பலஸ்தீனமாகும் தமிழீழம்! - ஆசிரிய தலையங்கம்

இரண்டாம் உலகப்போர் முடிவில் பாலஸ்தீன நிலத்தில் யூதர்களுக்கான நாடொன்றை ஐ.நா உருவாக்கிக்கொடுத்தது. பாலஸ்தீன மக்களுக்கே தெரியாமல், அவர்களின் எந்தவொரு அனுமதியுமின்றி பாலஸ்தீனத்தின் 55 வீதமான நிலப்பகுதியை யூதர்களுக்கு பறித்துக் கொடுத்து, அதனை இஸ்ரேல் என்ற தேசமாகவும் ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால் எஞ்சியிருந்த பலஸ்தீனத்தை ஒரு தேசமாகக் கூட ஐ.நா. அங்கீகரிக்கவில்லை. காரணம் பலஸ்தீனத்தை ஒரு தேசமாக அங்கீகரித்தால் அதன் எல்லைகள் வரையறுக்கப்பட்டுவிடும். எல்லைகள் வரையறுக்கப்பட்டால் அந்தநாட்டின் நிலங்களை வேறொரு நாடு பிடிப்பது ஆக்கிரமிப்பாகவே பார்க்கப்படும். அதில் ஐ.நா. போன்றன தலையிட்டு அவற்றை மீட்டெடுத்துக்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.

dd

பலஸ்தீனத்திற்கு மறுதலிக்கப்பட்ட இந்த நீதி, இஸ்ரேலுக்கு வாய்ப்பாகியது. 1948ற்குப் பின்னர் கடந்த 70 ஆண்டுகளுக்குள் பலஸ்தீனத்தின் நிலத்தை ஆக்கிரமித்து ஆக்கிரமித்து 88 வீதமான நிலப்பகுதி இஸ்ரேலாக மாற்றப்பட்டுவிட்டது. இப்போது பலஸ்தீனர்கள் வசம் எஞ்சியிருப்பது சுமார் 12 வீதமான நிலப்பகுதி மட்டும்தான். அதுவும் மேற்குக் கரை, காசா என நிலத்தொடர்புகள் அற்ற இரு துண்டங்களாக அவை பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றிலும் பெரும்பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. மேற்குக் கரையில் 60 வீதமான நிலப்பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ளது. இங்கு பாலஸ்தீன அதிகார சபையால் கூட நுழைய முடியாது. இங்கும் யூதக் குடியிருப்புக்கள் அமைக்கும் பணிகளை இஸ்ரேல் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. இவற்றுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாதவாறு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து ஆதரித்து வருகின்றது.

தமது நிலத்தைத் தக்கவைப்பதற்கும், தமது தேசத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் ஆயுத வழியிலும் அரசியல் வழியிலும் போராடிய பலஸ்தீன விடுதலை அமைப்புக்கள், வல்லரசு நாடுகளின் ஒத்துழைப்புடன் இஸ்ரேல் எடுத்த இராணுவ, அரசியல் நடவடிக்கைகளால் பலமிழந்து போனதுமட்டுமல்ல, அதன்பின்னர்தான் அதிகளவு நிலங்களையும் இழந்துள்ளன. நிலங்களை இழந்த பலஸ்தீனர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளார்கள். இப்படியே நிலைமை தொடர்ந்து சென்றால் அடுத்த நூற்றாண்டில் பலஸ்தீனம் என்றொரு தேசம் இருந்ததற்கான வரலாறுகளை மட்டுமே படிக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பது உறுதி.

a

இன்று இவ்வாறான ஒரு நிலைக்குத்தான் தமிழரின் தாயகமான தமிழீழமும் சென்றுகொண்டிருக்கின்றது. தமிழர் பகுதிகளிற்குள், சிங்களவர்கள் பலவந்தக் குடியேற்றங்களை உருவாக்கி தமிழ் மக்களை விரட்டிய காலம் முதல், இன்று வரை தமிழர் நிலப்பரப்புக்கள் சிங்களக் குடியேற்றங்களால் தொடர்ந்து தினந்தோறும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. இந்த ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், இழந்துபோன நிலங்களை மீட்டெடுக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்த ஆயுதப் போராட்டத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத்தில் சுமார் 80 வீதிமான பகுதியை மீட்டெடுத்து, அங்கு தமிழர்களின் நிர்வாகத்தையும் செயற்படுத்தினார்கள். ஆனால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் அந்த நிர்வாகம் முற்றாக சிதைக்கப்பட்டு, இன்று முழுமையாக சிங்கள ஆக்கிரமிப்பின் கரங்களுக்குள் தமிழர் தாயகம் சென்றுள்ளது.

