தமிழர்களுக்கு அடிமைச்சாசனம் எழுதும் கோத்தாபாயவின் உரை - தாயகத்தில் இருந்த காந்தரூபன்

தமிழர் தாயகம், தமிழ்த்  தேசியம், சுயநிர்ணய உரிமை என உரத்த குரல் எழுப்பிய தமிழ் இனத்தின் உச்சந்தலையில் ஓங்கி அடித்திருக்கின்றது சிங்கள பேரினவாதம். கடந்த காலங்களைப் போலவே தெரிவுசெய்யப்படுகின்ற ஒவ்வொரு புதிய அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு அடிமைச்சாசனம் எழுதுவதைப்போல கோட்டபாய – மகிந்த தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கமும் தனது கடமையைச் செய்திருக்கின்றது. அழகிய தமிழர் தாயகத்தில் தமிழர் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அரசாங்கம் பதவியேற்றிருக்கின்றது. யாருக்கும், எதற்கும் அடிபணியாமல் நாட்டை முன்கொண்டு செல்வதே தமது பணி என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அக்கிராசன உரையில் தெரிவித்திருக்கின்றார். இவரது முதல் உரை தமிழ் மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை பிரதானமாக மூன்று இனங்கள் வாழ்கின்றனர். சிங்களவர் பெரும்பான்மையாக இருக்கின்ற அதேவேளை, தமிழர், முஸ்லிம்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். இதிலும், இந்த நாட்டின் பூர்வீகக்குடிகள் தமிழ் மக்களே என்பதை சிங்கள வரலாற்று ஆய்வுகளே வெளிப்படுத்தி இருக்கின்றன. தமிழரின் உரிமை மறுக்கப்பட்டு, இங்கு பெரும் இரத்த ஆறு ஓடி அதன் வாடையே காய்ந்து போகாத தற்போதைய சூழ்நிலையில் பதவியேற்றுள்ள புதிய அரசு, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவித கருத்தையும் பதிவுசெய்யாமையானது தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

4

அறுபது ஆண்டு காலமாக நீறுபூத்த நெருப்பாக எரிந்துவரும் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, மீண்டும் ஒரே நாடு, ஒரே ஆட்சி என்ற ஒற்றையாட்சி தத்துவத்தை இறுமாப்புடன் வலியுறுத்தியிருக்கின்றார் கோட்டபாய ராஜபக்ச. கடந்த அரசாங்கங்கள் - ஜனாதிபதிகள் - தமது இவ்வாறான உரைகளின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை தொட்டுக்காட்டிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஆனால், ராஜபக்சேக்கள், அதிலும் கோட்டபாய ராஜபக்சவின் நிலைப்பாடு தனிச் சிங்கள தேசியவாதத்தையே நாடாளுமன்றில் முன்மொழிந்திருக்கின்றார். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏனைய மதங்களுக்கும் மத சுதந்திரம் உண்டு என்ற கோட்டபாயவின் கருத்து, இது, பௌத்த சிங்கள நாடு, இங்கு யாரும் தமது உரிமைகள் பற்றிக் கதைக்கக்கூடாது என்பதை இடித்துரைத்திருக்கின்றது.

இதற்கு வலுச்சேர்ப்பதைப் போலவே தமிழர் உரிமை பற்றி பேசிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை நாடாளுமன்ற ஆவணமான கன்சாட்டில் இருந்து நீக்குமாறு சிங்கள பேரினவாதம் உரத்து குரல் எழுப்புகின்றது.

புதிய சபாநாயகரை வாழ்த்தி நாடாளுமன்றில் தமது முதல் உரையை ஆற்றிய விக்கினேஸ்வரன், “உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்த நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமாகிய எனது தாய் மொழியிலும் ஆரம்பித்துப் பின்னர் எல்லா மக்களையும் இணைக்கும் ஆங்கில மொழியிலும் எனது வாழ்த்தினைக் கூறுகின்றேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் வலியுறுத்தினார்.

இந்த உரைக்கு சிங்கள தேசம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுஷ நாணயக்கார, நாட்டின் மூத்த குடிமக்கள் யார் என்பதிலும், மொழி குறித்தும் பல்வேறு கருத்துக்கள் இருந்திருக்கலாம். ஆனால் அதனை நாடாளுமன்றத்தில் குறிப்பிடுவது தவறு என்றும், அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” எனவும், சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சஜித் பிரேதாசவிற்கே வாக்களித்தனர். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு அனுகூலங்கள் கிடைக்கும் என கருதினர். தமிழ் மக்களின் வாக்குகளும் இணைந்த பலத்தினால் அவர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்கின்றார். அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்தான் மேற்படி மதுஷ நாணயக்கார. விக்கினேஸ்வரன் நாடாளுமன்றில் கூறிய உண்மையை கன்சாட் பதவில் இருந்து நீக்குமாறு அவர் கூறியபோது, தமிழ் மக்களின் பல லட்சம் வாக்குகளை பெற்றுக்கொண்ட, அவரது கட்சித் தலைவர் நாடாளுமன்றில் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். இது சிங்கள இனத்திற்கு உரிய இனவாத பண்பு. இதில் இருந்து அவர்கள் மீட்சி பெறுவார்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது.

