவில்லை. மாறாக இந்தியாவின் கைப்பாவைகளாக இயங்கிய மாத்தையா, கருணா போன்றவர்கள் தமிழீழ தேசியத் தலைவரின் உத்தரவை மீறி, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொண்டார்கள்.

இந்திய புலனாய்வுத்துறையின் முகவராக மாத்தையா செயற்பட்டது பின்நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, போராளிகளுக்கான செய்தியொன்றைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கியிருந்தார். அதில் அவர் குறிப்பிடுகையில், ‘தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சில வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்புபட்டிருப்பது தெரிய வந்துள்ளது’ என்ற தகவலை வெளியிட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையில் பணிபுரிந்த முன்னாள் போராளி ஒருவர், இப்பத்தியை வாசித்து விட்டுக் குறிப்பிட்டிருந்தார்.

q

உண்மையும் அதுவே. இது பற்றிய முழுமையான புரிதலைப் பெறுவதற்கு, முதலில் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளைப் பார்ப்போம்.

03.08.1990 இரவு 7:30 மணி. காத்தான்குடியில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் தொழுகைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது, தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களில் சிலர் திடீரென்று தமது போர்வைகளை விலக்கித் தானியங்கித் துப்பாக்கிகளால் சுடத் தொடங்குகிறார்கள். இதில் 103 முஸ்லிம்கள் தலத்தில் பலியாகின்றார்கள். இன்னும் சிலர் காயமடைந்து பின்னர் மருத்துவமனைகளில் இறக்கிறார்கள்.

இப்படுகொலைகள் நிகழ்ந்தேறிய ஒரு சில மணிநேரங்களில், இவற்றைத் தமிழீழ விடுதலைப் புலிகளே புரிந்ததாக சிறீலங்கா அரச ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதே வாந்தியையே உலக ஊடகங்களும் உமிழ்கின்றன.

hj

ஆனால் இது பற்றி மறுநாள் பி.பி.சி செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்புப் பிராந்தியப் பிரமுகர் சி.கரிகாலன், இப் படுகொலைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புபடவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். இப் படுகொலைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்ற கருத்துத் தான் அப்பொழுது காத்தான்குடியில் வாழ்ந்த முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் மத்தியில் இருந்தது.

இவ்வாறு காத்தான்குடி முஸ்லிம்கள் கருதியதற்கு நான்கு முக்கிய காரணங்கள் இருந்தன. முதலாவது அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் போராளிகள் இருந்தார்கள். யுத்தம் தீPவிரமடைந்து ஆட்பற்றாக்குறை நிலவிய சூழலில் முஸ்லிம்களைப் படுகொலை செய்து அதனால் நூற்றுக்கணக்கான முஸ்லிம் போராளிகள் இயக்கத்தை விட்டு வெளியேறும் நெருக்கடியை ஒரு நாளும் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்க மாட்டார்கள் என்பது.

g

இரண்டாவது, முன்னைய மாதங்களில், இந்தியப் படைகளின் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தென்தமிழீழ முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவிய நல்லுறவு. அதுவும் கடந்த தொடரில் குறிப்பிடப்பட்டது போன்று இந்தியப் படைகளின் காலத்தில் காத்தான்குடி என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கியது. அப்படிப்பட்ட காத்தான்குடி மக்களைப் பகைக்க வேண்டிய தேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இல்லை என்று அங்குள்ள முஸ்லிம் மக்கள் கருதினார்கள்.

மூன்றாவது காத்தான்குடிப் படுகொலைகள் நடந்தேறிக் கொண்டிருந்த பொழுது சிறீலங்கா அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணி வந்த முஸ்லிம் வணிகர்கள் சிலர், உடனடியாக அருகில் உள்ள சிங்களப் படை முகாமிற்கு விரைந்து, முஸ்லிம்கள் மீது ஆயுதபாணிகள் தாக்குதல்கள் நிகழ்த்துவதாகவும், உடனடியாக வந்து தமது மக்களைக் காப்பாற்றுமாறும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதனை ஏற்க மறுத்த படை முகாமின் பொறுப்பதிகாரி, இரவு நேரத்தில் காத்தான்குடிக்குள் தமது படையினர் நுழைவது ஆபத்தானது என்று தட்டிக் கழித்திருக்கிறார். அத்தோடு, தமது படை முகாமிற்கும், படுகொலைகள் நிகழ்ந்த பகுதிக்கும் இடையிலான பாதையில் நிலக்கண்ணிவெடிகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் புதைத்திருப்பதாகவும், அதனால் தம்மால் உடனடியாக அங்கு வருவது சாத்தியமில்லை என்றும், சில மணிநேரத்திற்கு அப்பொறுப்பதிகாரி இழுத்தடித்து விட்டு, ஆயுதபாணிகள் தப்பிச் சென்ற பின்னர் தான் சிங்களப் படையினரை காத்தான்குடி பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார்.

