உயிரூட்டம் பெறும் தமிழர்களின் உரிமைக் குரல் - கலாநிதி சேரமான்

கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக உறங்கு நிலையில் இருந்த தமிழ்த் தேசியத்தின் ஆன்மா மீண்டும் உயிரூட்டம் பெற்றிருப்பதையே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

நாடாளுமன்ற அரசியல் ஊடாகத் தமிழர்களின் உரிமைகளை எந்தக் காலத்திலும் வென்றெடுக்க முடியாது என்பது இப்பத்தி எழுத்தாளரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஐம்பது விழுக்காடு உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சிறீலங்கா நாடாளுமன்றம் இயங்குமாயின் கதை வேறு.

4

ஆனால் யதார்த்தம் அவ்விதமாக இல்லை. நாடாளுமன்ற அரசியல் ஊடாகத் தமிழர்கள் எதையாவது சாதிக்க வேண்டுமாயின் அதற்கு ஒன்றில் தமிழர்களின் உரிமைகளைத் தாமாகவே முன்வந்து வழங்குவதற்கு சிங்கள அரசியல் தலைவர்களும், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள வாக்காளர்களும், பௌத்த பிக்குகளும் முன்வர வேண்டும். அவ்வாறு இல்லையாயின் சிங்கள-பௌத்த ஆட்சியாளர்களின் கைகளை முறுக்கும் பலப்பிரயோகத்தை அவர்கள் மீது வலிமை வாய்ந்த உலக நாடொன்று மேற்கொள்ள வேண்டும். இதில் முதலாவது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை. இரண்டாவது இப்போதைக்கு சாத்தியமில்லை எனலாம்.

அது எப்போதாவது சாத்தியமாகுமா என்பதை எதிர்காலத்தில் ஈழத்தீவை மையப்படுத்தி வல்லரசுகளிடையே எழக்கூடிய போட்டிகள் தீர்மானிக்கலாம்.

எனவே நாடாளுமன்ற அரசியல் ஊடாகச் சமஸ்டித் தீர்வைத் தமிழர்கள் பெறுவது என்பது கானல்நீரில் ஓடும் காகிதக் கப்பல் போன்றது தான்.

4

அது மட்டுமல்ல: அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய அளவிற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ராஜபக்ச சகோதரர்கள், மாகாண சபைகளை உருவாக்கிய பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இனி வரும் காலத்தில் நீக்கினால் கூட நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நீக்குவது பற்றிப் பரிசீலிக்க வேண்டி வரும் என்று மேற்குலக இராசதந்திரிகளிடம் கடந்த ஆண்டு பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இன்றைய சூழமைவில் நாடாளுமன்றத்திற்குள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டிருக்கும் களமிறக்கம் தமிழ் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பல்வேறு விதமான அனுகூலங்களைக் கொண்டிருக்கின்றது.

5

கடந்த பத்தாண்டுகளாக நாடாளுமன்ற அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்தது ரணில் விக்கிரமசிங்கவிற்கு சாமரம் வீசியது மட்டும் தான். 2009ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் தமிழினப் படுகொலையாளி பொன்சேகா களமிறங்கிய பொழுது அவருக்குப் பரிவட்டம் கட்டியதன் மூலம் ரணிலிற்கு சம்பந்தரும், அவரது பரிவாரங்களும் சாமரம் வீசின. பின்னர் 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறீசேனவை ஆட்சிக்குக் கொண்டு வந்து அவர் மூலம் ரணில் பிரதமராகிய பொழுதும், அதே சாமரம் வீசும் கைங்கரியத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் புரிந்தது. அடுத்த தீபாவளிக்குள் சமஸ்டித் தீர்வு வரும், தைப்பொங்கலுக்குள் தமிழர்களுக்கு நல்ல செய்தி வரும் என்றெல்லாம் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் சம்பந்தர் முழங்கினாரே தவிர, நடைமுறையில் அவரோ, அவரது பரிவாரங்களோ எதையும் செய்யவில்லை.   

இன்று தள்ளாத வயதில் ஏறத்தாள கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் நிலையில் இராஜவரோதயம் சம்பந்தன் உள்ளார். அவர் எழுந்து நடப்பதாயின், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துச் செல்வதற்கு ஒருவர் வேண்டும். தான் என்ன பேசப் போகின்றேன் என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு அவருக்கு மூளைப் பிறழ்ச்சி ஏற்படத் தொடங்கி விட்டது.

4

இப்படியான நிலையில் சம்பந்தரால் நாடாளுமன்றம் சென்று, கொட்டாவி விடவும், குறட்டை அடிக்கவுமே முடியும். இதே நிலையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இருக்கின்றார். தனது அந்திம நாட்களில் அரசியலில் நுழைந்த விக்னேஸ்வரனால் வேறு எதைத் தான் செய்ய முடியும்?

