தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்கத் தவறினால் தாயகத்தை இழப்பது உறுதி - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

பன்னாட்டு ரீதியாக காட்டாட்சி, கொடூர ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, அடக்குமுறை ஆட்சி, அடாவடி ஆட்சி, பயங்கரவாத ஆட்சி போன்ற பல்வேறு ஆட்சி முறைகள் தொடர்பாக அவ்வப்போது அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அனைத்தும் ஒருங்கே இணைந்த ஆட்சி முறை ஒன்று தொடர்பாக இப்போதுதான் கேள்விப்படுவீர்கள், அதுதான் தமிழர்களை வதைக்கின்ற சிறிலங்கா அரசின் ஆட்சி முறை.

சிறிலங்கா சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படுகின்ற 1948 ஆம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்காவிற்கு ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்த அத்தனை பேரும் மேற்படி ஆட்சி முறைகளின் கீழேயே தமிழ் மக்களை ஆட்சி செய்தனர்.

gg

இங்கு ஆட்சி முறை எனவும்போது, சர்வதேச இராஜதந்திரி ஒருவர் தென்னிலங்கைக்கு வந்து பார்வையிட்டு சென்றால் சிறிலங்காவில் நூறு வீதம் ஜனநாயக ஆட்சியே என பதிலிறுப்பார். யாராக இருந்தாலும் வடக்கு கிழக்கிற்கு வந்து பார்த்துச் சென்றால்தான் தமிழ் மக்களின் வேதனைகளையும் வலிகளையும் சர்வதேசத்திற்கு நேர்மையாக அறிக்கையிட முடியும்.

இதுவரை இருந்து ஆட்சியை விடவும், பலமான இராணுவ ஆட்சி ஒன்று சிறிலங்காவில் களை கட்டி வருகின்றது மிக விரைவில், அதுவும் ஆவணி 5 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சிறிலங்கா தீவு முழுவதும் இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படும்.

2

இந்த இராணுவ ஆட்சியால் பாதிக்கப்படப்போவது சிங்களவர்களோ முஸ்லிம்களோ அல்லர். அதிகமான பாதிப்பை எதிர்கொள்ளப்போவது தமிழ் மக்கள் மட்டுமே. தனித் தமிழீழத்திற்காக போராடி, சிங்கள தேசத்தாலும், உலகில் பலம்பொருந்திய நாடுகளாலும் குரல்வளை வரை நசிக்கப்பட்டிருக்கின்ற தமிழினம் கோட்டபாய ராஜபக்சவின் இராணுவ ஆட்சியை எப்படி எதிர்கொள்ளப்போகின்றது என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.

கடந்த நில தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் கோமாகம என்ற இடத்தில் அரச உயர்மட்டத்தின் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அங்கு சில தமிழ் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இராணுவ ஆட்சியை எப்படி நடைமுறைப்படுத்தப்போகின்றார்கள் என்ற விடயம் அங்கு அரசல் புரசலாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

g

மாவட்டத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமிக்கப்படுவார். அவருக்கு அடுத்த நிலையில் இரு இராணுவ அதிகாரிகள் இருப்பர். அவர்களுக்கு கீழ் நிலையில் ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் ஒவ்வொரு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவர். பிரதேச செயலகங்கள் தோறும் ஒவ்வொரு படை அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பார். அதற்கு கீழ் நிலையில் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் ஒவ்வொரு படை அதிகாரியை நியமிப்பது தொடர்பாகவும் அங்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன்படி, யாழ். மாவட்டத்;திற்கு கடற்படை உயர் அதிகாரி ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். மாவட்டச் செயலாளருக்கு உரிய அதிகாரங்களை விடவும் அதிகமாக அவருக்கு வழங்கப்படவுள்ளன. அவரது ஒப்பமின்றி மாவட்டத்தில் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது.
நாடு முழுவதிலும் இந்த நிலையே தொடரும் எனக் கூறப்பட்டாலும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மட்டுமே இது இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்க முடிகின்றது.
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், முப்படையினருக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை பொலிஸார் முன்னெடுத்த பல நடவடிக்கைகளை தற்போது படையினர் முன்னெடுக்கின்றனர். ஏன், வீதிகளில் செல்வோர் தலைக்கவசம் அணிந்து செல்கின்றார்களா, சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருக்கின்றார்களா என்பதைக்கூட படையினர் கண்காணிக்கும் நிலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருக்கின்றது.

