சத்தியத்தின் வழிநிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - கலாநிதி சேரமான்

சிறீலங்கா நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் இன்னும் 10 நாட்களில் (05.08.2020) நடைபெற இருக்கும் நிலையில், தமது வாக்குகள் யாருக்கானது என்பதை சிங்கள – பௌத்தர்கள் தீர்மானித்து விட்டார்கள்.

ஆனால் இவ்வாறான தெளிவான நிலைப்பாட்டுடன் தமிழர்கள் இல்லை என்பதையே தமிழர் தாயகத்தில் இடம்பெறும் தேர்தல் பரப்புரைகளும், புலம்பெயர் தேசங்களில் இயங்கும் இணையத் தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அனல்பறக்க நிகழ்ந்தேறி வரும் விவாதங்களும் பட்டவர்த்தனமாக்குகின்றன. இக் குழப்ப நிலைக்கு இராஜவரோதயம் சம்பந்தரின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதலிருந்து பிரிந்து உருவாகிய கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுமே காரணமாகும்.

^^

ஆயுதப் போராட்டம் இயங்கு நிலையில் இருந்த பொழுது உருவாக்கப்பட்ட நான்கு கட்சிகளின் கூட்டணி தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. 28.10.2001 அன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து இக் கூட்டமைப்பை உருவாக்கின. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாயின், தமிழீழ விடுதலைப் புலிகளோடு மட்டுமன்றி அனைத்துத் தமிழ்க் கட்சிகளோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று அன்றைய சிறீலங்கா அதிபர் சந்திரிகா அம்மையார் செப்படி வித்தை காட்டி வந்த காலப்பகுதி அது. அக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இன்றைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரசே கொண்டிருந்தது.

சிங்கத்தின் குகையில் நின்று சீறிய தனது தந்தையான மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் வழித்தடம் நடந்து, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவரது தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கொள்கை பிறழாது நேர்வழியில் நின்றது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாக நின்ற ஒரேயொரு அரசியல்வாதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மட்டும் தான்.

o

ஏனைய மூன்று கட்சிகளில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் காலத்தில் இருந்தே இரட்டை வேட அரசியல் செய்த கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டமைக்காக 13.07.1989 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் அமிர்தலிங்கத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மிதவாத அரசியலின் பெயரில் தமிழ்த் தேசியத்தை விற்றுப் பிழைத்து வந்த கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி.

சமாதானத்திற்கான போர் என்ற மகுடத்தின் கீழ் தமிழர் தாயகத்தில் சந்திரிகா அம்மையாரின் அரசாங்கம் முன்னெடுத்து வந்த இனவழிப்பு யுத்தத்திற்கு முண்டுகொடுத்த கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி. தீர்வுப் பொதி என்ற பெயரில் சந்திரிகா அம்மையார் அரங்கேற்றிய பொம்மலாட்டத்தில் ஆட்ட நாயகர்களாக விளங்கியவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அன்றைய தலைவர்களான மு. சிவசிதம்பரம், நீலன் திருச்செல்வம், வீ.ஆனந்தசங்கரி, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்த ஒரே ஒரு அரசியல்வாதி ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் மட்டுமே ஆவார். ஏனையோர் சந்திரிகா அம்மையாருக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள்.

k

இவ்வாறு சந்திரிகா அம்மையாருக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான நீலன் திருச்செல்வம், 29.07.1999 அன்று கொழும்பில் இடம்பெற்ற மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாகவே ஐந்து மாதங்கள் கழித்து 05.01.2000 அன்று கொழும்பில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தந்தையான மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் கைக்கூலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

மறுபுறத்தில் சிறீலங்கா படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், தென்னிலங்கையிலும் தலைமறைவாக இயங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளையும், ஆதரவாளர்களையும் இலக்கு வைத்துப் படுகொலைகளை அரங்கேற்றிய சிங்களப் படைகளின் ஒட்டுக்குழுக்கள் தான் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவை. அதாவது நான்காம் கட்ட ஈழப்போரில் கருணா, பிள்ளையான், ஈ.என்.டி.எல்.எவ், புளொட், ஈ.பி.டி.பி ஆகிய ஒட்டுக்குழுக்கள் அரங்கேற்றிய படுகொலைகள், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு நிகரான கொலை வெறியாட்டங்களை இந்தியப் படைகளின் காலத்திலும், மூன்றாம், நான்காம் கட்ட ஈழப்போரின் பொழுதும் அரங்கேற்றிய ஒட்டுக்குழுக்களே ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்றவை ஆகும். இவற்றின் பிரமுகர்கள் பலர் அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்தவர்கள்.