தமிழர் தாயகமான வடக்கிற்கும் கிழக்கிற்கும் இணைப்புப் பாலமாக விளங்கும் மணலாற்றை ஆக்கிரமித்து அதற்கு வெலிஓயா எனச் சிங்களப் பெயர்சூட்டி அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, வடக்கையும் கிழக்கையும் ஏற்கனவே சிங்களம் துண்டாடிவிட்டது. அதாவது மேற்குக் கரையும் - காசாவும் போல் இன்று வடக்கும் - கிழக்கும் இரு துண்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும், இராணுவ வலயங்களையும் உருவாக்கி தமிழர் தாயகத்தின் வளம்மிக்க கரையோரப் பகுதிகளின் பெரும் பகுதி சிங்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கும் தமிழர் பகுதிகளிலும் சிங்கள மீனவர்களை கொண்டுவந்து, தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களையும் விரட்டியடித்து அங்கும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதற்கு கடுமையாக முயன்றுவருகின்றது. இதனைவிட மகாவலித் திட்டம் என்ற பெயரிலும், தொல்பொருள் ஆய்வு என்ற பெயரிலும் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு நிலப் பிரதேசங்களும் சிங்களக் குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

s

எஞ்சியிருக்கும் வடக்கும் இப்போது சிறு சிறு துண்டங்களாக்கி தமிழர்களை தனிமைப்படுத்தி தாயக்கோட்பாட்டை முற்றுமுழுதாக அழிக்கும் நடவடிக்கையில் சிங்கள தேசம் களமிறங்கிவிட்டது. ஏற்கனவே, 2009 போரிற்குப் பின்னர் நாவற்குழியில் பாரிய சிங்களக் குடியேற்றத்தை அமைத்து யாழ்குடாவைத் தனிமைப்படுத்தித் துண்டாடும் நடவடிக்கையை முன்னெடுத்த சிங்களம், தற்போது இந்த ஆக்கிரமிப்பை பூநகரி வரையும் விரிபுபடுத்தியுள்ளது. இவ்வாறான திட்டத்தின் மூலம், ஏனைய பிரதேச தமிழ் மக்களுடன் நிலத்தொடர்புகளற்றவர்களாக்கி, தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை அழிப்பதும், இலங்கைத் தீவை முழுமையான சிங்களத் தீவாக மாற்றுவதும்தான் திட்டம்.

ஏற்கனவே, யாழ்குடாநாட்டின் நயினாதீவு, மாதகல் போன்ற பிரதேசங்கள் சிங்களமயமாக்கப்பட்டு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது வன்னியிலும் பல பகுதிகள் சிங்கள மயமாக்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே தமிழர் தாயகமெங்கும் புத்தர் சிலைகளை நிறுவியும், விகாரைகளை அமைத்தும் பௌத்த பிரதேசமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழர்களின் ஆலயங்களையும் பௌத்த விகாரைகள் இருந்த இடம் என உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளார்கள்.  

tt

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு பக்கபலமாய் நின்று பலஸ்தீனத்தின் அழிவிற்கு எவ்வாறு அமெரிக்கா உட்படச் சில நாடுகள் இன்றுவரை துணை நிற்கின்றதோ, அதேபோன்றே சிறீலங்காவின் ஆக்கிரமிப்பிற்கு பக்கபலமாய் நின்று தமிழீழ தேசத்தின் அழிவிற்கும் அமெரிக்காவும் நாடுகள் சிலவும் துணை நிற்கின்றன.
அதேபோன்று பலஸ்தீன தேசத்திற்கு நாடென்ற அங்கீகாரத்தை வழங்காததன் மூலம் அந்த மண்ணை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு ஐ.நா. எவ்வாறு வழியேற்படுத்திக் கொடுத்ததுவோ, அதேபோன்று தமிழீழ தேசத்தையும் அங்கீகரிக்காது சிறீலங்காவின் நில ஆக்கிரமிப்பிற்கு ஐ.நா. வழியேற்படுத்திக்கொடுத்துள்ளது.

மனித உரிமை அமைப்புக்கள், சில சர்வதேச நாடுகள் பலஸ்தீனர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிராக நிகழும் இந்தக் கொடுமைகளுக்கு கண்டனங்களை மாத்திரம் தெரிவிக்கின்றதே தவிர, அவர்களால் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை முன்னெடுக்க முடியவில்லை.

முஸ்லீம்களும், முஸ்லிம் நாடுகளும் நினைத்திருந்தால் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து பலஸ்தீனம் பறிபோவதைத் தடுத்து அந்த மக்களின் தேசத்தை காத்திருக்கலாம். அதற்கான பலமும் வளமும் அவர்களிடம் இருந்தது. ஆனால், அவர்கள் தங்கள் தங்கள் சுயநலன்களுக்காக பாராமுகமாக இருந்து பலஸ்தீன தேசத்தின் மறைவிற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்கள்.

அதேபோன்று, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தங்கள் தாயக நிலம் பறிபோவதை இப்போதே தடுத்துநிறுத்தத் தவறினால் பலஸ்தீனம்போல் தமிழர் தாயகமும் பறிபோவது மட்டுமல்ல, வரலாற்றுப் பாடங்களில் கூட தமிழீழ தேசம் குறித்து தெரிந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். அந்தளவிற்கு சிங்களம் வரலாற்றையும் மாற்றிவிடும் என்பதே தற்போது இலங்கைத் தீவில் தொல்பொருள் ஆய்வில் இருந்து திருக்கோணேஸ்வரர் கோவில் பௌத்த விகாரை என உரிமைகொண்டாடி வரலாற்றை மாற்றமுயலும் சிங்களத்தின் நகர்வுகள் சொல்லிநிற்கின்றன.