ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 8 - கலாநிதி சேரமான்

புலனாய்வு உலகம் என்பது பல்வேறு மயிர்க்கூச்செறியும் திகில் மிக்க நிகழ்வுகள் கட்டவிழும் ஒன்று. எதுவெல்லாம் சாத்தியமில்லை என்று நாம் கருதுகின்றோமோ அவை எல்லாம் புலனாய்வு உலகில் நிகழ்ந்தேறி விடும்.

அண்மையில் புலஸ்தினி ராஜேந்திரன் என்ற தமிழ்ப் பெண் தொடர்பாக வெளிவந்த தகவல்களை இதற்கான உதாரணமாகக் கொள்ளலாம். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து சிறீலங்கா புலனாய்வுத்துறையினரால் தேடப்படுவோரில் முக்கியமான ஒருவராக விளங்கிய புலஸ்தினி இற்றை வரைக்கும் கைது செய்யப்படவில்லை.

26.04.2019 அன்று அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சிறீலங்கா படையினர் முற்றுகையிட்ட பொழுது வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துத் தம்மைத் தாமே அழித்துக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளோடு புலஸ்தினியும் தற்கொலை செய்து கொண்டார் என்று தான் முதலில் சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ஆனால் அதன் பின்னர் புலஸ்தினியை ‘அங்கே கண்டோம்?, இங்கே கண்டோம்’ என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து வெளிவந்த தகவல்களை அடுத்து புலஸ்தினி உயிரோடு இருக்கலாம் என்ற ஐயம் வலுப்பெற தமது தேடல்களை சிறீலங்கா புலனாய்வுத்துறை முடுக்கி விட்டது. கடைசியில் சாய்ந்தமருது தற்கொலையாளிகளின் உடற்கூறுகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனைகள், புலஸ்தினி அங்கு நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் உயிரிழக்கவில்லை என்பதை உறுதி செய்ய, அவர் பற்றிய மர்மம் மேலும் வலுவடைந்தது.

இதன் பின்னர் 13.07.2020 அன்று மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச காவல்துறைப் போக்குவரத்துப் பொறுப்பதிகாரி அபு பக்கர் கைது செய்யப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த ஆண்டு புரட்டாதி மாதம் புலஸ்தினி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதும், அவர் இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்கு அவரது உறவினர் ஒருவரும், காவல்துறை அதிகாரி அபு பக்கரும் உதவி செய்தமை உறுதியாகியது.

அத்தோடு புலஸ்தினியின் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை. உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணையத்திற்கு 22.07.2020 அன்று சாட்சியமளித்த சிறீலங்கா அரசுப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர், புலஸ்தினி இந்திய வெளியக உளவு அமைப்பான றோ நிறுவனத்தின் முகவர் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் சூத்திரதாரியான சாஹ்ரானின் குழுவிற்குள் புலஸ்தினியை இந்திய உளவுத்துறை ஊடுருவ வைத்ததாகவும், அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிய எச்சரிக்கையை முற்கூட்டியே சிறீலங்கா அரசுப் புலனாய்வுத்துறைக்கு இந்தியப் புலனாய்வு நிறுவனமான றோ விடுத்ததாகவும் தனது சாட்சியத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவரான மொகமட் கஸ்தூனைத் திருமணம் முடிப்பதற்கு முன்னரே இந்திய உளவாளியாகப் புலஸ்தினி விளங்கினாரா? அல்லது தன்னைத் திருமணம் செய்த பின்னர் வேறு பெண்களுடன் கஸ்தூனுக்கு தொடர்பு ஏற்பட்டதை அடுத்து அவரைத் தமது வலையமைப்பிற்குள் இந்திய உளவுத்துறை உள்வாங்கியதா? என்பதைப் பற்றி நாம் இங்கு ஆராயத் தேவையில்லை. அதனை சிறீலங்கா புலனாய்வுத்துறையும், புலஸ்தினியின் விவாகரத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஆய்வாளர்களும் ஆராய்ந்து கொள்ளட்டும்.

