ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 7 - கலாநிதி சேரமான்

தமிழீழத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைத்த இந்தியா

கடந்த 14.07.2020 வெளிவந்த ஆறாவது தொடரின் பின்னர் இப்பத்தி நின்றுவிட்டதால், இத் தொடர் இனி வெளிவராதோ என்று ஐயமுற்று வாசகர்கள் சிலர் மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தார்கள். ஈழத்தீவில் இடம்பெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைக் கருத்திற் கொண்டு தற்காலிகமாக இத் தொடர் இடைநிறுத்தப்பட்டிருந்ததே தவிர இடைநடுவில் இது முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. இனிப் பத்திக்குள் நுழைவோம்.

காத்தான்குடிப் படுகொலைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்புபடவில்லை என்பதைத் தர்க்க ரீதியாகவும், ஆதாரபூர்வமாகவும் கடந்த தொடர் நிறுவியிருந்தது. அத்தோடு இப் படுகொலைகளின் அரூப கரங்களாக இந்திய புலனாய்வுத்துறையினர் விளங்கியதற்கான வாய்ப்புக்கள் பற்றியும் அத் தொடர் ஆராய்ந்திருந்தது.

இனி வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தின் பக்கம் எமது கவனத்தைத் திருப்புவோம்.

கிழக்கில் இடம்பெற்ற முஸ்லிம்களின் படுகொலைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எவ்விதத்திலும் தொடர்புபடாத பொழுதும், தென்தமிழீழத்தில் சிறீலங்கா முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிகாத் குழுவினரும் இணைந்து ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களைப் படுகொலை செய்தும், தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியும், தமிழ் கிராமங்களை அழித்து அங்கு முஸ்லிம் குடியேற்றங்களை நிறுவியமையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை சீற்றத்திற்கு உள்ளாக்கியது என்பது மறுப்பதற்கில்லை.

அக்கால கட்டத்தில் தென்தமிழீழத்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போராளிகளும், பொதுமக்களும் அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அரங்கேற்றிய கொலை வெறியாட்டங்கள் பற்றி மேற்கொண்ட முறைப்பாடுகளை ஆராய்வதற்காகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தென்தமிழீழத்திற்கு மாத்தையா அனுப்பி வைக்கப்பட்டார்.

11

தமிழீழ தாயகத்தை விட்டு வெளியேறுவதற்கு இந்தியப் படைகள் தயாராகிய இறுதி மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகத் தோற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் தலைவராக மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராகவும் விளங்கியவர் மாத்தையா என்றழைக்கப்படும் கோ.மகேந்திரராஜா. அவர் மீது தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். 1987ஆம் ஆண்டு ஆடி மாதம் ராஜீவ் காந்தியை சந்திப்பதற்காக டில்லிக்குப் புறப்படும் முன்னர் மாத்தையாவை இயக்கத்தின் பிரதித் தலைவர் என்ற நிலைக்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாது, தன்னிடமிருந்து டில்லியிலிருந்து எந்த உத்தரவுகள் வந்தாலும், மாத்தையாவின் அனுமதியின்றி அவற்றைச் செயற்படுத்த வேண்டாம் என்று தனது தளபதிகளுக்கு கட்டளையிட்டு விட்டே தலைவர் அவர்கள் டில்லி சென்றார். அந்த அளவிற்கு அவர் மீது தலைவர் நம்பிக்கை வைத்திருந்தார். அப்படிப்பட்ட மாத்தையா இந்தியாவின் கையாளாக மாறி தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைப்பார் என்று கனவிலும் கூட தலைவர் நினைத்திருக்க மாட்டார் என்றே கூறலாம்.

தலைவர் ஆணையிட்டபடி மாத்தையாவும் தென்தமிழீழம் சென்று விட்டு 1990ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தின் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தார். அப்பொழுது தென்தமிழீழத்தில் தளபதிகளாக கருணாவும், பதுமன் அவர்களும் இருந்தார்கள். பதுமன் பொறுப்பாக விளங்கிய திருகோணமலை மாவட்டத்தில் இருந்து முஸ்லிம்கள் தொடர்பாக வந்த முறைப்பாடுகளை விட, கருணாவின் பொறுப்பிலிருந்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து தான் முஸ்லிம்கள் விவகாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அதிர்ச்சியடையும் தகவல்களை மாத்தையா கொண்டு வந்திருந்தார். அது வரை சிறீலங்கா முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிகாத் குழுவினரும் செய்த படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், தமிழ்க் கிராம அழிப்புகள், நில ஆக்கிரமிப்புகள் பற்றியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அறிந்திருந்தது.    

