தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி! - ஆசிரிய தலையங்கம்

சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வெடித்திருந்த முரண்பாடுகளும் பிளவுகளும் மகிந்த குடும்ப ஆட்சியாளர்களுக்கு பெரும் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதுபோலவே, தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மகிந்த குடும்ப ஆட்சியாளர்கள் அரியணையில் ஏறியிருக்கின்றார்கள்.

இந்த வெற்றியானது புதிய சட்ட மூலங்களை நிறைவேற்றுவதற்கும், தமக்கு தேவையற்ற சட்டங்களை நீக்குவதற்கும் மகிந்த ஆட்சியாளர்களுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன், இலங்கைத் தீவை முழுமையான சிங்கள - பௌத்த மயமாக்கும் அவர்களின் திட்டங்களுக்கும் இது பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளது.  

அரசமைப்பை முற்றாக மாற்றும் நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளபோதும், இந்த மாற்றங்கள் விரைவில் நிகழும் என்பதே உறுதியாகத் தெரிகின்றது. நாட்டை ஆளும் விடயத்தில் தற்போதுள்ள சட்ட விடயங்களை கொண்டு தொடர முடியாது என்றும், தேர்தல் முடிவுகளின் மூலம் மக்கள் புதிய வகையிலான நாடாளுமன்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்றும் பீரிஸ் தெரிவித்துள்ள கருத்தில் இருந்து இந்த மாற்றங்கள் உறுதியாக நிகழவுள்ளதைப் புரிந்துகொள்ள முடியும்.  

சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் இனப்படுகொலை ஆட்சியாளர்களின் கையில் இலங்கைத் தீவு முழுமையாக வீழ்ந்துவிட்ட செய்தியை உலகிற்கு உரக்கச் சொல்லி நிற்கும் அதேவேளை, இந்த உலகிற்கு ஒரு செய்தியை மீண்டும் ஒருமுறை உறுதிபடச் சொல்லியிருக்கின்றது. அது தமிழீழத் தேசியத் தலைவர் எப்போதும் குறிப்பிடுவதுபோன்று, சிறீலங்காவின் நாடாளுமன்ற அரசியல் ஊடாக தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதுதான்.

r

ஏற்கனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களுக்கான ஜனாதிபதி யார் என்பதை சிங்கள மக்கள் தனியாகவே தேர்ந்தெடுத்தார்கள். இப்போது சிங்கள மக்கள் நாடாளுமன்றத்தையும்  தனிப்பெரும்பான்மையுடன் மகிந்த குடும்ப ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

பீலி பொய் சாகாடும் அச்சிறும், அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
என்பது திருவள்ளுவரின் வாக்கு. மயிலிறகு மிகவும் இலேசானதுதான். ஆனாலும் அளவுக்கு மீறி அதனை ஒரு வண்டியில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு முறிந்து விடும். அளவுக்கு மீறும் எதுவும் அழிவில்தான் முடியும் என்கின்றது இந்தக் குறள் நெறி. அளவுக்கு மீறிய அதிகாரமும் ஆபத்தைதான் ஏற்படுத்தும். மகிந்த குடும்ப ஆட்சியாளர்களின் கையில் இப்போது இலங்கைத் தீவின் முழு அதிகாரமும் வந்துள்ளது. அவர்கள் தலைகால் புரியாமல் ஆடப்போகின்றார்கள் என்பது உறுதி. தன் கையில் அளவுக்கு மீறிய அதிகாரம் இருந்ததனாலேயே ஹிட்லர் மிகமோசமான மனிதனாக மாறி மனிதப் பேரழிவை நிகழ்த்தினான். இறுதியில் அந்த அழிவிற்கு தானே பலியும் ஆனான். மகிந்த குடும்ப ஆட்சியாளர்களும் தமிழர்களைப் பொறுத்தவரை ஹிட்லர்களே. அவர்களின் கையிலும் இப்போது அளவுக்கதிகமான அதிகாரம் வந்துள்ளது.

இந்த உண்மையைப் புரிந்துகொண்டதனாலேயே சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அச்சத்தை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு சவால் விடுபவர்களுக்கு எதிராக சமீபகாலங்களில் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள எனவும் கவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் அச்சத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளதுடன், இலங்கையின் 26 வருட உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் விடயங்களுக்காக நீதிகோரும் மக்களின் மீதான ஒடுக்குமுறையை அதிகரிக்கும் என்ற அச்சத்தினையும் அது தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

மகிந்த குடும்ப ஆட்சியாளர்களின் வருகையை மனித உரிமை அமைப்புக்கள் கூட கடும் அச்சத்துடன் பார்க்கும் இவ்வாறான நிலைமையில்தான், தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்கப்போகின்றன என்ற கேள்வி தமிழ் மக்களிடம் எழுந்து நிற்கின்றது.

ஒரு காலத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெல்ல முடிந்த தமிழர் தாயகத்தில், இப்போது 13 ஆசனங்களை மட்டுமே (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 1) தமிழர்களால் பெறமுடிந்திருக்கின்றது. ஏனையவை சிங்கள கட்சிகளின் முகவர்களாலும் அவர்களின் துணைப் படுகொலைக் குழுக்களினாலும் கைப்பற்றப்பட்டுள்ளன. எதிர்காலத்தின் மோசமான நிலையை சிங்களக் கட்சிகளினதும், அவர்களின் துணை இனப்படுகொலை இராணுவக் குழுக்களினதும் வெற்றிகள் தமிழர் தாயகத்திற்குச் சொல்லிநிற்கின்றன.

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றுச்சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றது. மக்களை ஏமாற்றும் அவர்களின் அரசியல் நடவடிக்கையை மக்கள் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட படுதோல்வியே இது. தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்பதற்காக மட்டுமே மக்களில் பலர் கூட்டமைப்பிற்கு தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். அதனாலேயே, ஒன்பது ஆசனங்களை என்றாலும் அவர்களால் பெறமுடிந்துள்ளது.

இதற்குள், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன், மாமனிதர் ரவிராசின் துணைவியாருக்கு கிடைக்கவேண்டிய வெற்றியை தனதாக்கி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளமை மிகவும் கீழ்த்தரமான கண்டனத்திற்குரிய செயலாக தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளையும் அதன் தலைமைiயும் கொச்சைப்படுத்திய சுமந்திரன், தமிழ் மக்களால் முற்றாக வெறுக்கப்படும் ஒருவராக மாறியிருந்தார். தமிழ் மக்கள் அவரை தேர்தலில் தோல்வியடையவைத்தபோதும், விருப்பு வாக்குகள் என்ற பின்கதவின் ஊடாக அவரை நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். தமிழினத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு சுமந்திரன் துணைபோவார் என்பதற்காகவே தங்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரனை சிங்கள ஆட்சியாளர்கள் வெற்றிபெற வைத்துள்ளனர் என தமிழ் மக்கள் வெளிப்படையாக குற்றச்சாட்டத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, பல்வேறு தமிழ் அமைப்புக்களை ஒன்றுசேர்த்து வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டணி ஒன்றை உருவாக்கினார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவரது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றத்தை அளித்துள்ளது.  எனினும், திட்டமிட்ட பொய்ப் பரப்புரைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்பிரச்சாரங்களுக்கும் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதற் தடவையாக இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக தமிழ்த் தேசியத்திற்காக தொடர்ந்து குரலெழுப்பிவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செல்வராசா கஜேந்திரனும் தமிழ் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.