ஆனால் தனது தேசிய நலன்களுக்கு விரோதமாக அல்லது அச்சுறுத்தலாக விளங்கும் அமைப்புகளுக்குள் ஆட்களை ஊடுருவ வைப்பது, அதுவும் இளம் பெண்களை ஊடுருவ வைப்பது என்பது இந்தியப் புலனாய்வுத்துறையினரைப் பொறுத்த வரை புதிய விடயம் அல்ல. இவ்வாறான ஊடுருவல் நடவடிக்கை ஒன்று பிரான்சில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்குள் 1996ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிகழ்ந்தது.

..................................................

2002ஆம் ஆண்டின் இறுதிக் கட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு ஐரோப்பிய நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட காலப்பகுதி அது. இப்படித் தான் ஒரு நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழு டென்மார்க் சென்றிருந்தது.
அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதியாக விளங்கிய கருணா மட்டும் தூதுக் குழுவிலிருந்து காணாமல் போயிருந்தார். ஒரே விமானத்தில் ஏறிப் புறப்பட்டவர் எங்கே போனார் என்பதே பலரது கேள்வியாக இருந்தது.

ஒரு தளபதி காணாமல் போகின்றார் என்பது என்ன சாதாரண விடயமா? கருணாவிற்கு என்ன நடந்தது என்ற அங்கலாய்ப்பில் பலர் ஆழ்ந்தனர். தமது நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஒரு தளபதி காணாமல் போய் விட்டார் என்பதை எப்படி தலைமைப்பீடத்திற்கு அறிவிப்பது என்ற அச்சம் அவர்களுக்கு. மாறி மாறி செல்பேசிகள் அலறின. கடைசியில் கருணாவே அவர்களுடன் தொடர்பு கொண்டு தான் பத்திரமாக தனது நண்பர் ஒருவர் வீட்டில் விருந்துண்டு கொண்டிருப்பதாகவும், தன்னை அங்கு வந்து அழைத்துச் செல்லுமாறும் தெரிவிக்கப் பதற்றம் தணிந்தது. ஆனால் அத்தோடு கதை முடியவில்லை. தன்னை அழைத்து வரப் புறப்பட்டவர்களுக்கு கருணா அடுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

................................................

1998ஆம் ஆண்டின் தொடக்க காலப்பகுதி அது. ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில் நடைபெற்ற அந்த இயக்கப் பொறுப்பாளரின் திருமணத்திற்கு சென்று திரும்பியவர்கள் ஆச்சரியத்துடன் ஒரு விடயத்தைப் பேசிக் கொண்டார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஒரு சிறிய நாடு. அந்த நாட்டில், அக்கால கட்டத்தில் சொற்ப எண்ணிக்கையிலான தமிழ் மக்களே வாழ்ந்து வந்தார்கள். அதனால் அந்த நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரிதளவில் நிதி கிடைப்பதில்லை. அத்தோடு மக்கள் வழங்கிய நிதியில் மோசடிகள் நடந்ததாகவும் எந்தக் குற்றச்சாட்டுகளும் இருக்கவில்லை. அப்படியிருந்த பொழுது அந்நாட்டு இயக்கப் பொறுப்பாளரின் திருமணத்தில் மணப்பெண்ணும், மணமகனின் உறவினர்களும் அணிந்திருந்த அதிக அளவிலான தங்க நகைகள் தான் திருமணத்திற்குச் சென்று திரும்பிய பலரது கவனத்தை ஈர்த்திருந்தன. ‘இது எப்படி சாத்தியம்?’ என்பது தான் அன்று திருமணத்திற்குச் சென்று வந்தவர்களின் கேள்வியாக இருந்தது.