g

விசேடமாக, முப்படையிருக்கும் துப்பாக்கிச் சூட்டு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து சகட்டு மேனிக்கு குறிவைக்கும் சம்பவங்களை படையினரும் பொலிஸாரும் ஆரம்பித்திருக்கின்றனர். கடந்த மாதம் (ஜீன்) 20 ஆம் திகதி பளை – முகமாலையில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மண் கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மேலும், கடந்த (ஜீலை) 10 ஆம் திகதி மொரட்டுவ லுனாவ என்ற இடத்தில் பொலிஸார் 39 வயதுடைய இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்திருக்கின்றனர். இரவு 11 மணியளவில் வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே இவர் சுடப்பட்டார்.
மேற்படி இரு சம்பவங்களும் சாதாரண குற்றச்செயல்கள். இவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியிருக்க இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் முடியும். ஆனால், கோட்டாபாய வழங்கிய அதிகாரத்;தின் அடிப்படையில் தமது கைவரிசையை காட்டியிருக்கின்றனர்.

தமிழர் தாயகத்தில் குறிப்பாக வன்னியில் 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏன், எதற்கு என்ற காரணம் கூறப்படாமலே அவர்களின் கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன. சிலரது கைதுகளுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க முனைந்தமையால் கைது செய்யப்பட்டார்கள் என அரச உயர்மட்டம் காரணம் கூறியிருக்கின்றது.
இவற்றுக்கு மேலாக தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்காக என கோட்டபாய ராஜபக்சவால் சிங்களவர்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட செயலணி கிழக்கே திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தையும் வடக்கே யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தையும் சிங்களவர்களுக்கே சொந்தமானவை என உரிமை கோரியிருக்கின்றது.

g

கோணேஸ்வரம் என்பது கோகண்ண விகாரை எனவும் நல்லூர் சிங்கள மன்னனால் கட்டப்பட்டது எனவும் மேற்படி குழுவின் உறுப்பிரான கடும்போக்கு சிங்களவர் எல்லாவெல மேதானந்த தேரர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதுபோன்றே தமிழர்களின் அடையாள அழிப்புகள் தொடர்கின்றன. தென் தமிழீழத்தின் முக்கிய அலகான அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வட தமிழீழத்தில் தமிழர்களின் இதய பூமியான மணலாறு மண்ணில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு அந்த இடம்  வெலிஓயா என பெயர் மாற்றப்பட்டுள்ளது. வெலிஓயா என்ப பெயரில் தனி பிரதேச செயலாளர் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. வலிகாமத்தில் கந்தரோடை கதறுகொட என மாற்றப்பட்டிருக்கின்றது.

இதற்கு அப்பால், தமிழர்களின் புண்ணிய, புனித தீவு நயினாதீவு. நயினை நாகபூசணி அன்னை உறைந்து மக்களுக்கு அருள் பாலிக்கும் இந்த தீவின் பெயர் நாகதீப என மாற்றப்பட்டிருக்கின்றது. இங்கு பெரும் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும் நுழைவாயிலில், கடற்கரையில் பாரிய புத்தர் விகாரை ஒன்று அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு தமிழர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. கோட்டபாயவின் ஆட்சியில் அந்த சிலையை கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகள்  துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு ரீதியாக அனைத்தையும் உருமாற்றி, இனத்துவ அடையாளங்களை அழிக்கும் செயற்பாடுகள் யுத்தம் முடிவடைந்த கடந்த 10 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தம் முடிவடைந்த எனக் கூறுவதைக் விடவும், தமிழ் மக்களின் காவலர்களான தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ அரங்கில் இருந்து அகற்றப்பட்ட பின்னரே இத்தனையும் நடைபெற்று வருகின்றன எனக் கூறுவதே பொருத்தமானது.