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு மாத்தையா கொடுத்த தகவலின் சாராம்சம் இது தான். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த முஸ்லிம் போராளிகள் பலர் தமது ஆயுதங்களுடன் சிறீலங்கா படைகளுடன் இணைந்து காட்டிக் கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். தமிழின விரோதப் போக்கு சிறீலங்கா முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் ஜிகாத் குழுவினரிடையே மட்டுமன்றி சாதாரண முஸ்லிம் மக்களிடையேயும் மேலோங்கியிருக்கின்றது. தமிழினப் படுகொலைகளில் ஈடுபடும் முஸ்லிம் ஆயுதபாணிகளின் கூடாரங்களாக தென்தமிழீழத்தில் உள்ள பல பள்ளிவாசல்கள் மாறி விட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளைத் தாக்குவது, காட்டிக் கொடுப்பது போன்ற செயல்களில் ஒட்டுமொத்த முஸ்லிம் கிராமங்களே ஈடுபடுகின்றன. அத்தோடு இன்னொரு எச்சரிக்கையையும் மாத்தையா விடுத்திருந்தார்: தென்தமிழீழத்தில் வெடித்துள்ள தமிழ் - முஸ்லிம் முரண்பாடுகள் எந்த நேரமும் வடதமிழீழத்திற்கும் பரவி விடக் கூடும்.

மாத்தையாவின் கூற்றை உண்மையாக்கும் சில சம்பவங்கள் அக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்றிருந்தன. தென்தமிழீழத்தைப் போன்று வடதமிழீழத்திலும் தமிழ் - முஸ்லிம் கலவரங்களைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் ஆயுதங்களை மறைத்துக் கொண்டு வந்த முஸ்லிம் வணிகர்களின் பார ஊர்திகள் ஓமந்தையிலும், வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இவை போதாதென்று தென்தமிழீழத்தில் முஸ்லிம்களின் பின்புலத்துடன் அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலைகள், வடதமிழீழத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை சந்தேகக் கண்ணோட்டத்துடன் தமிழர்கள் பார்க்கும் நிலையையும் தோற்றுவித்திருந்தன. இதை விட இன்னுமொரு குண்டையும் மாத்தையா தூக்கிப் போட்டார். தென்தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட போராளிகளில் பலர் முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிகாத் குழுவினரும் மேற்கொண்ட கொலை வெறியாட்டங்களில் தமது தாய், தந்தை, சகோதரர், உறவினர், நண்பர் என ஏதோ ஒரு விதத்தில் தமது உறவுகளைப் பறிகொடுத்தவர்களாக இருந்தார்கள். வடதமிழீழத்தில் கள நடவடிக்கைகளுக்காக வரும் இப் போராளிகள், அங்கு தம்மைக் கொன்ற முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக நடமாடுவதை சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் மாத்தையா அவர்களின் வாதமாக இருந்தது. இதே வாதத்தைத் தான் அக் காலப்பகுதியில் கருணாவும் முன்வைத்திருந்தார்.

அதாவது வடதமிழீழத்தில் தொடர்ந்து முஸ்லிம்கள் தங்கியிருப்பது ஒன்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் அவர்கள் ஈடுபடும் நிலைக்கு வழிகோலும், அல்லது அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் தென்தமிழீழத்தில் இருந்து வரும் முஸ்லிம்களால் பாதிக்கப்பட்ட போராளிகள் ஈடுபடும் அபாய சூழல் விரைவில் தோன்றும் என்பது தான் மாத்தையா, கருணா போன்றோரின் முக்கிய வாதமாக இருந்தது.

இவ்வாறான பின்புலத்தில் தான் 1990ஆம் ஆண்டு ஐப்பசி மாத இறுதியில் வடதமிழீழத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அரசியல் தவறு நிகழ்ந்தேறியது. உண்மையில் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் உத்தரவு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் பிறப்பிக்கப்படவில்லை. இவ் உத்தரவைப் பிறப்பித்தவர் அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக விளங்கிய மாத்தையா தான்.

இவ் உத்தரவை மாத்தையா பிறப்பித்த பொழுது தலைவர் அவர்களை இலக்கு வைத்து முஸ்லிம்களால் ஏற்படுத்தப்பட்டது போன்று ஒரு நெருக்கடி தலைவரின் இருப்பிடத்திற்கு அருகில் தோற்றுவிக்கப்பட்டது. இது பற்றி 2009 பங்குனி மாதம் தமிழகத்தில் இருந்து வெளிவரும் குமுதம் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் பூடகமாகத் தெரிவித்திருந்தார்:

‘யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். அவர்கள் எமது இரத்தமும், சதையுமானவர்கள். எமது இயக்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்று எண்ணிய சில தீய சக்திகளே யாழ்ப்பாணத்தை விட்டு அவர்களை வெளியேற்றினார்கள். அச் சந்தர்ப்பத்தில் தனது பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஒன்றில் எமது தலைவர் பிரபாகரன் இருந்தார். இச் சம்பவத்தைக் கேள்வியுற்றதுமே யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குத் தலைவர் அவர்கள் கட்டளை பிறப்பித்தார்.’

