மாகாண சபை எனும் மாயமான் - பிலாவடிமூலைப் பெருமான்

வணக்கம் குஞ்சுகள், எல்லோரும் சுகமாக இருக்கிறியள் தானே?

இந்தக் கேள்வியை சும்மா குசலம் விசாரிக்கிறதுக்காக நான் கேட்கவில்லை பிள்ளையள். இப்ப கொஞ்ச நாளாக எங்கடை ஆட்கள் சில பேர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரியீனம்.

நானும் ஏதோ அவையளின்ரை வீடுகளில் கொரோனாவாலை ஏதாவது இழவு விழுந்திட்டுதாக்கும் என்று தான் முதலில் பயந்தனான். சரி, சங்கதி என்னவாக இருக்கும் என்று தோம்பு துலக்குவம் என்று வெகுளி மாதிரி எதிரிலை தென்பட்ட ஒரு பெடியனைப் பிடிச்சுக் கேட்டேன், ‘என்னடா தம்பி, எல்லோரும் இழவு விழுந்த மாதிரித் திரிகிறியள்? ஏதாவது பாரதூரமாக நடந்து போச்சுதோ?’

அதுக்கு உடனே பெடியன் அழாத குறையாகச் சொன்னான், ‘ஓம் ஐயா, காணி, பொலிஸ் பவர் எல்லாம் பறிக்கப் போறாங்களாம்.’

எனக்கு முதலிலை ஒண்டும் விளங்கவில்லை. ‘என்ன தம்பி சொல்லுறீர்? ஆரின்ரை காணி, பொலிஸ் பவரைப் பறிக்கப் போகிறாங்கள்? நீர் கனடா பொலிசிலை வேலை செய்கிறீரோ?’

உடனே வந்துதே பெடியனுக்குக் கோபம். ‘ஏன் உங்களுக்கு நாட்டு நடப்பு விளங்கவில்லையோ? மாகாண சபையளின்ரை காணி, பொலிஸ் அதிகாரங்களை எல்லே பறிக்கப் போறாங்கள்!’

உதைக் கேட்டதும் எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்திட்டுது.

பின்னை என்ன பிள்ளையள்? மாகாண சபைகளே செத்துப் போய் கிடக்குது. அதுக்குள்ள அதுகளின்ரை காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்கப் போகிறாங்கள் என்றால் அதை நினைச்சுக் கவலைப்படுகிறதுக்கு என்ன இருக்குது?

எங்கடை சனத்திலை கன பேருக்கு மறதி நோய் பிள்ளையள். உந்த மாகாண சபை முறையை 1987ஆம் ஆண்டு இந்தியாக்காரன் உருவாக்கினதில் இருந்து அதுகள் எப்பத் தான் ஒழுங்காக இயங்கி இருக்குது?

ஐ.பி.கே.எவ் இருந்த காலத்திலை தான் தான் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்று வரதராஜப் பெருமாள் கிலுக்கிக் கொண்டு திரிஞ்சார். அப்பவாவது மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களைச் சிங்களவன் கொடுத்தானோ? இல்லவே இல்லை.

உலகின்ரை நான்காவது வல்லரசு என்று அந்த நாட்களில் பீற்றிக் கொண்டிருந்த இந்தியாவின்ரை படைகள் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிச்சிருந்த காலத்திலையே கொடுக்காமல் பேய்க் காட்டின சிங்களவன் இனி எப்பவாவது காணி, பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பான் என்று எவராது நினைச்சிருந்தால் அது அவையளின்ரை அறியாமை பிள்ளையள்.

சண்டை நடந்து கொண்டிருந்து கொண்டிருந்த காலத்தில் 13 பிளஸ் குடுப்பன், அதைக் குடுப்பன், இதைக் குடுப்பன் எண்டு இந்தியாவுக்கு ரீல் விட்ட மகிந்த மாத்தையா இந்தப் பதினொரு வருசத்தில தமிழருக்கு எதைத் தான் தந்து கிழிச்சவர்? அப்படிபட்டவர், 13வது திருத்தச் சட்டத்தில் பெயரளவில் இருக்கிற ஆனால் நடைமுறையில் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்களைத் திருப்பி எடுத்தால் என்ன? எடுக்காமல் விட்டால் என்ன?

உங்களுக்கு இன்னொரு இரகசியத்தைச் சொல்லவே பிள்ளையள்? வெளியிலை ஆருக்கும் சொல்லிப் போடாதேயுங்கோ, சரியே!

அது என்ன என்றால் பாருங்கோ இந்தியாவில் ஒரு மாநில முதலமைச்சர் ஆக இருக்கிறது என்றால் சும்மா விசயம் இல்லை. ஒரு பக்கத்திலை கறுப்புப் பூனைப் படைகளின் பாதுகாப்பு. இன்னொரு பக்கத்திலை போகிற வருகிற வழிகளில் எல்லாம் பொலிஸ்காரங்களின்ரை சலூட். இது போதாது என்று சொத்துக் குவிக்கிறதுக்கு ஆயிரம் வழியளும் இருக்குது. மாநில முதலமைச்சர் பதவி எண்டது இந்தியாவில் மும்முடிச் சோழன் பதவி மாதிரி எண்டால் பாருங்கோவன்.

அப்படி ஒரு பதவியிலை தாங்கள் அமரப் போகிறதாக நினைச்சுக் கொண்டு தான் கூலிக்குக் கொலை செய்யிறதில் பெயர் போன பிள்ளையானும், அந்திம காலத்தில் அரசியலுக்கு வந்த விக்கினேசுவரனும் மாகாண சபைத் தேர்தல்களில் குதிச்சு முதலமைச்சர்களாகவும் ஐஞ்சாறு வருசம் கதிரைகளை சூடேற்றிக் கொண்டிருந்தவையள்.

பிறகு தான் அவையளுக்கு விளங்கிச்சுது உந்த முதலமைச்சர் பதவி தங்களைப் பேய்க்காட்டுகிற ஒரு வேலை என்று. அது தான் ஒரு நாள் பிள்ளையானே சொன்னவர், மாகாண முதலமைச்சராக இருக்கிற தனக்கு ஒரு பியோனுக்கு உள்ள அதிகாரங்கள் கூட இல்லை என்று. உதைத் தான் எங்கடை விக்னேஸ்வரனும் கொஞ்ச நாளைக்கு முதல் சொன்னவர். தான் பெயருக்குத் தான் முதலமைச்சராக இருந்தவரே தவிர ஒரு அமைச்சரைக் கூட நியமிக்கிற அதிகாரம் தனக்கு இல்லை என்று ஆள் சொன்னவர் என்றால் பாருங்கோவன்.

அது தான் இப்ப இரண்டு பேரும், ‘சீச்சீ எட்டாப் பழம் புளிக்கும்’ எண்டு போட்டு நாடாளுமன்றம் போயிருக்கீனம்.

அவையள் மட்டுமில்லை: மாகாண அமைச்சராக இருந்த எங்கடை தங்கச்சி அனந்தி கூட நாடாளுமன்ற உறுப்பினராகிறதுக்குத் தானே முயற்சித்தவா!

இப்ப விளங்குதே பிள்ளையள் ஓணானின் ஓட்டம் எவ்வளவு தூரத்துக்கு எண்டு.

ஏதோ, இதுக்குப் பிறகாவது மாகாண சபை என்கிற மாயமான் இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன என்கிறதைப் புரிஞ்சுக் கொண்டு நடந்தியள் என்றால் சரி.

ஆனாலும் எங்கடை தலைவர் பிரபாகரன் ஒரு மாமேதை தான் பிள்ளையள். சட்டத்தைக் கரைச்சுக் குடிச்சு சிங்கள அரச இயந்திரத்துக்கு பரிவட்டம் கட்டி நீதியரசர் ஆகின விக்னேஸ்வரனுக்கே மாகாண சபைகளில் ஒன்றும் இல்லை என்கிறது முதலமைச்சர் பதவியில் ஐஞ்சு வருசம் இருந்த பிறகு தான் விளங்கியிருக்குது. ஆனால் மாகாண சபைகளில் ஒன்றுமே இல்லை என்பதை 1987ஆம் ஆண்டு டில்லியில் ராஜீவ் காந்தியை சந்திக்கேக்குள்ளயே தம்பி பிரபாகரன் சொல்லி விட்டார்.

தலைவருக்கு நிகர் தலைவர் தான் பிள்ளையள்.

வேறை என்ன? வரட்டே?