தமிழ் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

உலகமே அதி ஆர்வத்துடன் எதிர்பார்த்த சிறீலங்காவின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பலரும் எதிர்பார்த்ததைப் போன்று தென்னிலங்கையில் ராஜபக்சக்களே மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருக்கின்றனர். முன்னர் ஆட்சியில் இருந்ததைப் போன்று ஜனாதிபதியாக தம்பி கோட்டபாய ராஜபக்ச, பிரதமராக அண்ணன் மகிந்த ராஜபக்ச பதவியேற்றிருக்கின்றனர். அடுத்துவரும் நாள்களில் அவர்களின் ஏனைய சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அமைச்சர்களாகப்போகின்றனர். ஆக, ராஜபக்சேக்களின் இராச்சியமாக சிறீலங்கா மாறப்போகின்றது.

தெற்கில் நிலமை இப்படி இருக்கையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில், இந்த தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எனவும் தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி எனவும் கூறிக்கொண்டு தமிழின விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியிருக்கின்னர்.

s

2004 இல் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 2010 இல் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 2015 இல் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை (2020) வெறும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமல், புலி நீக்க அரசியல் நடத்த முற்படும் எவரையும் தமிழர் தேசம் அங்கீகரிப்பதில்லை. இந்த தாற்பரியம் கூட்டமைப்பிற்குள் இடையில் வந்து சொருகிக்கொண்ட எம்.ஏ.சுமந்திரனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அவர் தொடர்ந்து புலிகளுக்கு எதிரான கடும் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாலும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டதாலும் மக்களால் தூக்கி எறியப்பட்டார்.

புதிலாக, தமிழ் மக்களில் அக்கறையான, தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லக்கூடிய, தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை மதிக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த தேர்தல் ஊடாக புத்துயிர் பெற்று மேலெழுந்திருக்கின்றது. இது மாற்றத்திற்கான ஆரம்பமாக பார்க்கப்படுகின்றது.

j

நடைபெற்று முடிந்த தேர்தல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம் ஒன்றை கற்பித்திருக்கின்றது. இந்த கற்பிதத்தில் இருந்து அவர்கள் எதிர்காலத்தில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள் என்பதை மக்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றனர்.

இதில் முக்கியமானவர் எம்.ஏ.சுமந்திரன். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தேசியப் பட்டியல் மூலம் உள்நுழைந்த எம்.ஏ.சுமந்திரன் அந்த காலத்தில் இருந்தே தமிழத் தேசியத்திற்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தேசியத் தலைவரையும் வசைபாடி வந்தார்.

r

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பல கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலவுசெய்து, கஷ்ட நிலையில் வாடிய மக்களுக்கு பணம் கொடுத்து, வாக்குகளை அபகரித்த சுமந்திரன் அது தமக்கு பெரும் வெற்றி எனக் காட்டிக்கொண்டார். அதன் பின்னர் படு மோசமாகவே புலி எதிர்ப்பாளராக மாறினார். தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை நடத்திய தேசியத் தலைவரின் போராட்டத்தை தான் என்றுமே ஆதரிக்கப்போவதில்லை என கூறினார்.

மேலும், சிங்கள தேசத்தின் புதிய அரசமைப்பு குழுவில் அங்கம் வகித்த இவர், சிங்கள மேதாவிகளால் கொண்டுவரப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்றுக்கொண்டு, எக்கிய ராச்சியம் என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்களை கூறி மக்களை முட்டாள்களாக்கிவிட்டு அந்த அரசமைப்பை நிறைவேற்றவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றவர்.

நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், வடக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு சிங்கள அரசு நிதி ஒதுக்கியிருந்தபோது எந்தவித கோள்விகளும் இன்றி அதை ஏற்று கை உயர்த்தி, அந்த செயற்றிட்டத்தை வரவேற்றவர். தமிழர் தாயகத்திற்கு வருகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளை கொழும்பிலேயே சந்தித்து தமிழர்கள் தற்போது நன்றாக வாழ்கின்றார்கள், அரசாங்கள் அவர்களை நன்றாக பரமாரிக்கின்றது எனக் கூறி, தமிழர் தேசத்தில் சிங்கள அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நெருக்குவாரங்களை மூடி மறைத்தவர்.

j

தமிழர் நிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்படுவது பற்றியோ, திருகோணமலை கன்னியாய் வெந்நீருற்று, செம்மலை போன்ற இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டமை பற்றியோ எந்தவிதத்திலும் கருத்துக் கூறாமல் அமைதியாக இருந்து தமிழ் நிலங்களை சிங்கள தேசம் ஆக்கிரமிப்பதற்கு துணைபோனவர்.

