செய்திகளும், எழும் கேள்விகளும் - மாயவள்

செய்தி: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அமுக்கி வைத்திருந்து அவற்றை சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு தாரை வார்த்த கும்பல் கோரியுள்ளது.

கேள்வி: தள்ளாத வயதில் நாடாளுமன்றம் சென்று விக்னேஸ்வரன் என்ன தான் செய்யப் போகின்றார்? பேசாமல் அவரது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்குக் கிடைத்துள்ள ஆசனத்தைக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை இவர்கள் மேற்கொள்ளலாமே?

.....................................

செய்தி: தமிழ்த் தேசியம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதையே தேர்தல் முடிவுகள் புலப்படுத்துவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் கவலை வெளியிட்டுள்ளார்.

கேள்வி: தேர்தலில் தோல்வியடைந்த தான் வகிக்கும் பொதுச் செயலாளர் பதவி நெருக்கடிக்கு ஆளாகியிருப்பது அவருக்குத் தெரியவில்லையோ?

.....................................


செய்தி: சிங்களப் பகுதிகளில் படுதோல்வியைத் தழுவிய சிறீலங்கா சுதந்திரக் கட்சி, யாழ்ப்பாணத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

1

கேள்வி: கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய அங்கஜன் இராமநாதன் இனி கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவாரோ?

.....................................

செய்தி: சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இணைக்கப்பட்டுள்ளார்.

கேள்வி: அடுத்த லக்ஸ்மன் கதிர்காமர் களமிறக்கப்படுகின்றாரோ?

.....................................

செய்தி: நாட்டின் பொருண்மிய மேம்பாட்டிற்காக கோத்தபாய ராஜபக்சவின் தலைமையின் கீழ் செயற்படுவதில் தான் உறுதிபூண்டிருப்பதாக பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறீசேன சூளுரைத்துள்ளார்.

கேள்வி: அப்படி என்றால் மகிந்தருக்கு செய்தது போல் எப்பொழுது கோத்தபாயவுடன் அப்பம் உண்டு அவருக்கு ஆப்பு வைக்கப் போகின்றார்?

.....................................

செய்தி: ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

கேள்வி: வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய பொழுதெல்லாம் தளராமல் மரத்தில் ஏறி மீண்டும் மீண்டும் அதனைத் தோளில் சுமந்து வந்த விக்கிரமாதித்தனின் கதையை காரியவாசம் பல முறை படித்திருப்பாரோ?