சிங்கள நாடாளுமன்றம் மூலமாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் எனக் கருதுவது முட்டாள்தனமானது என்பதாலேயே தாம் நாடாளுமன்ற அரசியலில் நம்பிக்கை இழந்தனர் என தமிழீழ தேசியத் தலைவர் பல தசாப்தங்களுக்கு முன்னரேயே கூறிவிட்டார். ஆக, உள்நாட்டில், அதுவும் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழ் மக்களுக்கு நீதியோ, தீர்வோ கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
கோட்டபாய அரசு வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தை இனி வேகமாக ஆக்கிரமிக்கும். ஆயிரம் பௌத்த விகாரை அமைக்கும் சிங்கள தேசத்தின் முன்மொழிவை விரைவாக செய்து முடிக்கும். ஆட்களற்ற காணிகள், அரச நிலங்கள், வனாந்தரங்கள் சீர்படுத்தப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறும். தமிழர் கடல் வளம் வேகமாக சுரண்டப்படும்.

தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்கு என பெயரில் பௌத்த பிக்குகளைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள செயலணி தமது வேலையை கச்சிதாக செய்து முடிக்கும்.  தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கும் எமது பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் விசேட செயலணி ஒன்றை அமைத்துள்ளேன்” என கோட்டபாய ராஜபக்ஷ தமது அக்கிராசன உரையில் குறிப்பிட்டு சிங்கள மக்களை உசுப்பேற்றியிருக்கின்றார்.

தேர்தலுக்கு முன்னர் கோட்டபாய கூறிவந்த ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். பெரும் ஆரவாரங்களுடன் பிரதேச செயலகங்கள் தோறும் படையினரால் நேர்முக பரீட்சைகள் நடத்தப்பட்டு இந்த வேலைவாய்ப்பிற்கு கிராமப்புறங்களில் இருந்து இளைஞர், யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும் என சிங்கள அரசு செய்த போலிப் பிரச்சாரத்திற்கு எடுபட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் சிங்கள ஏகாதிபத்திய அரசின் முகவர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் போன்றோருக்கு வாக்களித்தனர். ஆனால், அந்த வேலைவாய்ப்பை கூட அரசு வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் நிறுத்தியிருக்கின்றது.

இதைவிட, அரசமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்தை நீக்கி, 20 ஆவது திருத்தத்தை கொண்டுவர உள்ளதாக கோட்டபாய ராஜபக்ஷ அறிவித்திருக்கின்றார். சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதே இதன் நோக்கம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.
2015 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தான் வெற்றி பெறும் பட்சத்தில் அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

முன்னர் மகிந்த ராசபக்ச ஜனாதிபதியாக இருந்த போது நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கும் சட்டங்கள் இதன் மூலம் திரும்பப் பெறப்படுவதன் மூலம் நாட்டில் மக்களாட்சியை மீண்டும் கொண்டு வருவதே இத்திருத்தச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

18 ஆவது திருத்தம் மூலம் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக வர முடியாது என்ற வரையறையை மகிந்த ராசபக்ச நீக்கியிருந்தார். அத்தோடு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு, அரசியலமைப்பு சபை உட்பட பல்வேறு ஆணைக்குழுக்களை அதிகாரங்கள் அற்ற அமைப்புக்களாக மாற்றினார்.

மகிந்தவின் இந்த திட்டங்களை இல்லாமல் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் மூலம் அரசமைப்பு சபை சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய காவல்துறை ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, அரச கரும மொழிகள் ஆணைக்குழு போன்ற பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஷே சகோதரர்கள் மீண்டும் மீண்டும் தாங்கள் ஜனாதிபதியாக வருவதற்கும் தொடர்ந்தும் நாட்டின் அதிகாரத்தை தாங்களே தக்கவைத்திருப்பதற்கும் ஏற்ற விதத்தில் அரசமைப்பை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் முதல் நாடாளுமன்ற உரையின்போது, “அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வதற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் எமது முதலாவது பணியாக நாம் மக்களுக்கு உறுதியளித்தவாறு, 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம். இதன் போது இந்நாட்டின் அனைத்து மக்கள் சம்பந்தமாகவும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்குவோம்” என கூறியிருந்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது தமிழ் மக்களுக்கு அடிமைச் சாசனம் எழுதும் என்பதை தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் உணராமல் இருப்பது வேதனையானது.

நாம் மேலே கூறியதைப் போன்று, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு கிடைக்கும் என நம்புவது படுமுட்டாள்தனம். முப்பது வருடம் ஆயுதத்தால் அடித்தும் திருந்தாத சிங்கள தேசத்தை ஜனநாயக போரில் வென்றுவிட முடியும் என சம்பந்தன், சுமந்திரன்கள் கருதுவது அவர்களின் இயலாமையில் வெளிப்பாடு.

ஆக, தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் தமிழர் பிரச்சினை தீர்வுக்கு உள்நாட்டில் எந்தக் காய்களை உருட்டினாலும் அது சாத்தியப்பாடற்றது. மீண்டும் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளை நோக்கி தமது அரசியல் காய்களை நகர்த்தவேண்டும். புலம்பெயர் தேசத்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமையும் ஒன்றிணைந்து புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டும். இல்லையேல் இன்னும் சில தசாப்தங்களில் தமிழர்கள் அனைவரும் தமிழ் பௌத்தர்களாக மாற்றப்படுவார்கள் என்பதை வேதனையுடன் வெளிப்படுத்துகின்றோம்.