மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது - ஆசிரிய தலையங்கம்

இலங்கைத் தீவில் பல நூற்றாண்டு காலங்களாக தலைமுறை தலைமுறையாக தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினத்தை, சிங்களப் பேரினவாதத்திடம் மண்டியிட்டு வாழும் நிலைக்கு இந்தச் சர்வதேசம் தள்ளியுள்ளது.  பயங்கரவாதத்தை அழிப்பதென்ற பெயரில், சிங்களப் பேரினவாதத்துடன் இணைந்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்ததன் ஊடாக, தமிழ் மக்களுக்கு இந்த அவல நிலைமையை சர்வதேசம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமது அடிப்படையான அற்ப உரிமைகளைக்கூட சிங்களப் பேரினவாதத்திடம் முழந்தாளிட்டு நின்று இரந்து கேட்கும் நிலையையும் ஏற்படுத்திவிட்டது.

அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு முன்பாகவே, பல நூற்றாண்டுகளாக இலங்கைத் தீவில் வாழ்ந்தது தமிழினம். பிரித்தானிய வெளியேற்றத்தின் பின்னர், சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்க முனைந்தபோது அகிம்சை வழியில் போராடினார்கள். ஆனால், மாவோ சேதுங்கின் கூற்றுப்போல், எதிரிதான் எந்த ஆயுதத்தை தமிழ் மக்கள் எடுக்கவேண்டும் என்று தீர்மானித்தான். அறவழியில் நின்று போராடிய தமிழ் மக்களை ஆயுத வழியில் அடக்கமுனைந்தபோது தமிழ் மக்களும் வேறு வழியின்றி தங்கள் கைகளில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டார்கள்.

ஆனால், தமிழர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஆயுதத்தைக் கையிலெடுத்தபோது அது இந்த உலகிற்கு பயங்கரவாதமாக தோன்றியது. தங்கள் உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழ முற்பட்ட ஈழத் தமிழ் மக்களை இன்று அழிவின் விழிம்பு நிலைக்கு கொண்டுசென்று விட்டுள்ளது சர்வதேசம்.  இதனால், தங்கள் உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதற்கும், அவர்களை நினைந்து உருகுவதற்கும் கூட தமிழ் மக்கள், சிங்களப் பேரினவாதத்திடம் போராடவேண்டிய நிலைக்கு வந்துள்ளார்கள்.

அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவுநாளைக் கூட அனுட்டிப்பதற்கு அனுமதிக்காமல் தடைபோட்டது சிங்களப் பேரினவாத அரசு. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதுபோல், தியாகி தீபத்தின் நினைவு நாளை நினைவுகொள்ள முடியாமல் தடுத்த சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக தமிழர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கதவடைப்புப் போராட்டமும் அறவழிப் போராட்டமும் சிங்கள தேசத்தை சினம் கொள்ள வைத்துள்ளது.

விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதனால் தமிழ் மக்கள் பயந்து அடங்கி, ஒடுங்கிப் போவார்கள் என்ற பேரினவாதச் சிந்தனைக்கு கிடைத்த பலத்த அடியாகவும் இது இருந்துள்ளது. தமிழ் மக்களின் இந்த எழுச்சிச் சிந்தனையை முளையிலேயே கிள்ளியயறிவதற்கு சிங்களம் மிகத் தீவிரமாகவே இப்போது களம் இறங்கியுள்ளது. அதற்காகத்தான் கடந்தவாரம் சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல தமிழ் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி, தியாக தீபம் திலீபனை கொச்சைப்படுத்த முனைந்துள்ளார். இதற்கு சாட்சியாக அவர் அருகில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு சிங்களப் பேரினவாதத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் வடக்கின் அங்கசனையும், கிழக்கின் வியாழேந்திரனையும் வைத்துக்கொண்டுதான் தியாகி திலீபனை, உலகப் பயங்கரவாதி பின்லேடனுடன் ஒப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, காணாமல் போனதாகச் சொல்லப்படும் சிலர் நுழைவிசைவு (விசா) பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் ஒரு சிலர் தமது அடையாளங்களை மாற்றி முகவரிகளை மாற்றி வாழ்வதாகவும் கூறி கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ச்சியாகப் போராடிவரும் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் போராட்டத்தையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கின்றார்.

இதனைவிட தமிழினப் படுகொலையில் சிங்கள இனப்படுகொலை இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் இளைஞர், யுவதிகளை கடத்தி காணாமல்போகச் செய்ததுடன், ஏராளமானவர்களைப் படுகொலை செய்த துணை இராணுவக் குழுவான ஈபிடிபி கூலிக்குழுவின் தலைவர் டக்ளசை வைத்து திலீபனைக் கொலையாளியாகச் சித்தரிக்கும் கைங்கரியத்தையும் மகிந்த கடந்தவாரம் மேற்கொண்டுள்ளார்.

இவர்கள் இப்படியயன்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்துகொண்டே, தீலிபனின் நினைவேந்தலைப் செய்ய வேண்டும் என்ற உணர்வு தமிழ் மக்களிடையே காணப்படவில்லை என்று சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டுகொடுத்து நிற்கும் தமிழினத்தின் துரோகியாக வர்ணிக்கப்படும் சுமந்திரனும் வக்காலத்து வாங்கி பேட்டிகொடுத்துள்ளார்.

இதனைவிட, பெளத்த பேரினவாதப் பிக்குகள் சிலரும் தியாகி திலீபனுக்கு எதிராக தற்போது குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். தியாகி திலீபனின் அற்பணிப்பு இந்தியாவின் அகிம்சை என்ற காந்தி முகத்திரையைக் கிழித்தெறிந்தது. அதனால் தியாக தீபத்தின் நினைவை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நினைவு கொள்வது இந்தியாவிற்கு விருப்பமற்ற ஒன்றாக இருக்கின்றது என்பது உண்மைதான். இந்த நினைவுகூரலைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்தியாவை குளிர்ச்சிப்படுத்துவதுடன், இந்த நினைவுகூரலை தடுத்து நிறுத்திவிட்டால் விடுதலைப் போராட்டத்தில் வீழ்ந்த எந்தவொரு மாவீரர்களையும் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நினைவுகூராமல் செய்துவிடலாம் என்று பார்க்கின்றது சிங்களப் பேரினவாதம்.

அதனால்தான், உலகம் காணாத திலீபன் என்ற தியாகியின் அற்புதத் தியாகத்தை கொச்சைப்படுத்த சிங்களப் பேரினவாதம் தனது அனைத்து வழிகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தென்னிலங்கையில் பயங்கரவாதிகள் என்று கூறி சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட ஜே.வி.பியினருக்கு ஆண்டுதோறும் நினைவஞ்சலி செய்யப்படுகின்றது. அதற்கு அனுமதி வழங்குவதுடன், அந்த நினைவஞ்சலி நிகழ்வில் சிறீலங்கா அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும்போது தியாகி திலீபனுக்கு மட்டும் அனுமதி மறுப்பதேன்?

சிங்கள இனவாதத்தின் வெளிப்பாடும், தமிழ் மக்கள் எழுச்சி அடைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் வெளிப்பாடும்தான் இது. தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என்று சொல்லித்திரிகின்றது சிங்களப் பேரினவாதம். ஆனால், சிங்களப் பேரினவாதிகள் அத்தனை பேருக்கும் புனர்வாழ்வு அளிக்காமல் இலங்கைத் தீவில் அமைதியும் திரும்பாது, தமிழர்கள் நிம்மதியாகவும் வாழமுடியாது என்பதை சர்வதேசம் இப்போதென்றாலும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை, விடுதலைப் புலிகள் இருந்தால்தான் தமிழ் மக்கள் எழுச்சி கொள்வார்கள் என்பதில்லை. தமது உரிமைகளை மீட்டெடுக்க தமிழ் மக்கள் தொடர்ந்து உறுதியோடு போராடுவார்கள் என்பதை சிங்களப் பேரினவாதத்திற்கும் இந்த உலகத்திற்கும் தமிழ் மக்கள் முதற் தடவையாக திலீபன் நினைவு நாளில்  நிரூபித்துள்ளார்கள்.

மாடு இழைத்தாலும் கொம்பு இளைக்கவில்லை என்பதை தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் இந்த உலகிற்கு மீண்டும் மீண்டும் நிரூபித்தே ஆகவேண்டும். இந்த விடயத்தை அமைதியாகக் கடந்து சென்றால், இறந்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செய்வதற்கு சிங்களப் பேரினவாதத்திடம் கெஞ்சிக்கேட்டு வாழும் நிலைமை மட்டுமல்ல, உண்பதற்கும், சுவாசிப்பதற்கும் கூட சிங்களப் பேரினவாதிகளின் பதிலை எதிர்பார்த்து தமிழினம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுவதைத் தடுக்கமுடியாது.