g

நான்காவது, முஸ்லிம்கள் போன்று வேடமிட்டுத் தாக்குதல் நடத்திய ஆயுதபாணிகள் திரும்பிச் செல்லும் பொழுது அவ் ஆடைகளைக் கழையும் பொழுது உள்ளே அவர்கள் இராணுவச் சீருடை அணிந்திருந்ததைக் காயமடைந்த சில முஸ்லிம் பொதுமக்கள் கண்ணுற்றிருக்கிறார்கள்.

இவையெல்லாம் இத் தாக்குதல்களை சிங்களப் படையினர் தான் நடத்தினார்கள் என்று சந்தேகத்தை காத்தான்குடி முஸ்லிம் மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. இவை எல்லாம் எழுந்தமானமாக இப்பத்தியில் பதிவு செய்யப்படும் தகவல்கள் கிடையாது. இவற்றை எல்லாம் அக்காலப் பகுதியில் மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் (யூ.ரி.எச்.ஆர்-ஜே.) என்ற அமைப்புப் பதிவு செய்திருந்தது.

இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், 1990ஆம், 1991ஆம் ஆண்டுகளில் குறித்த அமைப்பு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கைகளை தேடியெடுத்துப் படிக்கலாம். இங்கு இன்னுமொரு விடயத்தையும் பதிவு செய்தாக வேண்டும். குறித்த அமைப்பு உண்மையில் யாழ்ப்பாணத்தில் இயங்கவில்லை: அது கொழும்பில் இயங்கியது. அதற்குத் தலைமை தாங்கியவர் கலாநிதி ராஜன் கூழ். தற்பொழுது சிறீலங்கா தேர்தல் ஆணையத்தின் ஆணையாளர்களில் ஒருவராக விளங்கும் கலாநிதி ரட்ணஜீவன் கூழின் உடன்பிறப்பு. அடிப்படையில் ராஜன் கூழ் ஒரு புலி எதிர்ப்புவாதி. நடுநிலையான விமர்சனம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளைத் தயாரிப்பது தான் இவரது அமைப்பின் பணி. இதற்கென்று இவரது அமைப்பிற்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளால் தாராளமாக நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

இடையிடையே சிங்களப் படைகளால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் தனது குற்றப்பத்திரிகையில் இவர் பதிவு செய்து வந்தார். ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தயாரித்து வெளியிட்டதன் காரணமாகவும், அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் பின்புலத்தில் இயங்கியதாலும், இவ் அமைப்பும், அதன் தலைவர் ராஜன் கூழும் கொழும்பில் இருந்து செயற்படுவதற்கு அன்றைய சிங்கள அதிபர் பிரேமதாசா அனுமதித்தார்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தான் காத்தான்குடிப் படுகொலைகளில் சிங்களப் படைகள் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்று முஸ்லிம் மக்கள் சந்தேகிப்பதாக ராஜன் கூழின் அமைப்பு தெரிவித்திருந்தது. அத்தோடு இன்னொரு விடயத்தையும் ராஜன் கூழின் அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

அதாவது மட்டக்களப்பு காத்தான்குடியில் பள்ளிவாசல் படுகொலைகள் நடைபெற்ற சமநேரத்தில் வடக்கிலும், திருகோணமலை மாவட்டத்திலும் கைது செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறீலங்கா காவல்துறையினரைத் தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலை செய்திருந்தார்கள். இவ்வாறு தமிழீழ தாயகத்தின் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்களின் விடயத்தில் நல்லெண்ணப் போக்குடன் நடந்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், எதற்காக மட்டக்களப்பு காத்தான்குடியில் மட்டும் முஸ்லிம்களைப் படுகொலை செய்ய வேண்டும்? என்பது தான் ராஜன் கூழ் அவர்களின் அமைப்பின் முக்கிய கேள்வியாக இருந்தது.