வன்னிப் போர் தனது இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த காலப்பகுதியில் வெளிவந்த செவ்வி அது. அதனால் பா.நடேசன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பற்றி அப்பொழுது யாருமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் நடந்ததும் அது தான். இதனைப் புரிந்து கொள்ள நாம் விண்வெளி ஆராய்ச்சி எல்லாம் செய்யத் தேவையில்லை.

முஸ்லிம்களின் வெளியேற்றம் நிகழ்ந்த ஒரு மாதத்தில் வெளிவந்த தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையைப் படித்துப் பார்த்தாலே புரியும். முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நியாயப்படுத்தி எந்தவொரு கருத்தையும் தனது மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளியிடவில்லை. அது போல் தென்தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும், ஜிகாத் ஒட்டுக்குழுவினராலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை பற்றி ஒரு கண்டன வார்த்தை கூட தனது மாவீரர் நாள் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பேசவில்லை.

அந்த அளவிற்குத் தலைவர் அவர்களிடம் கண்ணியம் இருந்தது.

அக் காலப் பகுதியில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை மாத்தையாவும், கருணாவுமே நியாயப்படுத்தினார்கள். மாத்தையாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த விடுதலைப் புலிகள் பத்திரிகையில் இது பற்றி கட்டுரைகள் எழுதப்பட்டன. ‘கிழக்கு வானம் சிவக்கிறது’ என்ற தலைப்பில் தனது தென்தமிழீழப் பயணம் பற்றி எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் (வேறு ஒருவரால் எழுதப்பட்டது) முஸ்லிம் ஆயுதபாணிகளால் தென்தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு மாத்தையா முக்கியத்துவம் கொடுத்தார்.  

இந்திய உளவு அமைப்பான றோ நிறுவனத்தின் திட்டத்திற்கு இணங்கத் தமிழீழத் தேசியத் தலைவரைப் படுகொலை செய்வதற்கான சதி நடவடிக்கைகளில் மாத்தையா ஈடுபட்டமை ஆதாரபூர்வமாக அம்பலமாகிய பின்னர் தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மௌனத்தைக் கலைத்தார். மாத்தையாவின் சதி ஆதாரபூர்வமாக நிரூபணமாகியதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள், தளபதிகள் மத்தியில் உரையாற்றும் பொழுது தலைவர் அவர்கள் கூறினாராம், ‘வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் எந்தெந்த வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதோ தெரியவில்லை. இது பற்றி நாம் ஆராய்ந்தால் ஏற்கனவே ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பான சர்ச்சையால் இந்தியாவுடன் நிலவும் முரண்பாடுகள் இன்னும் மோசமாகி விடலாம்.’

ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விவாகரத்தில் தனது தெளிவான நிலைப்பாட்டை 13.9.1994 அன்று பிபிசி தமிழோசையில் வெளிவந்த செவ்வியில் (செவ்வி கண்டவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள்) இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தெரிவித்திருந்தார்:

‘அவர்கள் (முஸ்லிம்கள்) யாழ்ப்பாண மண்ணின் மக்கள். அக் காலகட்டத்தில் நிகழ்ந்த சில துர்ப்பாக்கியவசமாக சம்பவங்களால் அவர்கள் அகதிகளாகும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்காக நாங்கள் வருந்துகின்றோம்.’

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வருத்தம் தெரிவித்து ஓராண்டுகள் கழித்து யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த அவுட்லுக் எனப்படும் இந்திய சஞ்சிகையின் செய்தியாளரான ஏ.எஸ்.பன்னீர்ச்செல்வம் இது பற்றித் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களிடம் வினவிய பொழுது பின்வருமாறு பாலா அண்ணை கூறினார் (செவ்வி: 8.11.1995):

‘இது ஒரு துன்பியல் சம்பவம் என்பதோடு இதற்காக நாம் மன்னிப்புக் கோருகிறோம். அப்பொழுது இன மோதல்கள் வெடிக்கக் கூடிய சூழல் எழுந்ததால் அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில் அவர்களை அங்கிருந்து (வடக்கை விட்டு) வெளியேறுமாறு நாம் கேட்டுக் கொண்டோம். இது ஒரு தவறு. ஆனாலும் வடக்குக் கிழக்கில் வாழ்வதற்கான பரிபூரண உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை நாம் தெரிவித்திருக்கிறோம்.’

