கால் இடறினால் யானையும் கீழே விழும் - பிலாவடிமூலைப் பெருமான்

வணக்கம் பிள்ளையள்.

உள்ளத்திலை தீயை வைச்சுக் கொண்டு உதட்டிலை பழஞ்சொரியிற பழக்கம் எனக்கு இல்லை பிள்ளையள்.

என்னடா கிழடு வந்ததும் வராததுமாக எரிஞ்சு விழுகுது என்று நீங்கள் நினைக்கிறது எனக்கு விளங்குது. ஆனால் மனதில் இருக்கிறதை வெளியில் சொல்லாமல் என்னாலை இருக்க முடியவில்லை.

சும்மா நடிப்புக்கு குசலம் விசாரிக்கிறது என்ரை பழக்கமும் இல்லை.

எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு...

எப்பிடிப் பிள்ளையள் ஆத்திரம் வராமல் இருக்கும்? எங்களுக்காக, நாங்கள் எல்லோரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்கிறதுக்காக, எங்களுக்கு ஒளி தெரிய வேண்டும் என்பதற்காக மெழுகுதிரி மாதிரி தன்னையே உருக்கி உயிரைக் குடுத்த திலீபனை நினைவுகூர முடியாது என்றால் பிறகு நாங்கள் எல்லோரும் உயிரோடு இருந்து என்ன பிரயோசனம் பிள்ளையள்?

ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தாலே எங்களுக்கு வயிறு கிளறத் தொடங்கி விடும். சரி அது தான் வேண்டாம். ஒரு நாள் முழுக்க வெய்யில் நேரத்திலை ஒரு சொட்டுத் தண்ணியும் குடிக்காமல் இருந்து பாருங்கோ.

ஒரு நேரத்துக்குச் சாப்பிடாமல், ஒரு நாளைக்குத் தண்ணி குடிக்காமல் எங்களால் இருக்க முடியாது எண்டேக்குள்ளை பன்னிரண்டு நாள் ஒரு துளி தண்ணீரும், ஒரு பருக்கை சோறும் இல்லாமல் பட்டினிப் போர் செய்து தன்னையே தற்கொடையாகத் தந்த உன்னதப் பிறவி திலீபன்.

அப்பிடிப்பட்ட எங்கடை காவல் தெய்வத்தை நினைவுகூருவதற்கு அனுமதியில்லை என்றால், அதற்கு தடை என்றால், அதைப் பார்த்துக் கொண்டு இருக்கிற நாங்கள் எல்லோருமே மானங்கெட்ட பிறவியள்.

யுத்த்தில் எதிரியிடம் பிடிபட்டவுடன் அவனிடம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வாங்கிக் குடிக்கக் கூடாது என்கிற மான ரோசத்தோடை நீராகாரம் அருந்தாமல் மடிந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை என்கிற மன்னனின் வம்சத்திலை வந்த வீரப் பரம்பரை நாங்கள்.

‘குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆஅள் அன்று என்று வாளின் தப்பார்.
தொடர்ப்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத் தானே.’

என்னடா இந்தக் கிழடு விளங்காத தமிழில் கவிதை ஒன்று பாடுது என்று நினைச்சிடாதேயுங்கோ. இது புறநானூற்றில் இருக்கிற பாடல். இதை எழுதினதும் சேரமான் கணைக்கால் இரும்பொறை தான்.

இதின்ரை அர்த்தத்தை இரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறது என்றால், ‘குழந்தை இறந்தாலும், இறந்து பிறந்தாலும் அதை ஆளாகக் கருதி அதின்ரை உடலில் வாளால் கீறு போட்டு அடக்கம் செய்கிற வீரப் பரம்பரையில் வந்த நான், என்ரை வயிற்றுப் பசி அடங்க நாயினும் கீழாக இறங்கி வந்து ஒரு துளி தண்ணீருக்காக மண்டியிட்டுக் கெஞ்சுவேன் என்று நினைத்தாயோ?’ என்று தன்னுடைய எதிரியிடம் கேட்பது தான் பிள்ளையள் இந்த பாடலின்ரை அர்த்தம்.

இப்ப விளங்குதே பிள்ளையள் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று?

எங்கடை காவல் தெய்வமாக விளங்குகிற தம்பி திலீபனை நினைவு கூருகிறதுக்கு எங்கடை தாயகத்தில் எங்களுக்கு உரிமை இல்லை என்றால் பிறகு என்ன உரிமையை நாங்கள் பெற முடியும்?

உதுக்கு ஒரு வழி தான் இருக்குது பிள்ளையள். தமிழர் தாயகம் தழுவிய ரீதியில் முழு அளவிலான ஒத்துழையாமை இயக்கத்தை நாங்கள் உடனடியாகத் தொடங்க வேணும் பிள்ளையள்.

1961ஆம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் நடந்த தமிழ் அரசு அமைக்கிறதுக்கான போராட்டம் மாதிரியான ஒத்துழையாமை இயக்கமாக இது நடந்தேற வேண்டும்.

பூனைக்கு ஆர் மணி கட்டுகிறது என்பது பிரச்சினை இல்லை பிள்ளையள். இப்ப பிரச்சினை ஊர் கூடி தேர் இழுக்க வேணும் என்கிறது தான்.

அரசியல் கட்சிகளையோ, அரசியல்வாதிகளையோ பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவையள் செய்கிறதைச் செய்யட்டும். நாங்கள் மக்கள் எழுச்சி கொள்ள வேணும். தம்பி திலீபன் சொன்ன மாதிரி எங்கடை மக்கள் பரிபூரணமாகக் கிளர்ந்து எழ வேண்டும். மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்.

கால் இடறினால் யானையும் கீழே விழும் எண்டு சும்மாவே சொல்கிறவையள்? எங்கடை மக்களின்ரை எழுச்சி சிங்கள யானையின்ரை காலை இடற வைத்துக் கீழே விழுத்த வேண்டும்.

அதை விட்டுப் போட்டு சும்மா கண்டன அறிக்கைகள் விடுகிறதிலையும், சும்மா படம் காட்டுறதுக்கு கற்பூரம் கொளுத்துறதிலையும் அர்த்தம் இல்லை.

நான் சொல்கிறது தாயகத்திற்கு மட்டும் பொருந்தாது பிள்ளையள். இஞ்சை வெளிநாட்டிலையும் உடனடியாக ஒரு எழுச்சி வேணும் பிள்ளையள்.

சும்மா சூமிலை அஞ்சலி நிகழ்வு நடத்துறதை விட்டுப் போட்டு, அந்தந்த நாடுகளின்ரை சட்ட திட்டங்களுக்கு அமைவாக எங்களின்ரை எதிர்ப்பை வெளிப்படுத்துகிறதுக்கு நாங்கள் முன் வர வேண்டும்.

இதையும் நாங்கள் செய்யத் தயாரில்லை என்றால், வருசா வருசம் திலீபனின்ரை படத்துக்கு கற்பூரம் கொளுத்தி ஆராதிக்கிறதிலை அர்த்தம் இல்லை.
 
இனியும் என்னைக் கிளறாதேயுங்கோ.