அதைவிட இன்னுமொரு தகவலை ராஜன் கூழின் அமைப்பு வெளியிட்டிருந்தது. காத்தான்குடி படுகொலைகள் நடைபெற்று ஓரிரு நாட்களில் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய சிங்களப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ண, காத்தான்குடிப் படுகொலைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தமது புலனாய்வுத்துறையினரிடம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அது பற்றி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விளக்கம் கோரப்பட்ட பொழுது, மேலும் விளக்கமளித்த ரஞ்சன் விஜேரட்ண, படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் (04.08.1990) நள்ளிரவு தொலைத்தொடர்புக் கருவிகள் வாயிலாகக் கருணாவுடன் தொடர்பு கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாணத் தலைமை (இவ்வாறு தான் ரஞ்சன் விஜேரட்ண குறிப்பிட்டார்), காத்தான்குடியில் என்ன நடந்தது என்று வினவியதாகவும், அதற்கு சிறீலங்கா படையினரிடம் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் மீது தனது ‘பையன்கள்’ (போய்ஸ்) தாக்குதல் நடத்தியதாகக் கருணா ஒப்புக் கொண்டதாகவும், அதனைத் தமது புலனாய்வுத்துறையினர் ஒட்டுக் கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இது பற்றியும் தமது அறிக்கையில் ராஜன் கூழின் அமைப்பு பதிவு செய்திருந்தோடு, ரஞ்சன் விஜேரட்ணவின் கூற்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாணத் தலைமையின் (அதாவது தேசியத் தலைவரின்) அனுமதியின்றித் தன்னிச்சையாக இப்படுகொலைகளைக் கருணா புரிந்திருக்கலாம் என்பதை உணர்த்துவதாக சுட்டிக் காட்டியிருந்தது.

அது மட்டுமல்ல. இன்னொரு தகவலையும் அவ் அறிக்கையில் ராஜன் கூழின் அமைப்பு பதிவு செய்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் உட்பூசல்கள் நிகழ்வதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குக் கட்டுப்படாமல் அதன் பிரமுகர்கள் சிலர் செயற்படுகின்றார்கள் என்பதும் தான் அந்தத் தகவல். அன்றைய காலப்பகுதியில் தமிழீழ தேசியத் தலைவரின் சொல்லுக்குக் கட்டுப்பாடாமல் தன்னிச்சையாக மாத்தையாவும், கருணாவும் செயற்பட்டார்கள் என்பது இன்று உலகறிந்த இரகசியம். அதிலும், இவர்கள் இரண்டு பேருக்கும் இந்தியப் புலனாய்வுத்துறையினருடன் இருந்த தொடர்புகள் பின்நாட்களில் அம்பலமாகிய பொழுது எவ்வளவு தூரத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் இந்திய புலனாய்வுத்துறை ஊடுருவி இருந்தது என்பது பட்டவர்த்தனமாகியது. ஆனால் அன்றைய காலப்பகுதியில் இவ்வாறான முக்கிய தகவலை ராஜன் கூழின் அமைப்புப் பதிவு செய்தமைக்கு இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிடலாம்.

ஒன்று உள் முரண்பாடுகள் காரணமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமாக உள்ளார்கள் என்ற பரப்புரையைக் கொழும்பிலும், மேற்குலக நாடுகளிலும் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கல்விமான்களின் மத்தியில் மேற்கொள்வது. அடுத்தது அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் பின்புலத்துடனும், நிதியுதவியுடனும் ராஜன் கூழின் அமைப்பு இயங்கியதன் காரணமாகவும், அன்றைய காலப்பகுதியில் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் நல்லுறவு நிலவாததன் காரணமாகவும், இந்தியப் புலனாய்வுத்துறையினரின் பின்புலத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரமுகர்கள் சிலர் செயற்படுவது பற்றிய தகவலை இவரின் ஊடாக அமெரிக்க புலனாய்வுத்துறை கசிய விட்டிருக்கலாம்.

