தியாக தீபத்தின் நினைவுநாளில் தமிழருக்கு கனிந்துவரும் வாய்ப்பு - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

இது தமிழர் மனங்கள் புத்தெழுச்சிகொள்ளும் மாதம். தியாகத்தால் உலகத்தையே தன் காலடியில் நிறுத்திய தியாக தீபம் திலீபன் மாதத்தில், அவரது நினைவுகளுடன் தமிழினம் நிற்கின்றது. திலீபனின் பசியை போக்க முடியாத கையறு நிலையில் உள்ளோம் என்ற அவமான உணர்வுடன் தமிழினம் நிற்பதை உணர முடிகின்றது. காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் துரோகங்களால் இருந்தவைகளையும் இழந்து, இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற ஏமாளிகளாக தமிழினம் மாறியிருக்கின்றது.

எனினும், ஆத்ம பலத்தை மட்டும் இழக்காதவர்களாக இருப்பதில் தமிழினம் பெருமை கொள்கின்றது. செத்த பாம்பு காற்று வீசினால் உயிர்க்குமாம் என்ற கிராமப்புற நம்பிக்கையைப் போல, அடிமேல் அடி வாங்கிய போதிலும் இனிமேலும் எதையாவது சாதிக்கலாம் என்ற மனோதிடத்தை மட்டும் இழக்காதவர்களாக இருப்பதையிட்டு தமிழர்கள் பெருமை கொள்கின்றனர்.

சிறிலங்காவில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்த சிங்கள அரசுகள் தமிழர்களை மையப்பொருளாக வைத்தே தமது ஆட்சியை நகர்த்தினர். பிரபாகரன் என்ற ஒற்றை நாமமே அவர்களது அரச இயந்திரத்தின் அச்சாணியாக இருந்தது. இன்று ராஜபக்சக்களின் அரசாங்கத்தையும் பிரபாகரனே இயக்கிக்கொண்டிருக்கின்றார் என்பதும் தமிழினத்திற்கு பெருமைதான்.

புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த போதிலும், புலிகளை வைத்தே சிங்கள அரசாங்கத்தின் செயற்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சிறிலங்காவின் பாதுகாப்பு செலவீனத்திற்கு யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட தற்போது அதிக நிதி ஒதுக்கப்படுவதில் இருந்தும் ஏனைய செயற்பாடுகளில் இருந்தும் இதை உணர்ந்துகொள்ள முடியும். புலிகள் மேல் இருக்கின்ற அச்சத்தின் காரணமாக அதற்கேற்பவே சிறீலங்காவின் அரச இயந்திரம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

பயங்கரவாத ஒழிப்பு, புலி எதிர்ப்பு என்ற கோசங்களை வைத்து கோத்தபாய ராஜபக்ச தென்னிலங்கை மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அதே போன்று கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மேற்படி கோசங்களே ராஜபக்சக்கள் தரப்புக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொடுத்து ஆட்சிக் கதிரையைப் பிடித்துக்கொடுத்தது.

தேசியத் தலைவரின் தீரத்தையும் புலிகளின் பலத்தையும் காண்பித்து ஆட்சிபீடம் ஏறிய அரசு, இப்போது தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான எந்தவொரு நிகழ்வையும் நடத்த முடியாதளவிற்கு தடை உத்தரவு போட்டிருக்கின்றது. ஆயுதத்தை அன்றி அகிம்சையை கையில் எடுத்து போரிட்டு தியாக மரணம் அடைந்த திலீபனின் நினைவேந்தலுக்கு கூட சிறிலங்கா அரசு தமது நீதிமன்றம் ஊடாக தடை விதித்திருக்கின்றது.

தமிழர் தாயகத்தில்,ஒரு அகிம்சாவாதியை நினைவுகூர அனுமதிக்க முடியாத மோசமான அரசாங்கமாக கோத்தபாய அரசாங்கம் அமைந்திருக்கின்றமை குறித்து தமிழ் மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளனர். இந்த விசனம் எதிர்காலத்தில் கடும் கோபமாக மாறக்கூடும். அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிறிலங்கா அரசாங்கம் உணராமல் இருப்பது அவர்களின் முட்டாள்தனம் என்றே எண்ணவேண்டி உள்ளது.
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிவரும் சிங்கள தேசம், இப்பிரதேசத்தில் தமிழர்களின் தொன்மங்களை மாற்றுவதற்கு எடுத்துவரும் நடவடிக்கை மிக ஆபத்தானது. ஏற்கனவே, தமிழர் தாயகத்தில் உள்ள பல இடங்களில் பௌத்த விகாரைகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் - யுத்தத்திற்கு முன்னர் - விகாரைகள் இருந்த இடத்திலேயே தாம் அவற்றை அமைத்திருக்கின்றனர் என தமது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துகின்றது சிங்கள தேசம். படை முகாம்கள், சிங்களக் குடியேற்றங்கள் உள்ள இடங்களிலும், சிங்களவர்கள் இல்லாத இடங்களில் கூட பௌத்த விகாரைகள் புதிது புதிதாக முளைத்து வருகின்றன.

பௌத்தத்தின் பெயரால் தமிழர் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. நில அளவைத் திணைக்களத்தினரின் உதவியுடன் நிலங்கள் அளக்கப்பட்டு படை முகாம்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், பாரிய ஆபத்து ஒன்றும் காத்திருக்கின்றது. தாயகத்தில் காணிகள் சொத்துக்களை வைத்துக்கொண்டு புலம்பெயர் தேசத்தில் பல வருடங்களாக வாழ்பவர்களின் சொத்துக்களை சுவீகரிப்பதற்கும் சிங்கள அரசு மறைமுக திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றது. வடக்கு – கிழக்கில் உள்ள பிரதேச செயலகங்கள் தோறும் படைப் புலனாய்வாளர்களால் இது தொடர்பாக தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்கள் அந்தந்த நாடுகளில் முன்னெடுக்கும் தமிழ்த் தேசிய செயற்பாடுகள் காரணமாக சிறிலங்கா அரசு கடும் அழுத்தங்களுக்கு உட்பட்டு வருகின்றது. இதனால், தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களை மீண்டும் இங்கே வரவழைத்தால் இச்செயற்பாடு இல்லாமல் போகும் என அரசு எண்ணுகின்றது. இதன் ஒரு செயற்பாடாகவே அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியவுடன் தம்மை ஒரு புனிதவானாக காட்டிக்கொண்ட கோட்டபாய ராஜபக்ச, அதனூடாகநாடாளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களை பெறுவதற்கு திட்டங்களைத் தீட்டினார். இப்போது அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜபக்சக்களின் அகங்காரம் மேலும் உச்சத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த மமதையில் நின்றே தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவதற்கும் அவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
சிறிலங்கா அரசும் படைகளும் தமிழர் தாயகத்தில் நடத்திய இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என தமிழினம் ஐ.நா உட்பட பன்னாடுகளிடமும் தொடர்ச்சியாக விடுத்துவருகின்ற கோரிக்கையால் சிங்கள தேசம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. பன்னாடுகளுடனான அவர்களின் இராஜதந்திர தொடர்புகளும் கேள்விக்குட்பட்டிருக்கின்றது. ஆக, இதில் இருந்து தாம் விடுபட வேண்டுமாயின் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதே ஒரே வழி என சிங்கள தேசம் கருதுகின்றது.

இங்கே, தமிழினத்தை பொறுத்தவரை சிறிலங்கா அரசு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்தாலோ வெளியேறினாலோ இரண்டுமே சாதகமானதுதான். இந்தத்தருணத்தை தமிழர்களின் பிரதிநிதிகள் சாணக்கியத்துடன், சரியாக பயன்படுத்தினால் தமிழர் விடுதலைக்கான நகர்வுகளில்  முன்னேற்றங்களை அடையலாம்.

இதுவரை ஐ.நா மன்றில் அதிகாரம் இன்றி, மக்களின் பிரதிநிதியாக இல்லாமல் தோன்றி வலுவான கருத்துக்களை முன்வைத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக முகிழ்த்திருக்கின்றார். அதேவேளை, இதுவரை தமிழர்களின் பிரதிநிதி என்ற கோதாவில் ஐ.நா மன்றில் சிங்கள அரசுக்கு சார்பான கருத்துக்களை முன்வைத்துவந்த எம்.ஏ.சுமந்திரன் இப்போது வலுக்குறைந்தவராக மாற்றப்பட்டுள்ளார். இந்த கள யதார்த்தத்தை தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை உரிய தீர்வைத்தராது என்பதைப்போல தமிழர்களின் பிரச்சினைக்கு சிறிலங்காவிற்குள் எந்த தீர்வையும் பெற முடியாது என்பதும் உண்மை. ஆக, பன்னாடுகளின் உதவியுடனே தீர்வைப் பெறவேண்டும். அதிலும், அயல் நாடான இந்தியாவின் அனுசரணை இன்றி தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது என்பதும் நிதர்சனமானது. இதனால், தமிழர்களின் தீர்வுக்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்ற தரப்புக்கள் இந்தியாவின் அனுசரணையை பெற்றுக்கொள்வதும் இன்றியமையாதது.

சிறிலங்காவின் அரசியல் அடுத்துவரும் மாதங்கள் சூடுபிடிக்கும். ஏனெனில், 19 ஆவது திருத்தத்தை நீக்கி கோத்தபாய ராஜபக்சவுக்கு (ஜனாதிபதிக்கு) அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிபீடத்தில் இருக்கின்ற ராஜபக்சக்களின் அரசு இதனை வெற்றிகரமாக நிறைவேற்றும். தமிழ் மக்களை பொறுத்தவரை இது பாதகமானதாக இருந்தாலும் பன்னாடுகளுக்கு தமிழர் நிலையை எடுத்துரைப்பதற்கு சாதகமானது. கனிந்துவரும் காலத்தை சரியாக பயன்படுத்த தமிழர் தரப்பு தம்மை தயார்படுத்த வேண்டும்.

புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் தயவுசெய்து தங்களுக்கு இடையே உள்ள வெறுப்பு, போட்டி உணர்வுகளை கைவிட்டு இனியாவது ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தமிழர் நலன்களுக்காக அமைப்புக்களை உருவாக்கி வைத்துக்கொண்டு தமக்குள் முட்டிமோதுவது யாருக்கும் நல்லதல்ல. தேசியத் தலைவர் கூறியதைப்போன்று,“நான் பெரிது, நீ பெரிது என வாழாமல் நாடு பெரிதென வாழுங்கள். ஏனெனில், நாட்டின் வாழ்வு எமது நிலையற்ற வாழ்விலும் மேலானது” என்பதற்கு இணங்க தமிழர் தாயகத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

தமிழர்களின் இழப்புக்களுக்கு நிகரான தீர்வை வலியுறுத்த இதுவே சரியான தருணம். தாயகத்தில் தமிழர் நலன்களில் அர்ப்பணிப்போது செயற்படுபவர்களும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் ஒருங்கிணைந்து அப்பளுக்கற்ற சிந்தனையுடன் செயற்படுவதே தற்போதைய தேவை என்பது இங்கு வலுவாக சுட்டிக்காட்டப்படுகின்றது.