இதன் பின்னர் 3.4.2002 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவசுப்ரமணியம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் உரையாற்றும் பொழுது, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு அரசியல் தவறு என்று பாலா அண்ணை குறிப்பிட்டதோடு, இது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். அவ்விடத்தில் தேசத்தின் குரல் மேலும் குறிப்பிடுகையில்:

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மூலோபாயம் பற்றி இஸ்லாமிய சமூகத்திடம் பல்வேறு அச்சங்கள் உள்ளன. முஸ்லிம் மக்களைப் பாதிக்கக் கூடிய எல்லா விடயங்கள் பற்றியும் பேசி அவற்றுக்குத் தகுந்த தீர்வு காண்பதற்குத் தலைவர் பிரபாகரன் தயாராக இருக்கின்றார். முஸ்லிம் சமூகத்தின் கலாச்சாரத் தனித்துவத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மொழி ரீதியாகவும், பொருளாதார ரீதியாவும், நில ரீதியாகவும் தமிழர்களும், முஸ்லிம்களும் பின்னிப் பிணைந்திருப்பதால் இரு தரப்பினரும் சகோதரர்களாக வடக்குக் கிழக்கில் வாழ வேண்டும். கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகளை மறப்போம், மன்னிப்போம். தமிழீழம் முஸ்லிம்களின் தாயகம் என்பதால் சமரசமாகவும், ஒற்றுமையாகவும் சமாதானத்தையும், அபிவிருத்தியையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.’

தேசத்தின் குரல் பாலா அண்ணையின் அறிவித்தல் வெளிவந்து சரியாக பத்து நாட்களில் 13.4.2002 அன்று கிளிநொச்சியில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர்களைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சந்தித்தார். முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டு, தமிழீழ தாயகத்திற்கான இடைக்கால நிர்வாக ஒழுங்கிலும், இறுதித் தீர்விலும் அவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்குத் தலைவர் அவர்கள் உறுதியளித்தார். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களும் தமது சொந்த இடங்களில் குடியேறலாம் என்று தெரிவித்தார். ஆனால் அச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர்கள் தான் சற்று அடம் பிடிக்கும் போக்குடன் நடந்து கொண்டார்கள்.

கடந்த காலங்களில் தங்களுக்கு நடந்ததை மன்னிப்பதற்குத் தாங்கள் தயார், ஆனால் மறக்கத் தயாரில்லை என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தலைவர் பிரபாகரன் அவர்களிடம் அடம் பிடித்தார். வடக்குக் கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகமாக இருந்தாலும் சரி, நிரந்தரத் தீர்வாக இருந்தாலும் சரி, தனி முஸ்லிம் அலகிற்கு மாற்றீடாக எந்தத் திட்டத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்தாலும், அது தமிழ்ப் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்.

இவை எதற்கும் தலைவர் பிரபாகரன் அவர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. பிரித்தாள்வது, பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை சிறுபான்மையினர் மீது செலுத்துவது எல்லாம் சிங்கள ஆட்சியாளர்களின் செயல் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுட்டிக் காட்டினார். முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்றே இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று அங்கிருந்த தேசத்தின் குரல் பாலா அண்ணை, அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி பதுமன், அப்பொழுது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான கட்டளைத் தளபதியாக விளங்கிய கருணா ஆகியோரிடம் தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறினார்.

இவற்றை 8.6.2002 அன்று வெளிவந்த புறொன்ட் லைன் எனப்படும் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் ரவூப் ஹக்கீம் ஒப்புக் கொண்டிருந்தார்.

ஆனால் இவற்றோடு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நின்று விடவில்லை. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கான இழப்பீடாகத் தமிழீழ தாயகத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் வணிகர்கள் மீது வரி அறவிடக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவைத் தமிழீழ நிதித்துறைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவட்டக் கட்டளைத் தளபதிகளுக்கும் தலைவர் அவர்கள் பிறப்பித்தார்.

இதற்காகப் பின் நாட்களில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் தலைவர் பிரபாகரன் அவர்களை முஸ்லிம் தலைவர் அமீர் அலி பாராட்டியிருந்தார்.

ஆனாலும் அக்காலகட்டத்தில் முஸ்லிம்களின் விவாகரத்தில் கருணா முரண்டு பிடித்தார். தமிழீழத் தேசியத் தலைவரின் உத்தரவை மீறித் தென்தமிழீழத்தில் முஸ்லிம்களிடம் வரியும், கப்பமும் அறிவிட்டார். இது பற்றித் தமிழீழத் தேசியத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பொழுது, இதற்கான பழியை அப்பொழுது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய சி.கரிகாலன் மீது போட்டுக் கருணா தப்பித்துக் கொண்டார்.

ஈற்றில் கருணாவிற்கும், தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ.தமிழேந்தி, அப்பொழுது காவல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பா.நடேசன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டம்மான் ஆகியோருக்கும் இடையில் முரண்பாடுகள் எழுவதற்கும், கடைசியில் கிழக்கு மாகாண நிர்வாகத்தில் செ.வ.தமிழேந்தி, பா. நடேசன், ச.பொட்டம்மான் ஆகியோர் தலையிடக் கூடாது என்று கருணா நிபந்தனை விதித்ததற்கு முஸ்லிம்கள் விடயத்தில் கருணா நடந்து கொண்ட விதமும் ஒரு காரணம் எனலாம். ஏனென்றால் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை, நிதித்துறை ஆகியவை முஸ்லிம்களின் உதவியுடன் பல செயற்பாடுகளை மேற்கொண்டது. அத்தோடு கிழக்கில் கருணாவின் காட்டாட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் மேற்கொண்ட முறைப்பாடுகளைப் பா.நடேசனின் தலைமையிலான தமிழீழ காவல்துறையினரே விசாரணை செய்து அது விடயத்தில் தகுந்த நடவடிக்கைகளையும் எடுத்தார்கள்.

இறுதியில் 5.3.2004 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்துக் கொண்டு கருணா வெளியேறி இந்திய உளவுத்துறை மற்றும் இராசதந்திரிகளின் உதவியுடன் பெங்க@ரில் தஞ்சம் புகுந்த பொழுது தான் கருணாவின் பின்னணியில் நீண்ட காலமாகவே இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ இயங்கியது பட்டவர்த்தனமாகியது.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாக அல்லாது அரசியல் வழிகளில் தமிழீழத் தாயகத்தின் நில ஒருமைப்பாட்டைத் தக்க வைப்பதாயின் அதற்கு தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை இன்றியமையாதது. பிளவுபடாத தமிழீழ தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் எந்த அரசியல் தீர்வு அமைவதாயினும், அதற்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு தவிர்க்க இயலாதது. இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு தான் மாத்தையா, கருணா ஆகிய தனது கைக்கூலிகளைப் பயன்படுத்தி 1990ஆம் ஆண்டில் தமிழ் - முஸ்லிம் உறவில் நிரந்தர விரிசலை இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ நிறுவனம் விழுத்தியது. இதனைச் சீர்செய்வதற்குக் கடும் பிரயத்தனங்களைத் தலைவர் பிரபாகரன் எடுத்தார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலில் அறிமுகமாகிய மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் கூறுவது போன்று வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அல்ல. அப்படியான எண்ணம் மாத்தையா, கருணா போன்றோருக்கு இருந்திருக்கலாம். ஆனால் அப்படியான எண்ணம் எந்தக் காலகட்டத்திலும் தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருந்தது கிடையாது.

அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டதாகவே மாமனிதர் சிவராம் போன்றவர்கள் கூட கண்டனம் வெளியிட்டார்கள் (இது பற்றி சிவராம் எழுதிய கட்டுரை ஒன்றை முன்னைய தொடர் ஒன்றில் நான் இணைத்திருந்தமை வாசர்களுக்கு நினைவில் இருக்கலாம்). ஆனால் பா.நடேசன் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், அக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் களங்கம் விளைவிப்பதற்காகத் தீய சக்திகளால் இழைக்கப்பட்ட தவறை சீர்செய்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் எடுத்த நடவடிக்கைகள் பற்றி எழுதுவதற்கு சிவராம் உயிரோடு இருக்கவில்லை. இன்று சிவராம் உயிரோடு இருந்திருந்தால் சுமந்திரனுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருப்பார்.   

எது எப்படியோ, மாத்தையா, கருணா போன்றோரைப் பயன்படுத்தி முஸ்லிம் - தமிழ் உறவில் நிரந்தர விரிசலை விழுத்தியதன் மூலம் இந்திய உளவுத்துறை வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும். ஒப்ரேசன் சாணக்கியா – 2.0 நடவடிக்கையின் முழுப் பரிமாணங்களையும் பார்ப்பதற்கு முன்னர், 1980களிலும், 1990களிலும் இந்திய உளவுத்துறை மேற்கொண்ட இன்னும் சில சதி நடவடிக்கைகள் பற்றி ஆராய்வோம்.

(திரைவிலக்கல் தொடரும்)