காத்தான்குடிப் படுகொலைகள் தொடர்பாக இன்னுமொரு விடயத்தையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் அதிகாலை காத்தான்குடியை அண்டிய கடற்பரப்பில் பயணித்த இரண்டு படகுகள் மீது சிறீலங்கா வான்படையினரால் உலங்குவானூர்திகளில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்படகுகளில் பயணித்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும், காத்தான்குடிப் படுகொலைகளை நிகழ்த்தி விட்டு இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முற்பட்ட பொழுது இவர்களைத் தமது வான்படையினர் சுட்டுக் கொன்றதாகவும் அன்று மாலை (04.08.1990) சிறீலங்கா அரச ஊடகங்கள் அறிவித்தன.

இங்கும் சில கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக இப்படகுகளில் கொல்லப்பட்டவர்கள் உண்மையில் யார்? இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால், காத்தான்குடிப் படுகொலைகளை இவர்கள் தான் செய்தார்கள் என்றால், எதற்காக இவர்கள் அனைவரும் இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முற்பட வேண்டும்? ஏன் அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதிக்கோ, அன்றில் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கோ, சரி யாழ்ப்பாணத்திற்கோ இவர்கள் அனைவரும் தப்பிச் செல்ல முயலவில்லை?

இங்கு இன்னுமொரு சர்ச்சையும் உள்ளது. உண்மையில் இப்படி இரண்டு படகுகள் காத்தான்குடியில் இருந்து இந்தியா நோக்கிப் பயணித்தனவா? அல்லது அப்படியானதொரு கட்டுக்கதை ஒன்றை சிறீலங்கா படைகளும், அரச ஊடகங்களும் திட்டமிட்ட வகையில் அவிழ்த்து விட்டனவா?

இவற்றை விட அக் காலப் பகுதியில் அன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் முக்கியமான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார். காத்தான்குடிப் படுகொலைகள் நடைபெற்று ஒரு வாரத்தில் ஏறாவூரில் ஆயுதபாணிகளால் இன்னுமொரு தொகுதி முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படுகொலைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தான் புரிந்ததாக மறுநாள் சிறீலங்கா அரச ஊடகங்கள் அறிவித்த பொழுதும், இத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் சரளமாக சிங்கள மொழியில் பேசியதாகவே தாக்குதலில் இருந்து தப்பிய முஸ்லிம் பொதுமக்கள் சிலர் வாக்குமூலமளித்திருந்தார்கள். இதனை ராஜன் கூழின் அமைப்பு பதிவு செய்திருந்தது. அத்தோடு சம்பவ இடத்திற்கு விரைந்து வருமாறு சிங்களப் படையினருக்கு முஸ்லிம் வணிகர்கள் சிலர் தகவல் தெரிவித்த பொழுது, உடனடியாக அங்கு செல்ல மறுத்த படையினர், படுகொலைகள் நிகழ்ந்து பல மணிநேரங்கள் கழித்து மறுநாள் காலையில் தான் சம்பவ இடத்தை சென்றடைந்தார்கள்.

இது பற்றி அப்பொழுது கருத்து வெளியிட்ட எம்.எச்.எம்.அஸ்ரப், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் பிரேமதாசாவே புரிந்ததாக குற்றம் சுமத்தியிருந்தார். இதனையும் ராஜன் கூழ் அவர்களின் அமைப்புப் பதிவு செய்திருந்தது.

சரி இப்பொழுது எழும் கேள்வி இது தான். காத்தான்குடி படுகொலைகள் ரஞ்சன் விஜேரட்ண கூறியது போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாணத் தலைமைக்குத் (அதாவது தமிழீழ தேசியத் தலைவருக்கு) தெரியாமல் கருணா தான் தன்னிச்சையாக நிகழ்த்தியிருந்தார் என்றால், அஸ்ரப் அவர்கள் குற்றம் சுமத்தியது போன்று தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி இத் தாக்குதலை பிரேமதாசா தான் புரிந்தார் என்றால், அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் தளபதியாக விளங்கிய கருணாவிற்கு பிரேமதாசாவோடு இரகசிய தொடர்புகள் இருந்தனவா? அஸ்ரப் குற்றம் சுமத்தியது போன்று கருணாவிற்கு பிரேமதாசாவுடன் தொடர்பு இருந்தது என்றால், ரஞ்சன் விஜேரட்ண கூறியது போன்று காத்தான்குடிப் படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தெரியாமல் கருணா தான் புரிந்தார் என்றால், இப் படுகொலைகளைக் கருணா ஊடாக இந்திய மற்றும் சிங்களப் புலனாய்வு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து மேற்கொண்டனவா?

இப்படுகொலைகளுக்கு முன்னோடியாகவும், அதற்குப் பின்னரும், ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களைப் பாகிஸ்தானின் பின்புலத்தைக் கொண்ட முஸ்லிம் ஆயுதபாணிகள் (முஸ்லிம் ஊர்காவல் படையினர் அல்லது ஜிகாத் குழு என்ற பெயரில் இயங்கியவர்கள்) படுகொலை செய்ததன் பின்னணி என்ன? தமிழ் - முஸ்லிம் படுகொலைகளை அரங்கேற்றி இரு சமூகங்களின் மத்தியில் நிரந்தர விரிசலை ஏற்படுத்தும் நாசகார நடவடிக்கை ஒன்றை 1990ஆம் ஆண்டு இந்திய, பாகிஸ்தானிய மற்றும் சிங்களப் புலனாய்வுத்துறையினர் கூட்டாக மேற்கொண்டார்களா?

எப்படிப் பார்த்தாலும் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை, அதாவது தமிழீழ தேசியத் தலைவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இயங்கிய போராளிகளைத் தொடர்புபடுத்துவது எந்த விதத்திலும் நியாயமற்றது. எனவே இது விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்தும் முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். இப்படுகொலைகளை அக் காலப் பகுதியில் ரஞ்சன் விஜேரட்ண குறிப்பிட்டது போன்று கருணா தான் புரிந்திருந்தார் என்றால், எதற்காக அவருக்கு எதிரான விசாரணைகளை இதுவரை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை? சரி, சிறீலங்கா அரசாங்கம் தான் அசமந்தமாக நடந்து கொள்கின்றது என்றால், ஏன் இது விடயத்தில் கருணா மீதான விசாரணைக்கு இதுவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் சிறீலங்கா அரசாங்கத்திற்குக் காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை?

அதை விட இன்னுமொரு விடயத்தையும் இவ்விடத்தில் பதிவு செய்வது பொருத்தமானது. இந்திய உளவாளியாக மாத்தையா செயற்பட்டமை உறுதி செய்யப்பட்டு, அவர் மீதான விசாரணைகள் நடைபெற்று முடிந்த பொழுது இன்னுமொரு திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. 10.06.1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப் போர் வெடித்ததை அடுத்து தென்தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக ஜிகாத் குழு, முஸ்லிம் ஊர்காவல்படை ஆகிய பெயரில் இயங்கிய இஸ்லாமிய ஆயுதபாணிகள் மேற்கொண்ட படுகொலைகள், பாலியல் வெறியாட்டங்களுக்குப் பதிலடியாக, முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடத்துமாறு அப்பொழுது மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக விளங்கிய லெப்.கேணல் றீகன் (இராசையா சிற்றம்பலம்) அவர்களுக்கு மாத்தையா உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த றீகன், அது தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் என்று தெரிவித்திருந்தார். இது நடைபெற்று ஒரு சில நாட்களில் 16.07.1990 அன்று மட்டக்களப்பு பாலையடி வெட்டையில் சிங்களப் படையினர் நிகழ்த்திய தாக்குதலில் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இதன் பின்னர் தான் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் கருணாவால் தன்னிச்சையாக செயற்பட முடிந்தது.

இவற்றை எல்லாம் ஆழமாக ஆராயும் பொழுது ஒரு விடயம் தெளிவாகின்றது. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளின் சூத்திரதாரிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது சிங்கள, இந்திய மற்றும் பாகிஸ்தானிய புலனாய்வுத்துறையினரும், அவர்களை வழிநடத்திய தரப்பினருமே ஆகும்.

இனி, தமிழ் - முஸ்லிம் உறவு சீர்குலைந்ததில் இந்திய உளவாளியாக இயங்கிய மாத்தையாவின் பங்கு பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.  

(தொடரும்)