கிழக்கு மாகாண ஆளுநரினால் முன்னெடுக்கப்படும் பாரிய சிங்களக் குடியேற்றம் - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் சர்வதேச ரீதியில் தமிழர்க்கு எதிராக செயற்பட்டு சிறீலங்கா அதிபரின் நன்மதிப்பைப் பெற்றவர். தற்போது, கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினுடாக பாரிய சிங்களக் குடியேற்றத்திட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். தமிழர்கள் மத்தியில் நல்லவர் போன்று வேடமிட்டுக்கொண்டு தனது இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயித்தமடு, மாதவனை பகுதிகளில் உள்ள கால்நடைகளின் மேய்ச்சல்தரைக்கென ஒதுக்கப்பட்ட காணியில் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களை குடியேற்றி விவசாயம் செய்வதற்கும் கிழக்கு மாகாண ஆளுநர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்.

அம்பாறை, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்வதற்கு என சுமார் மூவாயிரம் ஏக்கர் காணிகளை கோரியுள்ளார். இதில் ஆயிரத்து ஐந்து நூறு ஏக்கர் காணி அம்பாறை மாவட்டத்திற்கும் ஏனைய ஆயிரத்து ஐந்து நூறு ஏக்கரும் பொலநறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் இணக்கம் தெரிவித்தது.

^$

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை வளர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் மேய்ச்சல் தரைகளை வெளி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு விவசாயம் செய்ய வழங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்கள் தங்களிடம் உள்ள மாடுகளை மேய்ப்பதற்கு இடம் இல்லாமல் போகும். மட்டக்களப்பு பண்ணையாளர்கள் காலம் காலமாக மேய்ச்சல் தரை நிலமாக பயன்படுத்தி வந்த காணிகளை விவசாயத்திற்கு வழங்கினால் பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்படுவதுடன் தங்களிடம் உள்ள மாடுகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு மாவட்டத்தின் பால் உற்பத்தி இல்லாமல் போவதுடன் அது அரசாங்கத்தின் சுய தொழில் திட்டங்களை வெகுவாக பாதிக்கும் எனவே உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை விவசாயத்திற்கு வழங்குவதை தடுத்து நிறுத்தவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் அபகரித்துவருவதாகவும் அவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கையயடுக்குமாறும் பிரதேச கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்துவரும் சிங்கள இளத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் எடுத்து நீதிமன்ற நடவடிக்கையின் போது அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் மேச்சல்தரை காணியில் அத்துமீறிய பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அதுமாத்திரமல்ல, கிழக்கு மாகாண ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தை ப்பயன்படுத்தி இரு மாவட்டங்களையும் சேர்ந்த சிங்கள மக்களை குடியேற்ற முழுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன் தங்கள் பகுதிக்குள் நுழையும் சிங்கள இனத்தவர்கள் தமது கால்நடைகளை சுட்டுக்கொல்வதுடன், கால்நடைகளை பிடித்துச்செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுவருகிறது. அவை தொடர்பில் சிறீலங்கா காவல்துறை  மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிடும்போது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்போக நெல் வேளாண்மை செய்கைக்குரிய வேலைகளை மேற்கொண்டு வருவதால் கால்நடை பண்ணையாளர்கள் குறித்த தினத்திற்கு முன்னதாக கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் மேய்ச்சல் தரைக் காணியில் சட்ட விரோத பயிர் செய்கையில் வெளிமாவட்டத்தவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கால்நடைகளை, மேய்ச்சல் தரைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிரான் மற்றும் செங்கலடி பிரதேச கால்நடை பண்ணையாளர்கள் குறித்த மேய்ச்சல் தரைக்கு தரவை படை முகாம் வழியாகவே செல்ல வேண்டும். சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களுக்கு எதிராக பண்ணையாளர்கள் நடவடிக்கை எடுக்கும் போது, குறித்த படைமுகாமில் தாம் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.

500 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களின் சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்துவரும் நிலையில், குடிநீர், போக்குவரது, காட்டுயானைத் தாக்குதல், முறையான சந்தைவாய்ப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களும் நிலங்களை அபகரிக்கும் போது எமது வாழ்வாதாரத் தொழில் முற்றுமுழுதாக பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 07.09.2020 அன்று மாவட்டச் செயலகத்தில் மகாவலி அதிகாரிகள் பண்ணையார்களையும், அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, 3025 யஹக்டர் நிலப்பரப்பு மாத்திரம் பண்ணையார்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தனர். இதனை பண்ணையார்கள் நிராகரித்தனர். எம்மிடம் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளதால் சுமார் பத்தாயிரம் யஹக்டர் நிலப்பரப்பு வேண்டும் என அரசாங்க அதிபார் திருமதி பத்மராஜா ஊடாக கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதனிடையே மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையை நிர்ணயம் செய்து வெளிமாவட்டங்களில் இருந்துவருகை தருபவர்களை தடுக்கும் நோக்கில் கடந்த 14.09.2020 அன்று எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்ட போதிலும் கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதாயகம்பத் திடீரென இந்த சோளம் செய்கைத் திட்டத்தை அறிவித்து அதனுடாக சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான பாரிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம் மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு அமைய 30.09.2020 அன்று கொழும்பில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பெரேரா அவர்களை சந்தித்து மேற்படி விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார். இதன்போது இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் தான் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போவதாக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த காலத்தில் மேச்சல்தரை விடயத்தில் தமிழ் தேசிய நாடாறமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் உறுப்பினர்கள் என பலர் நடவடிக்கை எடுத்தபோதிலும் சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்களின் வருகையை தடுத்துநிறுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயர்மட்ட அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் இப்பாரிய சிங்களக் குடியேற்றத்திட்டத்தை நிறுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது.