தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு – கிழக்கில் இருந்து எழுவான்

இலங்கைத் தீவை கொலணித்துவம் செய்த போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தாலும், அவர்களது நோக்கம் வேறானது. வெள்ளையர்களிடமிருந்து இலங்கைத்தீவு விடுபட்ட பின்னர், தமது இனக் குழுமங்களை குடியேற்றும் திட்டமானதாக தமிழர் நிலங்களை ஆக்கிரப்பு செய்யும் பல திட்டங்கள் சிங்கள இனத்தால் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்தே உள்ளன. தமிழர் வாழ்ந்து, ஆட்சி செய்த பல நிலங்கள் இன்று சிங்களப் பகுதிகளாக (பிரதேசங்களாக) தோற்றம் பெற்றுள்ளன.

1948 ஆம் ஆண்டு தமிழர் தாயகப்பகுதியான வடக்குக் கிழக்கை குறிப்பாகத் கிழக்கு மாகாணத்தைச் சிங்கள மயமாக்குவது என்ற சிறீலங்கா அரசின் திட்டம் 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தனாவினால் ஆரம்பிக்கப்பட்டு கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில், சிறீலங்காவின் அரச இயந்திர நிறுவனங்கள் செயற்திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது கோட்டாபய ராஜபக்சவினால் சிங்களவர்களை மாத்திரம் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பௌத்த சின்னங்கள், மரபுரிமைகள் இருப்பதாகப் புனைவுகள் செய்யப்பட்டு சில பிரதேசங்கள் அடையாளமிடப்பட்டுள்ளன. சிங்கள இனத்தின் நில ஆக்கிரமிப்புத் திட்டம் பல்வேறு சூழ்ச்சிகளாலும், தந்திரவழிகளாலும், திட்டமிட்டக் குடியேற்றங்களாலும் இடம்பெற்றுள்ளது. படிப்படியாக பலப் பூர்வீகத் தமிழரின் நிலங்கள் சிங்களவர் நிலங்களாக மாறத்தொடங்கியது. பல ஊர்களின் தமிழ் பெயர்கள் சிங்களப் பெயர்களாகின. இத்திட்டங்கள் 1980களில் படித்த மாணவர்களை கிளர்ந்தெழ வைத்தது. அது ஆயுத போராட்ட வடிவமாக மாறி சரித்திரமாகியுள்ளது.

இன்று தமிழர்களின் தாயகப்பகுதியான தென்தமிழீழத்தில், பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்த பூர்விக நிலங்கள் அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தையும் ஆக்கிரமிப்புச் செய்ய தற்போதைய இனவாத சிங்கள அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இடம்பெற்ற சிறீலங்கா அதிபருக்கான தேர்தலின் போது நூறுவீதம் இனவாதத்தை விதைத்து அதிபராக வந்துள்ள  கோட்டாபாய ராஜபக்ச, பௌத்த மகா சங்கத்தின் ஆலோசனைக் குழுவின் ஏற்பாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள பதினொருபேர் கொண்ட அதிபர் செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். எனினும் தமிழ் பேசும் இனத்தவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்த இறக்காமம் மாயக்கல்லி மலைப்பகுதியில் தமிழர்கள் முஸ்லிம்களினால் விரட்டியடிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்தனர். எனினும், 2018 ஆம் ஆண்டு இறக்காமம் மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்காக முஸ்லிம்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. அன்றைய ஆளுநராக இருந்த ரோகித போகொல்லாகம உள்ளிட்ட அதிகாரிகளைக் கொழும்பில் சந்தித்திருந்த சிறீPலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் உயர்மட்டக் குழு, இறக்காமம் மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் காணி அபகரிப்புத் தொடர்பாக முறையிட்டிருந்தது. இதனால் காணி அபகரிப்பும் கைவிடப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் போதே விகாரை மற்றும் புத்தர் சிலைகள் அமைக்கும் பணிகள் முஸ்லிம்களின் எதிர்ப்புகளின் மத்தியிலும் இடம்பெற்றிருந்தன. எனினும் 2020 மே மாதம் 15ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் பொத்துவில் கடற்கரை விகாரையின் பாதுகாப்பு சிறீலங்காவின் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மே மாதம் 14 ஆம் திகதி சென்று பார்வையிட்டிருந்தார்.

ஆம்பாறை மாவட்டத்தில் 246 இடங்கள் பௌத்த மதம் சார்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் 55 பௌத்த மதத்தோடு சார்ந்துள்தாக தெரிவித்து ஆக்கிரமிப்பு செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 160க்கும் மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் இடத்திற்கு சொந்தமானது என செயலணி அடையாளமிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். இந்த இடங்கள் அனைத்தும் தமிழர்களின் வழிபாட்டுத்தலங்களாக காணப்படுகிறது. முன்னொருகாலத்தில் குன்று இருக்கும் இடங்கள் அனைத்தும் குமரன் இருக்கும் இடம் என போற்றப்பட்டது. ஆனால், தற்போது அந்த மரபு மாறி குன்று இருக்கும் இடமெல்லாம் புத்தர் இருக்கும் இடமாக மாற்ற சிங்கள இனவாத அரசு முற்படுகிறது.

2020 ஆண்டு யூலை மாதம் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் அமைந்துள்ள வைரவர் புளியடி ஆலயத்திற்கு சென்ற அரச அதிபர் செயலணியின் உறுப்பினர்களின் ஒருவரான பனமுரே திலகவன்ச தேரர், இந்த ஆலயத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கைவிடுத்துச் சென்றார். அதன்பிறகு வெல்லாவெளி காவல்துறை நிலையப்பொறுப்பதிகாரி சென்று மக்களை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம் செய்யதார் எனினும் கிராம மக்களின் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதேபோன்று திருப்பாடல்பெற்ற சைவத்தலமாக கருதப்படும் திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் எவ்வித கட்டுமானப்பணிகளும் மேற்கொள்ள கூடாது என தொல்லியல்; திணைக்களகம் தடைவிதித்துள்ளது. அவ்வாறு சம்பூர்ப்பகுதியில் உள்ள சூளைக்குடா மலையில் உள்ள முருகன் ஆலயத்திலும் கட்டுமானப்பணிக்கு தடைவிதித்துள்ளது. மட்டக்களப்பில் குசலான மலை முருகன் ஆலயத்திற்கும் தடைவிதித்துள்ளது. மட்டக்களப்பு சித்தாண்டி ஆலயத்தையும் தொல்பொருள் தொல்பொருள் திணைக்களகம் ஆக்கிரமிப்புச் செய்துள்ளது.

மறுபுறமாக மட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரின் கீழ், பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. மதுரோயா திட்டம் என்பது மகாவலி திட்டத்தின் கீழ், நீண்ட காலமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாவலி திட்டத்தின் கீழ் இடதுகரை வாய்க்கால், வலதுகரை வாய்க்கால் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

வலதுகரை வாய்க்கால் என்பது தொப்பிகல பிரதேசமாகும். மகாவலி அபிவிருத்தி சபை எதுவித தகவல்களையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்காமல் ஆய்வுகளை மேற்கொண்டு தற்பொழுது அதை அமுலாக்குவதற்கான இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கின்றார்கள். இதற்காக, கிரான் பிரதேச சபைக்குட்பட்ட நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு உள்வாங்கப்பட்டுள்ளன. இதனால், பாரிய பாதிப்புகள் ஏற்படவுள்ளன. அத்துடன் செங்கலடி, ஈரளக்குள பிரதேசங்களும் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படவிருக்கின்றன. மொத்தமாக 15500 ஹெக்டெயர் நிலப்பரப்பு இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளன.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்கெடுப்பின் படி, தொப்பிகல பிரதேசத்தில் நிரந்தரமாக 986 சிங்கள குடும்பங்கள் வசிப்பதாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியாது. இருக்கின்ற தமிழ்க் குடும்பங்களை விட சிங்கள குடும்பங்கள் அங்கு கூடுதலாக இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து இத்திட்டத்தை பாரிய நில அபகரிப்பு திட்டமாகும்.

காணி அபகரிப்பு செய்யப்படவுள்ள இடங்கள் வன இலகாவுக்கு சொந்தமானது, அங்கு மிருகங்கள் வாழும் பகுதியாகும். இவற்றிற்கான அனுமதிப் பத்திரங்கள் உரியமுறையில் பெறப்படவில்லை. இதற்குள் கிட்டத்தட்ட 41 தொல்பொருள் ஆராய்ச்சி இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.  13638 ஏக்கர் நிலம் பறிபோகப் போகின்றது. அதுமாத்திரமல்ல, மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக இரண்டரை ஏக்கர் காணி விவசாயத்திற்கும் கால் ஏக்கர் காணி வீட்டு பயிர் செய்கைக்காகவும் வழங்கப் போகின்றனர். இதனால், மாவட்டத்தில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த காணியும் சூறையாடப்படுவதுடன், வளமும் சுரண்டப்படுகிறது.

தமிழர் தாயகமான தென்தமிழீழத்தில் மகாவலி, தொல்பொருள் திணைக்களகம், படை மயமாக்கல், பௌத்த மத விரிவாக்கம் என தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புச் செய்வதில் இருந்து எவ்வாறு தடைசெய்ய வேண்டும் என்பதை இங்குள்ள அரசியல் வாதிகள் சிந்திப்பார்களா?