சிங்கள ஆட்சியின் உளவியல் யுத்தம் -ஆசிரிய தலையங்கம்

சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத ரீதியான யுத்தத்தை எதிர்கொண்ட தமிழ் மக்கள் இப்போது ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களின் ஆட்சியில் மீண்டும் ஒரு யுத்தத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். தமிழினப் படுகொலையாளிகளில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வெற்றி பெற்றதன் பின்னர் தமிழ் மக்கள் மீதும், தமிழர் தாயகத்தின் மீது கட்டவிழ்த்து விடத்தொடங்கிய ஒடுக்குமுறை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் வெற்றிபெற்று ஆட்சியமைத்தன் பின்னர் மிகமோசமான கட்டத்தை அடையத் தொடங்கியுள்ளது.

சிஙகளப் பேரினவாதத்தின் ஆயுத வழி இன அழிப்பில் பேரழிவைச் சந்தித்த தமிழ் மக்கள், தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த இனஒடுக்குமுறையில் தங்கள் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படப்போகின்றார்கள். இதனைக் கோத்தபாய ராஜபக்சவின் புதிய நாடாளுமன்றத்தின் முதலுரை உறுதியாக்கியிருக்கின்றது.

பெளத்தத்திற்கு முன்னுரிமையளிக்கப்படுவதுடன் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுடன் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என நாடாளுமன்றில் அறிவித்துள்ளதன் மூலம், இலங்கைத் தீவை முழுமையாக பெளத்த, சிங்கள பூமியாக மாற்றும் அவரது கொள்கைத் திட்டத்தை இந்த உரை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

தமிழ் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்தத் திட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மீண்டும் உளவியல் போரையும் கோத்தபாய அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்கப்படுபவர் மீது உலகெங்கும் கட்டவிழ்த்துவிடும் போர்களில் இந்த உளவியல்போர் முதன்மையானது. போரில் வெற்றிபெறும் சாத்தியம் இருந்தபோதும்கூட, எதிரியின் இந்த உளவியல் போருக்குள் ஓர் இனம் சிக்கிக்கொண்டால் அந்த இனத்தால் கிடைக்கக் கூடிய வெற்றியையும் பெறமுடியாமல் போகும். உடல் வலிமை கொண்டவர்களின் மனவலிமையை தகர்த்து தோல்வியை நோக்கித் தள்ளுவது இந்த உளவியல்போரின் முதன்மைத் தந்திரம். தனது இனஒடுக்குமுறையை கூர்மைப்படுத்த சிங்கள ஆட்சியாளர்கள் காலத்திற்குக் காலம் இவ்வாறான உளவியல் போரை கட்டவிழ்த்து விட்டே வந்திருக்கின்றனர் என்பதால் தமிழ் மக்களுக்கு இதுவொன்றும் புதிதானது இல்லைத்தான்.

ஏற்கனவே, தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகம் செயற்பாட்டில் இருந்தபோதும் சிங்களம் தமிழ் மக்கள் மீது இவ்வாறான உளவியல் போரைக் கட்டவிழ்த்து விட்டதுண்டு. ஆனால், அப்போது விடுதலைப் புலிகளின் பலம், சிங்களத்தின் இந்த உளவியல் போர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்காமல் தடுத்துவிட்டது. ஆனால் தற்போது இந்த நிலைமை இல்லை. பலமற்றவர்கள் என்ற மனோபாவம் கடந்த பத்துவருடங்களாக தமிழர்களின் மனங்களில் ஆழமாகப் பதிக்கப்பட்டு வருகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிப்பின் பின்னர் சிறீலங்காவின் ஆட்சிக்கு மாறி மாறி வந்த அரசுகள் மனோபலத்தை அழிக்கும் இந்த உளவியல் போரை பல்வேறு வடிவங்களிலும் முன்னெடுத்து வருகின்றன. தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களைத் துண்டுதுண்டாகப் பிளவுபடுத்தி, உள்ளுக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்து இந்த நாசகார உளவியல்போரை சிங்கள அரசுகள் முன்னெடுத்துள்ளன.