வெளிநாடு வந்த நாள் முதல் முழுநேரமாக இயக்கப் பணியில் ஈடுபட்ட ஒருவரால் எவ்வாறு இவ்வளவு தங்க நகைகளைத் தான் மணம் முடித்த பெண்ணுக்கு வழங்க முடியும்? சரி, வெளிநாடு வரும் முன்னர் தாயகத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஏதாவது ஆதனங்கள், தேடிய தேட்டங்கள் இருந்தன என்று ஆராய்ந்து பார்த்த பொழுதும் கூட அப்படி ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அத்தோடு குறித்த இயக்கப் பொறுப்பாளர் ஐரோப்பாவிற்கு வருவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக விளங்கியவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீடுகள் சிலவற்றில் துப்பாக்கியுடன் குப்புறப் படுத்திருந்து அவர் குறிபார்க்கும் நிழற்படங்கள் கூட வெளிவந்திருந்தன. அப்படிப்பட்ட ஒருவரிடம் எவ்வாறு இவ்வளவு தங்க நகைகள் கிடைத்தன என்ற கேள்விக்கு முதலில் ஒருவரிடமும் பதில் இருக்கவில்லை. அது மட்டுமன்றி அவர் மணம் முடித்த பெண் சில காலத்திற்கு முன்னர் தான் பிரான்சிற்கு வருகை தந்து அகதித் தஞ்சம் கோரியிருந்தார். எல்லோரையும் போன்று தனது ஊதியத்திற்காக முழு நேரமாக வேலை செய்தவாறு, அங்கிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தில் 1996ஆம் ஆண்டிலிருந்து பகுதி நேரமாகத் தட்டச்சாளராகப் பணிபுரிந்த அந்தப் பெண்ணால், தனது சொந்த உழைப்பில் அந்த அளவு தங்க நகைகளைக் கொள்வனவு செய்ய முடியாது என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. அப்படியிருக்கும் பொழுது குறித்த இயக்கப் பொறுப்பாளரின் திருமணத்தில் எங்கிருந்து தங்க நகைகள் வந்து குவிந்தன என்பது திருமணத்திற்கு சென்ற பலரது கேள்வியாக இருந்தது.

ஆனால் குறித்த நபரின் திருமணம் நடந்தேறிச் சில மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில் கிளைப் பொறுப்பாளராக இன்னொருவர் பொறுப்பேற்றார். அப் பதவியில் இருந்தவர் இயக்க செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி விட்டார் என்பது தான் அக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த நபர் ஐரோப்பிய ஒன்றியத்
திலுள்ள அந்நாட்டின்   கிளையின் பொறுப்பாளராக மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் சிறப்புப் பிரதிநிதிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர். அப்படி உயர் பொறுப்பில் இருந்தவர் ஏன் இயக்க செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் என்பதை அக்கால கட்டத்தில் எவராலும் அனுமானிக்க முடியவில்லை.  

.....................................................

வீட்டுக் கதவை அவர் திறந்த பொழுது தான் அங்கு சென்ற செயற்பாட்டாளர்களுக்கு தெரியும் கருணாவிற்கு அந்த சங்கீத ஆசிரியை முற்கூட்டியே பரீட்சியமான ஒருவர் என்பது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அந்நாட்டின்   கிளை நடத்திய கலை நிகழ்வுகளில் பங்குபற்றும் சிறுமிகள் பலர் அந்தச் சங்கீத ஆசிரியையின் மாணவிகள். அந்நாட்டில்   அவர் பிரபல்யமான ஒருவர். ஆனாலும் அந்த ஆசிரியையின் வீட்டில் கருணா விருந்துண்ண வந்திருந்தார் என்பது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆனாலும் 2004ஆம் ஆண்டு பங்குனி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டுக் கருணா வெளியேறிய பின்னர் அவருக்கு ஆதரவான பரப்புரைகளை அந்த ஆசிரியையும், அவரது கணவனும் மேற்கொண்ட பொழுது அதனையிட்டு யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் கருணாவிற்கு நெருக்கமானவர்கள் அப்படித் தானே நடந்து கொள்வார்கள்?