l

ஓயாத அலைகள் மூன்றின் நான்கு கட்ட நடவடிக்கைகள் மூலம் வடதமிழீழத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும் பகுதியையும், ஆனையிறவையும், யாழ் தென்மராட்சி தெற்கு, வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி, மன்னார் சிலாவத்துறை ஆகிய பிரதேசங்களை மீட்டெடுத்தும், சிங்களப் படைகளின் ஆட்பலத்தை யாழ்ப்பாணத்திற்குள் முடக்கியதன் மூலம் தென்தமிழீழத்தில் திருமலை மூதூர் கிழக்கு, கடவாணைக்குளம், நிலாவெளி வடக்கு, மட்டக்களப்பு வாகரை, படுவான்கரை, அம்பாறை திருக்கோவில், கஞ்சிக்குடிச்சாறு ஆகிய பகுதிகளை விடுவித்தும் ஒரு பலம்பொருந்திய அரசியல் சக்தியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவெடுத்திருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளைப் புறந்தள்ளி வாக்கு அரசியலில் ஈடுபடுவது இனியும் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் நிலைப்பாட்டைப் பின்பற்றித் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்பதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய ஒட்டுக்குழுக்களும் இணங்கின. இது தான் 28.10.2001 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்றுக் கொண்டமைக்கும், 2001 மார்கழி மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பொழுது தமிழர் தாயகப் பகுதிகளில் பரப்புரை செய்வதற்கும் அனுமதி வழங்கியமைக்குக் காரணமாகும்.

k

அன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வழியில் தமது அரசியல் செல்நெறியைத் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய ஒட்டுக்குழுக்களும் சீரமைத்திருக்கத் தவறியிருப்பின், அடுத்து வந்த காலப்பகுதிகளில் இந்த மூன்று அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் இருந்து முற்றாக அகற்றப்பட்டிருக்கும்: அல்லது ஈ.பி.டி.பி, கருணா குழு, பிள்ளையான் குழு போன்ற ஒட்டுக்குழுக்களுக்குப் போட்டியாக இவை பரிணமித்திருக்கும்.

இது தான் யதார்த்தம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இடமளித்தமைக்கு முக்கிய காரணம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் முரண்பாடான பல குரல்களில் ஒலிக்காது, ஒருமித்த குரலில் ஒலிக்க வேண்டும் என்பதாகும்.

மற்றும்படி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அனைத்துலக அரங்கில் இராசரீக வழிகளில் முன்னெடுத்துச் செல்லும் சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்று எந்தக் காலப்பகுதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்பார்த்திருக்கவில்லை. அதற்கான தேவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இருக்கவில்லை.

ù

ஏனென்றால் இப் பணியை தனியொருவராக இலண்டனில் இருந்தவாறு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் முன்னெடுத்து வந்தார். கொடிய நோய் வாட்டி வதைத்த பொழுதும், இலண்டன் ஸ்றெதம் பகுதியில் உள்ள சிறிய வீடொன்றில் தனது துணைவி கலாநிதி அடேல் பாலசிங்கம் அவர்களின் உதவியுடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இராசரீக அரங்கில் முன்னகர்த்தும் பணிகளை பாலா அண்ணை முன்னெடுத்தார். அவருக்குப் பக்கபலமாக, அவரது வழிகாட்டலில் புலம்பெயர் தேசங்களில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள் இராசதந்திரிப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

இதே பணிகளை கொழும்பு இராசதந்திர வட்டாரங்களில் தான் உயிரோடு இருக்கும் வரை மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களே புரிந்து வந்தார். அவரது படுகொலைக்குப் பின்னர் அப் பணிகளை அவரது புதல்வரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே முன்னெடுத்தார். 26 வயது இளைஞனாக விளங்கிய பொழுதும் கூட, கொழும்பு இராசதந்திர வட்டாரங்களில் அக்காலப்பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் முன்னெடுத்த இராசதந்திரப் பணிகள் சாதாரணமானவையல்ல.

எனவே இராசதந்திரக் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவை அன்றும் சரி, ஆயுதப் போராட்டம் இயங்கு நிலையை நிறுத்திய 18.05.2009 வரைக்கும் சரி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்தது கிடையாது.