வேண்டுமென்றால் பாலியல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு இறந்த தனது குருவாகிய சுவாமி பிரேமானந்தாவின் ஆன்மீகப் பாதை பற்றி கோயில்களில் பிரசங்கம் செய்யலாம். அல்லது கலைஞர் கருணாநிதி டில்லிக்கு அடிக்கடி தந்தி அனுப்பிய பாணியில் விக்னேஸ்வரனும் அடிக்கடி அலரி மாளிகைக்கும், ஜனாதிபதி மாளிகைக்கும் தந்தி அனுப்பலாம். நவீன தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரிந்திருந்தால் மின்னஞ்சல்களையும் அனுப்பலாம். அத்தோடு இப்பொழுது அவர் செய்வது போன்று வாராவாரம் கேள்வி – பதில் அறிக்கைகளையும் வெளியிடலாம்.

தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசக்கூடிய நிலையிலோ அன்றி ஐ.நா. மன்றில் உரத்துக் குரல் கொடுக்கக் கூடிய நிலையிலோ விக்னேஸ்வரன் இல்லை. அதற்கு அவரது உடல்நலம் இடம்கொடுக்காது.

h

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையோ இன்னும் மோசம். நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம், சாணக்கியா ராகுல் போன்றவர்களுக்கு இராசதந்திரிகள் மட்டத்தில் தமிழர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கான ஆங்கில மொழியாற்றல் கிடையாது. ஆங்கிலம் பேசக்கூடிய ஆனால் வல்லரசு நாடுகளின் தாளத்திற்கு ஆடி, சிங்கள அதிகாரவர்க்கத்திற்குப் பரிவட்டம் கட்டும் சுமந்திரனால் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையும் கிட்டப் போவதில்லை. கடந்த காலங்களில் தமிழர்களைப் படுகொலை செய்த புளொட் ஒட்டுக்குழுவின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) போன்றவர்களைப் பற்றி நாம் இங்கு எழுதவே வேண்டியதில்லை. ஏனென்றால் தமிழர்களின் உரிமைகள் பற்றி இவர்கள் இரண்டு பேரில் எவராவது ஒருவர் உலக அரங்கில் பேசினாலே, கடந்த காலங்களில் இவர்கள் புரிந்த படுகொலைகளுக்கு முதலில்; பதிலளித்து ஆக வேண்டும்.

இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை.

இவ்வாறான ஒரு சூழமைவில் தான் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது வெற்றி தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை என்று தான் கூற வேண்டும். கஜேந்திரகுமார் சட்ட நுட்பங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணி. பிரித்தானியாவில் பரிஸ்டர் (வழக்கறிஞர்) பட்டம் பெற்றவர். சரளமாக ஆங்கிலம் பேசவும், எழுதவும், இராசதந்திரிகளுடன் தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பேசவும் தெரிந்த ஒருவர்.

அனைத்துலக அரங்கில் அவரது குரல் ஒலிக்கப் போவது இது தான் முதற்தடவை அல்ல. 26 வயது இளைஞனாக, 2001ஆம் ஆண்டில் முதன் முதலாக சிறீலங்கா நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியதில் இருந்தே அவரது குரல் நாடாளுமன்றிலும் உலக அரங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. 2010ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டாத பொழுதும் கூட ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு தடவைகளாவது ஐ.நா. மன்றிற்கு வந்து தமிழர்களுக்காகக் குரல் எழுப்பி வருபவர் கஜேந்திரகுமார். பத்தாண்டுகள் கழித்து அவர் மேற்கொண்டிருக்கும் நாடாளுமன்ற மீள்பிரவேசம், சிறீலங்கா நாடாளுமன்றில் மட்டுமன்றி உலக அரங்கிலும் தமிழ் மக்களின் ஆணை பெற்ற குரல் ஒன்று ஓங்கியொலிப்பதற்கான சூழலைத் தோற்றுவித்துள்ளது.

இது கஜேந்திரகுமார் அவர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. இது புலம்பெயர் தேசங்களில் செயற்படும் தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. ஏனென்றால் கடந்த பதினொரு ஆண்டுகளாக புலம்பெயர் தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவருமே தாயகத்தில் தமக்கான ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்காதவர்களாகவே விளங்கினார்கள்.

