தமிழர் தாயகத்தில் கோட்டாவின் காட்டாட்சி - எதிராக தமிழினம் கிளர்ந்தெழவேண்டும் : ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

சிங்கள ஏகாதிபத்தியம் ஒரு நாடு ஒரு தேசம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை மிகவேகமாக செயற்படுத்தி வருகின்றது. சிலதமிழர்களும் சிங்களவர்களின் அனுகூலங்களை பெறுவதற்காக சிங்கள தேசத்திற்கு துணைபோய் இந்த திட்டத்தை செயற்படுத்த உதவிவருகின்றனர்.

புதிதாக பதவியேற்றுள்ள சிங்கள அரசாங்கத்தின் செல்நெறி தமிழர்களின் எதிர்கால நலன்களுக்கு உகந்தது அல்ல. கோட்டபாய அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் ஓரணியில் திரளவேண்டும் என்ற விடயத்தை இந்த கட்டுரையின் ஊடாக சுட்டிக்காட்ட விளைகின்றோம்.

நாடுமுழுவதையும் ஒரேகுடையின் கீழ் கொண்டுவருவதற்கு சிங்கள ஏகாதிபத்தியம் 1948 ஆம் ஆண்டில் இருந்து முயற்சிகளை எடுத்துவருகின்றது. ஆனால், தமிழ்த் தேசிய இனம் அதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருக்கவில்லை. இதனால் கோடரிக்காம்புகள் போல செயற்பட்ட சில தமிழ்த் தலைவர்களை தம்பக்கம் இழுத்துக்கொண்டு இந்த கைங்கரியத்தை வென்றெடுப்பதற்கு சிங்களம் கங்கணம் கட்டியது. ஆனால், இன்றுவரை சிங்கள தேசத்தால் அதைசாத்தியப்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் எதிர்ப்புகளும் ஆயுதப் போராட்டமுமே ஆகும்.

4

ஆரம்பகாலங்களில் தமிழர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு முகம்கொடுக்க முடியாமல்போன சிங்களம் தமிழர்களை பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டது. அரச ஆவணங்களில் இனம் என்ற கேள்வியை எழுப்பி அதற்கு இலங்கைத் தமிழர், இந்தியம் தமிழர் என்ற இருவேறு பதங்களைப் புகுத்தி தமிழினத்தை இழிவுபடுத்தி, பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொள்கின்றது. இதன் மூலம் மலையகத் தமிழர்களையும் ஏனைய தமிழர்களையும் ஒன்றுபட்டு எழுச்சியடையவிடாமல் தடைகளை ஏற்படுத்திவருகின்றது.

சிங்களத்தின் தந்திரங்களையும் அடக்கியாளும் அதிகாரவெறியையும் தெரிந்துகொண்ட தமிழர் தேசம் அதற்கு எதிராக காலத்திற்கு காலம் போராடியே வந்திருக்கின்றது. இந்தப் போராட்டத்தின் நீட்சியாகவே தந்தை செல்வநாயகம் கூறிய கருத்திற்கு ஏற்ப தமிழீழ தேசியத் தலைவர் ஆயுதம் ஏந்ததலைப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற வரலாற்று உண்மைகளை அனைவரும் அறிவர். இத்தனை பட்டறிவுகளை பெற்றிருக்கின்றபோதிலும் சிங்களவர்கள் இன்றுவரை உண்மையை உணர்ந்துகொள்ள மறுத்து வருகின்றமைதான் முரண்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது.

வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றில் கன்னிஉரை ஆற்றியபோது, ஈழத்தின் முதற்குடிகள் தமிழர் எனவும் முதல் மொழிதமிழ் எனவும் உரைத்த உண்மையை சிங்கள தேசத்தால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதற்கு எதிராக பெரும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தினர். இனிமேலும் இப்படி ஒருவர் நாடாளுமன்றிலோ வேறெங்குமோ உரையாற்றக்கூடாது என்ற அளவு விக்கினேஸ்வரனின் கருத்திற்கு சிங்களம் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

சிங்கள அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த சிங்கள இனத்திற்கும் இன்றுள்ள முக்கிய பிரச்சினை தமிழர்கள் தலையயடுக்கக்கூடாது, மீண்டும் ஒருதடவை தமிழினம் எழுச்சிபெற்று சுதந்திரத்திற்காக போராடக்கூடாது என்பதே ஆகும். தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருக்கவேண்டும். தாங்கள் செய்கின்ற அனைத்தையும் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். கேள்வி கேட்கக்கூடாது. இதற்காக எதைச் செய்யவேண்டுமோ அத்தனை காரியங்களையும் சிங்களதேசம் செய்துகொண்டிருக்கின்றது.