அது மட்டுமல்ல: அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக விளங்கிய இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாமனிதர் ஜோசப் பரராஜாசிங்கம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி (கஜேந்திரகுமாரின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் அங்கம் வகித்தவர்), மாமனிதர் நடராஜா ரவிராஜ் போன்ற ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சரிவர ஆங்கிலம் பேசத் தெரியாது. இதில் ஒரு நகைச்சுவையான விடயமும் உண்டு.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராசதந்திரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுடன்ற உறுப்பினர்களுடன் அடிக்கடி சந்திப்புக்களை நடத்தும் பொழுது, அவர்கள் கூறும் விடயங்கள் அங்கிருக்கும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சரிவரப் புரிவதில்லை. இப்படியான கூட்டங்களின் பொழுது பின்வரிசையில் இருந்தவாறு ம.க.சிவாஜிலிங்கம் சத்தமாகக் கூறுவாராம்: ‘சம்பந்தன் ஐயா, எங்களுக்கும் விளங்கிற மாதிரி தமிழிலை ஒருக்கால் மொழிபெயர்த்துச் சொல்லுங்கோ.’

அப்படிப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்து எப்படியான இராசதந்திரத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்க முடியும்?

ஆக தமது பொம்மை அமைப்புக்களாக மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவை சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இயங்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்பார்த்தார்களே தவிர, தமிழ்த் தேசிய அரசியலை முன்னகர்த்திச் செல்லும் சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பொழுதும் எதிர்பார்க்கவில்லை. இது பற்றி 05.12.2002 அன்று ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளின் பொழுது சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்திருந்தார். அதாவது தமிழ்த் தேசிய அரசியலைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை முன்னகர்த்திச் செல்லும் என்றும், நாடாளுமன்றத்தில் தாம் சொல்லும் படி பேசுவது மட்டும் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணி என்றும் பாலா அண்ணை குறிப்பிட்டிருந்தார்.

இதனால்தான் ஒரு அரசியல் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை. அவ்வாறான கோரிக்கையை 2004ஆம் ஆண்டு சித்திரை மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அன்றைய நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை வீ.ஆனந்தசங்கரி பிரித்துச் சென்ற பின்னர் தமிழரசுக் கட்சிக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்கொடுத்து இரா.சம்பந்தரை அக்கட்சியின் தலைவராக்கிய பின்னர்) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் முன்வைத்த பொழுது, ஒரு அதிகாரபற்றற்ற கூட்டமைப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கினாலே போதும் என்று, ஒரு அதிகாரபூர்வ கூட்டமைப்பாக அது பதிவு செய்யப்படுவது அவசியமற்றது என்றும் தேசியத் தலைவர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வளவு காலத்திற்குத் தமிழ்த் தேசியத்திற்கு உறுதுணையாக நிற்கும் என்ற சந்தேகம் தமிழீழ விடுதலைப்; புலிகளின் தலைமைக்கு நீண்ட காலமாகவே இருந்தது. இதனால் தான் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கு உறுதுணையாக யாழ் பல்கலைக் கழகத்தில் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய செல்வராஜா கஜேந்திரன் அவர்களையும், பத்மினி சிதம்பரநாதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ தேசியத் தலைவர் இணைத்துக் கொண்டார்.

18.05.2009 அன்று ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்றுத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்குநிலையை நிறுத்திக் கொண்ட பொழுது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இவர்களை வெளியேற்றும் கைங்கரியத்தையே இரா.சம்பந்தன் அவர்கள் புரிந்தார். இவர்களின் இடத்திற்கு மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரனைக் கொண்டு வந்தார். இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட ஈழப்போர்களில் கொலை வெறியாட்டங்களையும், பாலியல் வன்புணர்ச்சிகளையும் புரிந்த புளொட் ஒட்டுக்குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக்கினார். அன்றும் சரி, இன்றும் சரி, தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை அனைத்துலக அரங்கில் முன்னகர்த்தும் இராசரீக ஆளுமை தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்தது கிடையாது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சம்பந்தரையும், சுமந்திரனையும் தவிர பெரும்பாலானவர்களுக்கு ஒழுங்காக ஆங்கிலம் பேசத் தெரியாது. அப்படிப்பட்டவர்கள் எப்படி ஐ.நா. மன்றிலும் சரி, ஏனைய இராசரீக தளங்களிலும் சரி தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தையும், இனவழிப்பிற்கான நீதியையும் வென்றெடுக்க முடியும்?

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாகவும், தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தும் இயங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலை அவ்வாறு அல்ல. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமன்றி ஆங்கிலப் புலமையும், இராசதந்திர ஆளுமையும் படைத்த பலர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இல்லாதிருப்பது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மட்டும் தான்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலும் சரி, இனிவரப் போகும் ஆண்டுகளில் கட்டவிழப் போகும் எந்த நாடாளுமன்றத் தேர்தல்களும் சரி, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் தேர்தல்களாக அமையப் போவதில்லை. பிள்ளையாருக்குத் திருமணம்; நடந்த கதை போன்று தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் கதையும் இருக்கப் போகின்றது.

சரி, அப்படி என்றால் இத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும், அவரது தலைமையில் களமிறங்கியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் வெற்றியீட்ட வைப்பதன் மூலம் தமிழ் மக்கள் எதனை சாதிக்க முடியும் என்ற கேள்வி உங்கள் வாசகர்களுக்கு எழலாம்.

தமிழர் தாயகத்திலும் சரி, சிறீலங்கா நாடாளுமன்றத்திலும் சரி, அனைத்துலக அரங்கிலும் சரி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கக் கூடிய வலுவான அரசியல் தலைமை இன்று இல்லை. இவ்விடத்தை நிரப்பி, ஒருமித்த குரலில் தாயகத்திலும், சிறீலங்கா நாடாளுமன்றத்திலும், அனைத்துலக அரங்கிலும் தமிழ் மக்களின் ஆணைபெற்ற தலைமையாகக் குரல்கொடுக்கும் ஆளுமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும், அவருக்குப் பக்கபலமாக நின்று செயற்படும் செல்வராஜா கஜேந்திரன் போன்றவர்களுக்கும் உண்டு.

எல்லாவற்றையும் விட, தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு புரிந்த இனவழிப்பில் தனது தந்தையான மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களைப் பறிகொடுத்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவரது தந்தையைப் படுகொலை செய்தவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. எனவே தமிழின அழிப்பிற்குப் பன்னாட்டு நீதிவிசாரணை மூலம் நீதி கிட்ட வேண்டும் என்பதில் தமது உறவுகளைப் பலிகொடுத்த ஒவ்வொரு தமிழர்களையும் போன்று கஜேந்திரகுமாருக்கும் ஆழ்ந்த பற்றுறுதி உண்டு.

தனது சொந்த சுகபோகங்களுக்காக சிறீலங்கா அரச இயந்திரத்திற்கு முண்டு கொடுத்துத் தனது இரண்டு பிள்ளைகளையும் சிங்களப் பெண்களுக்கு மணம்முடித்துக் கொடுத்து விட்டு ஓய்வூதியம் பெறும் வயதில் அரசியலுக்கு வந்த சி.வி.விக்னேஸ்வரன் அவர்களாலோ, அன்றி அவருக்குப் பரிவட்டம் கட்டி நிற்போராலே செய்ய முடியாத இராசரீகப் பணிகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஆங்கிலப் புலமையும், இராசரீக அனுபவமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு உண்டு.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 18.05.2009 இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை அழித்து விடுவதற்காக இந்தியப் புலனாய்வாளர்களுடன் இணைந்து சிறீலங்கா அரசாங்கத்தால் புலம்பெயர் தேசங்களில் களமிறக்கப்பட்ட தலைமைச் செயலகம் (ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணைக் கும்பல்), நீலன் அணி போன்ற சிங்கள ஒட்டுக்குழுக்களும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலக சாம்ராச்சியமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கபளீகரம் செய்தவர்களும் இன்று உறுதுணையாக நிற்பது இரா.சம்பந்தரின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய இந்தியப் பின்புலத்துடன் இயங்கும் கட்சிகளுடனேயே.

எனவே தமிழ் மக்களின் உரிமைக் குரல் தமிழர் தாயகத்திலும், சிறீலங்கா நாடாளுமன்றத்திலும், அனைத்துலக இராசரீக களத்திலும் ஓயாது ஒலிக்க வேண்டுமாயின், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியைத் தாயகத்தில் உள்ள தமிழர்கள் உறுதிசெய்ய வேண்டும். தேசியத் தலைவர் அவர்கள் அடிக்கடி நினைவூட்டிக் கொள்வது போன்று சத்தியத்தின் சாட்சியாக நின்று மாவீரர்களின் தியாக வரலாறு என்றும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்லும். அந்த சத்திய வழியில் நின்று செயற்படக் கூடிய ஒரே கட்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே.