ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் - பிலாவடிமூலைப் பெருமான்

வணக்கம் பிள்ளையள்.

இண்டைக்கு நான் வலு குசியாக இருக்கிறேன்.

போன முறை உங்களுக்குச் சொன்னனான்: இந்த முறை நல்ல செய்தியோடுதான் உங்களை நான் சந்திப்பன் என்று. நான் உங்களுக்குச் சொல்லி வைச்ச மாதிரியே போன கிழமை நல்ல செய்தி வந்திட்டுது.

தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்ரை தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டது எண்ட செய்தி என்ரை காதிலை தேன் வந்து பாய்ந்த மாதிரி இருந்தது பிள்ளையள்.

அந்த சந்தோசத்திலை நான் இருக்கேக்குள்ளை அடுத்த நாள் எங்கடை சுமந்திரன் மாத்தையா ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியைக் கேட்டுப் போட்டு நான் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டன். அந்த அளவுக்கு அவர் சொன்ன குசும்புகள் இருந்தது என்றால் பாருங்கோவன்.

1

உவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளை கொண்டு வருகிறதுக்காகத் தான் எங்கடை தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும், செல்வராஜா கஜேந்திரனையும் கட்சியை விட்டுப் பத்து வருசத்துக்கு முதல் உந்தக் கிழட்டுச் சம்பந்தர் தூக்கியெறிஞ்சவர்.

ஒட்டகம் புகுந்த கூடாரம் போல், ஆமை புகுந்த வீடு போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைச்சுச் சின்னாபின்னமாக்கிப் போட்டு இப்ப என்ன எண்டால் தங்களோடை வந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை வந்து சேரச் சொல்லி அம்மான் அழைப்பு விடுக்கிறாராம்.

எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு...

பின்னை என்ன பிள்ளையள்? ஒற்றுமை பற்றிக் காகங்கள் பேசலாம். ஓநாய்கள் பேசலாமோ? கதைக்க வேணும் என்கிறதுக்காக வாயிலை வந்தது எல்லாத்தையும் கதைக்கக் கூடாது. ஏற்கனவே மாமனிதர் ரவிராஜின்ரை மனுசி சசிகலாவுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளில் ஏதோ குளறுபடி செய்து தான் உவரே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்று சசிகலாவின்ரை மகள் சொல்லியிருக்கிறா.

உதுக்குள்ளை ஒற்றுமை பற்றி இவர் லெக்சர் எடுக்கிறாராம்.

7

கத்தி இல்லை, கேடயம் இல்லை, ஆனால் தான் ஒரு தளபதி என்று சொன்ன மாதிரித் தான் இவரின்ரை கூத்துகள் இருக்குது பிள்ளையள்.

ஆனாலும் உந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதுவும் வேணும், இன்னும் வேணும். ஏதோ தாங்கள் தான் தமிழ் மக்களின்ரை ஏகோபித்த பிரதிநிதிகள் என்கிற மாதிரி எல்லே ரீல் விட்டுக் கொண்டு திரிஞ்சவையள்.

ஒரு காலத்திலை ஈழத்தமிழ் மக்களின்ரை ஏகோபித்த பிரதிநிதிகளாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த மாதிரித் தாங்களும் இருக்கிறதாகத் தான் கடந்த பத்து வருசமாக இவைளயள் மிதப்பிலை கிடந்தவையள்.

நானும் தெரியாமல் தான் கேட்கிறேன். உவர் சம்பந்தர் என்ன எங்கடை தம்பி பிரபாகரனோ? இல்லாட்டி அவரின்ரை பட்டத்து இளவரசன் சுமந்திரன் என்ன தம்பி அன்ரன் பாலசிங்கமோ? சரி அது தான் போகட்டும். உவர் சிறீதரன் என்ன தளபதி பால்ராஜோ? சும்மா கண்ட கண்ட கழிசறையள் எல்லாம் தமிழர் தேசத்தின்ரை தலைமை என்று பீற்றிக் கொண்டு திரிஞ்சால் அதை எத்தனை காலத்துக்குத் தான் எங்கடை சனம் பொறுத்துக் கொண்டு இருக்கும்? எல்லாத்துக்கும் எல்லை உண்டு, சரியே?

4

அது தான் இந்தத் தேர்தலில் உந்த கூத்தமைப்புக்காரருக்கு எங்கடை சனம் சரியான பாடத்தைப் புகட்டியிருக்குது. இருபத்தைந்து இலட்சம் பேரைப் பதினொரு வருசத்துக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்றால் இருபத்தைஞ்சு இலட்சம் பேரிலை எல்லோரும் ஏமாந்த சோணகிரிகளே?

நீங்களே சொல்லுங்கோ பிள்ளையள். ஒரு ஊருக்கு ஒரு வழி தான் இருக்குமே? அது தான் இப்ப தம்பி கஜேந்திரகுமாரின்ரை தலைமையிலான புதிய அரசியல் பாதையை எங்கடை சனம் அடையாளம் கண்டிருக்குது.

உதுக்குள்ளை விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, தங்களுக்கு ஏற்பட்டிருக்கிற தோல்வியைத் தாங்கள் உணர்ந்து கொள்கிறதாகவும், தமிழரசுக் கட்சியிலை மாற்றங்களைச் செய்து அடுத்த முறை தாங்கள் வெல்லப் போவதாகவும் அம்மான் சூளுரைத்திருக்கிறார்.

ஓமோம், இனி ஐந்து, ஆறு வருசங்களுக்கு பிறகுதானே அடுத்த தேர்தல் வரும் என்கிற நம்பிக்கையில் இப்ப எதையும் பேசலாம் தானே பாருங்கோ.

ஆனாலும் உந்த சுமந்திரன் சும்மா லேசுப்பட்ட ஆள் இல்லைப் பிள்ளையள். தமிழரசுக் கட்சியில் மாற்றங்களைச் செய்யப் போவதாக அவர் சொல்கிறதின்ரை அர்த்தம் மாவை சேனாதிராஜாவையும், கி.துரைராசசிங்கத்தையும் தூக்கப் போகிறார் என்பது தான் பிள்ளையள்.

தமிழரசுக் கட்சியின்ரை தலைவரும், பொதுச் செயலாளரும் தோல்வியடைந்து விட்டீனம் எண்டு மனுசன் தன்ரை பேட்டியில் அப்பட்டமாக சுட்டிக் காட்டினத்தின்ரை சூட்சுமமும் இது தான்.

இதுக்குள்ளை இன்னுமொரு சந்தேகமும் இருக்குது.

தேர்தல் முடிவுகளில் உவர் ஏதோ கோக்கு மாக்குத்தனம் செய்கிறார் என்று தெரிஞ்சதும் சசிகலா அம்மையாருக்கு ஆதரவாக யாழ் மத்திய கல்லூரியில் குரல் கொடுத்தது மாவை சேனாதிராஜாவின்ரை மகனாம்.

அவருக்குத் தான் எஸ்.ரி.எப் ஐயும், பொலிசுக்காரனுகளையும் வைச்சு சுமந்திரன் அடி போட்டவராம். அடி எண்டால் சும்மா அடியில்லை பிள்ளையள். மாவையரே தன்ரை மகனுக்குக் கைநீட்டுகிறதில்லையாம். அப்பிடிப்பட்ட தன்ரை மகன் கலையமுதனை ஆமிக்காரங்களையும், பொலிஸ்காரங்களையும் வைச்சு சுமந்திரன் மொங்கு மொங்கென்று மொங்கி விட்டார் என்று கிழட்டுச் சம்பந்தரிட்டை மாவையர் ஒப்பாரி வைச்சவராம்.

எது எப்பிடியோ. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் என்கிற கதையாகத் தான் இண்டைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்குது.

அந்த நாளில் என்ரை ஆச்சி சொன்னாள் பழமொழி. அதுக்கு ஏற்ற மாதிரி இண்டைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலை ஒன்பது பேர் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்திருக்கீனம். உதுக்குள்ளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்ரை தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டிருக்கிற பத்தாவது ஆளை நாங்கள் பெரிசாகக் கணக்கெடுக்கத் தேவையில்லை.

உந்த ஒன்பது மாலுமிகள் ஓட்டுகிற ஓட்டைக் கப்பலோடை கூட்டுச் சேர்ந்து கடலுக்குள் மூழ்கிறதுக்கு எங்கடை தம்பி கஜேந்திரகுமாரின்ரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு என்ன வேறை வேலை இல்லையே?

வேணும் என்றால் தங்களோடை விக்கினேஸ்வரனை உவையள் சேர்த்துக் கொள்ளட்டும். எப்பிடியோ பாராளுமன்றத்திலை கிழட்டுச் சம்பந்தரும், விக்னேஸ்வரனும் குறட்டை அடிக்கத் தானே போகீனம். கொட்டாவி விடுகிறதையும், குறட்டை அடிக்கிறதையும் தவிர இந்த வயதிலை உந்த இரண்டு நைன்ரியளுக்கும் வேறை என்ன வேலை இருக்கப் போகுது?

அதுக்காக பிலாவடிமூலைப் பெருமான் என்கிற நைன்ரி என்ன செய்யுது என்று கேளாதையுங்கோ. எனக்காவது ஈபேப்பர் வாசிக்கத் தெரியும், சரியே,

வேறை என்ன? அடுத்த முறை இன்னும் கொஞ்ச குசும்புகளோடை வாறன்.