இப்போது தமிழ் ஊடகவியலாளர்களை தமது கைக்குள் போட்டுக்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டிருக்கின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ள சில ஊடகவியலாளர்களுக்கு பெருந்தொகை பணத்தைகொடுத்து அவர்களை தமது ஊதுகுழல்களாக செயற்பட பணித்தது சிங்கள புலனாய்வுத்துறை. இதன் தொடர்ச்சியாக, மகிந்த சகோதரர்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த உடனடியாகவே வடக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கடல் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேர்தல் காலத்தில் ஊதுகுழலாக செயற்பட்ட சில ஊடகவியலாளர்கள் வேண்டுகோளின் பேரிலேயே இந்த கடற் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது எனத் தெரியவருகின்றது. இந்த கடற் சுற்றுலாவில் அனைவரும் இணைந்து கொள்ளமுடியும் என ஊடகவியலாளர்களிடையே பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஏதுமறியாத ஏனைய ஊடகவியலாளர்களும் கடற்படையின் போர்க்கப்பலில் ஏறி பயணித்து மகிழ்ச்சியடைந்தனர். ஊடக நிறுவனங்களால் வழங்கப்படும் சொற்ப ஊதியத்திற்கு நிறைவான பணியாற்றி உடலும் உள்ளமும் களைப்படைந்திருந்த அவர்களுக்கு இப்பயணம் புத்துணர்ச்சியை கொடுத்தது உண்மைதான். ஆனால், இதன் மூலம் சிங்களப் படைகள் அடைந்துகொள்ள உத்தேசித்திருக்கும் நன்மைகள் அதிகமானவை.

புலிகளின் ஆயுதப் போராட்டம் மெளனித்தபின்னர் தமிழ் மக்களுக்கு என இருந்த கட்டமைப்புகள் அனைத்தையும் நசுக்கிவைத்திருக்கும் சிங்கள தேசத்திற்கு வடக்கில் இருக்கும் ஊடகவியலாளர்களே சிம்ம சொப்பனமாக இருக்கின்றனர். அவர்களையும் தமது மாயவலைக்குள் சிக்கவைத்துவிட்டால் எதிர்ப்புக்கள் இன்றிதாம் பயணிக்கமுடியும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. அவர்களின் எதிர்பார்ப்புக்கு சிலஊடகவியலாளர்கள் பலியாகி இருப்பது வேதனையானதே.

சிங்கள அரசுக்கும் படைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே இருக்கும் விரிசலை ஊடகங்களை பயன்படுத்தி குறைத்துக்கொள்ள முடியும் என அரசு நம்புகின்றது. இதற்காக ஊடகங்களை கைக்குள் போட்டுக்கொண்டு நல்லிணக்கத் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றது. ஏற்கனவே, தமிழர் தாயகத்தில் நல்லிணக்க செயற்பாடு என்ற ரீதியில் படையினரால் சிலதிட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கீரிமலையில் நல்லிணக்கபுரம் என்றபெயரில் குடியேற்றத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தவீடுகள் அனைத்தையும் படையினரே கட்டிக்கொடுத்தனர்.

இப்போதும் அந்த மக்களுடன் படையினர் நட்புறவைப் பேணிவருகின்றனர். இதேபோன்று, கடந்த காலங்களில் மரம் நாட்டுதல், கடற்கரைகள், வீதிகளை சுத்தம் செய்தல், குழங்களைஆழப்படுத்தல், சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்குதல், வெசாக் கொண்டாட்டங்களின் போது களியாட்டங்களை நடத்துதல், சிற்றுண்டிகள், உணவுகளை வழங்குதல், ஆலய திருவிழாக்களுக்கு சென்று பூசைகளை செய்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் படையினர் ஈடுபட்டுவந்தனர். இப்போது, நல்லிணக்க அலுவலகங்களை தாபித்து வருகின்றனர்.  யாழ். மாவட்டத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார என்பவரின் தலைமையிலேயே நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் கோப்பாயில் திறக்கப்பட்ட நல்லிணக்க அலுவலகத்திற்கான காணியை தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவன் வழங்கியிருக்கின்றார்.

இந்த அலுவலகத்தின் ஊடாக இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், நல்லிணக்கம், சமயம், கலாசாரம் என அனைத்து செயற்பாடுகளையும் தாங்கள் முன்னெடுக்கவுள்ளனர் எனவும் படையினர் அறிவித்துள்ளனர். இதற்கேற்ப கோப்பாயில் வைத்து சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி செனரத் பண்டார யாழ். மாவட்டத்தில் பொறுப்பேற்றவுடன் ஊடகங்களுக்கு கருத்து வழங்கியபோது, வடக்கில் நல்லிணக்கத்தை உருவாக்குவதே தமது பணி எனத் தெரிவித்திருந்தார். இங்கு இரண்டு தேசமும் இல்லை, இரண்டு நிர்வாகமும் இல்லை, இரண்டு படைகளும் இல்லை. நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். பிரிவினை என்ற வார்த்தைக்கே இடமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இவரது கூற்றைப்போலவே, வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் படையினரும் படைப் புலனாய்வாளர்களினதும் பிரசன்னம் அதிகமாகவே உள்ளது. ஒரு திணைக்களத்தால் சாதாரணமாக சிறிய வேலை ஒன்று செயற்படுத்தப்பட்டாலே அது தொடர்பாக கண்காணித்து தரவு திரட்டும் பொறுப்பு படையினருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நிர்வாக கட்டமைப்புக்குள் இப்போது நடைபெற்று வருவதைப் போன்று படையினர் மூக்கை நுழைத்த செயற்பாடு இதுவரை நடந்ததில்லை.

அரச திணைக்களங்கள் மட்டுமன்றி, தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புகள், சனசமூக நிலையங்கள் போன்ற அனைத்து அமைப்புகளும் தத்தமது கடிதத் தலைப்புகளில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினரின் பெயர்கள் புலனாய்வுத் துறையால் எழுதி எடுக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் சிறுபிரச்சினைகள் நடைபெற்றாலும் தமங்கு கூறுங்கள் என பிரதிநிதிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பாடசாலைகளில்கூட மாணவர்களின் விபரங்கள் படையினரால் திரட்டப்படுகின்றன.

முன்னாள் படை அதிகாரியான கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து நாடு இராணுவ ஆட்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றது. திணைக்களங்கள் அனைத்திலும் இராணுவ சட்டத்திட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைப் போலவே கோட்டபாயவின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

கோட்டபாயவின் அடக்குமுறைகளுக்கு எதிராக தியாகி திலீபன் தமிழ் அரசியல்வாதிகளை ஒரு அணியில் திரட்டினார். புலிகள் தமிழ் மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்பை செய்தமையால்தான் புலி உறுப்பினரான மாவீரன் திலீபனுக்காக ஒட்டுமொத்த தமிழ் அரசியல்வாதிகளும் ஓரணியில் திரண்டனர். திலீபன் 1987 இல் ஏற்றிவைத்த அக்கினித்தீபம் இன்று மிகவேகமாக பிரகாசமாக எரியத் தொடங்கியிருக்கின்றது. திலீபன் கூறியமக்கள் புரட்சிக்கு முதற்கட்டமாக அரசியல் புரட்சிவெடித்தது. கடந்த 26 ஆம் திகதி சாவகச்சேரியில் நடைபெற்ற திலீபனுக்கான உண்ணாவிரத போராட்டம் இதை வெளிப்படையாக எடுத்தியம்பியது. இந்த அடையாள உண்ணாவிரத போராட்டமும் அதைதொடர்ந்து நடைபெற்ற கடையடைப்பு ஹர்தால் போராட்டமும் கோட்டபாயவின் காட்டாட்சியை எடுத்தியம்பின. இதுகாலத்தின் தேவை.

கோட்டபாயவின் காட்டாட்சிக்கு எதிராக தொடர்பாக சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பவேண்டிய நிலை விரைவில் ஏற்படும். அதன்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் எதற்பதற்கு ஏற்றாற்போல புலம்பெயர் தேசத்திலும் தாயகத்திலும் உள்ளதமிழர் பிரதிநிதிகள் இப்போதே தயாராகவேண்டும்.