....................................................

பிரான்சில் இயங்கிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு வருகை தந்திருந்த அந்த முன்னாள் போராளியால் தான் காண்பது கனவா? அல்லது நனவா? என்பதை நம்ப முடியவில்லை. அவர் ஒரு செயற்பாட்டாளரும் கூட. பிரான்சிஸ் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் வாணிபம் ஒன்றைக் கவனித்து வந்தவர்.

இந்தியப் படைகளின் காலத்தில் தமிழீழ தாயகத்தில் பொட்டு அம்மானின் கீழ் இயங்கியவர் அவர். அக்கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளையும், ஆதரவாளர்களையும் காட்டிக் கொடுக்கும் தேசத்துரோகச் செயலில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவருக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியப் படைகளின் உளவாளியாக விளங்கிய குறித்த இளம் பெண், தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையில் சிக்கவேயில்லை. ஒரு தடவை அவரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நெருங்கிய பொழுது உலங்குவானுVர்தி ஒன்றில் அவரை இந்தியப் படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அந்த அளவிற்கு இந்தியப் படையினர் அவருக்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கினார்கள். இறுதியில் தமிழீழத்தை விட்டு இந்தியப் படைகள் வெளியேறிய பொழுது, அந்த இளம் பெண்ணை இந்திய உளவுத்துறை அழைத்துச் சென்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சகுரானின் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதக் கும்பலுக்குள் ஊடுருவித் தகவல் வழங்கிய புலஸ்தினியைத் தமது நடவடிக்கை நிறைவேறியதும் பத்திரமாக அழைத்துச் சென்றது போல் குறித்த இளம் பெண்ணையும் இந்திய உளவுத்துறை 1990ஆம் ஆண்டில் பத்திரமாக அழைத்துச் சென்றது என்று வைத்துக் கொள்வோமே!

அந்தப் பெண் தான் இப்பொழுது பிரான்சில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகத்திற்குள் நின்றிருந்தார். ஒரு செயற்பாட்டாளராகவோ அல்லது ஆதரவாளராகவோ அல்ல: தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் சிறப்புப் பிரதிநிதியாகவும், கிளையின் பொறுப்பாளராகவும் விளங்கிய நபரின் மனைவி என்ற கோதாவில் இப்பொழுது அவர் நின்றிருந்தார்.

ஆனால் அது தான் அவர் அங்கு கடைசியாக நின்றது. அதன் பின்னர் அவரும் அவரது கணவரும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அது நடந்து சில வாரங்களில் கிளைப் பொறுப்பாளர் பதவியில் இருந்தும், இயக்க செயற்பாடுகளில் இருந்தும் அந்தப் பெண்ணின் கணவர் நிரந்தரமாக விலகிக் கொண்டார். அவர்களின் வீட்டில் தான் 2002ஆம் ஆண்டின் இறுதியில் கருணா விருந்துண்ணச் சென்றிருந்தார். 2004ஆம் ஆண்டு பங்குனி மாதம் இயக்கத்தை விட்டுத் துரோகி கருணா வெளியேறி, இந்தியப் புலனாய்வுத்துறையின் பாதுகாப்புடன் பெங்களூரில் பதுங்கியிருந்து தனது கும்பலை இயக்கிய பொழுது, அவருக்கு ஆதரவான பரப்புரைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில் இந்தத் தம்பதிகளே மேற்கொண்டார்கள்.

இப்பொழுது இவ்விடத்தில் இன்னுமொரு அதிர்ச்சி மிக்க தகவலைத் தருகிறேன். குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கே.பி குழுவின் உறுப்பினராக இன்று உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பகுதியில் உள்ள காட்டுப்புறத்தில் இயங்கும் மாட்டுப்பண்ணையில் தலைமைச் செயலகம் என்ற கும்பல் மேற்கொண்ட நிகழ்வு ஒன்றில் இவர் தான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

(தொடரும்)