புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆதரவை வெளிப்படுத்துங்கள் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

புலம்பெயர் தேசத்து உறவுகளே..! தமிழீழத்தில் இருந்து உங்களை நோக்கி அபாயச் சங்கு ஊதப்படுகின்றது. இந்தச் செய்தியைக் கேட்பதற்காக தயவுசெய்து உங்கள் காதுகளை கூர்மைப்படுத்துங்கள். உங்கள் மனங்களை வெறுமையாக்குங்கள். உங்கள் இதயத்தை தயார்படுத்துங்கள்.
எதிர்வரும் ஆவணி 05 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக ஆதரவுடன் வெற்றியடைய வைப்பதற்கு மகிந்த – கோட்டா அரசு பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றது.

சிங்கள அரசின் இந்த துரோகத்தனத்தை உடைத்தெறிந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை அமோக ஆதரவுடன் நாடாளுமன்றுக்கு அனுப்பவேண்டிய தேவை தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ்; மக்களுக்கு இருக்கின்றது என்பதை உரிமையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

$

இதற்காக புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சார்பாக அறிக்கை வெளியிட வேண்டும் என தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். அந்த அறிக்கை தமிழர் தாயகத்தில் பெரும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும்.

அதேபோன்று, புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தாயகத்தில் உள்ள தமது உறவுகளுக்கு உரிமையுடன் இந்த விடயத்தை எடுத்துரைக்கவேண்டும். உங்கள் கருத்திற்கு அவர்கள் செவிசாய்ப்பார்கள். இதை செயற்படுத்துங்கள்.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் சிங்கள தேசத்தால் பல கூறுகளாக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே தமிழர் தாயகத்தில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளையும் சிங்களம் கூறுபோட்டுவிட்டு நாடாளுமன்ற தேர்தலை அறிவித்திருக்கின்றது. தற்போது வடக்கு - கிழக்கு இனவாத, பிரதேசவாத, கட்சி பேத கருத்துக்களால் அதிர்ந்துகொண்டிருக்கின்றது. ஆவணி ஐந்தாம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் வரை தமிழர் தாயகம் உட்கட்சி மோதலாலும் சிங்கள இனவாதக் கருத்துக்களாலும் அதிர்ந்துகொண்டிருக்கப்போகின்றது.

ù

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழர் தாயகத்தில் பல கட்சிகள் போட்டியில் இறங்கியிருக்கின்றன. வடக்கே, பிரதானமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி போன்ற கட்சிகள் தமிழ்த் தேசியத்தின் வழிநிற்கும் கட்சிகள் போட்டியிடுகின்றன.

இவற்றை விட, அங்கஜன் இராமநாதனை முதன்மை வேட்பாளராகக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, திருமதி விஜயகலாவை முதன்மை வேட்பாளராகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி, கணேஸ் வேலாயுதத்தை முதன்மை வேட்பாளராகக் கொண்டு சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி போன்றன உள்ளடங்கலான பல கட்சிகளும் 14 சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.

அதேபோன்று, கிழக்கே ராஜபக்ச கூட்டணிக்கு ஆதரவான கருணா அணி, பிள்ளையான் அணி  போன்றன களம் இறக்கப்பட்டுள்ளன. அங்கும் தமிழ்த் தேசியத்தில் வழி நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் முதன்மையாக போட்டியில் உள்ளன.

வாக்களிப்பின்போது, இந்தக் கட்சிகளை சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தேவை தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்பதை இக்கட்டுரையின் ஊடாக சுட்டிக்காட்ட விளைகின்றோம். இக்கட்டுரையின் நோக்கம் தனிக் கட்சி ஆதரவு அல்ல. மாறாக தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பேரவா. தமிழ் மக்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க வேண்டும் என்ற ஆதங்கம். வரலாற்றுத் திருப்பம் ஒன்றிற்கு வலுச்சேர்ப்பதற்கான சிறு முயற்சியே இந்தக் கட்டுரை.

$ 

நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரத்தை எடுத்து நோக்கினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரச ஆதரவு பெற்ற கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.

எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்திற்காக பல கோடி ரூபாய்களை கொடுத்திருக்கின்றது. இந்த நிதியைப் பயன்படுத்தி அவர்கள் கண்மூடித்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு தினந்தோறும் தலா ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு, சிற்றுண்டிகள் மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு மதுபானம் கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றது கூட்டமைப்பு.

மேலும், அரசின் நேரடிப் பிரதிநிதிகளான அங்கஜன் இராமநாதனை விடவும் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசு அதிகமான ஆதரவு வழங்குகின்றது. தேர்தல் போஸ்ரர்களுடன் செல்லும் ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களைக் கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்துகின்ற சிறிலங்கா காவல்துறையினர் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை கண்டும் காணாமலும் விட்டிருக்கின்றனர்.

அதிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்குபற்றும் கூட்டங்களுக்கு பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்படுகின்றது. சுமந்திரன் எங்கு சென்றாலும் அவருக்கு விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பாக செல்கின்றனர். இந்த தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கூடிய வளத்தை பயன்படுத்துகின்றது.

இந்த தேர்தலில் களமிறங்கியுள்ள அனைத்து கட்சிகளையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. காரணம், சுதந்திர தமிழீழத்திற்காக முப்படை வைத்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்திய தமிழினம் இன்று முழுவதையும் இழந்து நட்டாற்றில் நிற்கின்றது.

மண்ணுக்குள் உறங்குகின்ற நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்திற்கு என்ன பதிலைக் கூறப்போகின்றார்கள் என்ற கேள்வி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழினத்தை குடைந்தெடுத்துக்கொண்டிருக்கின்றது. எந்தவித எதிர்பார்ப்புக்களும் இன்றி தலைவரையும் தளபதிகளையும் சக தோழர்களையும் தாம் நேசித்த தமிழ் மக்களையும் நம்பி களம் புகுந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தை உச்சரித்து களப்பலியாகிய அந்த புனிதர்களுக்கு தமிழர் தேசம் என்ன கைம்மாறு செய்யப்போகின்றது என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.

அந்த வீர மறவர்களின் கனவுகளை இன்றும் சுமந்துகொண்டிருப்பவர்கள் யாவர்? அந்த தியாகிகளுக்கு உண்மையான பற்றோடு தீபம் ஏற்றுபவர்கள் யாவர்? அந்த புனிதர்களை ஈன்ற பெற்றோருக்கு இன்றும் கரம்கொடுப்பவர்கள் யாவர்? அந்த புனிதர்கள் வாழ்ந்த மண்ணை எதிரியிடம் இருந்து மீட்க இன்றும் களமாடுபவர்கள் யாவர்? அந்த வீரர்களின் பெயரால் கடத்தப்பட்டவர்களுக்கு இன்று வரை நீதி கோருபவர்கள் யாவர்? தமிழர்களின் தொன்மைகளை பாதுகாப்பதற்கும் தமிழர்களின் வரலாறுகளை மீள நிறுவுவதற்கும் பாடுபடுபவர்கள் யாவர்?

மேற்படி கேள்விகளுக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் தொண்டர்களும் என்பதே தற்போதுள்ள விடையாக இருக்கின்றது.

ஆக, தேர்தலுக்காக மட்டுமன்றி, அரசியலுக்கு அப்பால், மாவீர்களையும் போராட்டத்தையும் தேசியத் தலைவரின் இலட்சியத்தையும் மனதில் சுமந்து அப்பளுக்கு இல்லாமல் பணியாற்றும் ஒரு கட்சியாக, ஒரு கட்டுக்கோப்புள்ள அரசியல் அமைப்பாக தற்போது இருப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே.

அக்கட்சி இன்னும் சில, பல விடயங்களில் தம்மை வளர்த்துக்கொள்ளவேண்டிய தேவைகள் இருப்பினும் தற்போது உள்ள தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவாக இருக்கவேண்டிய கட்சி என்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர வேறு கட்சிகளை அடையாளப்படுத்த முடியாது.

2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையே சமாதா உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புலிகளின் நேரடி அரசியல் முகங்களாக களம் இறக்கப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் போன்றோர் அக்கட்சியின் ஸ்தாபகர்களாக உள்ளனர்.