இப்படி தமிழர்களையும் தமிழர் தேசத்தையும் சிங்களவர்களிடம் அடகுவைத்து சுமந்திரன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்பட்டார். ஆனால், கோட்டபாய ராஜபக்சவின் உத்தரவிற்கு இணங்க, யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் மற்றும் அதிகாரிகள் மோசடியான முறையில் சுமந்திரனை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்ட நிலையில் சுமந்திரன் மக்களால் தோற்கடிக்கப்பட்டமை தெரியவந்தது. யாழ். தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பிற்கு கிடைத்த மூன்று ஆசனங்களில் சி.சிறிதரன் முதலாவதாகவும் சசிகலா ரவிராஜ் இரண்டாவதாகவும் த.சித்தார்த்தன் மூன்றாவதாகவும் தெரிவு நிலையில் இருந்தனர். இந்த விடயம் சுமந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தேர்தல் திணைக்களத்தில் உள்ள, சுமந்திரனுக்கு நெருக்கமான உயர் அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணத்தில் வாக்குகள் எண்ணப்பட்ட யாழ். மத்திய கல்லூரியில் பணியில் இருந்தார். இவர் மூலமே அங்கு மோசடி இடம்பெற்றது. கிளிநொச்சியில் சிறிதரன் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். அவரது விருப்பு வாக்குகளில் 3000 வரையான வாக்குகளை சுமந்திரனுக்கு மாற்றினார்கள். இதன்மூலம் சசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு யாழ். மத்திய கல்லூரியில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளி வெளியேற்றினர்.

இந்த விடயத்தில் கோட்டபாயவின் நேரடியான உத்தரவு இருந்தது என தகவல்கள் கசிந்திருக்கின்றன. இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகிய மூவரும் தமிழர் சார்பில் அரசியல் அரங்கில் இருக்கவேண்டும் என கோட்டபாய அரசு விரும்பியது. ஏனெனில், இனிமேல் தாயகத்தில் நடைபெறவிருக்கின்ற தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு இவர்களின் ஆதரவு அவசியம்.

இதுவரை இல்லாத பாரதூரமான நிலையை தமிழர் தேசம் இனிமேல்தான் எதிர்கொள்ளப்போகின்றது. காரணம், தமிழரின் ஒற்றுமைப் பலம் சிதைக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனனப்படுத்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு – கிழக்கில் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 963 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறை (2020) இடம்பெற்ற தேர்தலில் 3 இலட்சத்து 27 ஆயிரத்து 168 வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கின்றது. 1 லட்சத்து 88 ஆயிரத்து 745 வாக்குகளை கூட்டமைப்பு இழந்திருக்கின்றது. சுமந்திரன் என்ற ஒற்றை நபராலேயே இந்த இழப்பு ஏற்பட்டது என இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் எனவும் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மக்களின் கருத்துக்களை இலங்கை தமிழரசுக் கட்சி கவனத்தில் எடுத்தால் அது தமிழருக்கு நன்மையானதாக இருக்கும். சுமந்திரன் இல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தற்போது அவசியமாகின்றது.

இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் எழுச்சி. 2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, 2010, 2015 ஆகிய இரு தடவைகளும் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் எந்தவித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், இம்முறை இரு ஆசனங்களை பெற்றிருக்கின்றனர். இது தமிழ்த் தேசியத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விரோதப் போக்கில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம் பெறுமதியுடன் நோக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்காக சிறிலங்காவிற்குள்ளும் ஐ.நா மன்றம் மற்றும் வெளிநாடுகளிலும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இனப்படுகொலைக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர் பிரதேசங்களில் இருந்து படையினரை வெளியேற்றுதல், தமிழ் இளைஞர் - யுவதிகளை போதைப்பொருட்களில் இருந்து மீட்டெடுத்தல் போன்ற பல சவால்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரிடம் முன்நிற்கின்றது. இதை அவர்கள் எப்படி கையாளப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும். ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சி தமிழ் மக்களுக்கு விரோதமாகவே அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. குறிப்பாக, தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை அரசு இனிமேல் வேகமாக முன்னெடுக்கும். வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் மேலேழும்பும். சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கும். தமிழர் கடல் வளம், விவசாய வளம் என்பன மேலும் சுரண்டப்படும். தமிழர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளப்போகின்றார்கள்.

தாயகத்தில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் காணிகளுக்கும் விரைவில் ஆப்பு அடிப்பதற்கு சிங்கள அரசு திட்டங்களை தயாரித்துள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த ஆட்சியை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக சிந்திக்கவேண்டும். இதற்காக பன்னாடுகளிலும் இருக்கின்ற தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஒன்றுபடவேண்டும். தாயகத்தில் இனிமேல் அச்சமான நிலை தொடரக்கூடும் என்பதால் புலம்பெயர் தேசம் விழிப்பாக இருப்பது அவசியம் என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது.