செய்திகளும், எழும் கேள்விகளும் - மாயவள்

செய்தி: வரும் 05.08.2020 அன்று நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கப் போகும் வாக்குகள் வடக்குக் கிழக்கில் மீனாட்சி மலர்வதற்கு வழிசமைக்கும் வகையில் அமைய வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

கேள்வி: மீனுக்கு மலர் என்றொரு அர்த்தம் தமிழ் அகராதியில் உண்டோ?

.................................


செய்தி: இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு மனிதவெடிகுண்டுத் தாக்குதல்கள் பற்றி முற்கூட்டியே சிறீலங்கா அரசுக்கு இந்தியப் புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தமைக்கு, இஸ்லாமியராக மதம் மாறிப் பயங்கரவாதக் கும்பலுக்குள் ஊடுருவிய மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழரான புலஸ்தினி என்ற இந்திய உளவாளியே காரணம் என்று சிறீலங்கா புலனாய்வுத்துறை கூறியுள்ளது.

கேள்வி: அப்படி என்றால் தமிழீழத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மதம் மாற்றப்பட்ட ஏனைய தமிழ்ப் பெண்கள் எல்லாம் எந்ததெந்தப் புலனாய்வு நிறுவனங்களுக்கு உளவாளிகளாக வேலை செய்கின்றார்களோ?

..................................


செய்தி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ இயக்கத்திற்குள் சிறீ அணி என்றொரு புதிய குழு உருவாகியுள்ளது.

கேள்வி: இதைத் தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்பார்களோ?

.................................


செய்தி: பிள்ளைகள் இல்லாத சஜித் பிரேமதாசாவின் ஆண்மை பற்றி மகிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்தை சமாஜி ஜன பலவேகய கட்சியின் வேட்பாளர் ஹிருணிக பிரேமச்சந்திரா வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கேள்வி: தான் ஆடாவிட்டாலும் தசை ஆடாமல் இருக்குமா, என்ன?

..................................


செய்தி: நாட்டில் தழலாகக் கனன்று கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பணியாக இருக்கும் என்று கட்சியின் வேட்பாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கேள்வி: தீயணைப்புப் படைக்கு நிதியுதவி வழங்கப் போகின்றார்களோ?

..................................

h
செய்தி: ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியில் சிறீலங்கா தொல்பொருள் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கேள்வி: அப்படி என்றால் ரணிலின் ஆட்சியில் தமிழர் தாயகத்தில் சிறீலங்கா தொல்பொருள் திணைக்களம் செய்த சிங்கள-பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகளை எந்த வரையறைக்குள் உள்ளடக்குவது?