கஜேந்திரகுமார் அவர்களின் நாடாளுமன்ற மீள்பிரவேசத்துடன் இன்று இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இவ்வாறான அரசியல் திருப்புமுனை ஏற்பட்டதற்கு கஜேந்திரகுமார் அவர்களும், அவரது தலைமையில் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், தாயகத்தில் உள்ள அவர்களின் ஆதரவாளர்களுமே முழுக் காரணமாகும்.

கஜேந்திரகுமார் அவர்களுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் புலம்பெயர் தேசங்களில் பலர் தார்மீக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஆதரவு வழங்கியது உண்மை. ஆனால் தேர்தல் வெற்றிக்காகக் களத்தில் நின்று கடினமாக உழைத்தவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களுமே. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தொடக்கம், சட்டத்தரணிகளான மணிவண்ணன், சுகாஸ், காண்டீபன், வாசுகி சுதாகர் என நீண்டு செல்லும் கட்சி வேட்பாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருமே அக்கட்சி ஈட்டிய வெற்றிக்கு உரிமை கோர வேண்டியோர்.

யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது இனித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன செய்ய வேண்டும் என்பதைப் புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள் தீர்மானிக்க முற்படக் கூடாது. ஏனென்றால் கொள்கை பிறழாது களத்தில் நிற்பவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரே.  

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குப் பக்கபலமாக நின்று, அவர்களோடு ஒத்திசைவாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தான் இன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது.

இதற்கிடையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தமக்கு இருப்பது போன்று புலம்பெயர் தேசங்களில் விலாங்குகள் கும்பல் ஒன்று கிளம்பியுள்ளது. இதில் ஒரு பிரிவினர் நடைபெற்று முடிந்த தேர்தலில் விக்னேஸ்வரனை ஆதரித்தவர்கள். புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் இக்கும்பல், விக்னேஸ்வரனின் தேர்தல் வெற்றிக்காக பணத்தை வாரியிறைத்தது.

அதுவும் தலைவர் பிரபாகரன் அவர்களைத் தனது தேசியத் தலைவராக ஏற்க மறுத்த விக்னேஸ்வரனுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற இயக்கப் பணத்தை இக் கும்பல் வீணடித்தது. விக்னேஸ்வரனுடன் கஜேந்திரகுமார் இணையத் தவறினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஊடகப் பரப்பில் தாக்கப் போவதாக இக் கும்பலைச் சேர்ந்த இணையத்தள உரிமையாளர் ஒருவர் எச்சரிக்கை பதிவு செய்தார்.

முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளியாகத் தான் அங்கம் வகித்ததால் தானும், தன்னோடு நிற்போரும் சத்திரியர்கள் என்பது போன்று, தாம் சொல்வதற்கெல்லாம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்க வேண்டும் என்றும் இவர் மிரட்டினார். சொன்னபடியே தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைக் கடுமையாக சாடினார்.
 
இது போதாதென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் வானொலியைக் கையகப்படுத்தியிருக்கும் தொழிலதிபர் ஒருவர், ஐ.நா. மன்றில் கஜேந்திரகுமார் அவர்களை ஒரு தடவை சந்தித்த பொழுது, தனது சொல்லுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்டுப்படத் தவறினால் அதனை அரசியல் அரங்கில் இருந்து தமது ஊடகத்தால் ஓரங்கட்ட முடியும் என்று நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் ஒன்றில் வரும் பாஸ் பாத்திரத்தின் பாணியில் எச்சரிக்கை செய்தார்.

இவற்றுக்கெல்லாம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மிரண்டு போகவில்லை. சத்தியத்தை சாட்சியாகக் கொண்டு கொள்கை வழியில் உறுதி தளராது அவர்கள் நின்றார்கள்.

தமிழ்;த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த ஈழமுரசின் சகோதர ஊடகமான சங்கதி-24 இணையம், தேர்தலுக்கு முந்திய மாதங்களில் சிறீலங்கா அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.

இவற்றையும் கடந்து இன்று நாடாளுமன்றப் பிரவேசத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுள்ளது என்றால் அது சாதாரண விடயமல்ல. அதுவும் மக்கள் ஆணைபெற்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களம் புகுகின்றது.

நடுநிலையின் பெயரில் இதுகாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும் விமர்சித்த இலண்டன்வாழ் முன்னாள் ஈரோஸ்கார தெருக்கடை ஆய்வாளர்கள் சிலர், திடீரென்று பரிநிர்வாண நிலையை அடைந்தவர்களாக இன்று போதிசத்துவம் பேசத் தொடங்குகின்றார்கள். பச்சோந்திகள் நிறம் மாறுவது இயல்புதான். ஆனாலும் பச்சோந்திகளை அடையாளம் காண்பது என்பது கொள்கை பிறழாது நிற்பவர்களால் இயலாத காரியமா என்ன?