புலிகளின் ஆயுத பலம் ஒருபக்கமும் அரசியல் பலம் மறு பக்கமுமாக இருந்தமையால் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தை சிங்களம் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால், இன்று தட்டிக் கேட்க யாருமின்றி தமிழ் மக்கள் கையறு நிலையில் இருப்பதால் சிங்கள தேசம் தாம் நினைத்த எதையும் செய்துவிட முடியும் என்ற மமதையில் அராஜகத்தை அரங்கேற்றுகின்றது.

இனி வரப்போகின்ற இராணுவ ஆட்சியில் எஞ்சிய தமிழின அடையாளங்களும் அழிக்கப்பட்டு பெயர் மாற்றங்கள் மூலம் வடக்கு – கிழக்கு சிங்கள தேசமாக மாறப்போகின்றது.
கடந்த முப்பது ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போரின்போது தமிழீழ தேசம் எங்கும் மாவீர்களின் நினைவுகள், போராட்ட சின்னங்கள், தமிழீழத்தின் கட்டமைப்புகள் என ஆயிரக்கணக்கான நினைவுச் சின்னங்களை தமிழீழ மண் சுமந்து நின்றது. சந்திகள் தோறும் மாவீரர்களின் நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள், போர் தந்த அவலங்கள், மாவீரர் நினைவாலயங்கள், மாவீரர் சரணாலயங்கள், தமிழீழ காடுகள், இப்படி எத்தனை அடையாளங்கள். ஆனால், புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், 10 ஆண்டுகளில் தாயகத்தில் எந்தவொரு அடையாளத்தையும் விட்டுவைக்காமல் அத்தனையையும் சிங்களம் துடைத்தழித்திருக்கின்றது. இதேபோன்றே, கோட்டபாயவின் ஆட்சிக்காலம் முடிவதற்குள் தமிழர் தாயகம் சிங்கள தேசமாக மாற்றப்பட வேண்டும் என சிங்கள வல்லாதிக்கம் கங்கணம் கட்டி நிற்கின்றது.
இவைகளை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முன்வரப்போவதில்லை. காரணம், அமையவிருக்கின்ற புதிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவிருக்கின்றன.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு கொடுப்பது எனவும் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் எனவும் கோட்டபாய தரப்பு உறுதியளித்திருக்கின்றது. கடந்த 10 ஆம் திகதி வடமராட்சி செம்பியன்பற்றில் இடம்பெற்ற கூட்டமொன்றில் எம்.ஏ. சுமந்திரனின் உரையும் இதைக் கோடி காட்டியிருக்கின்றது.
இவ்வாறான நிலை ஒன்று ஏற்படும் பட்சத்தில், தமிழர்களின் 30 ஆண்டுகாலப் போராட்டம் நீத்துப்போகச் செய்யப்படும். தமிழ் மக்களின் உரிமைக் கோசம் இல்லாது போகும். அனைவரினதும் ஒத்துழைப்புடன் ஒற்றையாட்சி அரசமைப்பு நிறைவேற்றப்படும். சர்வஜன வாக்கெடுப்பின்போது சுமந்திரன் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி அதற்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பார்.

தமிழ்த் தேசிய அரசியலுக்குள் சுமந்திரன் திட்டமிட்டு களமிறக்கப்பட்டதன் அடைவுமட்டம் இன்னும் சில மாதங்களில் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது கனவல்ல நிஜம்.
அன்புக்குரிய புலம்பெயர் தேசத்து உறவுகளே,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செல்நெறி தமிழ் மக்களை சிங்களத்துடன் இரண்டறக் கலக்கும் நோக்கத்துடன் நகர்கின்றது. தமிழ் மக்களின் அறுபது ஆண்டுகாலப் போராட்டத்திற்கு பலன் கிடைக்கவேண்டுமாயின், மாவீரர்களின் தியாகங்கள் வீண்போகாமல் இருக்கவேண்டுமாயின், தேசியத் தலைவரின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவேண்டுமாயின் சிறிலங்காவில் வரவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழ்த் தேசிய பாதையில் உண்மையுடன் பயணிக்கும் தரப்பிற்கு வாக்களிக்கவேண்டும். இதற்கு ஏற்றாற்போல தாயகத்தில் உள்ள உங்கள் உறவுகளை தயார்படுத்துங்கள்.