இவர்களை உள்ளே வைத்திருந்தால் தொடர்ந்தும் புலிப் புராணம் பாடுவார்கள், புலிகளுக்காக வக்காளத்து வாங்குவர் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஆம் ஆண்டு இவர்களை வெளியேற்றியது. இவர்கள் வெளியே வந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கள அரசுக்கு சார்பான நிலைப்பாட்டுடன் இயங்கத் தொடங்கி இன்றுவரை அதையே செய்துகொண்டிருக்கின்றது.

புலிகள் தமது நலன்களுக்காக மட்டுமே போராடுகின்றனர், அவர்கள் மட்டும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை எனக் கூறிய சிங்கள தேசம் புலிகள் இல்லாத நிலையிலேயே தமிழ் மக்களுக்கு தாம் தீர்வை வழங்குவார்கள் எனக் கூறிய சிங்கள தேசம், புலிகள் இல்லாமற்போய் 10 ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும் இன்றுவரை தீர்வை முன்வைக்கவில்லை.

இந்நிலையில், அரசமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவோம் எனக் கூறிய சிங்கள தேசம் மீண்டும் ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முன்னுரிமை கொண்ட புதிய அரசமைப்பை வரைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்து, அவர்களின் ஆதரவோடு தயாரிக்கப்பட்ட இந்த புதிய அரசமைப்பை எப்படியாவது நாடாளுமன்றில் சமர்ப்பித்து ஆதரவு பெற்று அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் சிங்கள தேசம் குறியாக நிற்கின்றது.

சம்பந்தரின் தலைமையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும், இல்லையேல் எப்போதுமே தீர்க்க முடியாது என சிங்களத் தலைவர்களே கூறும் அளவிற்கு சிங்கள மக்கள் கொடுப்பதை கண் மூடிக்கொண்டு வாங்கக்கூடியவர்களாகவே கூட்டமைப்பினர் காணப்படுகின்றனர்.

இதற்காகத்தான் வருகின்ற தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியடையவேண்டும் என எதிர்பார்க்கின்ற சிங்கள தேசம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒருவர் கூட தெரிவுசெய்யப்படக்கூடாது என்பதில் குறியாக இருக்கின்றது.

முன்னணியில் எவரேனும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகினால் நாடாளுமன்றில் கடும் அழுத்தம் கொடுப்பார்கள், தாங்கள் கொண்டுவருகின்ற எந்த விடயத்திற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள், மக்களின் பிரிதிநிதிகளாக ஐ.நா மன்றுக்கு சென்று இனப்படுகொலைக்கு நீதி கேட்பார்கள் போன்ற பல்வேறு விடயங்களை முன்வைத்து சிங்கள தேசம் கடும் நிலைப்பாட்டில் உள்ளது.

எதிர்வரும் தேர்தல் அன்றுகூட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான நிலைப்பாட்டை அரசு அநாமதேய ஊடக அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தலாம். மக்களை திசைதிருப்புவதற்கான உத்தியை அரசு கையாளும்.
தமிழர் தாயகத்தில் தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு அலை பெருகிக்கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமன்றி, சிங்கள தேசமும் சினங்கொண்டுள்ளது. முன்னணிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட கிடைக்காமல் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களில் அரசு ஈடுபட்டுள்ளது.

புலம்பெயர் தேசத்து உறவுகளே…
இது சிந்தித்து செயலாற்றுவதற்கான நேரம். கடந்த காலத்தில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை கட்டியெழுப்புதற்கு தேசியத் தலைவருக்கு கரம்கொடுத்த நீங்கள், இன்று அவரது வழியில் நிற்கும் முன்னணிக்கு வாக்களிக்குமாறு தாயகத்தில் உள்ள உங்கள் உறவுகளைக் கோர முழு உரித்தும் உடையவர்கள். புலம்பெயர் தேசத்தில் இயங்குகின்ற தமிழ்த் தேசிய அமைப்புக்களும் அறிக்கைகள் மூலம் உங்கள் ஆதரவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியத்திற்காகவும் தமிழீழ மக்களின் விடுதலை மற்றும் சுதந்ததிரத்திற்காகவும் எவனொருவன் அப்பளுக்கில்லாமல் பணியாற்றுகின்றானோ அவனை அரவணைக்கவேண்டியது எமது கடமை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.