அம்மானின் கடிதங்கள்...

அன்புள்ள நண்பர் விக்னேஸ்வரனுக்கு,

நான் இங்கு நலமாக உள்ளேன். பரமஹம்சர் சுவாமி பிறேமானந்தாவின் அருள் இருக்கும் வரை உங்களின் சேமநலன்களிலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது எனக்குத் தெரியும். சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதற்காக சிறைவாசம் அனுபவித்து சிறையிலேயே இறந்த சுவாமிஜியைக் கடவுளாக வழிபடும் உங்களுக்குப் பங்கம் ஏது விளைவதற்கு அவர் என்ன விடவா போகின்றார்? அப்படித் தான் ஏதாவது பங்கம் ஏற்பட்டாலும் அதனை நீக்குவதற்கு மாத்தளையில் உள்ள சுவாமிஜியின் கோவிலில் உங்களுக்கு யாகம் செய்வார்கள் தானே?

நிற்க, நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற செய்தி அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஐந்து ஆண்டுகள் கோலோச்சிய நீங்கள், முதலமைச்சர் பதவியில் இருந்து கீழிறங்கி வெறும் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முன்வந்திருப்பது உலக அதிசயம் தான். ஒரு விதத்தில் உங்கள் தாராள குணத்தையும், பதவி எவ்வளவு குறைவானாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் உங்கள் பக்குவத்தையும் அது காட்டுகின்றது.

4

ஆனாலும் நண்பரே நீங்கள் கில்லாடி தான். 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒரு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் வாக்குகளைப் பெற்ற நீங்கள், ஏழு வருடங்கள் கழித்து இருபத்தோராயிரம் வாக்குளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளீர்கள் என்றால் அது ஒரு சாதாரண விடயம் அல்ல. ஏழு வருடமாக எதுவுமே செய்யாமல் ஒரு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் பேரை ஏமாற்றுவது என்பது எவராலுமே இயலாத காரியம். அப்படியிருந்தும் ஏழு வருடங்கள் கழித்து இருபத்தோராயிரம் பேரை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை உங்களால் பெற முடிந்துள்ளது என்றால், உங்களை அதற்காகப் பாராட்டித் தான் ஆக வேண்டும். எது எப்படியே, நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டீர்கள்.

இனி என்ன செய்வதாக உத்தேசம்?

இவ்வளவு காலமும் போதிய வசதிகள் இல்லாமல் யாழ்ப்பாணத்தில் இருந்து கஸ்டப்பட்டது போல் இனிக் கஸ்டப்படத் தேவையில்லை. மீண்டும் சந்தோசமாக கொழும்புக்குப் போய் உங்களது பழைய வீட்டில் தங்கலாம்.

உங்கள் பிள்ளைகளும் இனி அடிக்கடி உங்களை வந்து பார்ப்பார்கள். பேரப் பிள்ளைகளோடும் நீங்கள் கொஞ்சிக் குலாவலாம். உங்களின் சிங்கள மருமகள்மாரின் கட்டுச்சம்பலும், கிரிபத்தும் அடிக்கடி உண்ணலாம்.

எனக்கு உள்ள ஒரே நெருடல் இது தான். உங்கள் பேரப்பிள்ளைகள் நல்ல தமிழ் பேசுவார்களா? அது சரி, உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் பிரச்சினை இல்லை. ஏன் உங்கள் பேரப்பிள்ளைகள் சிங்களத்தில் பேசினாலும் பிரச்சினை இல்லை என்று தான் நினைக்கிறேன். இவ்வளவு காலமாக சிங்கள அரச இயந்திரத்திற்கு முண்டு கொடுத்து நீதியரசராக இருந்த உங்களுக்கு சிங்களம் பேசத் தெரிந்திருக்கும் தானே?

அது சரி, பாராளுமன்றத்தில் எல்லா வசதிகளும் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி விட்டீர்களா? இந்த வயதில் நீண்ட நேரம் கதிரையில் அமர்ந்திருப்பதால் குடல் இறக்கம் ஏற்படும் ஆபத்து உண்டு. எனவே பாராளுமன்றத்தில் நீங்கள் அமர்வதற்கு சொகுசான ஆசனங்கள் ஏதாவது உள்ளனவா என்று விசாரியுங்கள். இதைப் பற்றி உங்கள் பழைய நண்பர் சாமிடம் கேட்டால் ஏதாவது ஒழுங்குபடுத்தித் தருவார். எதிர்க்கட்சித் தலைவராக சொகுசான ஆசனத்தில் அமர்ந்திருந்து பாராளுமன்றத்தில் பல ஆண்டுகள் ஒரே நித்திரை கொண்ட அனுபவம் அவருக்கு நிறைய உண்டு.

எனக்குத் தெரியும், நீங்கள் சாமோடு இப்போது கதைப்பதில்லை என்று. ஆனாலும் சாம் இல்லை என்றால் நீங்கள் அரசியலுக்கு வந்திருக்கவே முடியாது. அவர் தான் உங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆக்கினார். பிறகு உங்களுக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது வேறு கதை. நீங்கள் கேட்டபடி உங்களிடம் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் சாம் தந்திருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது. சாமிற்குப் பிறகு நீங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி ஏற்றிருக்கலாம்.

எது எப்படியோ, உங்களின் பல்லை நான் குத்தி, அதனை உங்களையே மணக்குமாறு சொல்லக் கூடாது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.  

நடந்ததை எல்லாம் மறந்து விட்டு சாமோடு கதையுங்கள். பாராளுமன்றத்திற்கு நீங்கள் தனியே சென்று வருவதை விட சாமோடு சென்று வந்தால் உங்களுக்கும் பேச்சுத் துணைக்கு ஆள் இருக்கும். இரண்டு பேருமே சேர்ந்து பாராளுமன்றத்தில் நித்திரை கொள்ளலாம்.

ஆனாலும் உங்களுக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமலா போவார்கள்? அப்படி நீங்கள் தனிமையில் இருக்க உங்கள் சம்மந்தி வாசுதேவ நாணயக்கார விட்டு விடுவாரா என்ன? நீங்கள் விரும்பினால் மகிந்தரோடு கதைத்து உங்களுக்கு அமைச்சுப் பதவி கூட வாசு பெற்றுத் தருவார். அது சரி, நீங்கள் ஏன் வாசு ஊடாக மகிந்தரை அணுக வேண்டும்? நீங்கள் நேரடியாக கேட்டாலே அவர் தந்து விடுவார் தானே! வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வென்றதுமே அலரி மாளிகைக்கு ஓடிப் போய் மகிந்தரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தவர் அல்லவா நீங்கள்? அதை எல்லாம் அவ்வளவு இலகுவாக மகிந்தர் மறக்க மாட்டார்.

எல்லாம் சரி, வடக்குக் கிழக்கில் மீனாட்சி மலரப் போகின்றது என்றீர்களே? என்ன ஆயிற்று? நானும் ஊரெல்லாம் மீனாட்சி என்ற பூவைத் தேடித் திரிகின்றேன். தமிழர் தாயகத்தில் அப்படி ஒரு மலர் இதுவரை மலரவில்லை என்கிறார்கள். அப்படி ஏதாவது இனிமேலும் மலர்ந்தால் தயவு செய்து எனக்கு அறியத் தாருங்கள். அதில் ஒன்றை எனது காதில் சுற்றிக் கொண்டு, உங்களைப் போல் நெற்றியில் மூன்று குறியும், சந்தனமும், குங்குமமும் சூடிக் கொண்டு ஊர் ஊராகத் திரிய ஆவலாக உள்ளேன்.

வேறு என்ன நண்பரே? இந்தக் கடிதம் கிடைத்ததும் பதில் எழுதவும்.

அன்புடன்

உங்கள் நண்பர் அம்மான்.


பி.கு: வாசு இலண்டன் சென்றதாக அறிந்தேன். அங்கு கார்ள்ஸ் மார்க்சின் கல்லறைக்குச் சென்று இடதுசாரித்துவத்திற்கு இறுதிச் சடங்கு ஏதாவது செய்து விட்டு வந்தாரா என்பதைக் கேட்டறிந்து கடிதம் எழுதுங்கள்.