செய்திகளும், எழும் கேள்விகளும் - மாயவள்

செய்தி: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை இன்னொருவர் ஏற்பதற்கும் தாராளான அளவு இடம் இருப்பதாக கட்சியின் பிரதித் தலைவராகத் தெரிவாகியுள்ள ருவான் விஜேவர்த்தனா தெரிவித்துள்ளார்.


கேள்வி: தனது உடல் எடை குறைந்து விட்டதை ருவான் விஜேவர்த்தனா குறிப்பிடுகின்றாரா? அல்லது வேறு எதையாவது குறிப்பிடுகின்றாரா?

. . .

செய்தி: தமது படையினர் மீது போர்க்குற்றச் சாட்டுக்களை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் முன்வைப்பது இயற்கையின் நீதிக்கு முரணானது என்று சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கேள்வி: அப்படி என்றால் இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்த கொடுஞ்செயல் எந்த நீதிக்கு இசைவானது என்பதை சிறீலங்கா அரசாங்கம் தெளிவுபடுத்தலாமே?

. . .

செய்தி: சி.வி.விக்னேஸ்வரன் போன்ற பிரிவினைவாதிகள் இருக்கும் வரை தமது படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்க முடியாது என சிறீலங்கா இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கேள்வி: இதைத் தான் மொட்டந் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்று சொல்வார்களோ?

. . .

செய்தி: தனக்கு எதிராகத் தனது முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல் செய்தமை ஒரு துன்பியல் சம்பவம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

கேள்வி: தனக்கும், சாமுக்கும் (இரா.சம்பந்தருக்கும்) இடையில் விரிசல் விழுந்ததும் ஒரு துன்பியல் சம்பவம் என்று அடுத்து செல்வாரோ?

. . .

செய்தி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிவைத்துள்ளார்.

கேள்வி: அப்படி என்றால் அவரது அம்பு சுமந்திரனை வீழ்த்தி விடுமோ?

. . .

4செய்தி: யாழ்ப்பாணம் வசந்தபுரத்தில் 10 மலசல கூடங்களைக் கட்டுவதற்கு புலம்பெயர் தமிழர்களிடம் சுமந்திரன் நிதியுதவி கோரியுள்ளார்.

கேள்வி: சமஸ்டி கோரி சுமந்திரன் தொடங்கிய இராசதந்திரப் போராட்டம் கடைசியில் கழிவறை கட்டுவதற்கு பிச்சையெடுப்பதிலா முடிய வேண்டும்?