இதன் உச்சவடிவமாக இப்போது ராஜபக்ச குடும்ப அரசு தமிழ் மக்கள் மீது ஒரு உளவியல் போரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆயுதங்களால் தமிழ் மக்களை அடக்குவது இப்போதைய சூழ்நிலையில் சிங்களத்திற்கு சாத்தியமில்லை என்பதால் முழுமையாக உளவியல் ரீதியாக தமிழர்களை அச்சத்திற்கு உள்ளாக்கி அடிபணிய வைத்து தமிழர்களின் தாயகக் கனவை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கை இது. இதற்காக பல்வேறு வடிவங்களை ராஜபக்ச குடும்ப அரசு முன்னெடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகங்களில் இராணுவ முன்னாள் அதிகாரிகளை அமர்த்துவது இதன் ஒரு வடிவம்தான். சிவில் நிர்வாகங்களில் இராணுவ அதிகாரிகள் பொறுப்புக்களில் இருக்கும்போது தமிழ் மக்கள் தங்கள் தேவைகளை சாதாரண ஒரு அதிகாரியுடன் நிறைவேற்றுவதுபோல் நிறைவேற்றிக்கொள்ளத் தயங்குவார்கள். காரணம் ஏற்கனவே சிறீலங்கா இனஅழிப்பு இராணுவத்தின் கொடூரங்களை அறிந்துவைத்துள்ள தமிழ் மக்கள், அவர்களிடம் நெருங்கிச் சென்றோ, அல்லது முரண்பட்டோ காரியத்தை நிறைவேற்றத் தயங்குவார்கள். தமிழ் மக்கள் எப்போதும் ஒருவித அச்சமான சூழ்நிலைக்குள் வாழும் வகையில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு இருக்கும் என்பதுடன், தமிழர் தாயகத்தை சிங்கள, பெளத்த மயப்படுத்தவதிலும் இந்த சிவில் இராணுவ அதிகாரிகளின் செயற்பாடுகளும் தீவிரமாக இருக்கும். இதனைக் கடந்தகாலங்களில் தமிழர்கள் கண்டுணர்ந்தபோதும், இனி வருங்காலங்களில் யாரும் எதிர்க்க முடியாதளவிற்கு இன்னும் இவை தீவிரமாகும். இதற்கான பாதையை கோத்தபாய சிங்கள இனவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும்  திறந்துவிட்டுள்ளார்.

அடுத்து, தமிழ் மக்களிடம் ஒரு தோல்வி மனப்பான்மை சிங்களத்தால் மிகவும் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தோல்வி மன்பான்மையின் மூலமாக தமிழ்களின் நம்பிக்கையை சிதைத்து, தங்களால் சுயமாக எதனையும் செய்யமுடியாது என்பதுபோன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு, சிங்களவர்கள் மூலமாகவே எதனையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற மனநிலை வளர்க்கப்பட்டவருகின்றது.

இந்த மனநிலையை தமிழர்களிடம் வளர்ப்பதற்கு கடந்த காலங்களில் சிறீலங்கா அரசுடன் இணைந்து இனஅழிப்பில் ஈடுபட்ட துணை இராணுவக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. வடக்கில் ஈ.பி.டி.பி. டக்ளஸ், அங்கசன் இராமநாதன் போன்றவர்களும், கிழக்கில் பிள்ளையான், கருணா போன்றவர்கள் சிங்களத்திடம் தங்கிவாழும் மனநிலையை தமிழ் மக்களிடம் வளர்ப்பதுடன், தங்கள் வாழ்வின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இவர்களின் பின்னால் வால்பிடித்து அலையவேண்டிய நிலைமை தமிழ் மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை மறைத்து சிறுபான்மை இனம்போல் சிங்கள அரசிடம் எப்போதும் எதிர்பார்த்து வாழும் சூழ்நிலை இவர்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உளவியல்போர்களின் எதிரொலிதான் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், வன்னியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும், மட்டக்களப்பில் படுகொலையில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் பிள்ளையானும் தேர்தல் வாக்குகளில் முதன்மை இடங்களை பெற்றதற்கான காரணம்.

இதனைவிட சிந்திக்க வேண்டிய இளைய தலைமுறைகள் சிந்தனைக்கு வரமுடியாதவாறு மதுபானங்களுக்கும், போதைப்பொருட்களுக்கும் இளவயதிலேயே அடிமையாகப்பட்டுள்ளது மட்டுமல்ல ஆடம்பரமான டாம்பீக வாழ்க்கை வாழ்வதற்கும், வறட்டுக் கதாநாயகர்களாக வலம்வருவதற்கும் திருட்டுக்களிலும், வாள்வெட்டுக்களிலும் ஈடுபடும் வன்முறைக் கும்பல்களாகவும் இளைஞர்கள் மாற்றப்படுகின்றனர்.

சிங்களப் பேரினவாதம் கச்சிதமாக திட்டமிட்டே தன் நகர்வுகளை வேகமாக முன்னெடுத்து வருகின்றது. இந்தவேளையில், அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியாகத் திரண்டு ஒருங்கிணைந்து செயற்படாதுபோனால், சிங்களம் தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை அத்தனையையும் மிகவிரைவிலேயே அழித்துவிடும் என்பது உறுதி.